ஒரு பெட்டிக்குள்ளே வாழ்க்கை!



மாநகர மனிதர்கள்

‘‘இதோ... இந்த மரப்பெட்டிலதான்  ரெண்டு வருஷமா இருக்கேன். இதான் என் வசந்த மாளிகை. மழை பெய்தாலும், வெயில் அடிச்சாலும் இதான் என் சொர்க்கம். எனக்கு வேற இடமில்லை. தூக்க அசதியில காலை கொஞ்சம் நீட்டினாலும் கதவைச் சாத்த முடியாது. கதவைத் தொறந்தா காத்து வராது. தூசி அள்ளிக் கொட்டும். கொசு பிடுங்கி எடுக்கும். வேற வழியில்லாம வெளியே காலை தொங்கப் போட்டுட்டு அப்படியே அசதியில கண் அசந்துருவேன். பக்கத்துல இருக்கற கார்ப்பரேஷன் பாத்ரூம்ல குளிச்சுப்பேன். இப்படித்தான் வாழ்க்கை ஓடிட்டிருக்கு’’ என்று சிரமங்களை மறந்து பேசுகிறார் ராஜா.

ஒரு நொடி நிதானித்து அக்கம்பக்கம் திரும்பிப் பார்க்கக்கூட நேரமில்லாமல் மக்கள் விரையும் சென்னை வடபழனி பஸ் ஸ்டாண்ட் சிக்னல்... இதன் அருகே பிளாட்பாரத்தில் உள்ள  இந்த ராஜாவின் அரண்மனை வெறும் மூன்று அடி அகலமும், மூன்று அடி நீளமும் கொண்ட மரப்பெட்டிதான். ஒரு சராசரி மனிதனால் கால்களை நீட்டி உட்கார முடியாத, நம்மால் சில நிமிடங்கள்கூட இருக்க முடியாத  இந்தப் பெட்டிக்குள்ளே இரண்டு வருடமாக வாழ்ந்து வருகிறார் ராஜா.

தனக்கென்று யாருமே இல்லாத துயர்மிகுந்த வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது அவரின் முகம். இந்தப் பெட்டி வீட்டுக்கு அருகில் பழைய கிழிந்த செருப்புகள் வரிசையாக அடுக்கப்பட்டு இருக்கின்றன. தனது வாழ்வாதாரத்துக்காக செருப்பு தைத்துக்கொண்டு, வீட்டையே தொழில் செய்யும் இடமாகவும் மாற்றிவிட்டார்.  நாம் உட்கார்ந்திருந்த அரை மணி நேரத்திலேயே முதுகு வலித்தது உண்மை. ஆனாலும், அந்தக் கண்களில் தெரிந்த வாழ்க்கையின் வலியும்,சோகமும் நம்மை கலங்கடிக்கிறது...

‘‘இங்கே வாழணும்னு வைராக்கியம் எதுவும் இல்ல. இதான் எனக்குக் கிடைச்ச இடம். நான் பொறந்து வளர்ந்தது எல்லாமே இதே வடபழனிலதான். பத்தாவது வரைக்கும் படிச்சேன். படிப்பு சுத்தமா ஏறல. வேலைக்குப் போயிட்டேன். போன இடத்துல ஒரு பொண்ணைப் பாத்து கல்யாணமும் பண்ணிக்கிட்டேன். மூணு கொழந்தைங்க பொறந்தாங்க. மாமாகிட்ட இருந்து செருப்பு தைக்கிற தொழிலைக் கத்துக்கிட்டேன். இப்ப பர்ஸ், செருப்பு, பெல்ட்  என எல்லாத்தையும் செய்வேன்.

முன்னாடியெல்லாம் செருப்பு பிஞ்சு போனா தச்சு தச்சுப் போடுவாங்க. இப்ப தூக்கிப் போட்டுட்டு புதுசா வாங்கிக்கிறாங்க. பெருசா இந்தத் தொழில்ல லாபம் இல்ல. மனசுக்குப் பிடிச்சிருக்கு. அதனால இத விட முடியல. செருப்பு தைச்சேதான் கொழந்தைகளைப் படிக்க வச்சேன். பத்து வருஷம் கொழந்தை, குடும்பம்னு சந்தோஷமா இருந்தேன். யாரு கண்ணு பட்டுச்சோ தெரியல. ரெண்டு வருஷத்துக்கு முந்தி பெரிய பையனுக்கு உடம்பு சரியில்லாமப் போச்சு. பாக்காத வைத்தியம் இல்ல. எல்லா டாக்டர்களும் கைய விரிச்சுட்டாங்க. கடைசில பையன் செத்துப்போயிட்டான்.
 
அவன் போனதைத் தாங்கிக்கவே முடியல. அவனைப் பத்தி நிறையா கனவு இருந்துச்சு. வாழ்க்கையே வெறுத்துப் போச்சு. என்ன செய்றதுன்னு புரியல. ஆறு மாசம் பைத்தியக்காரன் மாதிரி அலைஞ்சேன். குழந்தைகளை கூட்டிட்டு என் பொண்டாட்டியும் அம்மா வீட்டுக்குப் போயிட்டா. பல நாள் சாப்பிடவே இல்லை. விஷத்தைக் குடிச்சு செத்துப்போலாம்னு கூட நினைச்சேன்.  இப்பவும் உசுரோடு இருக்கேன்ங்கறதையே நம்ப முடியல.

ஆதார் கார்டு, ரேஷன் கார்டுனு சொல்லிக்கிறாங்களே... அதெல்லாம் எதுவும் என்கிட்ட இல்ல. ரோட்டுல ஏதாவது பிரச்சனைனா போலீஸ் வந்து துரத்துவாங்க. நல்லா தூங்கிட்டிருந்தவனை தட்டி ‘இங்கே என்னடா பண்றே?’னு மிரட்டுவாங்க. ஆள் தெரிஞ்ச போலீஸ்னா நான் தப்பிச்சேன். இல்லாட்டி கேட்குற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லி மீள முடியாது. மழை பெய்ஞ்சா இன்னும் சங்கடம்.

எல்லாம் மீறி எனக்குன்னு ஒரு வாழ்க்கை வரும்னு தெய்வத்தை வேண்டுறேனுங்க!’’ ‘அன்பாலே அழகாகும் வீடு... ஆனந்தம் அதற்குள்ளே தேடு...’ - மறைந்த பாலமுரளி கிருஷ்ணாவின் குரல் ராஜாவின் சின்ன எஃப்.எம் ரேடியோவில் ஈரமாக பரவிக்கொண்டிருந்தது. பெட்டிக்கு அருகில் வேர்விட்டு வெட்டப்பட்ட முதிர்மரத்தில், ஒரு தளிர் பசுமையாகத் துளிர்விட்டிருந்தது. 

- வெங்கட் குருசாமி
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்