முதலைப் பண்ணை



-பேராச்சி கண்யணன்

‘‘ஸ்கூலுக்கு நேரமாச்சு... ஆட்டோ வந்துருச்சு... சீக்கிரமா சாப்பிட்டு கிளம்பு..!’’ இந்த பரபரப்புகள் இன்னும் இரண்டு மாதங்களுக்கு இல்லை. நண்பர்களுடன் ஜாலியாக விளையாட்டு, அரட்டை, டிவி என்று குழந்தைகள் குதூகலமாக இருக்கப் போகிறார்கள். இவை எல்லாவற்றையும்விட இன்னுமொரு குதூகலம் சுற்றுலா. குழந்தைகளைச் சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்று குஷிப்படுத்த சென்னையிலும் சில இடங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானது முதலைப் பண்ணை!

சென்னையிலிருந்து மகாபலிபுரம் செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் நம்மை வரவேற்கிறது இந்தப் பண்ணை. ‘தி மெட்ராஸ் க்ரோக்கடைல் பேங்க் டிரஸ்ட்’ என்ற தனியார் அமைப்பு சுமார் நாற்பது வருடங்களாக இதை நடத்தி வருகிறது. கிட்டத்தட்ட 2500 உயிரினங்கள் இங்கே வாழ்கின்றன. குறிப்பாக முதலைகள். இதன் எண்ணிக்கை மட்டும் இரண்டாயிரம். தவிர, உடும்பு, ஓணான், பாம்பு, ஆமை வகைகளும் ரசிக்க வைக்கின்றன.

ஒரு காலைப் பொழுதில் ஜூவிற்குள் நுழைகிறோம். சுற்றிலும் மரங்கள். அதில், வெட்டவெளியான பெரிய தொட்டிகள். அதற்குள் குளம் போல் முதலைகள் வசிப்பிடத்திற்கு ஏற்ற வடிவமைப்பு அழகூட்டுகின்றன. எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தபோது நமக்காக Zoo educator அருள் வழிகாட்டியாக வந்து சேர்கிறார். முதலில், இடதுபக்கமாக இருந்த கண்ணாடிப் பேழைக்குள் வசிக்கும் ஆமைகள் பகுதிக்குச் சென்றோம். இடையிடையே ஜூ பற்றிய தகவல்களை அடுக்கினார் அருள்.

‘‘இது ரொம்ப அரிய வகை ஆமை. ‘Painted roof turtle’னு பெயர். அதன் தலைல ரெட் கலர்ஸ் இருக்கு பாருங்க. அதனால இந்தப் பேரு. பொதுவா பெண் ஆமைகள், ஆண் ஆமைகளை விட வெயிட் அதிகமா இருக்கும். அதனால, பெண் ஆமை கடத்தல் அதிகரிச்சு இந்த இனம் அரிதாகிருச்சு...’’ என வருத்தத்தோடு பேசியவர் தொடர்ந்து ஒவ்வொரு ஆமைகளைப் பற்றியும் குறிப்பிட்டுச் சொல்லிக் கொண்டே போனார்.

இதையடுத்து, ஒரு பெரிய தொட்டிக்குள் இரண்டு கரியால் முதலைகள் படுத்திருந்தன. ‘‘இந்தக் கரியால் முதலை இந்தியா, ேநபாளம் பகுதியிலதான் அதிகமா இருக்கு. மீன்களை மட்டுமே உணவா சாப்பிடும். இதுல, ஆண் எது பெண் எதுனு ஈஸியா கண்டுபிடிக்கலாம். ஆண் முதலை வாய்ல குடம் போல ஓர் அமைப்பு வளரும். இந்தியில குடத்துக்கு ‘கரா’னு சொல்வாங்க. அதனால, இதுக்கு ‘கரியால்’னு பேரு.

பற்கள் மட்டும் 100 முதல் 110 வரை இருக்கும். பொதுவா, முதலை இனத்ைத முதலைகள், அலிகேட்டர், கரியால்னு மூணு வகையா பிரிக்கிறாங்க. இதுல 14 வகை முதலைகள் இருக்கு. அலிகேட்டர் ரெண்டு வகை. தவிர, அலிகேட்டர்ல கெய்மன்னு ஓர் இனம் இருக்கு. இதுல ஆறு வகை. அப்புறம் கடைசியா கரியால். ஆக மொத்தம் உலகில் 23 முதலை வகைகள் இருக்கு. இவை நன்னீர்லதான் வளரும்.

இந்தியாவுல சதுப்புநில முதலை, உப்புநீர் முதலை, கரியால் முதலைனு மூணு வகை காணப்படுது. நம்ம ஜூவுல 17 வகைகளைப் பார்க்கலாம்...’’ என்றவர், ஒரு தொட்டியில் நீருக்கடியில் இருந்த டொமிஸ்டோமா வகை முதலைகளைப் பெயர் சொல்லி அழைத்தார். அவை மெதுவாக கண்கள் மட்டும் வெளியில் தெரியும்படி எட்டிப் பார்த்தன. ஆச்சரியமாக இருந்தது.

‘‘சாப்பாடு போடும்போது இப்படிதான் அழைப்பாங்க. அதனால, சாப்பாடுதான் வருதோனு நினைச்சு எட்டிப் பார்க்குது...’’ என்கிறார் அருள் வியர்வையைத் துடைத்தபடி. முதலைகள் என்ன சாப்பிடும்? அருளிடம் கேள்வியைக் கேட்டுவிட்டு அடுத்த தொட்டிக்குத் தாவினோம். ‘‘இங்க நாங்க சிக்கன், மீன், ஈமு, எருமைக் கறினு நாலு வகை உணவுகள் போடுறோம். வாரத்துக்கு ஒரு தடவைதான் சாப்பாடு கொடுப்போம்.

காரணம், அதனோட ஜீரணத் தன்மை அப்படி. ஒரு நாளைக்கு ஒரு தொட்டினு வாரத்துக்கு 5 முதல் 7 டன் உணவுகள் இந்த விலங்கினங்களுக்கு வழங்கப்படுது. இதற்கு சிலர் ஸ்பான்சரும் செய்றாங்க...’’ என்கிறார் அதிரடியாக. அடுத்து, சதுப்புநில முதலைகள் ஒரே இடத்தில் முந்நூறு எண்ணிக்கையில் கூட்டமாகக் கிடந்தன. தொடர்ந்து கெய்மண் இன முதலைகளை ஜோடிகளாக வைத்திருக்கிறார்கள். அது பார்க்கவே பெரிய உடும்பு போல் இருக்கிறது. இதில், குள்ள இன முதலைகளும் உள்ளன.

அடுத்து, நைல் முதலைகள், ஆஸ்திரேலியன் அலிகேட்டர்கள் என பலவகையான முதலைகளை ரசித்தோம். வெயில் நேரம் என்பதால் நீரிலும், நிழலிலும் சில மறைந்து கிடந்தன. எங்களைத் தொடர்ந்து நிறைய வெளிநாட்டினரும், வடநாட்டினரும் கூட்டமாக வந்துகொண்டே இருந்தனர். ‘‘இது உப்புநீர் முதலை. இந்த முதலைகள் கடல்விட்டு கடல் தாண்டி போய் நன்னீர்ல வாழும். அதனால உப்புநீர் முதலை அல்லது கடல் முதலைனு இதை சொல்வாங்க.

கிட்டத்தட்ட 20 அடி வளரக் கூடியது. எங்க தொட்டில 17 அடியில இந்த முதலை இருக்கு. இதுக்குப் பேரு ‘ஜாஸ்’. இந்தப் பண்ணை ஆரம்பிக்கும்போது வந்தது. தண்ணீருக்குள்ளதான் கிடக்கும். வெளியே வரும்போது பார்த்தா நீங்க பயப்படுவீங்க. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் 4.30 மணிக்கு இதுக்கு உணவு போடுறதை ஷோவா நடத்திட்டு வர்றோம்...’’ என்றவர், ‘‘அங்க பாருங்க... அங்க பாருங்க... கண்ணு மட்டும் தெரியுது...’’ என்றார்.

அடுத்து, நீர் உடும்பு இருந்த பகுதிக்குச் சென்றோம். பிறகு, 4 அடி நீள ஓணான் இரண்டை பார்த்துவிட்டு அக்வேரியத்தில் சுற்றும் கரியால் முதலை ஒன்றைப் பார்த்தோம். பிறகு, மலைப் பாம்புகள் மட்டும் அடைத்து வைத்திருந்த கண்ணாடிக் கூண்டு இருக்கிறது. ‘‘இதுக்குப் பேரு reticulated python. உலகிலேயே மிக நீளமாக வளரக்கூடிய பாம்பு இதுதான்...’’ என்றவரிடம், ‘பாம்புகளுக்கு கூண்டுகள் வைக்கலையா’ என்றோம்.

‘‘இல்ல. அங்கங்க சுற்றித் திரியிற பாம்புகள் நிறைய இருக்கு. ஆனா, பயம் கிடையாது. ஒருமுறை நைட் சஃபாரிக்கு ஒரு குடும்பம் வந்துச்சு. அப்போ ஒரு குழந்தை பாம்பு பாம்புனு சொல்லுச்சு. அவங்க நம்பலை. அப்புறம், டார்ச் லைட் அடிச்சு பார்த்தேன். ஓரத்துல நெளிஞ்சிட்டு இருந்துச்சு...’’ என்றார் பதறாமல்.

அங்கிருந்து வெளியேறும் தருணத்தில் பாம்பு விஷம் எடுப்பதைப் பார்க்கும் கண்காட்சிக்கான இடம் வரவேற்றது. இது பாம்பு முட்டையிடும் காலம் என்பதால் ஜூலை வரை இந்தக் கண்காட்சிக்கு அனுமதியில்லை. நிறைவில், நானூறுக்கும் மேற்பட்ட சதுப்புநில முதலைகள் குவிந்திருக்கும் பெரிய தொட்டிக்கு வந்து சேர்ந்தோம். அங்கே வாய் திறந்தபடி மூச்சுவிட்டுக் கொண்டிருந்தன முதலைகள்!

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

முதலைப் பண்ணை டேட்டா

* 1976ம் ஆண்டு அமெரிக்கரான ரோமுலஸ் விட்டேகரும் அவரது மனைவி சாய் விட்டேகரும் இணைந்து இந்தப் பண்ணையை ஆரம்பித்தனர்.
* ஆமைகள், பல்லி இனங்கள், பாம்புகள் ஆகியவையும் உள்ளதால் 2003ம் ஆண்டு முதல் இந்தப் பண்ணைக்கு ‘தி மெட்ராஸ் க்ரோக்கடைல் பேங்க் டிரஸ்ட் மற்றும் சென்டர் ஃபார் ஹெபர்டாலஜி’ எனப் பெயர் வைத்துள்ளனர்.
* காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை திறந்திருக்கும்.
* பெரியவர்களுக்கு 40 ரூபாயும், குழந்தைகளுக்கு 20 ரூபாயும் பார்வையாளர் கட்டணமாக வசூலிக்கிறார்கள்.
* தினமும் இரவு 7 முதல் 8.30 மணி வரை ‘நைட் சஃபாரி’ என்ற த்ரில் அனுபவத்தைக் கொடுக்கிறார்கள். இதற்கு முன்கூட்டியே புக் செய்ய வேண்டும். பெரியவர்களுக்கு ரூ.200, குழந்தைகளுக்கு ரூ.100.
* ஆண்டுக்கு சுமார் 4 லட்சம் பேர் இந்தப் பண்ணையைப் பார்வையிடுகிறார்கள்.
* திங்கட்கிழமை வார விடுமுறை.

முதலை ‘பய’டேட்டா!

* முதலையின் பார்வை சக்தி கூர்மையானது. சதுப்புநில முதலை 300 அடிக்கு அப்பாலுள்ள இரையைக்கூட கண்டுபிடிக்கும் திறன் கொண்டது.
* தண்ணீரில் மூழ்கியிருக்கும்போதும்கூட முதலையால் ஒலியைத் துல்லியமாகக் கேட்க முடியும்.
* பிரதான உணவு மீன். தவிர, தவளை, நண்டு வகைகள், ஆமைகள், பறவைகள் மற்றும் சிறு பாலூட்டிகளையும் உண்ணும். சதுப்புநில மற்றும் உப்புநீர் முதலைகளால் மான், குரங்கு, நாய், எருமை போன்ற பெரிய மிருகங்களைக் கூட உண்ண முடியும்.
* உப்புநீர் முதலை மற்றும் நைல் முதலை மனிதனைத் தின்றதாக செய்திகள் உள்ளன. ஆனால், சதுப்புநில முதலைகள் மனிதனைத் தின்றதாக போதிய ஆதாரம் இல்லை.
* முதலைகள் தண்ணீருக்கு அடியில் உள்ள நிலத்தில் முட்டையிடுகின்றன. சதுப்புநில முதலை மண்ணில் குழிதோண்டி முட்டைகளைப் புதைக்கின்றன. உப்புநீர் முதலை இலை மற்றும் மண்ணால் கூடுகட்டி முட்டையிடுகின்றன.
* ஒரு முதலையின் வாழ்நாளில் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் பற்கள் வளருமாம். காரணம், அடிக்கடி கடிப்பதால் அதன் பற்கள் உடைந்து உள்ளிருந்து வளர்ந்து கொண்டே இருக்குமாம்.
* உலகில் பல நாடுகளில் பாம்பு வழிபாடு இருப்பது போல பண்டைய காலத்தில் முதலைகளை எகிப்திய மக்கள் வழிபட்டுள்ளனர். ‘சோபெக்’ என்பது அவர்களது முதலை தெய்வம்.

முட்டுக்காடு படகுக் குழாம்

* முதலைப் பண்ணை செல்பவர்கள் வழியில் இருக்கும் முட்டுக்காடு படகுக் குழாம் சென்று படகு சவாரி செய்யலாம்.
* இங்கே 27 படகுகள் உள்ளன. இரண்டு, மூன்று, ஆறு, எட்டு பேர் பயணிக்கக்கூடிய அளவில் படகுகள் வைத்திருக்கிறார்கள். இதில், துடுப்புப் படகுகளும் இருக்கின்றன. இந்தத் துடுப்புப் படகைத் தேர்ந்தெடுப்பவர்களை பாலத்தின் அடிப்பகுதி வழியே கடற்கரை முகத்துவாரம் வரை அழைத்துச் செல்கிறார்கள்.
* எல்லா நாட்களும் செயல்படும். விடுமுறை நாட்களில் இரண்டாயிரம் பேர் வரை வந்து செல்கிறார்கள்.

கிண்டி பாம்பு பூங்கா...

* இங்கு நல்லபாம்பு, சாரைப்பாம்பு, மண்ணுளி, பச்சைப்பாம்பு, மலைப் பாம்பு, தென்கிழக்கு ஆசிய மலைப்பாம்பு, தண்ணீர்ப்பாம்பு என வரிசையாக பெரிய கண்ணாடிப் பெட்டகத்திற்குள் அடைத்து வைத்திருக்கிறார்கள். பாம்புகள் நௌிவதைப் பார்க்க பயமாக இருந்தாலும், பாம்பு பற்றிய தகவல்கள் சுவாரஸ்யம் கூட்டுகின்றன. இதன் அருகிலேயே சிறிய முதலைப் பண்ணையும் உள்ளது. இருபது நிமிடங்களில் இதை வலம் வந்துவிடலாம். அடுத்து இருக்கும அருங்காட்சியகம் உலக பாம்புகளைப் பற்றிய தகவல்களைப் புட்டுப் புட்டு வைக்கிறது.

* இதனுடன், கிண்டி சிறுவர் பூங்காவையும் ஒரு வலம் வரலாம். இது மான், கொக்கு, குரங்கு, மரநாய், ஆந்தை, கிளி வகைகள் என குழந்தைகள் ரசிப்பதற்கு ஏற்ற இடமாக உள்ளது.

* காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை இந்தப் பூங்காக்கள் திறந்திருக்கும். பெரியவர்களுக்கு 15 ரூபாயும், குழந்தைகளுக்கு 5 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கிறார்கள். இந்த இரண்டு பூங்காவுக்கும் செவ்வாய்க்கிழமை விடுமுறை.