ஃபேஷன் Copy!



-ஷாலினி நியூட்டன்

பெண்களுக்கு பிடிக்காதது ஒப்பிடுவது. குறிப்பாக இன்னொரு பெண்ணுடன் கம்பேர் செய்வதை ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். ஆனால், யாருடன் வேண்டுமானாலும் அவர்களே தங்களை ஒப்பிட்டுக் கொள்வார்கள்! தலையில் மாட்டும் க்ளிப் முதல் காலில் அணியும் செருப்பு வரை சகலத்தையும் அடுத்த பெண்களைப் பார்த்தே பயன்படுத்துகிறார்கள்.

சாதாரண பெண்கள் மட்டுமல்ல, உலக அழகி ஐஸ்வர்யா ராய் முதல் தீபிகா படுகோன், சமந்தா, ஸ்ருதிஹாசன் வரை இதுதான் எதார்த்தம். ‘இதனால் எங்களுக்குத்தான் கெட்ட பெயர்...’ என உச்சுக் கொட்டுகிறார்கள் ஃபேஷன் டிசைனர்ஸ். சாம்பிளுக்கு 2014ம் ஆண்டு நடந்த சம்பவத்தை எடுத்துக் கொள்ளலாம். அந்த ஆண்டு நடைபெற்ற கேன்ஸ் விழாவில் ஐஸ்வர்யா ராய், கோல்டன் ரோபெர்டோ கவால்லி கவுனை அணிந்து ரெட் கார்ப்பெட்டில் நடந்தார்.

நல்ல விஷயம்தானே என்கிறீர்களா? அதுதான் இல்லை. அதே வருடம் நடந்த ஆஸ்கர் விழாவில் அமெரிக்க நடிகை கிறிஸ்டின் சினோவெத், இதே ஸ்டைல் கவுனைத்தான் அணிந்து சிவப்புக் கம்பளத்தில் நின்றார். போதாதா? இரு புகைப்படங்களையும் அருகருகே போட்டு, ‘என்னம்மா... இப்படிப் பண்றீங்களேம்மா...!’ என ஐஸ்வர்யா ராயைக் கலாய்த்து விட்டார்கள்.

ம்ஹும். அப்படியும் நம் நடிகைகள் திருந்துவதாக இல்லை. கைலே ஜென்னரைக் காப்பி அடிக்கும் தீபிகா படுகோன்; கிம் கர்தாஷியனை விடாது துரத்தி ஈயடிக்கும் கரீனா கபூர்; ஹாலிவுட் மகராசிகளின் ஸ்டைலை அப்படியே போட்டுக் கொள்ளும் சோனம் கபூர்; சோனம் கபூர் ஸ்டைலை அவ்வப்போது டிக் பண்ணும் சமந்தா; சமந்தாவின் சேலை, ப்ளவுஸ் மாடலை இமிடேட் செய்யும் ஸ்ருதி ஹாசன்... பட்டியல் பெருசு!

இப்படி ஃபேஷன் ஐகான்களே ஏன் ஈயடிச்சான் காபி செய்கிறார்கள்? கேள்வியை சில ஃபேஷன் டிசைனர்களிடம் முன்வைத்தோம். “ஐஸ்வர்யா முதல் அம்சவேணி வரை இதெல்லாம் மாறவே மாறாது...’’ என்று ஆரம்பித்தார் காவ்யா ரெட்டி. ‘‘நதியா மிடி, ‘டைட்டானிக்’ தோடு, ‘படையப்பா’ சேலை, ‘ரங்கீலா’ கவுன், ‘அமர்க்களம்’ சுடிதார், ‘மஸ்தானி’ சல்வார்... இதெல்லாம் என்ன? காபி பாணியை விரும்பும் பெண்களால் நடந்த கல்ச்சுரல் இம்பாக்ட்தானே?

இதில் எந்தத் தவறும் கிடையாது. ஃபேஷன் ஷோக்களே உடைகளை அறிமுகப்படுத்தத்தானே நடக்கின்றன? ஆனால், ஸ்டார்ஸ் செய்யும்போது அவை விவாதமாகின்றன. ‘இதெல்லாம் யாருக்கு தெரியப் போகுது...’ என நடிகைகள் நினைக்கிறார்கள். ‘இதுதான் டிரெண்ட்...’ என டிசைனர்ஸ் மயங்குகிறார்கள். இப்படி இரண்டு பக்கமும் தவறுகள் நடக்கின்றன. என்ன... ‘அதே மாதிரி வேணும்...’ எனக் கேட்பதை நடிகைகள் தவிர்க்கலாம்.

கலர், டிசைன்ஸ் உட்பட அப்படியே ஈயடிக்கிறார்கள். ஐஸ்வர்யா ராயின் உடலுக்கு சில உடைகள் பொருந்தும். கேமரா, லைட்டிங், எச்டி மேக்கப் என பல அம்சங்கள் அவர்கள் அழகுக்கு துணை சேர்க்கும். இதைப்பற்றி துளியும் கவலைப்படாமல் தங்கள் உடலுக்குப் பொருந்தாத உடைகளை - செலிபிரிட்டி அணிந்தார்கள் என்ற ஒரே காரணத்துக்காக - தாங்களும் அணிய மற்றவர்கள் நினைத்தால் என்ன ஆகும்? கேவலமாகத்தான் தெரியும்!

நம் உடல்வாகுக்கு எது பொருந்துமோ அதைத்தான் அணிய வேண்டும். என்னிடமே சில பெண்கள், ‘தீபிகா படுகோன் மாதிரி வேணும்...’ என்பார்கள். தீபிகாவின் உயரம், தோலின் நிறம்... இவை எல்லாம் நமக்கு சூட் ஆகுமா என அவர்கள் யோசிப்பதே இல்லை. ஆனால், அதே டிசைனை நமக்கு ஏற்றபடி வண்ணங்களில் அல்லது வடிவத்தில் மாற்றிக் கொள்ளலாம்.

இதையெல்லாம் எடுத்துச் சொன்னாலும், ‘ம்ஹும். அதே மாதிரிதான் வேணும்...’ என பெண்கள் அடம் பிடிக்கிறார்கள். சரி என்று டிசைன் செய்து தருவோம். அதை அவர்கள் அணிந்ததும் எதிர்மறையான விமர்சனங்கள் வரும். உடனே, ‘டிசைனர் சரியில்ல...’ என எங்களைக் குறை சொல்வார்கள்...’’ என வருத்தப்படுகிறார் காவ்யா.

இதை ஆமோதித்தபடியே தொடர்கிறார் ஜெய்வித்யா. ‘‘எங்கள் கற்பனைக்கு வேலையே கொடுக்க மாட்டார்கள். ஒரு கட்டத்துக்குப் பிறகு ‘உங்ககிட்ட ஏதாவது மாடல் இருக்கா..?’ என நாங்களே கேட்க ஆரம்பித்து விடுகிறோம். டைலர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். ஜாக்கெட் தைக்க போகும்போதே, ‘இதுல ஒரு டிசைனை செலக்ட் பண்ணுங்க...’ என செலிபிரிட்டி போட்டோஸைப் பரப்புகிறார்கள்.

நாங்கள் செலவு செய்து படித்து கற்றுக்கொண்டதே ஒவ்வொரு பெண்ணையும் அவர்களின் உடல்வாகுக்கு ஏற்ப அழகுபடுத்தத்தான். நாம் பயன்படுத்தும் / அணியும் உடைகள் மற்றவர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்க வேண்டும். நமது தனித் தன்மையை வெளிப்படுத்த வேண்டும். அப்போதுதான் அழகு வெளிப்படும். டிசைனர்களிடம் உங்களை அப்படியே ஒப்படையுங்கள். உங்களை பிரமாதமாக அழகுபடுத்திக் காட்டுவார்கள்!’’ என்கிறார் ஜெய்வித்யா.