விஜயனின் வில்



கே.என்.சிவராமன் - 57

‘‘வாட் மிஸ்டர் கிருஷ்ணன்... அசை போட்டு முடிச்சாச்சா..?’’மாஸ்டரின் குரல் நினைவின் அடுக்கில் இருந்து அவனை மீட்டது. நடப்புக்கு கொண்டு வந்தது. ‘‘புரியலை...’’‘‘நடிக்காத க்ருஷ்... நீ யாரு... என்னென்ன யோசிப்பனு தெரியாமயா உன்னை டிராப் செய்திருக்கோம்?’’ அவனைப் பாராட்டிய அதேநேரம் ஆதியையும் கொண்டாட அவர் தயங்கவில்லை. ‘‘எங்க ஆதி ஒருவகைனா நீ இன்னொரு வகை. அதுக்காக ஐஸ்வர்யாவை குறைச்சு எடை போடறேனு அர்த்தமில்லை. மூணு பேரும் எனக்கு முக்கனிகள்!’’மாஸ்டரின் சகஜமான உரையாடல் அவரவர் சிந்தனையில் மிதந்து வந்த மூவரையும் ஒரு கோட்டுக்கு கொண்டு வந்து நிறுத்தியது.

‘‘என்னம்மா ஐஸ்... உன் ஃப்ரெண்ட் ஆதித்த கரிகாலன் கொலை வழக்குல ஆரம்பிச்சு மாலிக்காபூர் வரை வந்து நின்னுட்டான். நீ எப்படி..? இதேதானா இல்ல இதுக்கு முன்னாடியோ பின்னாடியோ வலைவீசி மீன் சிக்குமானு பார்த்தியா..? ஆதி குழந்தைதான் பாவம்... பேஸ்த் அடிச்சா மாதிரி ஃப்ரீஸ் ஆகி இருக்கான்!’’கெட்டிக்காரர்தான். கச்சிதமாக தன் யோசனையை படம் பிடித்துவிட்டார். ஆனால், அதென்ன முன்னும் பின்னும்..? ஒருவேளை, தான் யோசித்ததற்கு தொடர்புடைய விஷயங்கள் இந்தக் காலங்களில் தொத்தி நிற்கிறதா..? கிருஷ்ணன் அலைபாய்ந்தான். நங்கூரம் தட்டுப்படவே இல்லை.
அதை வாகாக மாஸ்டரே கொடுத்தார்.‘‘நெருங்கிட்டோம்... பாய்ஸ் பீ கேர்ஃபுல். க்ருஷ்ஷும் ஐஸ்வர்யாவும் எமகாதகங்க. தப்பிக்க முயற்சி செய்வாங்க. ஆதி நம்மாள்தானேனு நினைக்காதீங்க. அவனும் இவங்களுக்கு துணை போவான்!’’சமதள ஒற்றையடிப் பாதை படிக்கட்டில் முடிந்தது. மாஸ்டரைத் தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக ஏற ஆரம்பித்தார்கள். எதிர்பார்த்தது போலவே சுரங்கம் முற்றுப்பெற்ற இடத்தில் கதவு தட்டுப்பட்டது. கூடவே சதுர வடிவிலான பயோமெட்ரிக் லாக்! திரும்பிப் பார்க்காமல் புன்னகைத்தபடியே மாஸ்டர் அந்த பயோமெட்ரிக் முன்னால் நின்றார். தன் வலது கண்ணின் இமைகளைப் பிரித்து அக்கண்ணைக் காட்டினார்.

ஸ்கேன் செய்யப்படுகிறது என்பதற்கு அடையாளமாக எழுந்த ஓசை மூவரின் செவிகளையும் அறைந்தது. மைக்ரோ நொடிதான். அதன் பிறகு கதவு திறந்தது. ஆனால், அதுவும் வாசலல்ல. பதிலாக இன்னொரு கதவு! முந்தையது இரும்பினால் ஆனது என்றால் இது மரம். எனில், பிந்தையது பழையது. எத்தனை நூற்றாண்டுகளுக்கு முற்பட்டதோ? முன்பே யோசித்தபடி பிற்காலச் சோழர் காலத்தை - குறிப்பாக ஆதித்த கரிகாலனுக்குப் பிறகு வந்த மன்னர் காலத்தை - சேர்ந்ததாக இருக்கலாம். முந்தையது மாஸ்டர் அல்லது அவருக்கு முன்னால் இருந்தவர்கள் உருவாக்கியது. அப்படித்தான் இருக்க வேண்டும். இரும்பும், பயோமெட்ரிக்கும் லேட்டஸ்ட் டெக்னாலஜி ஆயிற்றே...

சிந்தித்தபடியே,  இந்த மரக்கதவை மாஸ்டர் எப்படி திறக்கப் போகிறார் என கிருஷ்ணன் ஆராய்ந்தான். ஐஸ்வர்யா, ஆதியின் கண்கள் கூட அங்கேயேதான் நிலைகுத்தி நின்றன. இம்முறை மாஸ்டர் உடனடியாக கதவைத் திறக்கவில்லை. மாறாக பின்னால் திரும்பி அனைவரையும் பார்த்துச் சிரித்தார். ‘‘இந்த லாக்கை நீங்களே கூட ரிலீஸ் செய்யலாம்! அப்படி செஞ்சுட்டா உங்களுக்கு ஒரு பரிசு தரேன்...’’தள்ளி நின்று கதவை மூவரும் முழுமையாகப் பார்க்கும்படி செய்தார். செவ்வக வடிவான மரக் கதவு. பூட்டு இருப்பதற்கான அறிகுறியே இல்லை. மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் எம்ஜிஆர், பானுமதி நடித்த ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ படம்தான் மூவருக்கும் நினைவுக்கு வந்தது. ‘அண்டாகா கசம்... அபூக்கா கசம்... திறந்துடு சீஸே...’ மாதிரி ஏதாவது சொல்ல வேண்டியிருக்கும்...

‘‘கிஃப்ட் எதுவும் தேவையில்ல. நீங்களே கதவைத் திறங்க...’’ ஐஸ்வர்யா உதட்டைச் சுழித்தாள்.‘‘ஏம்மா... உங்களால code பிரேக் பண்ண முடியலையா..?’’ சாய்ந்து நின்றபடி மாஸ்டர் கேட்டார்.‘‘அப்படீன்னு நாங்க சொல்லலையே..?’’‘‘அப்ப இப்ப நீ சொன்னதுக்கு என்ன அர்த்தம்..?’’ ‘‘இதுமாதிரி சில்லி விஷயத்துக்கு எல்லாம் புத்திசாலித்தனத்தை பயன்படுத்த வேண்டாம்னு அர்த்தம்...’’‘‘இந்தக் கதவைத் திறக்கறது சில்லியா..?’’‘‘பின்னே இல்லையா..?!’’ஐஸ்வர்யாவின் பதிலைத் தொடர்ந்து மாஸ்டரின் முகம் சிவக்கத் தொடங்கியது. இதை நீட்டிக்க கிருஷ்ணன் விரும்பவில்லை. குரல் கொடுத்தான்.‘‘ஏற்கனவே தெரிஞ்ச ரகசியம்தானேனு ஐஸ் சொல்றா மாஸ்டர்...’’

‘‘இஸ் இட். அந்த ‘தெரிஞ்ச ரகசியம்’ என்னனு நான் தெரிஞ்சுக்கலாமா..?’’‘‘ஒய் நாட்? ‘நவகிரகமும் எட்டு திசையில் நான்கு மூலையில் ஒன்றுமில்லை நவரத்தினமும் ஒன்றுமில்லை அதிசயமே உலகம் திரிசூலமே நான்காவது லூகாஸ் பஞ்சபூதம்...’ இதுதான் மந்திரச் சொல்!’’‘‘ஓ... இதைச் சொன்னா கதவு திறந்துடுமா..?’’ முகத்தைத் திருப்பி கதவைப் பார்த்தார். ‘‘அச்சோ... திறக்கலையே...’’‘‘திறக்க நம்பரை அழுத்தணும்...’’ கிருஷ்ணன் அழுத்திச் சொன்னான். மாஸ்டரின் கண்கள் இடுங்க ஆரம்பித்தன. ‘‘என்ன நம்பர்?’’

‘‘முன்னாடியே இதை நாங்க பிரேக் பண்ணிட்டோம். நவகிரகம்னா 9. எட்டு திசை, 8. நான்கு மூலை, 4. ஒன்றுமில்லை, 0. நவரத்தினம், 9. ஒன்றுமில்லை, 0. அதிசயமே உலகம், உலக அதிசயத்தை குறிக்குது. ஐ மீன், 7. திரிசூலமே, 3. நான்காவது லூகாஸ், 7. பஞ்சபூதம், 5. இதையெல்லாம் சேர்த்தா 9840907375! என்ன... இதை நாங்க செல்போன் நம்பர்னு நினைச்சோம். Call செஞ்சோம். App வழியா நீங்க தாரா குரல்ல பேசினீங்க. நாங்க ஏமாந்துட்டோம்...’’ ‘‘இந்த ஏமாற்றத்துலேந்து எப்ப வெளில வந்தீங்க க்ருஷ்..?’’‘‘கார்க்கோடகர் வெளில கொண்டு வந்தார்!’’‘‘நான் உருவாக்கின ஹேலோக்ராம் கார்க்கோடகரா..?’’

‘‘இல்ல! இறந்த பிறகும் தாராகிட்ட துண்டுச் சீட்டு சேரும்படி செய்தாரே... அந்த நிஜ கார்க்கோடகர்!’’‘‘குட்... குட்... அப்ப நீங்க பிரேக் செய்த நம்பர் இந்த மரக் கதவைத் திறக்குமா..?’’‘‘ம்...’’‘‘எப்படி?’’‘‘நீங்க மறைச்சபடி நிக்கறீங்களே... அந்த சிஸ்டத்துல 9840907375ஐ அழுத்தினா கதவு திறக்கும்!’’புத்திசாலிங்க...’’ மெச்சியபடி அதேபோல் எண்களை அழுத்தினார் மாஸ்டர். கதவு திறந்தது. ஆனால், அங்கிருந்தது விஜயனின் வில் அல்ல!

(அடுத்த இதழில் முடியும்) 

ஓவியம் : ஸ்யாம்