இன்டர்நெட்டின் மறுபக்கம்!



இரும்புத்திரை  ஸ்பெஷல்...

வெடவெடக்கும் மார்கழி குளிர். சென்னையில் ‘இரும்புத்திரை’ ஷூட்டிங் விறுவிறுக்கிறது. ஆர்.கே.நகர் டென்ஷன், பரபரப்புக்கெல்லாம் ஸ்மால் பிரேக் கொடுத்துவிட்டு, மிலிட்டரி யூனிஃபார்மில் மிடுக் இளைஞராக வந்த விஷாலை அள்ளி அணைத்து புன்னகைக்கிறார் ஆக்‌ஷன்கிங் அர்ஜுன். ஸ்பாட்டில் விஷாலைப் பார்த்ததும் படத்தின் அறிமுக இயக்குநர் பி.எஸ். மித்ரன் முகத்தில் தவுசண்ட் வாட்ஸ் பூரிப்பு. ‘‘நல்ல நண்பர்கள் கிடைக்கறது வரம். அழகான அந்த வரம் எனக்கு நிறையவே கிடைச்சிட்டிருக்கு. நானெல்லாம் ஃப்யூச்சர்ல டிவி சீரியல் இயக்குநராவேன்னுதான் நினைச்சிட்டிருந்தேன்.

ஆனா, ‘மூவி டைரக்‌ஷன் சரியா வரும். அதுக்கான முழுத்தகுதியும் உனக்கு இருக்கு’னு நம்பிக்கையை விதைச்சவங்க என் நண்பர்கள் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி.வில்லியம்ஸும், எடிட்டர் ரூபனும்தான். இவங்களாலதான் இந்த ‘இரும்புத்திரை’ சாத்தியமாச்சு. முதல் படத்திலேயே மாஸ் ஹீரோ  அர்ஜுன் சார், யுவன் ஷங்கர் ராஜா மியூசிக், சமந்தானு அருமையான காம்பினேஷன்...’’ ஷாட் பிரேக்கிடையே பேச ஆரம்பிக்கிறார் பி.எஸ்.மித்ரன்.

எப்படி உருவாச்சு படம்?
என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாருமே என்னை ‘கதை சொல்லி’னு கூப்பிடுவாங்க. அவ்வளவு கோர்வையா எந்த ஒரு கதையையும் சொல்லிடுவேன். கொஞ்சம் சின்ன பட்ஜெட்ல ஒரு கதையை ரெடி பண்ணியிருந்தேன். அதை நண்பர்கள் ஜார்ஜ், ரூபன்கிட்ட சொன்னேன். உடனே ரூபன், ‘தன்னோட தயாரிப்பில் வேற ஹீரோ நடிக்கும் படங்கள் தயாரிக்கறதா விஷால் சார் முடிவு செய்திருக்கார். அவர்கிட்ட சொல்லிப்பாக்கறேன்’னு சொன்னார். அப்படித்தான் விஷால் சார் அறிமுகம் கிடைச்சது. அந்தக்கதையை அவர் கேட்ட அந்த செகண்ட்ல... அதாவது ஆர்.கே.நகர்ல அவர் நிக்கப்போறார்னு எப்படி திடீர்னு அறிவிச்சாரோ அப்படி திடீர்னு ‘இந்தக் கதைல வர்ற வில்லன் கேரக்டரை நானே பண்றேன்’னார்.

ஆனா, அந்த கேரக்டருக்கு அர்ஜுன் சார்தான் பொருத்தமானவர்னு சொன்னேன். ‘அப்ப நானே ஹீரோவா நடிக்கறேன் மித்ரன்’னார். அதே சந்தோஷத்தில் அர்ஜுன் சாரை போய் பார்த்தேன். அவர் கதை கேட்குறதுக்கு முன்பே ‘வில்லனா பண்ண மாட்டேன்’னு சொல்லிட்டார். வில்லன் முடிவாகாமயே விஷாலோடு ஒரு ஷெட்யூல் ஷூட்டிங் கிளம்பிட்டோம். மறுபடியும் ரூபன்தான் எனக்கு உதவினார். அவரே அர்ஜுன் சார்கிட்ட பேசி சம்மதிக்க வச்சார். அப்புறம் இந்தக் கதைக்குள் சமந்தா, ரோபோ ஷங்கர், டெல்லிகணேஷ், வின்சென்ட் அசோகன்னு நல்ல நட்சத்திரங்கள் வந்தாங்க.

இந்தக் கதை மீது எல்லாருமே நம்பிக்கை வைக்க என்ன காரணம்?
இப்ப நடந்திட்டிருக்கற, யாருக்கும் தெரியாத ஒரு பெரிய பிரச்னையை இந்தப் படம் சொல்லுது. சில விஷயங்களை நாம ரொம்ப சாதாரணமா எடுத்துப்போம். ஆனா, அதுக்குள்ள மிகப்பெரிய ஆபத்து இருக்குனு தெரிய வர்றப்ப வரும் அதிர்ச்சியை நம்மால ஜீரணிக்கவே முடியாது. அப்படி ஒரு ஷாக்.. இதுல இருக்கு. இன்னிக்கு எல்லார் கையிலும் இன்டர்நெட் இருக்கு. ஸ்மார்ட் போன் இருக்கு. அதோட பாசிட்டிவ், பவர் நமக்கு தெரியும். அதோட மறுபக்கத்தை இந்தப் படம் வெளிச்சமிட்டு காண்பிக்குது.

அதாவது பாசிடிவ் + நெகடிவ்வுக்கு இடைல இருக்கிற திரைதான் ‘இரும்புத்திரை’. விஷால் சார் இதுல மிலிட்டரி ஆபீஸரா வர்றார். மிலிட்டரினதும் பெரிய மிஷன்ல இறங்கி பார்டர்ல போய் ஃபைட் பண்ணுவார்னு நினைக்க வேண்டாம். மிலிட்டரி டிரெயினிங் முடிச்ச சாதாரண மனிதன். அதே மாதிரி இதுல சமந்தாவுக்கு செம க்யூட் கேரக்டர்.

சுயேட்சை வேட்பாளரா விஷால் நிக்க முடிவு செய்தப்ப ஷூட்டிங் பாதிக்குமேனு நினைச்சீங்களா?
இல்ல! படத்தோட ஷூட்டிங் கிட்டத்தட்ட ஓவர். இன்னும் ஒரே ஒரு பாடல்தான் பாக்கி. தவிர இந்தப் படத்தோட தயாரிப்பாளரே விஷால்சார் தானே! ஸோ, யாருக்கும் எந்த பாதிப்பும் வராதே! ஸ்பாட்டுல அவர் எந்த டென்ஷனையும் காட்டினதில்லை. அவரும் அர்ஜுன் சாரும் சேர்ந்தாலே, செம கலாட்டாவா இருக்கும். ரெண்டு பேரும் சேர்ந்து என்னை கலாய்ப்பாங்க.

விஷால் சார் எப்பவும் ரொம்ப ஃப்ரெண்ட்லியா இருப்பார். அவர் அரசியல் பக்கம் வரலைனாலும் அவரை நம்பி வர்ற எல்லார்க்கும் ஏதாவது ஒரு விதத்தில் உதவிடணும்னு நினைப்பார். ஒரு நாள் ரெண்டாயிரம் ரூபாய் டம்மி நோட்டு கட்டை எரிக்கற மாதிரி சீன் எடுத்திட்டிருந்தோம். அது இன்ட்ரஸ்ட்டிங்கா இருந்ததால அந்த வீடியோவை வாட்ஸ் அப்பில் விட்டோம். அது வைரலாகி விஷால் வீட்டுல ஐடி ரைடுனு தவறா நியூஸ் பரவும் அளவுக்கு போயிடுச்சு! பிறகு அதுக்கு விளக்கம் தர்ற விஷால் சார் வீடியோவை வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைச்சோம். 

என்ன சொல்றாங்க சமந்தா?
ஹைதராபாத்ல போய் அவங்ககிட்ட கதையை சொன்னேன். ‘கண்டிப்பா பண்றேன்’னு உடனே சொல்லிட்டாங்க. அவங்க கல்யாணம் நெருங்கிட்டு இருந்ததால அதுக்கு முன்னாடியே அவங்க போர்ஷனை ஷூட் பண்ணிட்டோம். சின்னச் சின்ன ரியாக்‌ஷன்களுக்கும் வெரைட்டி எக்ஸ்பிரஷன்ஸ் கொடுத்து அசத்தியிருக்காங்க. 

‘ராஜா ராணி’ ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் எப்படி உங்க நண்பரானார்?
காலேஜ்ல படிக்கும்போதே நாங்க ஃப்ரெண்ட்ஸாகிட்டோம். இங்க பேய்ப்பட சீஸன் தொடங்கறதுக்கு முன்னாடியே ‘மதிகெட்டான் சோலை’னு ஒரு கதை ரெடி பண்ணி அதை ஜார்ஜ்கிட்ட சொன்னேன். நிறைய இடங்கள்ல ஷாக் ஆனார். அப்புறம் தினமும் நைட் 11 மணிக்கு அவர் வீட்டுக்கு போயிடுவேன். அங்கே ரூபனின் அறிமுகம் கிடைச்சது. நாங்க மூணு பேரும் சேர்ந்தே அந்த பேய்க்கதையை டெவலப் பண்ணுவோம். அது ஒரு பேய்க்காலம்!

இப்ப அவங்க ரெண்டு பேருமே ‘இரும்புத்திரை’க்கு பலமா இருக்காங்க. நான் காலேஜ் படிக்கற போது என்னோட காதல், லவ் ஃபெயிலியர்னு அத்தனை காலகட்டத்திலும் யுவன் மியூசிக் கேட்பேன். இப்ப என் படத்துக்கே அவர் இசையமைச்சிருக்கார். பொதுவா ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் ஃபைட் சீன்ஸ் டைரக்ட் பண்றப்பதான் ஸ்பாட்டுக்கு வருவாங்க. ஆனா, ஃபைட் லீட் சீன் ஷூட் பண்ணும்போதே திலீப் மாஸ்டர் வந்து என் ஒர்க்கை ஈஸியாக்கினார்.

அறிமுக இயக்குநருக்கான கேள்வி...?
புரியுது. என்னைப்பத்தி தானே? அப்பா, தாத்தானு எங்க குடும்பமே அட்வகேட் ஃபேமிலி. நானும் பி.எல். முடிச்சு, ஐஏஎஸ் ஆகணும்னு வீட்ல கனவோடு இருந்தாங்க. எங்க அம்மாவும், பாட்டியும் அரசு ஊழியர்கள். சின்ன வயசுலயே கவர்மென்ட் ஆபீஸ் பக்கம் போயிட்டேன். அப்பவே அங்குள்ள பேப்பர், ஃபைல் வாசம் பிடிக்காம போயிடுச்சு. சென்னைலதான் எம்இ எலெக்ட்ரானிக் மீடியா முடிச்சேன். அப்படியே ‘விடாது கருப்பு’ நாகா சார்கிட்ட ஒர்க் பண்ண ஆரம்பிச்சேன். அப்புறம் பூஜா நடிச்ச ‘விடியும்முன்’ல வேலை பார்த்தேன்.

இயக்குநர் நாகா சார்கிட்ட ஒர்க் பண்ணினது மறக்கமுடியாத அனுபவம். சித்தர்கள் வாழ்ந்த காடுகள், மலைகளைத் தேடித் தேடிப் போறது அவருக்கு பிடிச்ச விஷயம். புத்தகம் படிக்கவும் ஓலைச்சுவடில உள்ள தமிழை வாசிக்கவும் கத்துக் கொடுத்தார். அவர் கூட அகத்திய மலை, அழகர் மலை, கோரக்கர் மலைனு டிராவல் பண்ணியிருக்கேன். அரிய வகை மூலிகைகள் எந்த மலைவாசஸ்தலங்களில் இருக்குனு சித்தர்கள் கவிதை வடிவுல எழுதி வச்சிருக்காங்க. அதாவது கவிதைகளே மேப் மாதிரி நமக்கு அந்தந்த இடங்களுக்கு வழிகாட்டும். அப்படியொரு பயணம் நாகா சார் கூட போயிருக்கேன்!                      

- மை.பாரதிராஜா