"நான் வந்த மரபில் அப்படியே உருவாகி வந்திருக்கிறேன்..."



-நா.கதிர்வேலன்

தன் சுயத்தை பரிசீலனை செய்கிறார் ஜெயமோகன்

ஜெயமோகன் நம் காலத்திற்கான கனவின் உயிர். தமிழ் நாவலை புதிய திசைக்குத் திருப்பிய ‘விஷ்ணுபுரம்’ வெளிவந்து இந்த வருடத்தோடு இருபது ஆண்டுகள் நிறைந்துவிட்டன. இந்தியக் காவிய மரபின் வளமைகளையும், அழகுகளையும் உள்வாங்கி எழுதப்பெற்ற பெரும் நாவலின் நினைவாக அவரோடு நடந்தது இந்த உரையாடல். கணக்கற்ற நிலைகளைத் தாண்டி நீண்டதொரு களைப்பில்லாத பயணம் மேற்கொண்ட உணர்வு அருமையானது.

உங்களுக்கு மொழி இவ்வளவு சிறப்பாக வசப்பட்டது எப்படி?
எல்லா எழுத்தாளர்களுக்கும் அவர்களின் மொழிதான் அடையாளம். எழுத்தாளன் மொழிக்கு கொடுக்கக்கூடிய பங்களிப்பே உண்மையானது. கருத்துப் பங்களிப்பு காலப்போக்கில் மாறக்கூடியது. மொழிப் பங்களிப்புத்தான் என்னை முக்கியமான எழுத்தாளராக்கியது. நான் மரபை முறைப்படி கற்றவன்.

நவீன தலைமுறை எழுத்தாளர்களிலும், என்னுடைய தலைமுறையிலும் பல பேர் தமிழை முறையாகக் கற்றவர்கள் கிடையாது. பாரம்பர்ய முறையிலும் தமிழ் கற்றவர்கள் கிடையாது. நான் அதில் கவனம் செலுத்திக் கற்றவன். எப்போதும் ஒரு மொழியின் மையப் போக்கில் இருக்கிறவர்கள் அந்த மொழியின் clicheவில் மாட்டிக் கொள்வார்கள். இன்னொரு மொழியின் உறவில், விளிம்பில் இருக்கிறவர்கள் மற்றொரு மொழிக்கு வளத்தைக் கொண்டு வந்து சேர்ப்பார்கள். உலகம் முழுக்க இப்படித்தான். என் மலையாளப் பின்னணி, தேய் வழக்கைத் தவிர்த்து புதிய வழக்கைக் கொண்டு வர உதவியிருக்கிறது.

உங்களது எல்லாப் படைப்புகளிலும் கசப்பும், வேதனையும், ஏமாற்றமும், தோல்வியும், ரணமும் முடிவாக இருக்கு. ஏன்?
உலகம் முழுக்க எழுத்தாளர்கள் ஆழமான துயரத்திலிருந்தே ஆரம்பிக்கிறார்கள். தனிப்பட்ட துயரை மனித குலத்தின் துயரமாக மாற்றிக் கொண்டால் அது great writing. இன்னும் மனிதர்கள் வாழ்க்கையில் அடையக்கூடிய எல்லாவிதமான தோல்விகள், குறைபாடுகளை கற்பனை மூலம் நிரப்பிக் கொள்ளும் முயற்சிகளாகவே இலக்கியம் இருக்கிறது.

ராமாயணத்திலும், மகாபாரதத்திலும் கூட தோல்விகள், மனத்துயரங்கள் காவியமாகியிருக்கு. அதிலிருந்து தத்துவம், தேடல், தத்தளிப்பு, தனிமை, எய்த முடியாமல் இருப்பதன் வீழ்ச்சிதான் என் படைப்பு களின் சாராம்சமாக இருக்கு. எழுத்தில் என் தேடலையும், தத்தளிப்புகளையுமே முன்வைக்கிறேன். அவற்றையே உலகப் பேரிலக்கியங்கள்கூட சொல்லிக் கொண்டிருக்கின்றன. இலக்கியத்தின் பணி அதுதான். தெளிவு, அந்தக் கொந்தளிப்புள் சாரமாகத் திரண்டு வருவது. அதே சமயத்தில் மேலதிகமாக மெய்ஞானத்தைச் சென்றடையக்கூடிய ஒரு ெபரிய கொண்டாட்டமே  ‘விஷ்ணுபுரம்’.

‘விஷ்ணுபுரம்’ புதினத்தை தமிழின் கடைசி காவியம் எனலாமா?
அப்படிச் சொல்ல முடியாது. காவியத்திற்கு ஒரு ஒழுங்கு, அமைப்பு இருக்கு. காவியத்தில் உச்ச கணங்கள், நெகிழ்ச்சி கணங்கள், தீவிர கணங்கள் மட்டுமே இருக்கு. நான் புதிய வடிவங்களுக்காக முனைந்து தேடுவதும், சோதனை செய்து பார்ப்பதும் இல்லை. என் மனம் இயல்பாகவே மனித வாழ்க்கையின் அடிப்படைக் கேள்விகளைச் சார்ந்து இயங்குவது.

ஆகவே, முழுமை, அறம், அன்பு, உறவு, மரணம் என சில மையங்களைத் தொட்டு நகர்பவை என் ஆக்கங்கள். தத்துவமும், வரலாறும் ஊடாடாத பெரும் படைப்பு இருக்க இயலாது என்றே எண்ணுகிறேன்.

சமகால தமிழ் நாவலில் இதுவரை யாரும் அடைந்திராத ஒரு புதிய பிரதேசத்தை ‘விஷ்ணுபுரம்’ குறிவைத்தது. சாதித்தும் காட்டியது. இது நன்கு திட்டமிட்ட வெற்றியா... படைப்பு ஆவேசத்தில் இயல்பாய் வசப்பட்டதா?
திட்டமிடல் இல்லாமல் நாவல் எழுத முடியாது. மாபெரும் கோபுரத்தை சுண்ணாம்புக் கலவையால் கட்ட முடியாது. பக்காவான ப்ளூ பிரிண்ட் இருந்தாக வேண்டும். ஆனால், ப்ளூ பிரிண்ட் மாதிரியே கட்டினாலும் அதில் க்ரியேட்டிவிட்டி இருக்காது. அதை மீறிச் செல்லக்கூடிய நோக்கு, நடை வேண்டும்.

‘விஷ்ணுபுர’த்தின் ‘தீம்’மை வேறு வேறு வடிவங்களில் மனதில் போட்டு எடுத்து வந்திருக்கிறேன். ஒருமுறை எழுதிப் பார்த்து அப்படியே தூக்கிப் போட்டிருக்கேன். நாவல் என்பது நீளமான கதை கிடையாது. ஒரு ஒட்டுமொத்தமான நேர்கோட்டுப் பாதை கிடையாது. அதற்கு ஒரு தொகுப்புத்தன்மை, மைய தரிசனம் இருக்கு.

‘விஷ்ணுபுர’த்தில் சில புதுமைகள் உண்டு. அதில் பெரிதாக தத்துவம் பேசப்பட்டிருக்கு. நேரடியான, வலுவான தத்துவ ஞானம் நிறைந்திருக்கிறது. சிக்கலான கதை வேறு. காலம் முன்பின்னாய் போகும். கிட்டத்தட்ட 800 வருடக் கதை. ‘விஷ்ணுபுரம்’ வரவேற்பைப் பெற்றதற்கு ஒரு முக்கியக் காரணம் இருக்கு. அந்த நாவல் முழுக்க முழுக்க இந்தியத் தன்மை கொண்டது.

‘விஷ்ணுபுர’த்தை முதலிலிருந்து கடைசி வரை நினைவில் வைத்திருந்து படிக்க வேண்டும். நம் காலடியில் கிடக்கிற, நாம் அறியாத வரலாறு அதில் இருக்கு. இந்திய வரலாற்றின் நகல் சித்திரமே ‘விஷ்ணுபுரம்’ என்று சொல்லலாம். அதில் தமிழர்களின் வரலாறும் உடனிருக்கு. இந்திய தத்துவ வரலாற்றின் சுருக்கம் அந்த நாவலில் உண்டு. இவ்வளவு கஷ்டப்பட்டு, உடன்பாட்டோடு எந்த நாவலையும் வாசகன் படித்ததில்லை.

போதிய கருத்துச் சுதந்திரம் உங்களுக்குக் கிடைக்கிறதா?
எல்லாவற்றிலும் முளைத்து எழக்கூடிய ஒரு சுதந்திரம் இங்கே வேண்டும். இது இங்கேதான், இப்படித்தான் முளைக்க வேண்டுமென்றால் அது கருத்துச் சுதந்திரமே கிடையாது. எந்த கருத்துமே அதற்கு நேர் எதிரான கருத்தோடு முரண்பட்டுத்தான் வளரமுடியும். ஒரு கருத்தை தூய்மையாகப் பொத்தி வைப்பதற்கு நான் எதிரானவன். எந்த கருத்து உரையாடுகிறதோ அதுவே வளரும்.

உங்களை மாதிரி படைப்பாளி எழுத வந்து முப்பது வருடங்கள் ஆகியும் எந்த தேசிய விருதும் அடையாத நிலையை எப்படி பார்க்கிறீங்க..?
ஓர் எழுத்தாளன் தரமாக எழுதி முடிக்கும்போது, ஒரு கட்டத்தில் அவனுக்கு கவனம் வெளியே போய்விடுகிறது. எழுத ஆரம்பித்த காலத்திலிருந்து இன்று வரை நான் சோர்ந்துபோகவில்லை. எப்போதும் பேசப்பட்டுக் கொண்டேயிருக்கிறேன். விருது தேவையான இடத்தில் நான் இல்லை. அதற்கு மேலான இடத்தில் இருக்கிறேன். தன்னுணர்வு மேலோங்கிய கட்டற்ற தன்மை என்னிடம் இருக்கிறது.

நான் வந்த மரபில் அப்படியே உருவாகி வந்திருக்கிறேன். நாளை என்ன பேசுவேன், என்ன எழுதுவேன் என்று எனக்கே தெரியாது. இப்படியான என் சுபாவத்தில் விருதுகள், அங்கீகாரம், பதவிகளில் சுதந்திரம் பறிபோய்விடும். நாளையே ஒரு போர்னோகிராபி நாவலை நான் எழுதக்கூடும். ஒருவேளை விருது வாங்கியிருந்தால், அகடமி விருது பெற்றுவிட்டு இப்படி எழுதலாமா என சண்டைக்கு வருவார்கள். இப்படி விருதுகளை முன்னிட்டு யாரும் என் பயணத்தை, படைப்பை கேள்வி கேட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன்.      
    

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்