தனுசு லக்னம் - குரு - சுக்கிரன் தரும் யோகங்கள்



கிரகங்கள் தரும் யோகங்கள் - 87

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

தேவகுருவான குருவும், அசுர குருவான சுக்கிரனும் சேரும்போது வறட்டுப் பிடிவாதத்தோடு இருப்பார்கள். இவர்கள் விட்டுக் கொடுத்தாலன்றி வெற்றி பெறுவது சிரமம். கிடைப்பதைத் தக்கவைத்து முன்னேறவேண்டுமேயன்றி, இருப்பதை விட்டுவிட்டு ஏமாளியாக இருக்கக் கூடாது என்பதை இவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

தனுசு லக்னத்திற்கு சுக்கிரன் எதிர்மறைப் பலன்களை ஏற்படுத்துவார். இயற்கைக்கு மீறிய வருமானம், பதவி என்று எதைத் தந்தாலும் அதையெல்லாம் இழக்க நேரிடும். எல்லோரையுமே கேள்விக்கு உட்படுத்துவார்கள். எத்தனை பெரிய மனிதராயினும் அவர்களின் பதவிகளைக் கொண்டு பார்க்காமல் கறாராக ஆய்வுக்கு உட்படுத்துவார்கள்.

பேச்சில் எப்போதும் தீர்மானம் இருக்கும். சட்டென்று எல்லா விஷயத்திலும் உள்ள எதிர்மறைதான் கண்ணுக்குத் தெரியும். நீங்கள் வீடு கட்டும் இடத்தில் அழகான மரங்கள் இருந்தால் வெட்டுவதற்கு யோசிப்பீர்கள். மனிதநேயத்தை பாதிக்கும் பக்திக்கு எதிர்ப்பு தெரிவிப்பீர்கள். மாநில அளவில் முதலில் வந்திருப்பார்கள். ஆனால், வேலையில்லாமல் அறிவுஜீவிபோல பேசியபடியே திரிவார்கள்.

மேலே சொன்னவை பொதுவான பலன்களாகும். இவ்விரு கிரகங்களும் ஒவ்வொரு ராசியிலும் நின்றால் என்னவென்று பார்ப்போமா? தனுசு லக்னத்திலேயே லக்னாதிபதியும் நாலுக்கு உரியவருமான குருவும், ஆறுக்கும், பதினோராம் இடத்திற்கும் அதிபதியான சுக்கிரனும் சேர்ந்திருந்தால் மத்திமமான பலன்களே கிடைக்கும். நாலு விஷயங்கள் தெரிந்து கொண்டதாகக் காட்டிக் கொள்வார்கள்.

முரண்பாடுகளின் தொகுப்பாக இருப்பார்கள். இளைய சகோதர, சகோதரிகள் தன்னைப் புரிந்து கொள்ளவில்லையே என்று வருத்தத்தோடு இருப்பார்கள். அவர்களும் ஏதேனும் ஒருவிதத்தில் இவரைச் சார்ந்தே இருப்பார்கள். தனக்கு ஏதோவொரு நோய் இருப்பதாகச் சந்தேகத்தோடு இருப்பார்கள். குருட்டுத் தைரியத்தில் ஏதேனும் கடனை வாங்கியபடி இருப்பார்கள்.

மகர ராசியான இரண்டாம் இடத்தில் இவ்விரு கிரகங்களும் அமர்ந்திருந்தால் பாம்பு நாக்கு இவர்களுக்கு. மாற்றி மாற்றி பேசிக் கொண்டிருப்பார்கள். எதையுமே மிகைப்படுத்தியே பேசுவார்கள். எதற்குமே நேரடியான பதில்கள் வராது. குடும்பத்தை விட்டு அன்னிய தேசத்தில் வசிப்பவர்களாகவும் இருப்பார்கள். ஆரம்பக்கல்வி தடைபட்டுக் கொண்டேயிருக்கும்.

மிகச் சிறந்த விமர்சகராக விளங்குவார்கள். செவித்திறன் மற்றும் பார்வைக் கோளாறு வந்து நீங்கும். தான் முன்பு சொன்ன கருத்தை தானே மறுத்துப் பேசுவார்கள். அதனால், இவருடைய பேச்சை சபையினர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். காது மற்றும் கண்ணில் ஏதேனும் தொந்தரவு வந்து நீங்கும். பள்ளியில் ஆசிரியர்களுக்கு மிகவும் நெருக்கமாக இருப்பார்கள். தங்களைவிட பெரியோர்களிடம் நெருக்கமாகப் பழகுவார்கள்.

கும்ப ராசியான மூன்றாம் இடத்தில் இவ்விரு கிரகங்களும் அமைவது ராஜயோகம் கொடுக்கக் கூடிய அமைப்பு. எழுத்துத் திறமையோடு திகழ்வார்கள். அயல்நாட்டுத் தொடர்புள்ள ஆதாயம் நிச்சயம் உண்டு. இவர்களை அடுத்துள்ள இளைய சகோதரர்கள் வாழ்க்கையில் சரியானபடி அமராமல் அலைச்சலை எதிர்கொள்ள நேரிடும். சமூகத்திலோ, தான் சார்ந்த துறையிலோ யாராலும் கவனிக்கப்படாத விஷயத்தை எடுத்துச் சொல்லி புகழ் பெறுவார்கள்.

இளைய சகோதரத்தோடு ஏதேனும் ஒரு பிரச்சனை இருந்து கொண்டேதான் இருக்கும். நண்பர்கள் அதிகமாக இருப்பார்கள். மீன ராசியான நான்காம் இடத்தில் குருவும் சுக்கிரனும் இருந்தால் பூர்வீகத்தை விட்டு புறப்பட்டு விடுவார்கள். இந்த அமைப்பில் உள்ளவர்களுக்கு சந்திரன் கெட்டுப் போயிருந்தால் பால்ய வயதிலேயே தாயாரின் உடல்நிலை பாதிக்கக் கூடும். ஆனாலும், தாயாரின் வழிகாட்டுதல் நிறையவே இருக்கும். தாய் வழிச் சொத்துகள் இவருக்கு வந்து சேரும்.

பொதுவாகவே வாகனங்களைக் கையாளும்போது கவனம் தேவை. மேஷ ராசியில் இவ்விரு கிரகங்களும் அமர்ந்திருந்தால் இவர்கள் பிறந்தவுடனேயே தாய், தந்தை இடம் பெயர்வார்கள். பூர்வீகச் சொத்து இழப்பு ஏற்படும். தந்தைக்கும் மகனுக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டபடி இருக்கும். விருப்பத்திற்கு மாறாக வாரிசுகள் மணம் புரிந்து கொள்வார்கள். குரு ஐந்தில் இருப்பதால் தாமதமாகவே மழலை பாக்கியம் கிட்டும்.

எப்போதுமே இவர்களின் கட்டுப்பாட்டிற்குள் குழந்தைகள் வளரமாட்டார்கள். ஆனாலும், தான் சார்ந்த மரபு, சம்பிரதாயம் போன்றவற்றிலெல்லாம் மிகுந்த ஆர்வம் செலுத்துவார்கள். வேதங்களில் சொல்லப்பட்டுள்ள ஜோதிடம், வானவியல் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபடுவார்கள்.

ரிஷப ராசியான ஆறாம் இடத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்று, குருவோடு சேருகிறது. இந்த இரு கிரகங்களும் பொருளாதார வசதியில் நல்ல நிலைக்கு எடுத்துச் செல்லும். பதினொன்றுக்கு உரியவர் ஆறில் அமர்வதால் முக்கியமான வயதில் மூத்த சகோதரர்களோடு பிரச்சனைகள் வரும். மனக்கசப்பு வந்து பிரிவார்கள். தான் சார்ந்த இனம், மதம், மொழிஎன்று இவற்றுக்கு எதிராகச் செயல்படுவதால் புகழ் பெறுவார்கள்.

குரு ஆறில் அமர்வதால் தனக்குத்தானே பிரச்னைகளை உருவாக்கிக் கொள்வார்கள். இவர்களில் பலர் நாத்திகர்களாகவும் இருப்பார்கள். கையில் பணம் இருந்தால் தண்ணீர் போன்று செலவு செய்வார்கள். இவர்களைச் சுற்றியுள்ளவர்களே  இவர்களைச் சிக்க வைப்பார்கள். இவர்கள் கடன் வாங்குவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

மிதுன ராசியான ஏழாம் இடத்தில் குருவும் சுக்கிரனும் அமர்வதால் வாழ்க்கைத் துணையின் உடல்நிலை பாதிக்கப்படும். குழந்தைப் பிறப்பு தடைப்பட்டு தாமதமாகும். பெரும்பாலும் இந்த அமைப்பில் உள்ளவர்களுக்கு காதல் திருமணம்தான் நடக்கும். வாழ்க்கைத் துணைவர் கலைகளில் மிகவும் ஈடுபாடு மிக்கவர்களாக இருப்பார்கள்.

மிகுந்த ரசனை உணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள். ஒரு தொழிலை ஏற்று அதைச் சரியாகச் செய்தாலே போதுமானது. ஏனெனில், பல தொழில்களில் ஈடுபட்டு கையைச் சுட்டுக் கொள்வார்கள். இவர்கள் ஆணாக இருந்தால் பெண்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கடக ராசியான எட்டாம் இடத்தில் குரு உச்சமடைகிறது. கூடவே சுக்கிரனும் இருந்தால் சிந்தனை வயப்பட்டவராகவே இருப்பார்கள்.

பேசினால் அறிவுபூர்வமாக பேசவேண்டுமென்று விரும்புவார்கள். மனம் அலை பாய்ந்து கொண்டேயிருக்கும். கடைசி நேரத்தில் சில விஷயங்கள் தவறாக முடியும். இவர் நிம்மதியாக இருக்க வேண்டுமெனில் சொத்துகளை மனைவியின் பேரில் வைத்துக் கொள்வது நல்லது. ஜோதிடம், ஆயுர்வேத மருத்துவம் என்று தீவிர ஆராய்ச்சியில் இருப்பார்கள்.

பல நேரங்களில் தாயார் அல்லது சகோதரியின் கட்டுப்பாட்டிற்குள் இருப்பார்கள். இவர்களின் பலவீனமே பெருங்கோபம்தான். எனவே, அதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். சிம்ம ராசியான ஒன்பதாம் இடத்தில் குருவும் சுக்கிரனும் ஒன்றாக இருந்தால் நேர்மையாக இருக்க நினைத்தால் கூட தவறான கூட்டத்தோடு நட்பு கிடைக்கும். இவர்கள் மீது தவறை வைத்துக் கொண்டு, இவர்களின் பலவீனங்களை மறைத்துக்கொண்டு எல்லாவற்றிற்கும் காரணம் தந்தைதான் என்று முடிவுக்கு வருவார்கள்.

ஆனாலும் இன்னொரு கோணத்தில் தந்தை மிகமிக புத்திசாலியாக இருப்பார். தவறை எப்போதும் நியாயப்படுத்திப் பேசுவார்கள். தந்தையின் தொழிலை ஏற்று நடத்துவார்கள். நிறைய சேமித்து வைக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். புண்ணிய காரியங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருப்பார்கள். மத்திம வயதுக்கு மேல் தர்ம ஸ்தாபனங்களில் ஈடுபட்டு உதவுவார்கள்.

கன்னி ராசியான பத்தில் குருவும், சுக்கிரனும் அமர்ந்தால் சொந்தத் தொழில் செய்யக் கூடாது. ஒன்றை உருவாக்கி அழிக்கும் தொழிலில் ஈடுபடலாம். அதாவது கோழிப் பண்ணை, பட்டுப் பூச்சி வளர்ப்பு என்று ஈடுபடலாம். அன்னிய தேசத்திற்குச் சென்று பணம் ஈட்டுவார்கள். ஆனால், இந்த பத்திலுள்ள குரு அடிக்கடி வேலையை மாற வைத்துக் கொண்டேயிருப்பார்.

சமய வழிச் சொற்பொழிவுகள் நிகழ்த்துவார்கள். பள்ளிகளில் ஆசிரியராகப் பணிபுரிவார்கள். வங்கியில் மேனேஜராக இருப்பார்கள். மத்திம வயதிற்குப் பிறகு தனக்குப் பிடித்த துறையிலேயே ஈடுபட்டு புகழ் பெறுவார்கள். இந்த இரு கிரகங்களும் பத்து பாகையை தாண்டிவிட்டால் வேத விற்பன்னர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு தெரியாத விஷயங்களே இருக்காது துலா ராசியான பதினோராம் இடத்தில் சுக்கிரன் ஆட்சி பெறுகிறார். குருவும் சேர்ந்தால் மூத்த சகோதர சகோதரிகளுக்கு உதவியபடி இருப்பார்கள்.

கிட்டத்தட்ட ஒரு ராஜகுருவின் அனைத்து தோரணைகளும் இவர்களிடத்தில் காணப்படும். விருச்சிக ராசியில், அதாவது பன்னிரெண்டாம் இடத்தில் இவ்விரு கிரகங்களும் அமைந்தால். அதிக அலைச்சல் இருக்கும். ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுவார்கள். ஆனால், தீவிரமான ஆன்மிகத் தேடலில் சென்று கொண்டிருப்பார்கள். தொடக்கத்தில் காமக் களியாட்டங்களில் அதீதமாக ஈடுபட்டு பின்னர் ஆத்மிகமான வாழ்க்கைக்குத் திரும்புவார்கள். இவர்கள் தங்களின் சொந்த ஊரிலிருந்து இடம் பெயர்ந்தால் மிகவும் நல்லது.

குரு-சுக்கிரன் சேர்ந்த அமைப்பானது முரண்பாடுகளை ஏற்றுக்கொண்டும், விவாதித்துக் கொண்டும் முன்னேறும் அமைப்பாகும். கன்னியில் சுக்கிரன் நீசமாவதால் இவர்களிடம் பொதுவாகவே போராட்ட குணம் குறைவாக இருக்கும். மேலும், ஏதேனும் ஒரு வழியில் சென்று முன்னேறுவதற்கு முயலாமல் கையிலிருக்கும் வேலையையே அது தன்னுடைய தகுதிக்குக் கீழானது என்று நினைப்பார்கள்.

இவர்களின் சரிவுக்கு இதுவே காரணமாகும். எனவே, இம்மாதிரியான எதிர்மறை மனோநிலையிலிருந்து வெளிவருவதற்கு இவர்கள் செல்ல வேண்டிய தலம் சின்னாளப்பட்டி ஆகும். இங்கு சதுர்முக முருகனாக நான்கு முகங்களோடு முருகன் அருள்பாலிக்கிறார். வலது கரத்தில் சங்கு முத்திரையும், இடது கரத்தில் சக்கர முத்திரையும் கொண்டவர். வள்ளி-தெய்வானை சமேதராக சுப்ரமணிய சுவாமி அருள்கிறார். இத்தலம் திண்டுக்கல்லில் இருந்து 11 கி.மீ. தொலைவில் மதுரை செல்லும் பாதையிலுள்ளது.

(கிரகங்கள் சுழலும்...)

ஓவியம்: மணியம் செல்வன்