ப.பாண்டி



-குங்குமம் விமர்சனக்குழு

மனதிற்கு நெருங்கி வராத வாழ்க்கையை உணரும் முன்னாள் ஸ்டண்ட் மாஸ்டர் வெளியே அதைத் தேடும் பயணமே  ப.பாண்டி’. அமைதியான வாழ்க்கையை மேற்கொண்டாலும், நாட்டு நடப்புகள் ராஜ்கிரணை தட்டிக் கேட்கத் தூண்டுகிறது. ‘இவருக்கு என்ன வந்தது’ என மகன் பிரசன்னா ஆதங்கப்பட, குடும்பத்தில் குழப்பம். ஒரு கட்டத்தில் கடிதம் எழுதி வைத்து வீட்டிலிருந்து புறப்படுகிறார்.

முதல் காதலின் ஞாபகத்தைப் பெற்று, அவளையே தேடி ஐதராபாத்திற்குப் போகிறார். அங்கே அவர் காதலியைச் சந்தித்தாரா, அவருக்கான மீதி வாழ்க்கை என்னவானது என்பதே கிளைமாக்ஸ். தாய் தந்தையருக்கு தர வேண்டிய அரவணைப்பை, தேவையை முன்பாதியில் அழுத்தமாக கொடுத்துவிட்டு, அதை வைத்து ஒரு காதலையும் சொன்ன விதம்தான் தனுஷ் ஸ்கிரீன் ப்ளே... பவர்ப்ளே!

அதிர்ச்சி, மகிழ்ச்சி, சோகம், வருத்தம், கோபம், காதல் என எதை வேண்டுமானாலும் அழுத்தமாக ஜஸ்ட் லைக் தட் பின்னி எடுத்திருக்கிறார் ராஜ்கிரண். குழந்தைகளை வாரி அணைத்து கொஞ்சும்போதும், எதிர்வீட்டுப் பையனோடு சம விகிதத்தில் கலாட்டா பண்ணி பேசும் போதும், பீர் அடித்துவிட்டு மனதில் இருப்பதையெல்லாம் கொட்டிவிடும்போதும், ராஜ்கிரண் நடிப்பில் தாண்டியிருப்பது ஏகப்பட்ட தூரம்.

தன் பழைய காதலி ரேவதியைத் தேடி வீட்டிற்கே போய் கதவைத் தட்டுவதில் கேட்கிறது தியேட்டரில் ஆரவாரம். போர்வைக்குள் பதுங்கிக் கொண்டு சாட்டிங்கில் மூழ்குவது குறும்பு. யார் அந்த பக்கத்து வீட்டுப் பையன்? மொட்டை மாடியில் பீர் அடித்துக் கொண்டு ராஜ்கிரணை ரகளைவிடும் அந்தப் பையன் நச். கதைக்கு நடுநடுவே அவன் எப்போது வந்தாலும் அந்த இடம் அமளிதுமளி ஆகிறது.

சத்தமே இல்லாமல், அவன் ராஜ்கிரண் கேரக்டரை நகர்த்துவது நல்ல இடம். பார்த்து நடித்து பழகியவர் என்றாலும், ரேவதி சென்றடைந்தது அற்புத யதார்த்தம். ராஜ்கிரணுக்கு அவர் பாந்தமாக கொடுக்கும் அட்வைஸ் செம ஃபீல். பிரசன்னா அருமையான வார்ப்பு. வேலையின் தீவிரத்தில் இருக்கும்போது, அப்பாவின் செயல்கள் அவருக்கு தொந்தரவு செய்வதை பார்த்து சிணுங்குவது இயல்பு.

சின்ன வயது ராஜ்கிரணாக (!) தனுஷ் அசால்ட் என்ட்ரி. அவர் வருகிறபோதுதான் ஹீரோ படம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம் என்பதே ஞாபகத்திற்கு வரும். இருக்கிற வரை அதிரிபுதிரி ஆக் ஷன் காட்டி, பாசத்தில நெகிழ்ந்து, காதலில் நனைந்து, எல்லா நேரமும் பரபரப்பில் இருக்கிறார். மடோனா சின்ன வயது ரேவதியாக அச்சு அசல் இருக்கிறார்.

சாதாரண சுடிதாரில் கூட ஏரியாவிலேயே அழகியாக பரிமளிக்கிறார். வேல்ராஜின் உறுத்தாத ஒளிப்பதிவில் அழகியல். ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் மிளிர்கின்றன. காதலியை ஆரம்பத்தில் இருந்து வெளிக் காட்டாதது, காதலியை ஏன் கைபிடிக்கவில்லை என சின்னச்சின்ன குறைகள். சில இடங்களில் சீரியல் உணர்வு சற்றே தலை காட்டுகிறது. சாதாரண படத்தை கடைசி 20 நிமிடங்கள் தூக்கி நிறுத்துகின்றன.