கடம்பன்



-குங்குமம் விமர்சனக்குழு

காடுகளை அழிக்க காரணமாகும் கயவர்களை களையெடுப்பவனே ‘கடம்பன்’. நகரத்தின் வாசனையே இல்லாத இயற்கையின் அரவணைப்பில் அந்த மலைக்கிராமம் இருக்கிறது. தேனடைகள் சேகரிப்பதும், சிறு விலங்குகளை வேட்டையாடுவதுமாக அங்கே வாழ்க்கை நகர்கிறது. சந்தோஷமும், பெரும் களிப்பும் கொண்ட வாழ்க்கையில் குறுக்கிடுகிறது கார்ப்பரேட் கூட்டம். அதுவரை இருந்த அமைதி நிலைகுலைகிறது. தலைவனாக செயல்படுகிற ஆர்யா, பெரும் முதலாளிகளிடமிருந்து காட்டைக் காப்பாற்ற முயற்சிக்கிறார்.
\
இடையில் நிகழும் சதிகளால் தன் நண்பர்களை இழக்கிறார். காட்டின் வாழ்க்கையை தக்க வைத்துக் கொண்டாரா? முதலாளிகளின் பிடியிலிருந்து அவர்களுக்கான  வாழ்வு கிடைத்ததா? அதை ஆர்யா பெற்றுத் தந்தாரா? என்பதே கதை! ஆரம்பத்தில் வரும் தேன் எடுக்கும் காட்சியே பிரமாண்டம். ப்ளேபாய் இமேஜிலிருந்து காத தூரம் வந்துவிட்டார் ஆர்யா. இறுக்கமும், ஜிம் பாடியுமாக அசல் ‘காட்டுப்பய’ உருவம் எடுக்கிறார். கேரக்டருக்கான அவதானிப்பில் ஆர்யா எடுத்திருப்பது கூடுதல் அக்கறை.

மலைக்கிராமத்தின் இயற்கை பரிவோடு அமைத்திருக்கும் காட்சிகள் எல்லாமே சுறுசுறுதான். நிற்க நேரமே இல்லாமல் ஆர்யா ஓடிக்கொண்டே இருந்தாலும், அவர் வரையிலும் படத்திற்கு தெம்பூட்டுகிறார். கேத்தரின் தெரசா அழகு! ஆனால், அதுமட்டுமே போதுமா? படத்தின் காதல் ஏரியாவில் கைகொடுத்தாலும், இன்னும் கொஞ்சம் நடிப்பையும் கற்றுக் கொள்ளலாம்.

ஏக உயரத்தில் கொட்டும் அருவியின் அடியில் மூழ்கி அவர் நனைந்து எழுந்துவரும்போது நமக்குத் தெரிவது அழகான அளவுகளுடைய சுத்தமான பிம்பம். முகத்தில் பொங்கும் பொலிவும், இளமையும் உடல்மொழியில் மிஸ்ஸிங். அத்தனை வலிமையான கார்ப்பரேட் முதலாளி அவ்வளவு எளிதாக காட்டில் பாம் போட முடியுமா? ஆனால், அந்த முதலாளி நல்ல சாய்ஸ்! அவரின் எதிர்ப்புகளை எதிர்கொள்ளாமல் இவ்வளவு அம்மாஞ்சியாகவா கிராமத்து மக்கள் இருப்பார்கள்!

ஒய்.ஜி.மகேந்திரா, மதுவந்தியின் வார்த்தைகளில் ஆர்யா இளகுவது நம்பும்படியாக இல்லை. இவ்வளவு இயற்கை நிலப்பரப்பு சின்னாபின்னமாவதை அரசாங்கத்திற்குத் தெரியாமல் உள்ளூர் அதிகாரிகளே திட்டம் போட்டு வளைப்பது நம்பும்படியாக இல்லை. இவ்வளவு ஆக்ரமிப்புக்கு எவ்வளவு அரசியல் இருந்திருக்க வேண்டும். அதற்கான எந்த பின் தொடர்பும் இல்லை.

இருந்தாலும் ஆர்யா பேசும் வசனங்கள் சூடு. இயற்கையைக் காவு கொடுக்கும் இந்த மாதிரியான வேலைகளுக்கு ரெட் சிக்னல் கொடுத்த வகையில் டைரக்டர் ராகவாவுக்கு வாழ்த்துகள். யுவனின்  இசையில் ‘ஒத்த பார்வையில்...’ பாடல் இனிப்பு. பின்னணியில் மட்டும் உழைத்திருக்கிறார்.

எஸ்.ஆர்.சதிஷ்குமாரின் ஒளிப்பதிவில் ஒட்டுமொத்த காடும், காடு சார்ந்த இடமும், லொகேஷன் ஒவ்வொன்றும் ஸ்கிரீன் சேவர்களாக மனம் மயக்குகிறது. எடிட்டிங் தேவ் கச்சிதம். இயற்கையைப் பற்றிப் பேசுகிற கதைக்கு இன்னும் தகவல் சேர்த்து உலக அரசியலைக் கூடப் பேசியிருக்கலாம். ஹீரோயிசத்தில் இருந்துகொண்டே விளையாட முயற்சித்திருக்கிறார்கள். அதுமட்டுமே போதுமா?