ஊஞ்சல் தேநீர்



யுகபாரதி - 55

தன்னுடைய கதைகளை வெளியிட்டு புகழ் சேர்த்துக்கொள்ளும் ஆர்வம் தஞ்சை ப்ரகாஷுக்கு என்றைக்குமே இருந்ததில்லை. ‘பி.கே.புக்ஸ்’, ‘ப்ரகாஷ் வெளியீடு’ ஆகிய பதிப்பகங்கள் மூலம் கி.ராஜநாராயணன், அம்பை, க.நாசு, கே.டேனியல் உள்ளிட்ட பலருடைய படைப்புகளை அவர் வெளிக்கொணர்ந்திருக்கிறார். ‘பாலம்’, ‘வைகை’, ‘குயுத்தம்’, ‘சாளரம்’, ‘தஞ்சை முரசு’, ‘வெ.சா.எ’ ஆகியவை அவர் நடத்திய இலக்கிய இதழ்கள். பிறருடைய எழுத்துகளை அச்சில் பார்த்து குதூகலிக்கும் மனம் அவருடையது. எழுத்தாளர்களுடன் அவர் கொண்டிருந்த பற்றும் அன்பும் வேறு எவருக்கும் சாத்தியப்படாதவை. அவர் இந்த முகாமைச் சேர்ந்தவர், இவர் அந்த முகாமைச் சேர்ந்தவர் என்ற பாகுபாட்டோடு அவர் எவருடனும் பழகியதில்லை.

அவரைப் பொறுத்தவரை எல்லோருமே எழுத்தை நேசிப்பவர்கள். எழுத்தை நேசிப்பவர்கள் யாராயிருந்தாலும் அவர் நேசத்தில் உரிமை கோரலாம். எழுதினால் என்ன கிடைக்கும் என்னும் யோசனையே அவருக்கு இருந்ததில்லை. மேலும், எழுத்தின் வாயிலாகக் கிடைக்கும் அனுபவமே வாழ்க்கை என்னும் புரிதலை அவர் வைத்திருந்தார். எழுதுபவர்களிடையே  இருந்துவந்த குழு மனப்பான்மையை அவர் சட்டை செய்ததில்லை. ‘‘அவர்கள் சொல்வது ஒருவிதத்தில் சரி, இவர்கள் சொல்வது இன்னொருவிதத்தில் சரி...’’ என்பார். ‘‘இரண்டு பக்கமும் இருக்கிறீர்களே எது உங்கள் தரப்பு?’’

என்னும்போதுதான் தன்னுடைய முடிவுகளை அம்பலப்படுத்துவார். நல்ல இலக்கியம் என்பதற்கு அவர் வகுத்துவைத்திருந்த முன்முடிவுகளை அவர் எதற்காகவும் மாற்றிக்கொண்டதில்லை. ஒருமுறை கவிஞர் சுகனின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில், கவிதை குறித்த தன்னுடைய புரிதலை வெளிப்படுத்தினார். சுகன் அப்போது எழுதிவந்த கவிதைகள் நேரடித் தன்மையைக் கொண்டிருந்தன. ‘‘இதெல்லாம் கவிதைகளா?’’ என்னும் கேள்வியை எழுப்பி, எவை நல்ல கவிதைகள் எனவும் தஞ்சை ப்ரகாஷ் அக்கூட்டத்தில் விளக்கினார். அவரை அடுத்து பேசவந்த கவிஞர் ஆரூர் தமிழ்நாடனோ அப்பேச்சை கடுமையாக விமர்சித்து, “இதெல்லாம் கவிதையில்லை என்று சொல்பவர்க்கு கவிதை குறித்துப் பேச என்ன அருகதை இருக்கிறது...” என்றார்.

அவ்வளவுதான் அரங்கமே அல்லோலகல்லோலப்பட்டது. இரண்டு பக்கத்திலிருந்தும் கூச்சல், குழப்பம். ஒருகட்டத்தில் பிரச்னை பெரிதாகி கைகலப்பு வந்துவிடுமோ? என்றுகூட எண்ண வேண்டியிருந்தது. ஆனால், அவ்விழாவின் முடிவில் ஆரூர் தமிழ்நாடனை ஆரத்தழுவிக் கொண்ட முதல் ஆளாக தஞ்சை ப்ரகாஷ் இருந்தார். கருத்துகளை கருத்துகளால் மட்டுமே எதிர்கொள்ளத் தெரிந்தவராக தஞ்சை ப்ரகாஷ் தன்னை தகவமைத்துக் கொண்டிருந்தார். சுடுசொற்களையும் புன்னகையோடு ஏந்திக்கொள்வார். அவருக்கே அவருக்கான பார்வைகளை அவர் யாரிடமும் திணித்ததில்லை. அதே சமயம், அப்பார்வைகளை எந்த மேடையிலும் துணிந்து முன்வைக்கவும் தயங்கியதில்லை.

தஞ்சையின் அடையாளமாக பெரியகோவிலையும், சரஸ்வதி மகாலையும் சொல்பவர்கள், ப்ரகாஷை தஞ்சையின் இலக்கிய அடையாளமாகவே ஏற்றிருந்தார்கள். தமிழின் ஆகச்சிறந்த படைப்பாளிகள் பலரையும் நான், அவருடைய அச்சகக் கூடத்தில்தான் சந்தித்திருக்கிறேன். ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்து நான் நடக்கத் தொடங்கியபோது தீவிரமான ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார். அரசியல் பத்திரிகையொன்றில் உதவி ஆசிரியராக இருந்த என்னை, ‘கணையாழி’க்கு மடைமாற்றியதில் அவருக்கும் பங்கு உண்டு. இலக்கிய ஆர்வத்துடன் அரசியல் பத்திரிகையில் பணியாற்றுவதிலுள்ள சிரமங்களை அவர் உள்வாங்கியிருந்தார்.

‘எரியீட்டி’ என்னும் தலைப்பில் அவருமே அரசியல் பத்திரிகையைத் தொடங்க ஆசைப்பட்டவர்தான். தன் இலக்கிய வாழ்வில் பெற்றிருந்த அனுபவங்களை காய்த்தல் உவத்தல் இல்லாமல் என்னுடன் பகிர்ந்த அவர், என் வளர்ச்சியை பெருமிதத்தோடு வரவேற்றார். எப்போது சென்னைக்கு வந்தாலும் ‘கணையாழி’ அலுவலகத்திற்கு வந்து என்னை வாழ்த்துவார். கண்ணதாசன் நடத்திய ‘தென்றல்’ பத்திரிகையில் எழுத்தாளர் வண்ணநிலவன் வேலை பார்த்த தகவலெல்லாம் அப்போதுதான் எனக்குத் தெரியவந்தது. பத்திரிகைத்துறையிலும் பதிப்புத்துறையிலும் தனக்கு மிஞ்சிய ஏமாற்றங்கள் எனக்கு வந்துவிடக்கூடாதென எச்சரித்திருக்கிறார்.

இலங்கை எழுத்தாளர் கே.டேனியலின் ‘பஞ்சமர்’ நாவலை அவர் பதிப்பித்தபோது தலித் இலக்கியம் எனும் சொல்லாடல் இவ்வளவு கவனத்தைப் பெற்றிருக்கவில்லை. அடுத்த முப்பது ஆண்டுகளில் தலித் இலக்கியம் பெரும் கவனத்தை ஈர்க்கும் என்பதை அவரால் முன்கூட்டியே யூகிக்க முடிந்தது. ப்ரகாஷ் பதிப்பித்த ‘பஞ்சமர்’ நாவலுக்கு ஸ்ரீலங்கா ‘சாகித்ய அகாடமி’ பரிசு கிடைத்தது. பரிசளிப்பு விழாவுக்கு எழுத்தாளர் டேனியலைத் தேடியபோதுதான், அவர் சிறையிலிருக்கும் விஷயமே அரசுக்குத் தெரிந்தது. பரிசை அரசு அறிவித்தபோது டேனியல், ‘பஞ்சமர்’ நாவலின் இரண்டாம் பாகத்தை சிறையிலிருந்தபடியே எழுதிக்கொண்டிருந்தார்.

டேனியல் மெத்தப் படித்தவரில்லை. இசங்களையோ, இலக்கிய அனுபூதிகளையோ கருத்திற்கொண்டு எழுதியவருமில்லை. மக்களின் பாடுகளே அவருடைய பாடு பொருளாயிருந்தன. உழைக்கும் வர்க்கத்தின் குரலையே அவருடைய எழுத்துகள் முழங்கின. ஒரு பக்கம் இனக்கலவரமும் இன்னொரு பக்கம் ஜாதிவெறியும் தலைவிரித்தாடிய இலங்கையை, டேனியல் ஒருவரே மக்கள் மொழியில் எழுதிக்காட்டியவர். எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து, எங்கெங்கோ இருந்து சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதிய அவருடைய இறுதிக்காலங்கள் தஞ்சாவூரில் கழிந்தன. அவருக்கு ஆறுதலாகவும் ஆதரவாகவும் இருந்தவர்களில் பேராசிரியர் மார்க்ஸும் தஞ்சை ப்ரகாஷும் முக்கியமானவர்கள்.

இலங்கை எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரையும், டொமினிக் ஜீவாவும் டேனியலின் பால்யகால நண்பர்கள். இடதுசாரி இலக்கியத்தில் அதிருப்தியுற்ற எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை ஒருகட்டத்தில், முற்போக்கு இலக்கியம் என்பதற்கு மாற்றாக நற்போக்கு இலக்கியத்தை முன்வைத்தார். அவர் முன்வைத்த நற்போக்கு இலக்கியக் கோட்பாட்டுக்குள் டேனியல் வரவில்லை. அதன் விளைவாக பால்ய நண்பர்களாக இருந்த மூவரும் பிரிந்துவிடுகிறார்கள். எஸ்.பொன்னுத்துரை ஆஸ்திரேலியாவிலும் டொமினிக் ஜீவா மலையகத்திலும் டேனியல் தமிழகத்திலும் வாசம் செய்ய நேர்ந்தது. இந்தப் பிரிவை மூவரும் வெவ்வேறு சந்தர்ப்பத்தில் வருத்தத்தோடு பகிர்ந்திருக்கிறார்கள். கருத்து முரண்பாடுகளால் பிரிந்திருந்த அவர்கள் மூவரையும் இணைக்க எவ்வளவோ முயற்சிகள் நடந்தன.

என்றாலும், எஸ்.பொன்னுத்துரையால் டேனியலின் சமாதியை மட்டுமே காண முடிந்தது. வெகுகாலம் கழித்து தஞ்சாவூருக்கு என்னுடன் வந்திருந்த எஸ்.பொன்னுத்துரைக்கு டேனியலின் கல்லறையைக் காட்டும் பொறுப்பை ஏற்றது தஞ்சை ப்ரகாஷும் என் அப்பாவும்தான். ராஜகோரி இடுகாட்டில் டேனியலுக்கு அஞ்சலி செலுத்தும்போது எஸ்.பொன்னுத்துரை வடித்த கண்ணீரின் சூட்டை தஞ்சை ப்ரகாஷ் பல வருடங்களாக சொல்லிக்கொண்டிருந்தார். “அறிவுக்கு அப்பால் வேறு ஒன்று உள்ளதைப்போல, இலக்கியத்திற்கு அப்பாலும் ஒன்று உள்ளது. அதுதான் எஸ்.பொன்னுத்துரையை அழவைத்தது...” என்ற சொற்களுக்கு ஆத்மநேசமே அடிப்படை.

சிறுவயதிலிருந்தே தமிழ் இலக்கியத்தில் துளிர்விடும் புதிய தலைமுறை படைப்பாளிகளுடன் சுற்றுபவராக தஞ்சை ப்ரகாஷ் இருந்திருக்கிறார். வசதியான குடும்பப் பின்னணி கொண்ட அவர், தன்னுடைய மூதாதையர்கள் சேமித்துக்கொடுத்த செல்வத்தையெல்லாம் இலக்கியத்திற்காகவே செலவிட்டார். மத்திய, மாநில அரசு வேலைகளைத் துறந்துவிட்டு. இலக்கியமே வாழ்வென்று இயங்கிவந்தார். இழந்ததைப் பற்றிய வருத்தங்களை அவர் எந்த நொடியிலும் வெளிப்படுத்தியதில்லை. இலக்கிய தேசாந்திரியாக இருந்தது குறித்தோ தன்னை ஏமாற்றியவர்கள் குறித்தோ அவரிடம் புகார்களே இருந்ததில்லை.

‘பின்நகர்ந்த காலம்’ நூலில் எழுத்தாளர் வண்ணநிலவன், கடிதம் மூலம் தனக்கு அறிமுகமான தஞ்சை ப்ரகாஷ் திடீரென்று ஒருநாள் தன் வீட்டு வாசலில் வந்து நின்றதை வர்ணித்திருக்கிறார். நல்ல எழுத்து எங்கிருந்தாலும் தேடிப்போய் வாழ்த்துவதே அவர் வழக்கம். எழுத்தாளர்களை நேரடியாகச் சந்தித்து அளவளாவுவதில் அவருக்கிருந்த ஆர்வம் குறையவேயில்லை. ‘‘அப்படித்தான் ஒருமுறை தகழியைச் சந்திக்கும்போது...’’ என உரையாடலை சர்வ சாதாரணமாகத் தொடங்குவார். உதாரணங்களும் மேற்கோள்களும் நிறைந்த அவருடைய உரையாடல்கள் எதிரே இருப்பவர்களை எளிதாக ஈர்த்துவிடும். நவீன இலக்கிய வாசமுடைய அவரிடம், ‘திரைப்பாடல் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?’ எனக் கேட்கப்பட்டது.

அப்போது தஞ்சையைச் சேர்ந்த பாடலாசிரியர் வாசன் திரைத்துறையில் வளர்ந்துகொண்டிருந்தார். அவரை முன்வைத்தே அக்கேள்வி கேட்கப்பட்டது.“திரைப்பாடல்களை போகிறபோக்கில் புறந்தள்ளிவிடக்கூடாது. அதிலேயும் நல்ல அம்சங்கள் இருக்கின்றன. கண்ணதாசனிடமும் பட்டுக்கோட்டையிடமும் வெளிப்பட்ட காத்திரமான அரசியல் பார்வைகளை, நவீன இலக்கியவாதிகள் கவனிக்கத் தவறுகிறார்கள். சந்தத்திற்கு எழுதுவது சவாலானது. அதைச் சரியாகச் செய்ய மொழிப்பயிற்சியோடு இலக்கியப்பயிற்சியும் அவசியம். வாசனைப்போல இன்னும் பல புதியவர்கள் திரைத்துறைக்கு வரவேண்டும்.

அப்போதுதான் தஞ்சாவூரின் இசைமரபு மீட்கப்படும்...” என்றார். அவர் அக்கருத்தைச் சொல்லும்போது அருகிருந்து கேட்ட நானும், திரைத்துறையில் பாடல் எழுதப் புகுவேன் என அப்போது நினைக்கவில்லை. என் முதல் திரைப்பாடலை மட்டுமே அவர் கேட்டார். அதன்பின் ஆயிரம் பாடல்களை எழுதிவிட்டேன். அவர் இருந்திருந்தால் அவற்றைப்பற்றி என்னமாதிரியான கருத்துகளைச் சொல்வாரென யோசிக்க முடிகிறது.

(பேசலாம்...)

ஓவியங்கள்: மனோகர்