கடமை



‘‘டேய்... மாதவா! முதல்ல இந்தக் காபியைக் குடிடா. அப்பா வந்தபிறகு ஸ்கூல் ஃபீஸ் விஷயமா பேசிக்கலாம்...’’ வேண்டா வெறுப்பாக காபியை வாங்கிக் குடித்தான் மாதவன். அப்போது வெளி வாசலில் நுழைந்துகொண்டிருந்தார் அப்பா. ‘‘அப்பா வந்தாச்சு! ஸ்கூல் ஃபீஸ் பத்தி கேட்கணும்னு சொன்னியே... இனி உன் பாடு, உன் அப்பா பாடு...’’ என சொல்லிவிட்டு சமையலறைக்குச் சென்றாள் கலா. தயங்கியபடி அப்பாவிடம் பேச்சுக் கொடுத்தான் மாதவன்.

‘‘அப்பா! ஃபர்ஸ்ட் டேர்ம் ஸ்கூல் ஃபீஸ் இருபதாயிரம் ரூபா கட்டணும். ஒரு செக் தந்தா போதும்...’’ மாதவனை முறைத்தார் அப்பா. ‘‘என்னாலே ஸ்கூல் ஃபீஸ் எல்லாம் தரமுடியாது. அதெல்லாம் நீயே பாத்துக்க வேண்டியதுதான்...’’ கறாராகச் சொன்னார் அப்பா. ‘‘இப்படிச் சொன்னா எப்படிப்பா? உங்களுக்கு இதிலே பொறுப்பே இல்லாத மாதிரி பேசுறீங்க! நான் உங்ககிட்ட கேட்காம வேற யாருகிட்ட கேட்பேன்?’’

‘‘மாதவா... என்னோட கடமை உன்னைப் படிக்க வச்சு, வேலை வாங்கிக்கொடுத்து,  ஒரு நல்ல எடத்துல கல்யாணம் பண்ணி வச்சதோட முடிஞ்சிருச்சு. நீ புள்ளையை பெத்துக்கிட்டே... உம் புள்ளையை பெரிய கான்வென்ட்ல வேற சேர்த்திருக்கே! நீதான் உன் சம்பாத்தியத்தில்  ஃபீஸ் கட்டி  படிக்க வைக்கணும். அது உன்னோட கடமை...’’ உறுதியாகச் சொல்லி முடித்தார் கணேசன்.        

- கு.அருணாசலம்