குங்குமம் ஜங்ஷன்



சர்வே

இந்தியப் பெண் குழந்தைகளில் 6 சதவீதத்தினர் அண்டை வீட்டார் மற்றும் உறவினர்கள் மூலமாக பல்வேறு விதமான பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகின்றனர் என்கிறது ஒரு ஆய்வு. இந்தக் குழந்தைகள் பத்து வயதைக்கூட தாண்டாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 10-19 வயதுக்குட்பட்டவர்களில் 41 சதவீதத்தினர் உடல் ரீதியான வன்முறைக்கும், பாலியல் தொல்லைக்கும் உட்படுத்தப்படுகின்றனர் என்கிறது இந்த ஆய்வு.

 பிரேசில், பிரிட்டன், தாய்லாந்து போன்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவின் நிலை மிக மோசமானதாக இருக்கிறது. சமீப மாதங்களில் பெண்களைப் பின்தொடர்தல் குறித்து  பெரிய சர்ச்சைகள் கிளம்பிக் கொண்டிருக்கையில் இந்த ஆய்வு முடிவு, இந்தியப் பெண்களின் நிலையை அப்பட்டமாகவே வெளிப்படுத்துகிறது.

டெக் டிக்

இன்றைக்கு எல்லாருடைய கைகளிலும் ஸ்மார்ட் போன் விளையாடுகிறது. இணையம் சம்பந்தமான எல்லாவற்றையும் போனிலேயே பார்த்துக்கொள்வதால் ‘அதிக நேரம் பேட்டரி நிற்பதில்லை’ என்பது பலரின் குற்றச்சாட்டாக இருக்கிறது. அதனால் போனுடன் பவர் பேங்கையும் கையோடு வைத்திருப்பவர்களை நாள்தோறும் காணமுடிகிறது. பவர் பேங்க் வெயிட்டாகவும், கொஞ்சம் பெரிதாகவும் இருப்பதால், இதைக் கையாள்வது சற்று சிரமமாக இருந்து வந்தது.

இந்தக் குறையைப் போக்கவே இதோ வந்துவிட்டது கையடக்க பவர் பேங்க்... கிரெடிட் கார்டு சைஸில் இருக்கும் இதை நம்முடைய பர்ஸில்கூட வைத்துக்கொள்ளலாம். ஒரு தடவை முழுமையாக சார்ஜ் செய்துவிட்டால் போதும்  2-3 முறை மொபைல் பேட்டரியை சார்ஜ் செய்துகொள்ளலாம். இதன் விலை ரூ.1500/-

சிற்றிதழ் Talk

எனக்கு எல்லாக் கலைகளின் மீதும் ஈடுபாடு உண்டு. சமூகத்தைக் கலை என்னும் கண்ணாடியின் வழியாகப் பார்ப்பவன் நான். நாஞ்சில் நாடனின் ஒரு கதையைப் படிக்கும்போதுதான் மெட்ராஸைத் தவிர, ஒரு நாகர்கோவில் எனக்குத் தெரிகிறது. சக மனிதர்களின் மீது மரியாதை செலுத்துவதற்கும் அன்பு பாராட்டுவதற்கும் கலை நமக்கு சொல்லித் தருகிறது.

- கர்நாடக இசைக் கலைஞர்
சஞ்சய் சுப்ரமணியன்
(‘பேசும் புதிய சக்தி’ இதழில்)

புத்தகம் அறிமுகம்

நஞ்சுண்டகாடு

- குணா கவியழகன்
(அகல், 348-A, டி.டி.ேக. சாலை, ராயப்பேட்டை, சென்னை-600014. விலை: ரூ.135. தொடர்புக்கு: 98843 22398)

ஈழத்தின் இன்னுமொரு முக்கியமான படைப்பு இது. நாம் நம் வரலாற்றோடு பெரும் கயிற்று இழைகளினால் பிணைக்கப்பட்டிருக்கிேறாம். ஈழ மக்களின் மிகத் துயருண்ட வரலாற்றுக்கு இன்னொரு தகுதிச் சான்று ‘நஞ்சுண்டகாடு’. இயக்கங்கள், அவற்றின் நடைமுறைகள், செயல்பாடுகள், கடைசி கட்ட இன்னல்கள் என இங்கேயிருந்து புரிந்துகொள்வது முற்றிலும் முடியாத அளவில் இருந்தது. அந்த இடைவெளியை இந்நாவல் சிரமேற்கொண்டு விலக்கி வைக்கிறது. சம்பவங்கள், இயக்கத்தின் நடப்பு, புரிதல்களை அடுத்தடுத்து சொல்லிப் போகும்போது அவ்வளவு யதார்த்தம்... புரிபடுகிற உண்மைத்தன்மை மிளிர்கிறது.

நாவலின் மொழி மக்களின் மொழியிலிருந்து விலகிச் செல்லாமல் இருப்பது அழகு. யாரேனும் இதன் ஆதாரப் பொருளில் வேறுபாடு அடையலாம். ஆனால் நாவலின் கட்டுக்கோப்பில், உணர்வில் குறை காணவே முடியாது. அனுபவம், வெளிப்பாடு இரண்டும் தீவிரம் பெறும்போது மொழியும் தீவிரமடைவது இயல்புதான். அந்த வகையிலும் நஞ்சுண்டகாடு முக்கியமானதாகிறது.

யூ டியூப் லைட்

பயன்படுத்தவே முடியாது’ என்று நாம் கருதும் சில பொருட்களை, துணிமணிகளை ஐந்தே நிமிட கைவண்ணத்தில் ஸ்டைலிஷான உபயோகப் பொருளாக மாற்றுவது எப்படி... என்று நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமா? ஃபேஸ்புக்கில் உள்ள ‘பிரைட் சைடு’ பக்கத்தில் அப்படியான அசத்தல் ஐடியாக்கள் வீடியோ வடிவில் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன. உதாரணத்துக்கு, விலையுயர்ந்த, அழகான டிசைன்டு டி-ஷர்ட் ஒன்று அதன் கழுத்து அருகே கிழிந்து போயிருக்கிறது. அதை அழகான டிராவலர் பேக் ஆக  மாற்றும் வீடியோ ஒன்றுக்கு அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. 51 லட்சம் பார்வையாளர்கள், 4 லட்சத்து 88 ஆயிரம் ஷேர்கள், 11 ஆயிரம் பாராட்டு கமென்ட்கள் என அந்த கிராஃப்ட் வீடியோ களைகட்டிக் கொண்டிருக்கிறது.

நிகழ்ச்சி மகிழ்ச்சி

கேரளாவின் சமீபத்திய ஹாட் டாபிக் ‘திலீப்-காவ்யா மாதவன் திருமணம்’தான். மஞ்சு வாரியரை விவாகரத்து செய்துவிட்டு திலீப்பும், வெளிநாட்டுக் கணவரை விவாகரத்து செய்துவிட்டு காவ்யாவும் தனித்திருந்தனர். சில மாதங்களுக்கு முன்பு ‘பின்னேயும்’ படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். அப்போதிலிருந்தே ‘இருவரும்  திருமணம் செய்துகொண்டுவிட்டனர்’ என கிசுகிசுக்கள் கிளம்பின.

அவற்றை உறுதி செய்யும் விதமாக இந்தக் கல்யாணம் நடந்துள்ளது. திலீப்பின் மகள் மீனாட்சியின் மனப்பூர்வ சம்மதம் கிடைத்த பின்பே இந்த  திருமணம் நடந்துள்ளது. விழாவில் மம்மூட்டி, ஜெயராம், லால் என  நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டு வாழ்த்தியிருக்கிறார்கள். மணமக்கள் இருவரும் மாலை மாற்றிக்கொண்ட கையோடு தங்களை சினிமாவில் அறிமுகப்படுத்திய இயக்குநர் கமலின் காலில் விழுந்து ஆசி பெற்றிருக்கின்றனர்.