விஜயனின் வில்



கே.என்.சிவராமன் - 23

‘‘ஏன் உங்க முகம் மாறுது? முன்னாடியே இந்தச் செய்யுளை கேட்டிருக்கீங்களா..?’’ கேட்ட ஆதியின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் ஐஸ்வர்யா தத்தளித்தாள். உடனிருந்த கிருஷ்ணனையும் தரையையும் மாறி மாறி பார்த்தாள். ‘‘ஆமா...’’ சட்டென்று கிருஷ்ணன் பதில் சொன்னான். சந்தேகத்தின் வேர் விருட்சமாக வளர அவன் விரும்பவில்லை.

இனி நடக்கவிருக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும் இவனுடனான கூட்டு அவசியம். அதை உடைக்கும் பொறியை ஆரம்பத்திலேயே அணைத்து விடுவது நல்லதல்லவா..? ‘‘எப்படித் தெரியும்?’’ ஆதி விடவில்லை. ‘‘இவ ஃப்ரெண்டு மூலமா...’’ ‘‘அவ பேரு..?’’ விடமாட்டான் போலிருக்கிறதே என்று கிருஷ்ணன் யோசித்தபோது - ஐஸ்வர்யா தலையை உயர்த்தினாள். ‘‘தாரா...’’ ஆதியின் உடல் நிமிர்வதையும் அவன் கண்கள் இடுங்குவதையும் கிருஷ்ணன் குறித்துக் கொண்டான்.

‘‘அப்ப கார்க்கோடகர் பத்தியும் அந்த தாரா சொல்லியிருக்கணுமே..?’’ ‘‘அட ஆமா... ஆதி உனக்கு அவரைத் தெரியுமா?’’ கிருஷ்ணன் செயற்கையாக மலர்ந்தான். ‘‘ம்... இந்தச் செய்யுளை எனக்கு சொன்னதே அவர்தான்... சரி. அதை வைச்சு பிரேக் பண்ண முடியுமானு பாருங்க...’’ ‘‘பார்க்கலாம். ஆனா...’’ ஐஸ்வர்யா இழுத்தாள். ‘‘என்ன..?’’ ‘‘அந்தச் செய்யுள் ஒரு செல்போன் நம்பரை குறிக்கறதா நினைச்சோம்...’’ பக்கென்று ஆதி வாய்விட்டுச் சிரித்தான்.

‘‘எப்படி..?’’ நவகிரகம் என்றால் ஒன்பது என்று தொடங்கி சகலத்தையும் விவரமாகச் சொன்னாள். ‘‘அந்தக் காலத்துல ஏது செல்போன்..?’’ பற்கள் தெரிய புன்னகைத்த ஆதி தலையை உலுக்கிக் கொண்டான். ‘‘அப்படி நீங்க கண்டுபிடிச்ச மொபைல் நம்பர் 9840907375. கரெக்ட்டா..?’’ கிருஷ்ணனுக்கு எங்கோ அலாரம் அடித்தது. ‘‘நூறு சதவிகிதம்!’’ ‘‘அந்த நம்பருக்கு கால் பண்ணீங்களா..?’’ ‘‘ஸ்விட்ச் ஆஃப்னு வந்தது...’’ ‘‘இப்ப போட்டுப் பாருங்க.

ரிங் போகும். ஏன்னா என் செல் ஆன்ல இருக்கு!’’ ‘‘ஆதி...’’ ஐஸ்வர்யா கிறீச்சிட்டாள். ‘‘இஸ் இட் யுவர்ஸ்..?’’ ‘‘யெஸ்!’’ அதன் பிறகு மூவரும் எதுவும் பேசவில்லை. பாழடைந்த அந்த கோயிலுக்குள் நுழைய வழியைத் தேடினார்கள். தரையில் அமர்ந்து Codeஐ பிரேக் செய்ய முயன்றார்கள். முதல் வாக்கியத்தை கையில் எடுத்தார்கள்.

‘நவகிரகமும் எட்டு திசையில் நான்கு மூலையில் ஒன்றுமில்லை...’ பெர்முடேஷன் அண்ட் காம்பினேஷனில் இதை மாற்றிப் பார்த்தார்கள். எல்லாமே எக்குத்தப்பாக அபத்தமாக வந்தன. கிருஷ்ணனுக்கு இதுவரை தான் கற்ற கல்வி அனைத்தும் பயனற்றதோ என்று தோன்ற ஆரம்பித்தது. சலிப்புடன் ஐஸ்வர்யாவை ஏறிட்டான். அவள் நிலையும் அதேதான்.

‘‘என்னடா... பல்பு வாங்கறோம்...?’’ ‘‘இரு... உடனே சலிப்படையாத...’’ சொன்ன கிருஷ்ணன் தன் மொபைலை கையில் எடுத்தான். ‘‘என்னடா பண்ணப் போற..?’’ஐஸ்வர்யாவின் கேள்வி ஆதியின் கண்களிலும் வழிந்தது. ‘‘தாரா விஷயத்துல முதல்ல என்கிட்ட நீ பேசினது பூரா ரெக்கார்ட் பண்ணியிருக்கேன். அதை திரும்ப கேட்டா ஏதாவது க்ளூ கிடைக்கும்...’’ ‘‘எப்படிடா கிடைக்கும்?’’ ‘‘இல்ல ஐஸ்... கிருஷ்ணன் சொல்றது சரிதான்.

ரெண்டு பேரும் ஏற்கனவே கேட்ட செய்யுளுக்கு இப்ப வேற அர்த்தம் கிடைக்கலையா? அதுமாதிரி ஏதாவது கதவு திறக்க வாய்ப்பிருக்கு...’’ சொன்ன ஆதியை நோக்கி கண்களைச் சிமிட்டிய கிருஷ்ணன் ரிக்கார்ட் செய்த ஆடியோவை ஸ்பீக்கரில் போட்டான். ‘அவிச்ச முட்டைல KVQJUFS...’ என்று வந்ததும் ஐஸ்வர்யா துள்ளினாள். ‘‘க்ருஷ்... ஸ்டாப்... ஸ்டாப்...’’ ‘‘என்ன..?’’ ஆடியோவை அணைத்தான்.

‘‘இது பத்தி என்கிட்ட தாரா ஒண்ணு சொன்னா...’’ ‘‘என்னனு..?’’ ‘‘வெயிட். அதே சென்டன்ஸை அப்படியே ரிப்பீட் பண்றேன்...’’ கண்களை மூடி சற்று நேரம் யோசித்தாள். ‘‘க்ருஷ்... அப்படியே ரிக்கார்ட் பண்ணு. மே பி பிறகு நானே மறந்துடுவேன்...’’ ‘‘ஷூட்...’’ செல்போன் ரிக்கார்டரை ஆன் செய்தான்.

‘‘நவ் கம்ஸ் தாராஸ் வேர்ட்ஸ்... அவிச்ச முட்டைல KVQJUFSனு எழுதியிருந்தது. லேப்டாப்புல இதை அடிச்சு என்னனு பார்த்தேன். Encrypting kvqjufsனு ஆறு பக்கத்துக்கு ஏதேதோ வந்துச்சு. ஒண்ணும் புரியலை. வேக வைச்ச முட்டைல எப்படி எழுத்துக்கள் வரும்னு கூகுளாண்டவர்கிட்ட கேட்டேன். அது என் கையைப் பிடிச்சு 16ம் நூற்றாண்டுக்கு கொண்டு போச்சு.

இத்தாலியைச் சேர்ந்த விஞ்ஞானியான Giovanni Porta, ரகசியங்களைக் கடத்த இந்த வழிமுறையை கண்டுபிடிச்சிருக்கார். படிச்சதும் தலையே சுத்தறா மாதிரி இருந்தது. ஆனா, ஒண்ணு. KVQJUFS ஏதோ ஒரு சொல்லோட Code wordனு புரிஞ்சுது. அதுக்கு மேல யோசனையே ஓடலை. எக்குத்தப்பா கண்டபடி சர்ச் பட்டன்ல தேடினேன். அரை மணி நேரத்துக்கு அப்புறம் சின்னதா வெளிச்சம் கிடைச்சது.

ஒருவேளை அடுத்து வர்ற ஆங்கில எழுத்தை KVQJUFS குறிக்குதா? பேப்பரை எடுத்து எழுதிப் பார்த்தேன். LWRKVGT. ம்ஹும். இது KVQJUFS-ஐ விட குழப்பமா இருக்கேனு தலையை பிச்சுக்கிட்டப்ப - சட்டுனு வெளிச்சமாச்சு. ஒய் நாட்? ஒருவேளை முந்தைய ஆங்கில எழுத்தை KVQJUFS குறிச்சா..? எழுதினேன். JUPITER.

காட் இட்! ‘ஜூபிடர்’ ஒரு கிரகம். இதனோட தமிழ்ச் சொல் ‘வியாழன்’. அதாவது ‘குரு’... இதுதான் என்கிட்ட தாரா சொன்னது...’’ ஐஸ்வர்யா கண்களைத் திறந்ததும் ரிக்கார்டரை அணைத்தபடி கிருஷ்ணன் மலர்ந்தான். ‘‘தட்ஸ் இட். குரு. கார்க்கோடகர் இதைத்தான் அந்தச் செய்யுள்ல குறிப்பிடறார். அதுக்கான க்ளூதான் ‘நவகிரகம்’. கடைசில ‘திரிசூலம்’. கிரகங்கள்ல மூணாவது ‘குரு’. ஆனா...’’ பேசிக்கொண்டே கண்ணாடியை அணிந்து மீண்டும் அந்த பாழடைந்த கோயிலை ஆராய்ந்தான்.

‘‘மேக்னடிக் வேவ்ஸ் சதுரமா இருக்கு. இதுல நவகிரகம் - ஒன்பது கோள்கள் - சாத்தியமில்லை. பட், ஸ்கொயர் வாஸ்து சாஸ்திரத்துக்கு பொருந்தும். வாஸ்துல ‘நவ’ம் கிடையாது. வெறும் ‘அஷ்டம்’தான். அதாவது எட்டு. அதனாலதான் அஷ்டதிக் பாலகர்கள் ஆளுகைல வாஸ்து இருக்கறதா சொல்றோம். சதுரத்துல எட்டு சாத்தியம்...’’ கண்ணாடியைக் கழற்றிவிட்டு ஆதியை ஏறிட்டான்.

‘‘நவகிரகத்துல எப்படி மூணாவது கிரகம் குருவோ அப்படி வாஸ்துல... ஐ மீன்... அஷ்டதிக்குல மூணாவது எது..?’’ ‘‘நிருதி..!’’ ‘‘இதுக்கு ஈசான்ய மூலை, அக்னி மூலை, வாயு மூலை மாதிரி ஏதாவது கார்னர் இருக்கா..?’’ ‘‘ம்... தென் மேற்கு மூலை...’’ ‘‘பாயிண்ட். அதுதான் நாம நுழைய வேண்டிய இடம். அங்கதான் மேக்னடிக் வேவ்ஸால தாக்கப்பட மாட்டோம்...’’ ‘‘இதுதான் Code பிரேக்கிங்கா..?’’ ‘‘இதுவும்!’’ மூவரும் எழுந்தார்கள். அப்போது கிருஷ்ணனின் செல்போன் ஒலித்தது. அழைத்தது ஆதி அல்ல. ஆனால், ஒளிர்ந்த  எண் 9840907375!

(தொடரும்)

ஓவியம்: ஸ்யாம்

குட்டி டெரரிஸ்ட்!

லண்டனைச்சேர்ந்த பால் கென்யன் தன் பேரனோடு அமெரிக்கா செல்ல விரும்பினார். அவரது பேரனுக்கு மட்டும் விசா கிடைக்கவில்லை. காரணம், அப்ளிகேஷனில் ‘தீவிரவாத செயலில் ஈடுபட்டிருக்கிறீர்களா’ என்ற கேள்விக்கு பதிலாக தன் பேரன் சார்பில் கென்யன் தவறுதலாக ‘யெஸ்’ என்பதை டிக் செய்திருந்தார்! அதனால்தான் ரிஜக்டட். எல்லாம் சரி... அவரது பேரனின் வயது என்ன தெரியுமா? 18 மாதங்கள்!

கரன்சி பாபா!

ஹைதராபாத்தில் வசிக்கும் வரிஜாஸ்ரீக்கு விசா இன்டர்வியூ. அமெரிக்க கனவு நினைவாகும் தருணம். பீஸ் கட்ட ரூபாய் ஐந்தாயிரம் தேவைப்பட்டது. ஆனால், கையில் இருந்ததோ வெறும் ரூ.2 ஆயிரம்தான். கடைகளில், ஏடிஎம்மில்... எங்கு நுழைந்தும் பைசா தேறவில்லை. அந்த நேரத்தில்தான் அருகிலிருந்த ஆட்டோ டிரைவர் அந்த காரியத்தை செய்தார். தன்னிடம் இருந்த ரூ.3 ஆயிரத்தை எடுத்துக் கொடுத்து வரிஜாஸ்ரீயின் கனவை நினைவாக்கி விட்டார். டிரைவரின் பெயர் என்ன தெரியுமா? பாபா!

டாய்லெட் திருட்டு!

சீனாவின் செங்டு நகர் பூங்கா கழிவறையில்தான் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திருட்டு நடந்திருக்கிறது. இங்குள்ள கழிவறையில் டாய்லெட் பேப்பர் ஃப்ரீயாக வைக்கப்பட்டிருந்தது. அதைத்தான் ஓர் அசகாய சூரர் சுட்டிருக்கிறார். ம்ஹும். ஒரு ரோல் இரு ரோல் அல்ல... 1,500 ரோல்கள்! திருடப்பட்ட டாய்லெட் பேப்பர் ரோல்களின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? 14,528 டாலர்கள்!