பெண்கள் சிகரெட் பிடிச்சா என்ன தப்பு..?



அழுத்தம் திருத்தமாக கேட்கிறார் இயக்குநர் வி.இசட்.துரை 

‘‘ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நாலஞ்சு படங்களாவது ரிலீஸ் ஆகுது. ஆனா, ஒரு படம்தான் கவனத்தை ஈர்க்குது. அப்படி ஒரு படமா, இந்த ‘ஏமாலி’ இருக்கும். பொதுவா, கண்ணுக்கும் காதுக்கும் குளிர்ச்சியா இருந்தாதான் அது சினிமானு சொல்வாங்க. அதனால கண்ணுக்கு குளிர்ச்சியா இதுல நிறைய விஷயங்கள் வச்சிருக்கேன். காதுக்கு குளிர்ச்சியாக ஜெயமோகன் வசனம். இன்னொரு முக்கியமான ஒரு விஷயம், காதல் என்பதற்கான உண்மையான அர்த்தத்தை இதுல உணர்வீங்க!’’ எடிட் ஷூட் பரபரப்பிலும் உற்சாகமாகப் பேசுகிறார் இயக்குநர் வி.இசட்.துரை. அஜித்தின் ‘முகவரி’, விக்ரமின் ‘காதல் சடுகுடு’, சிம்புவின் ‘தொட்டி ஜெயா’, பரத்தின் ‘நேபாளி’, பலத்த வரவேற்பைப் பெற்ற ஷியாமின் ‘6 மெழுகுவர்த்திகள்’ ஆகிய படங்களை இயக்கி முத்திரை பதித்திருப்பவர்.

‘‘இது ‘ஏமாளி’யா... இல்ல ‘ஏமாலி’யானு கேட்கறாங்க. டைட்டில்ல இந்த ‘லி’ வச்சதுக்கு காரணம் இருக்கு. படத்தோட முக்கியமான டுவிஸ்ட்டுல இதுவும் ஒண்ணு. இந்தத் தலைமுறை இளைஞர்களின் காதலை டார்கெட் பண்ற கதைனாலும் எல்லா ஆடியன்ஸுக்குமான என்டர்டெயின்மென்ட் ஃபிலிமா இருக்கும். காதல், லிவிங் டுகெதர், போலீஸ் லைஃப்னு எல்லாத்தையும் சுவாரஸியமா சொல்லியிருக்கேன்...’’ தெளிவாகப் பேசுகிறார் வி.இசட்.துரை.

தமிழ் சினிமா இன்னமும் காதலைச் சுத்தியே வந்துட்டிருக்கே..?
அது எவர்க்ரீன் சப்ஜெக்ட். முன்னாடியெல்லாம் ஒரு பொண்ணுகிட்ட காதலை சொல்றதுக்கே பல மாசம் ஆகும். இப்ப உலகமும், காதலும் ரொம்ப ஸ்பீடாகிடுச்சு. லவ் வேற லெவல்ல இருக்கு. ஒருத்தரைப் பார்த்த பத்தாவது நிமிஷமே அவங்ககிட்ட ‘ஐ லவ் யூ’ சொல்லிட முடியுது. அது ஒரே நாள்ல பிக்அப்பும் ஆகுது. அப்புறம், ஒர்க் அவுட் ஆகி அந்த வாரத்துல எல்லாமே முடிஞ்சு சலிச்சும் போயிடுது. எட்டாவது நாள்ல உப்பு சப்பில்லாத காரணத்துக்காக பிரேக்அப்பும் ஆகுது.

நகரம், கிராமம் வித்தியாசமில்லாம எல்லா இடங்களிலும் காதல் ஒரே மாதிரியாகிடுச்சு. இந்தக் கதை லவ் பண்ண நினைக்கறவங்க, காதலிக்கறவங்க, காதல்ல விழலாமானு யோசிக்கறவங்கனு எல்லாருக்குமான சப்ஜெக்ட். சமுத்திரக்கனி, சிங்கம்புலி, பாலசரவணன் உட்பட பலர் நடிச்சிருக்காங்க. சாம் ஜோன்ஸ் ஹீரோவா அறிமுகமாகிறார். ரோஷினி, அதுல்யானு இரு கதாநாயகிகள். சமுத்திரக்கனி - ரோஷினி வழியா லிவிங் டுகெதர் லைஃபை அலசியிருக்கோம்.

விக்ரம், அஜித், சிம்புனு இயக்கின நீங்க, இப்போ புதுமுகங்கள் பக்கம் திரும்பியிருக்கீங்க?
இந்தக் கதைக்கு புதுமுகங்கள்தான் தேவை. ஹீரோ சாம் ஜோன்ஸ், தயாரிப்பாளரோட பையன். நிறைய பயிற்சி கொடுத்து, டெஸ்ட் ஷூட் எடுத்து அதுக்குப் பிறகுதான் நடிக்க வைச்சிருக்கோம். சமுத்திரக்கனிக்கும் சாம் ஜோன்ஸுக்கும் இதுல நான்கு விதமான பரிமாணங்கள். ஹீரோயின் ரோஷினி, கன்னடம், தெலுங்கில் சில படங்கள் நடிச்சிருக்காங்க. இப்ப தமிழுக்கு வந்திருக்காங்க. அதுல்யா, தமிழ்ல இதுக்கு முன்னாடி ஒரு படம் செய்திருக்காங்க. குறும்படங்கள்ல ஒர்க் பண்ணின எம்.ரித்திஷ் கண்ணாவும், ஐ.பிரகாஷும் இணைந்து ஒளிப்பதிவு செய்யறாங்க. இசை, சாம் டி.ராஜ். தமிழ்ல சில படங்களுக்கு இதுக்கு முன்னாடி இசையமைச்சிருக்கார்.

டீசர்ல வெளியான அதுல்யா புகை பிடிக்கும் காட்சிக்கு எதிர்ப்பு கிளம்புச்சே..?
அதுதான் புரியலை. ரியல் லைஃபைத்தான் படமா பண்றோம். அப்படியிருக்கிறப்ப இந்த எதிர்ப்பு ஏன்னு தெரியலை. பொண்ணுங்க புகை பிடிக்கக் கூடாதுனு சென்சார்ல ஆட்சேபணை தெரிவிக்கிறாங்க. சமீபத்துல டிவில ரஜினி படம் ஒண்ணு பார்த்தேன். அதுல ஹீரோயின் சிகரெட் பிடிச்சிட்டிருக்காங்க! பல வருஷங்களுக்கு முன்னாடியே அப்படி சீன்ஸ் இருந்திருக்கு. நான் புதுசா ஒண்ணும் காட்டிடலை. அப்ப கே.பாலசந்தர் படத்தில் உள்ள பெண் கதாபாத்திரங்கள் எல்லாமே சர்ச்சையாச்சு. அவர் படத்தில் இடம்பெற்ற ஒரு பாட்டுல ஹீரோயின் சுஜாதா, டிரெஸ் மாத்துவாங்க. அப்ப பிராவோடு அவங்க நிக்கற மாதிரி ஒரு ஷாட் வந்து போகும். அந்தப் பாட்டுல அந்த ஷாட்டை காட்டியிருக்க வேண்டியதில்ல.

வேலைக்கு போயிட்டு வந்த பொண்ணு டிரெஸ் மாத்தறாங்கனு சாதாரணமா பண்ணியிருக்க முடியும். ஆனா, பிரா தெரியற மாதிரி இயக்குநர் ஏன் வைச்சார்? ஒரு கிரியேட்டர் அப்படி யோசிச்சிருக்கார். அப்படித்தான் ஆடியன்ஸும் எடுத்துக்கிட்டாங்க. இன்னிக்கு உள்ள யங்ஸ்டர்ஸ் பேசுறதே ரொம்ப மாடர்னா இருக்கு. இன்னும் நாம பழைய பாணில டயலாக் எழுதிக்கிட்டிருந்தா கேலி, கிண்டல் பண்ணி தூக்கிப் போட்டுடுவாங்க. அவங்க டிரெண்டை கொண்டு வரணும்னா அவங்க பேசற விஷயங்களை சொல்லித்தான் ஆகணும்!

நம்ம படங்கள் இந்தியாவைத் தாண்டினாலே அது இந்திய சினிமாதான். இது தென்னிந்திய சினிமா, அது வடஇந்திய சினிமானு பிரிச்சுப் பார்க்கறதில்ல. ஃபாரீன்ல இருக்கறங்களுக்கு இந்திய சினிமாதான். சாதாரணமா ஒரு பெண் புகைப்பிடிக்கற சீன் வச்சதுக்கு தமிழ் இண்டஸ்ட்ரி ஏன் ஆச்சரியமா பேசுதுனு புரியலை. பாலிவுட்ல ‘லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா’னு ஒரு படம் வந்திருக்கு. பெண் இயக்குநர் டைரக்ட் பண்ணியிருக்காங்க. அந்தப் படத்தோட சப்ஜெக்ட்டை எப்படி அவங்க ஹேண்டில் செய்தாங்க... ஆர்டிஸ்ட்கிட்ட என்ன சொல்லி வேலை வாங்கினாங்கனு நினைச்சாலே பிரமிப்பா இருக்கு.

என்ன சொல்றார் ஜெயமோகன்?
எழுத்தாளர்களின் பங்களிப்பு என்னோட படங்கள்ல எப்போதும் இருக்கணும்னு விரும்புவேன். ஜெயமோகன் எழுத்துகள் ரொம்ப பிடிக்கும். ‘ஏமாலி’ ஸ்கிரிப்ட் எழுதும் போதே, இதோட வசனங்களையும் வீரியமா எழுதி வச்சிருந்தேன். அவர் அதையெல்லாம் பாலீஷ் பண்ணி இன்னும் அழுத்தமா எழுதிக் கொடுத்திருக்கார்.  

- மை.பாரதிராஜா