இளைப்பது சுலபம்



வெஜ் பேலியோவில் எடை குறைப்பது எப்படி? அனுபவத் தொடர் - 25

பெண்கள். ஆம். அவர்களைப் பற்றித்தான் பார்த்துக்கொண்டிருந்தோம். பேலியோவில் இருந்தும் அவர்களுக்கு ஏன் எடைக்குறைப்பு வேகமாக நிகழ்வதில்லை என்பதற்கான காரணங்களைப் பார்த்தோம். தசைக் கொழுப்பின்மை மற்றும் க்ரேவிங். இன்னொரு காரணமும் உண்டு. அது பெண்களுக்கே உரித்தான பிரத்தியேக ஹார்மோன் பிரச்னைகள். மாத விலக்கு சுழற்சி சார்ந்த சிக்கல்கள். நம் நாட்டுப் பெண்கள் யாரைக் கூப்பிட்டு நிறுத்தினாலும் பரிசோதனையே இல்லாமல் அவர்களுக்கு இரும்புச் சத்துக் குறைபாடு இருப்பதாகச் சொல்லிவிட முடியும். இதே போல் பரிசோதனையே இல்லாமல் விட்டமின் டி குறைபாடு உண்டு என்று தலையில் அடித்து சத்தியம் செய்ய முடியும். பரிசோதனை செய்து பார்த்தால் தைராய்டு பிரச்னை, PCOD பிரச்னை, டிரைகிளிசிரைட் பிரச்னை என்று வரிசையாக ஒவ்வொன்றாகத் தெரியவரும்.

தோற்ற அளவில் தங்களைச் சரியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் பெண்கள்கூட ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அக்கறை கொள்ளுவதில்லை என்பதே இதன் காரணம். புருஷன் ஒழுங்காகச் சாப்பிடுகிறானா, பிள்ளைகளுக்கு சத்துமிக்க உணவு சமைத்துப் போடுகிறோமா என்பதோடு அவர்களது அக்கறை முடிந்துவிடுகிறது. அவர்கள் உண்டு எஞ்சியதைச் சாப்பிட்டு தம் பொழுதைத் தீர்த்துவிடுகிறார்கள். இது தவறு. மிகப்பெரிய தவறு. பல ஆண்டுக் காலமாக உடலின்மீது இப்படி அலட்சியமாக இருந்துவருவதன் விளைவு, ஒரு கட்டத்தில் உடம்பு நாம் சொல்லுவதைக் கேட்க மறுத்துவிடுகிறது. அது நடுத்தர வயதுக்கப்பால் பல விதமான வியாதிகளாக உருக்கொண்டு உயிரை வாங்குகிறது.

குறிப்பாக எடை கூடிய பெண்கள் அனுபவிக்கும் சிரமங்கள் சொல்லத்தரமற்றவை. எடைக் குறைப்பு முயற்சியில் இறங்கும்போது, அது நினைத்த வேகத்தில் நடக்காத சூழ்நிலையில் மனத்தளவில் அவர்கள் அனுபவிக்கும் சலிப்புணர்வு அதைக் காட்டிலும் பெரிது. இந்தப் பிரச்னை தீர ஒரே வழி, பேலியோவில் இறங்கி, வாரியர் கடைப்பிடிப்பதுதான். எடைக் குறைப்பில் தீவிரமாக உள்ள பெண்கள், அது எதிர்பார்த்த வேகத்தில் குறையாமல் இருக்குமானால் பின்வரும் வழிகளை முயற்சி செய்து பார்க்கலாம்.

*மிகத் தீவிர பேலியோ. ஒரு நாள் உணவில் இருபது கிராமுக்கு மேல் மாவுச் சத்து இல்லாமல் பார்த்துக்கொள்வது. அதாவது உணவில் நாம் சேர்த்துக்கொள்ளும் காய்கறிகளுக்கு அப்பால், வேறு எந்த மாவுச் சத்துணவையும் தொடாமல் இருப்பது முக்கியம். பால் கூடாது. தயிர் கூடாது. மோர் கூடாது. பனீர், பாதாம், காய்கறிகள், வெண்ணெய், நெய், சீஸ். அவ்வளவுதான்.

*முட்டை சாப்பிடுவேன் என்னும் பெண்களுக்கு எடைக்குறைப்பு சாத்தியங்கள் அதிகம். அவர்கள் ஒருவேளை காய்கறியும் மறுவேளை முட்டையும் மட்டும் உண்டு வருவதால் எடைக்குறைப்பு விரைவில் நிகழும். மூன்று அல்லது நான்கு முட்டைகள். அப்படியே சாப்பிடுவீர்களோ, ஆம்லெட் போட்டு சாப்பிடுவீர்களோ, அது உங்கள் இஷ்டம். ஆனால், ஒருவேளைக்கு முட்டை மட்டும்.

*காய்கறிகளிலேயேகூட அதிக கார்ப் இல்லாத காய்களாகத் தேர்ந்தெடுத்து உண்பது நல்லது. குறிப்பாக முட்டைக் கோஸ், புடலங்காய், பீர்க்கங்காய், வாழைத்தண்டு, சுரைக்காய், பெங்களூர் கத்திரிக்காய் போன்றவை. வாரம் ஒருநாள் வெண்டை, கத்திரி இருந்தால் தப்பில்லை. எடை இறங்கத் தொடங்கியபின் கொஞ்சம் கொஞ்சமாக இறுக்கத்தைத் தளர்த்திக்கொள்ளலாம் (தைராய்டு உள்ளவர்கள் முட்டைக்கோஸ், காலிஃப்ளவர்,ப்ராக்கோலி போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்). பேலியோவில் அனுமதிக்கிறார்களே என்று கேரட், பீட் ரூட் வகையறாக்களை உண்பது தகாது. அதெல்லாம் நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு எடை வந்து நின்ற பிற்பாடு ருசி பார்க்கத் தகுந்தவை மட்டுமே.

*பேலியோவில் இருந்தால் விரதங்கள் சுலபம். இந்த உணவு முறையில் பசி என்ற ஒன்று இருக்காது என்பதே காரணம். எனவே, தினசரி மூன்று வேளை உண்டே தீரவேண்டும் என்ற கட்டாயமில்லை. மூன்று கட்டங்களாக விரத லாபங்களை நீங்கள் எட்டிப் பிடிக்க முடியும். முதலாவது, பன்னிரண்டு மணி நேரங்களுக்குள் மூன்று உணவுகளை உண்பது. அதற்கு அப்பால் வெறும் பச்சைத் தண்ணீர் மட்டும்தான். அதாவது காலை எட்டு மணிக்கு நூறு பாதாம் சாப்பிடுகிறீர்கள் என்றால், அதோடு மதியம் ஒரு மணிக்கு காய்கறிகள். இடையே ஒன்றும் கூடாது. மீண்டும் இரவு எட்டு மணிக்குள் அடுத்த உணவை முடித்துவிட வேண்டும் (பனீர்). இடைப்பட்ட நேரத்தில் நொறுக்குத்தீனி எதுவும் வேண்டாம்.

இரண்டாம் கட்ட விரதம் என்பது, இந்த மூன்று வேளை உணவை இரு வேளைகளாகக் குறைப்பது. அதாவது எட்டு மணி நேரத்துக்குள் இரண்டு உணவுகளை முடித்துவிட்டு மிச்சமுள்ள பதினாறு மணி நேரங்களைச் சும்மா விடுவது. இது கொழுப்பை எரிப்பதற்கான அவகாசம். மூன்றாம் கட்டம் என்பதிலும் இரு வேளை உணவு உண்டு. ஆனால், நான்கு மணி நேரங்களுக்குள் அந்த இரண்டு உணவையும் முடிக்க வேண்டும். உதாரணமாக மதியம் இரண்டு மணிக்கு காய்கறியும் வெண்ணெயும் சாப்பிடுகிறீர்கள் என்றால், மாலை ஆறு மணிக்குள் பனீர் சாப்பிட்டு அன்றைய உணவை முடித்துவிட வேண்டும். இதன்மூலம் கொழுப்பை எரிப்பதற்கு நாம் உடலுக்கு இருபது மணி நேர அவகாசம் தருகிறோம்.

கவனியுங்கள். உணவின் அளவை நான் குறைக்கச் சொல்லவேயில்லை. ஒரு நாளைக்குத் தேவையான 1400 - 1500 கலோரி அளவில் மாற்றமே செய்ய வேண்டாம். உண்ணும் நேரத்தைத்தான் குறைக்க வேண்டும். நீங்கள் மூன்று வேளை சாப்பிட்டாலும் சரி, இரண்டு வேளை சாப்பிட்டாலும் சரி, அல்லது ஒரே ஒரு வேளை சாப்பிடுபவரானாலும் சரி. உரிய கலோரியில் குறைபாடே கூடாது. சாப்பிடும் வேளைகளை மட்டும்தான் குறைக்க வேண்டும். உதாரணத்துக்கு என் கதையையே சொல்கிறேன். நானும் முதலில் மூன்று வேளை உணவு, இரண்டு வேளை உணவு என்றுதான் உணவு உட்கொள்ளும் வேளைகளைக் குறைத்தேன். ஆனால் 20:4 விண்டோ என்று சொல்லப்படும் நான்கு மணி நேரத்துக்குள் இரண்டு வேளை உணவு என்னும் வழக்கத்தை மேற்கொள்ளவில்லை. மாறாக ஒரு நாளைக்கு ஒரே ஒரு வேளை உட்கொள்வது என்று ஆரம்பித்தேன்.

இந்த ஒருவேளை உணவில் இருநூறு கிராம் பனீர் இருக்கும். கால் கிலோவுக்குக் குறையாமல் தேங்காய் போட்டுச் சமைத்த காய்கறி ஏதாவது இருக்கும். கீரை இருக்கும். ஐம்பது கிராம் வெண்ணெய் இருக்கும். சில நாள் தக்காளி சூப் அருந்துவேன். இன்னும் சில நாள் கூடுதல் கலோரி ஆனாலும் பரவாயில்லை என்று பதினைந்து இருபது கிராம் பிஸ்தா சேர்ப்பேன். அனுமதிக்கப்பட்ட பேலியோ உணவு வகைகளில் நமக்குப் பிடித்தமான அனைத்தையும் 1500 கலோரிக்குள் வரும்படி ஒரே வேளையில் சாப்பிட்டுவிடுவேன். கவனியுங்கள். இந்த 1500 கலோரி என்பதைத்தான் நீங்கள் பிரித்துப் பிரித்து இரண்டு வேளை, மூன்று வேளைகளில் உண்கிறீர்கள். நான் அதை மொத்தமாக ஒரே வேளை உண்டு முடித்து மிச்சம் உள்ள 23 மணி நேரத்தையும் கொழுப்பெரிக்கப் பயன்படுத்துகிறேன். எடைக்குறைப்பு இதனால் வேகமாக நடக்க ஆரம்பிக்கும்.



பேலியோ கிச்சன்: பனீர் சாண்ட்விச்
நிதானமாகச் சமைக்க நேரமில்லாதபோது இதை முயற்சி செய்யுங்கள். பனீரை நீள்செவ்வகத் துண்டுகளாக வெட்டி தோசைக்கல்லில் போடவும். நெய் விட்டு இரு புறமும் பிரவுன் நிறம் வரும்வரை வேகவிடவும். கார்லிக் சீஸ் என்று கடையில் கேட்டால் கிடைக்கும். அதை ஒரு கப்பில் கொட்டி வைத்துக்கொண்டு வெள்ளரி, தக்காளி, வெங்காய வட்ட நறுக்கல்களை அதில் தோய்த்து இரு பனீர்த் துண்டுகளுக்கு இடையே வைக்கவும். மேலுக்குக் கொஞ்சம் மிளகுப் பொடி தூவினால் போதும். பிரமாதமாக இருக்கும். சீஸுக்கு பதில் தக்காளித் தொக்கு தடவியும் ருசிக்கலாம்.
(தொடரும்)

- பா.ராகவன்