ஊஞ்சல் தேநீர்



யுகபாரதி - 21

நாட்டுப்புற இசையை மக்கள் மேடைகளில் பிரபலப்படுத்திய பெருமை பாவலர் வரதராஜனுக்குரியது. அவர், இசைஞானி இளையராஜாவின் சகோதரர் என்பதிலும் பார்க்க, இடதுசாரி மேடைகளில் எளிய மக்களின் குரலை இசையினால் பிரபலப்படுத்தியவர் என்றே அறியப்படுகிறார். இடதுசாரி அமைப்புகள் தன்னையும் தன்னுடைய இசை முயற்சியையும் எவ்விதத்தில் எதிர்கொண்டன என்பதைப் பற்றியெல்லாம் அக்கறை கொள்ளாமல், தனக்கிருந்த இசையறிவை மக்கள்மயப்படுத்துவதிலேயே அவர் குறியாயிருந்தார்.

இன்றைக்கு பாவலர் வரதராஜனின் இன்னொரு சகோதரரான கங்கை அமரன் சொல்வது போல இடதுசாரிகள் வரதராஜனை கெளரவிக்கத் தவறிவிட்டார்கள் என்ற அருவருக்கத்தக்க அபத்தக் குற்றச்சாட்டை எந்த சந்தர்ப்பத்திலும் பாவலர் வரதராஜன் வைக்கவில்லை. மேலும், கௌரவங்களுக்காகவோ பணத்தையும் பொருளையும் ஈட்டுவதற்காகவோ அவர் மக்கள் மேடைகளில் பாடவில்லை.

மேற்கூறிய பணமோ கெளரவமோ விளம்பரமோ முக்கியமென கருதியிருந்தால் அவரும் இளையராஜாவைப் போலவோ கங்கை அமரனைப் போலவோ திரைத்துறைக்கு வந்திருப்பார். திரை அரங்குகளைவிட திறந்தவெளி அரங்குகளே தனக்குரியதென அவர் தேர்ந்தெடுத்திருக்கமாட்டார். பாவலர் வரதராஜன் மட்டுமல்ல; மக்கள் கலைஞர்களாக அறியப்படுபவர்கள் அத்தனை பேருமே அப்படித்தான் இருந்திருக்கிறார்கள்.

சொந்த துக்கங்கள் சுழற்றி வீசினாலும் அவர்கள் மக்கள் முன் வந்து விழுவதையே மாண்பாகவும் கடமையாகவும் கருதியிருக்கிறார்கள். அந்த ஒற்றைப் பண்பை முன்வைத்துதான் காலம் அவர்களை ஞாபகத்தில் வைத்திருக்கிறது. தேர்தலில் நிற்க வாய்ப்பு  தருகிறார்கள் என்பதற்காக அது என்ன கட்சி, என்ன மாதிரியான கொள்கைகளை உடைய கட்சி என்பதையெல்லாம் யோசிக்காமல், கருத்து என்கிற பெயரில் உயிரனைய உடன்பிறப்புகள் மீதே அவதூறுகளைப் பரப்ப அவர்கள் ஒருபோதும் துணிவதில்லை.

பாவலர் வரதராஜனை ஒருமாதிரியும் இளையராஜாவை இன்னொரு மாதிரியும் விமர்சனத்திற்கு உட்படுத்திக்கொண்டிருக்கும் கங்கை அமரனின் தற்போதைய செயல்பாட்டை ஆரோக்கிய மனமுடைய யாரும் அங்கீகரிக்க மாட்டார்கள். அவர், பேசுவது இன்னதென்று தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார். பாப்புலாரிட்டி பித்தில் முன்னுக்குப்பின் முரணான கருத்துகளை முன்வைத்துக் கொண்டிருக்கிறார்.

தனது சகோதரர் காப்புரிமை சட்டத்தின் வாயிலாக எடுத்து வரும் நியாயமான காரியங்களைக்கூட அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. அரசியல் அறிவை விடுங்கள், பொதுவெளியில் யார் ஒருவரையும் நாகரிகமாக விமர்சிக்கும் பண்பை அவர் பெற்றிருக்கவில்லை என்பதுதான் வேதனைக்குரியது.

அப்படிப்பட்ட ஒருவரைத்தான் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக நிறுத்தத் தகுதியுடையவராக அக்கட்சி கருதியது. ஊடகங்களில் அக்கட்சியைச் சேர்ந்த பலரும் தாழ்த்தப்பட்ட ஒருவருக்கு பொதுத் தொகுதியில் வாய்ப்பளித்திருக்கிறோம் என பீற்றிக்கொண்டார்கள். அவர் வேட்பாளராகப் பார்க்கப்படுவதைவிட தாழ்த்தப்பட்டவராக மட்டுமே பார்க்கப்படுகிறார் என்பதை எப்படி எடுத்துக்கொள்வது?

கலை, இலக்கியமாயிருந்தாலும் அரசியலாயிருந்தாலும் முழுக்க முழுக்க நம்முடைய சமூகம் சாதியால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. கலையிலும் இலக்கியத்திலும் உச்சநிலையை அடைந்தாலுமே கூட தாழ்த்தப்பட்டவர்கள் தங்களுடைய சாதி அடையாளத்தை அழித்துக்கொள்ளும் நிலையில்லை.

எல்லையே இல்லை என்று தங்கள் படைப்பாற்றலால் விரிந்து வியாபிக்க அவர்களால் முடிவதில்லை. கண்ணுக்குத் தெரியாத சாதீய கிருமிகளால் எத்தனையோ சாதனையாளர்கள் தங்கள் பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொள்ளும் விபரீதம் விளைந்திருக்கிறது. கலை, இலக்கியம், சினிமா, அரசியல் எதுவாக இருந்தாலும், அதில் சம்பந்தப்படும் ஒருவர், விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரல்ல. ஆனாலும், அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் சாதி என்னும் சின்னத்தனத்தை வெளிப்படுத்துவது சகிக்கக்கூடியதல்ல.

சமூகநீதி காப்பாற்றப்படுவதாக சொல்லப்படும் இதே தமிழ் நிலத்தில்தான், தலித்துகளாகத் தங்களை உணர்ந்தவர்கள் தங்களையும் பொதுப்பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள் எனக் கேவுகிறார்கள். இந்தக் கேவலுக்குப் பின்னுள்ள கேள்விகள் புறந்தள்ள முடியாதவை. துயரமும் நியாயமும் அடங்கிய இந்தக்கேள்விகளை தம்முடைய இறுதிநாள்வரை எழுப்பிக்கொண்டிருந்தவர் மக்கள் கலைஞர் கே.ஏ.குணசேகரன்.

கல்விப் புலத்தில் மிக உயரிய பதவிகளை வகித்துவந்த போதிலும் அவர் தன்னை எளிய மக்களின் பிரதிநிதியாகவே கருதினார். மக்கள் மேடைகளில் பாவலர் வரதராஜனுக்குப் பிறகு அதிக அளவு அறியப்பட்டவராகவும் ஆராதிக்கப்பட்டவராகவும் அவரிருந்தார். ‘தன்னான்னே’ கலைக்குழு மூலம் தமிழக மேடையெங்கும் அவர் ஆற்றிய இசைப்பணிகள் கடந்த நாற்பது ஆண்டுகளில் வேறு யாரும் ஆற்றாதவை.

நாட்டுப்புறப் பாடலை கலை இலக்கிய வடிவங்களில் ஒன்றாக மாற்றிய அரும்பணி அவருடையது. திரையிசையில் நாட்டார் பாடல்களை லாவகமாகக் கையாண்டவர் இளையராஜா என்றால் மக்கள் மேடைகளில் அப்பாடல்களை விடாமல் பயன்படுத்தியவர் கே.ஏ.குணசேகரன். மக்கள் இசையை வெறும் கேளிக்கைக்காக மேடைகளில் நிகழ்த்தாமல் அதை புரட்சிகர செயல்பாடாக ஆக்கிக்காட்டியவரும் அவரே.

தலித் கலை, தலித் இலக்கியம், தலித் பண்பாடு என்பன போன்ற கருத்தாக்கங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு அதற்காகவே சுற்றிச் சுழன்றவர் அவர். நாட்டுப்புறவியலில் முனைவர் பட்டம் பெற்ற அவர், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் நாடகவியல் துறைத் தலைவராக இருந்தவர். நிகழ்த்துக்கலை மீதும் நாட்டுப்புறவியல் மீதும் அதீத ஈடுபாடு கொண்ட கே.ஏ.குணசேகரனை, நான் பாடல் கேட்க ஆரம்பித்த வயதிலிருந்து அறிவேன்.

அப்போது என்னுடைய அப்பா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை நகரச் செயலாளராக இருந்துவந்தார். அக்கம் பக்கத்து வீடுகளில் இருப்பதுபோல நம்முடைய வீட்டிலும் டேப் ரெக்கார்டர் வேண்டும் என நானும் அக்காவும் அடம்பிடிக்கப் போக, எங்கள் தொல்லை தாளாமல் சிவப்பு நிறத்தில் ஒரு டேப் ரெக்கார்டரை மாதத் தவணைக்கு வாங்கித் தரும் முடிவுக்கு அப்பா தள்ளப்பட்டார்.

நீள வடிவத்திலான அந்த டேப் ரெக்கார்டரில் கேட்பதற்கு கே.ஏ.குணசேகரன் இசையமைத்துப் பாடிய ‘தன்னானே’ பாடல்கள் அடங்கிய ஒலி நாடாவை சிபாரிசு செய்தவரும் அவர்தான். தமிழ்க் கலை இலக்கியப் பெருமன்றத்தின் முயற்சியால் வெளியிடப்பட்ட அந்த ஒலிநாடாவைத் தவிர வேறு ஒலிநாடாக்களை வாங்கித்தர அப்பாவுக்கு வெகுகாலம் பிடித்தது.

அந்த ஒரேயொரு ஒலி நாடாவை மாதக் கணக்கில் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டிருந்தோம். இளையராஜா திரை இசையில் கோலோச்சிக் கொண்டிருந்த அந்தக் காலத்தில் ஒரே ஒலிநாடாவைக் கேட்டுவந்த எங்களை, பக்கத்து வீட்டுக்காரர்கள் பரிகாசத்தோடு பார்த்தது குறிப்பிடத்தக்கது. என்றாலும், அதை ஒரு பொருட்டாகவே கருதாத நாங்கள் ‘தன்னானே’ பாடல்களை உணர்வு உந்த கேட்டு வந்தோம்.

‘அம்மா பாவாட சட்ட கிழிஞ்சு போச்சுதே, முக்காமொழம் தண்ணிக்கெணறு, என்னம்மா தேவி ஜக்கம்மா...’ போன்ற பாடல்கள் இப்பொழுதும் என் நினைவில் இருப்பதற்கு அதுவே காரணம். கன்னிவாடி பச்சைநிலாவால் எழுதப்பட்ட அப்பாடல்களை கே.ஏ.குணசேகரன், தனக்கே உரிய கம்பீரத்தோடு பாடியிருப்பார்.

அவர் குரல் ஆரோகணத்தையும் அவரோகணத்தையும் எட்டிப்பிடித்து வெளிப்படுத்தும் உணர்வுகள் கண்ணீரை வரவழைத்துவிடும். மெல்லிய சோகத்தின் ஊடே பற்றிப் பரவும் அவரது ஒவ்வொரு பாடலும் தொல்லிசையின் தாக்கங்களை ஏற்படுத்தும். எஸ்.பி.பாலசுப்ரமணியனும், மலேசியா வாசுதேவனும் ஏற்படுத்தாத எதார்த்த இசையின் நெளிவு சுளிவுகளை அவர் கற்றிருந்தார்.

நேர்ப்பேச்சில் ஒருவர் ஏற்படுத்தக்கூடிய நெருக்கத்தை அப்பாடல்களும் எங்களுக்குள் ஏற்படுத்தின. ஆண்குரலில் என்னையும் பெண்குரலில் அக்காவையும் பாடச்சொல்லி, மாறி மாறி அப்பாடல்களை அப்பாவும் அம்மாவும் கேட்டுக்கொண்டிருப்பார்கள். இந்தப் பாட்டெல்லாம் சினிமாவில் வராதா? என நானோ அக்காவோ கேட்கவில்லை.

ஏனெனில், அந்தப் பாடல்களில் விரவியிருந்த கருத்துகள் சினிமாவுக்கு அப்பாற்பட்டதெனப் புரிந்துகொள்ளும் நிலையிலேயே நாங்கள் வளர்க்கப்பட்டிருந்தோம். எத்தனைமுறை கேட்டாலும் அப்பாடல்கள் எங்களுக்கு அலுப்பையோ சலிப்பையோ தரவில்லை. மாறாக, ஒருவித உணர்வு பாவத்தை உண்டு பண்ணின. நாமும் அதுபோல பாடவேண்டும் என்னும் உத்வேகத்தைக் கொடுத்தன.

மிகக் குறைந்த வாத்தியக் கருவிகளை வைத்துக்கொண்டு, குரலை மட்டுமே பிரதானப்படுத்தும் அப்பாடல்களுக்கு ஈடான ஒரு திரைப்பாடலைக்கூட கேட்கும் வாய்ப்பை அப்போது நாங்கள் பெற்றிருக்கவில்லை. இதெல்லாம் பாட்டா? என உதாசீனப்படுத்தாமல், இதுதான் பாட்டு என நம்ப வைக்கப்பட்டிருந்தோம். ‘ரோட்டோரம் வீட்டுக்காரி, சோராப்பூ சேலைக்காரி...’ என்னும் பாடலைக்கூட கே.ஏ.குணசேகரன், ஓர் ஏழையின் நைந்த காதல் குரலாகவே எதிரொலிப்பார்.

உள்ளடங்கிய கிராமத்தின் அசலான மொழியை அவருடைய குரல் பிரதிபலிக்கும். இயல்பிலேயே அவரிடமிருந்த மக்கள் நேசம், அலங்கார ஆலாபனைகளைப் புறந்தள்ளிவிடும். பறையும் தவிலும் ரெட்டை மேளமும் வேகமெடுத்து இசைக்கப்பட்டாலும் அவருடைய கம்பீரக் குரல் அதையெல்லாம் கடந்து கேட்கும்.

ஏழு ஸ்வரங்களுக்குள்தான் இசை என்று சொல்லப்பட்டாலும் அவருடைய அக்னி ஸ்வரங்கள் ஒலிநாடாவுக்குப்பின், இசையின் ஸ்வரங்கள் ஏழல்ல, இன்னும் இருக்கின்றன என தமிழ்ச் சமூகம் புரிந்துகொண்டது. ‘மனுசங்கடா நாங்க மனுசங்கடா...’ என்ற இன்குலாப்பின் பாடலை அவர் பாடக் கேட்டவர்களுக்கு என் சொற்களிலுள்ள உண்மை விளங்கும்.

(பேசலாம்...) 

ஓவியங்கள்: மனோகர்