ஈரமான மனசு... காரமான விஜய்..!



பைரவா சீக்ரெட்ஸ்

‘பைரவா’ ஃபீவர் தமிழ்நாடெங்கும் பரவியிருக்கிறது. ‘பொங்கல் எப்போ வரும்?’ என ஏங்குகிறார்கள் விஜய் ரசிகர்கள். அவர்களுக்கு இதுதானே கொண்டாட்டம்! படத்தை நிறைவு செய்கிற வேலையில் இரவு பகலாக விழித்திருக்கிற டைரக்டர் பரதன் சிரிக்கிறார். பேச ஆரம்பித்தால் மனிதர் செம பரபரப்பு.

‘‘விஜய் சாருக்கு இது லைஃப்டைம் கேரக்டர். அழகா, அட்டகாசமா, ஈரமான மனசோடு மக்களுக்காக காரமாக அலைகிற ஆள். லுக், ஸ்டைல், டயலாக், காமெடி, ஆக்‌ஷன், டான்ஸ்னு எல்லா ஏரியாவிலும் பிரமாதப்படுத்திட்டார். இப்ப படம் மொத்தத்தையும் உட்கார்ந்து பார்த்தார். மனசுக்குள் நம்பிக்கை கொடி கட்டிப் பறந்தாலும், ‘அவர் என்ன சொல்வார்’னு நகம் கடிச்சபடி காத்திருந்தேன். எழுந்தார்... சந்தோஷமா என்னை அணைச்சு, ‘சொன்னதுக்கு மேலேயே செய்திருக்கீங்க. உங்க உழைப்புக்கு மரியாதை கிடைச்சிருக்கு’னு சொன்னார். எனக்கு மூச்சு வந்தது. சந்தோஷம்!’’

‘‘கொஞ்ச நாள் கழிச்சு விஜய்யோட ஒர்க் பண்றது எப்படியிருக்கு..?’’
‘‘அவர் நமக்குத் தர்றது அவ்வளவு சுதந்திரம். ‘பைரவா’ கதையை அங்கே இங்கே அசையாமல் இரண்டரை மணி நேரம் கேட்டுக்கொண்டு எழுந்திருச்சு ‘ரொம்ப நல்லாயிருக்கு, பண்றோம்’னு சொன்னார். அவர் ஒரு படத்தைத் தீர்மானிக்கறது ரசிகர் மனநிலையில இருந்துதான். கடைசியா 14 நாட்கள் அனல் அரசு ஒரு ஃபைட் எடுத்தார். ‘மயிர்க்கூச்செறியும் சண்டை’னு சொல்வாங்களே, அதான். அது மாதிரி நச்னு நாலு ஃபைட் இருக்கு. நான் டெக்னீஷியன்ஸ் லிஸ்ட் கொடுத்தபோது அதில் அனல் அரசுவின் பெயரும் இருந்தது.

‘ரொம்ப நல்லாயிருக்கும். அவரை நீங்க கொண்டாந்துடுவீங்களா’னு கேட்டார் விஜய். ஏன்னா இந்தியில் அவர் படு பிஸி. கடைசியா விஜய்க்கு ‘கத்தி’ செய்தார். இதில் இருக்கிற ஃபைட் எல்லாம் நம்பகத்தன்மையோடு ஆக்‌ஷன் பின்னும். ஃபைனலில் க்ளைமேக்ஸ் பார்க்கும்போது அவரை அலைபேசியில கூப்பிட்டு, ‘அனல், செம ஃபைட், ரொம்ப நல்லா வந்திருக்கு. நன்றி’னு சொன்னார். ‘எனக்கு தலை கால் புரியாத சந்தோஷம்’னு மாஸ்டர் பூரிச்சுப் போயிட்டார்.’’

‘‘ ‘பைரவா’ எப்படியிருக்கும்? என்ன எதிர்பார்ப்போட வரணும்?’’
‘‘ஒரு சோஷியல் எண்ணம் உள்ள படம். அப்பா, அம்மாவில் ஆரம்பிச்சு குழந்தைகள் வரை பிடிக்கும். ‘கத்தி’யில் சுற்றுச்சூழல் மாதிரி, ‘துப்பாக்கி’யில் ஸ்லீப்பர் செல் மாதிரி, இதில் ஒரு விஷயத்தைக் கொண்டு வந்திருக்கோம். இதுவரைக்கும் விஜய் சார் டச் பண்ணாத பாயின்ட். பிரச்னையைப் பார்த்தால் நியாயமாகத் தெரியும். உடனே ஒன்றிப் போக முடியும். பத்திரிகைகளை தினமும் கவனம் செலுத்திப் பார்த்தால் பார்த்தது, கேட்டது, நடந்ததுன்னு இதுமாதிரி ஒரு செய்தி வந்துக்கிட்டே இருக்கும். அடுத்த நாள் ஒரு பெரிய நியூஸ் வந்ததும், அந்த செய்தி கொஞ்சம் பின்வாங்கும். மறந்திடுவோம். பல பேரைப் பார்த்து, அதைப் புலன்விசாரணை செய்து ஒரு கதையாக உருவாக்கினோம்.

ஆனால் இதை வெளியில் சொல்ல ஒரு மாஸ் ஹீரோ வேணும். அப்படி ஒருத்தர் சொன்னால்தான் எடுபடும். ‘வீரம்’ படத்தில் டயலாக் எழுதினதில் விஜயா புரொடக்‌ஷன்ஸுக்கு என்னைத் ெதரியும். எம்.ஜி.ஆர். கை நீட்டி சம்பளம் வாங்கின கம்பெனியில் நானும் பணியாற்றினேன் என்பது அவ்வளவு நிறைவு. முன்னாடி நான் செய்த ‘அழகிய தமிழ்மகன்’ நினைச்ச அளவுக்குப் போகலை. அதனால ஏழு வருஷம் விஜய் சாரைப் பார்க்காமலேயே இருந்தேன். கொஞ்சம் குற்ற உணர்வு.

மரியாதையான படமாக அது அமைஞ்சிருந்தாலும், கொஞ்சம் ரீச் குறைவா இருந்துச்சு. ஆனால் உள்ளுணர்வு ‘நீ மறுபடியும் விஜய்யை சந்திப்பாய்’னு சொன்னது. பார்த்தேன். ‘நான் ‘வீரம்’ படம் பார்த்தேன் சார். டயலாக்கெல்லாம் பல இடங்களில் பளீர் பளீர்னு இருந்துச்சு. யாருன்னு கேட்டால் உங்க பேரைச் சொன்னாங்க. அதானேன்னு நினைச்சேன்’னார். ‘பைரவா’வுக்கு அவர் சம்மதம் சொன்னதும், சந்தோஷ் நாராயணன், கேமராமேன் சுகுமார், அனல் அரசுன்னு கொஞ்சம் வேற செட் பிடிச்சேன். அதே மாதிரி ‘விஜய்-கீர்த்தி சுரேஷ்’ ஜோடிப் பொருத்தம் திவ்யமா இருக்கு...’’

‘‘இப்போ பார்க்கும் விஜய் எப்படி மாறுபடுகிறார்?’’
‘‘எப்போதும் அதே உழைப்பு, கூர்மை. எவ்வளவு உயரத்துக்கு வந்தாலும், அதே மனிதாபிமானம், அன்பு அப்படியே இருக்கு. அதுல கொஞ்சம் கூட ஆச்சர்யப்படுத்தலை. எனக்கு எப்பவும் சாரோட போக்கு புரியும். நாளைக்கு எடுக்கிற சீனை இன்னிக்கு வாங்கிப் பார்ப்பார். அதில் என்ன மாடுலேஷன், எப்படி அதைச் செய்யலாம்னு ஹோம் ஒர்க் பண்ணிட்டு வருவார். கேரவனுக்குள் இருந்தபடி ‘இப்படிச் செய்யலாமா?’னு சில யோசனைகள் சொல்வார்.

அது அழகா இருக்கும். சீன் இம்ப்ரூவ் ஆகும். ‘இப்படி வச்சுக்கலாமா’ன்னு கேட்பாரே தவிர, ‘வச்சுக்கறேன்’னு சொன்னதே கிடையாது. அது அவர் ரத்தத்திலேயே வந்தது. படத்திலே டூப்பே கிடையாது. ஃபைட்டில் ரிஸ்க்கை எல்லாம் தன் மேலேயே போட்டு நடிச்சார். இதெல்லாம் அபூர்வம்!’’

‘‘கீர்த்தி சுரேஷ் எப்படிங்க?’’
‘‘எழுதிக் கொடுத்த ஸ்கிரிப்ட்டை தமிழில் படிச்சுக்கிட்டு, அதே தமிழில் பேசிக்கிட்டு நடிச்சால் அவ்வளவு நல்லா இருக்கு. லட்சுமி, ரேவதி, ராதிகா மாதிரி அந்த தினுசில் போகுது அவங்க நடிப்பு. கீர்த்தியே டப்பிங் பேசினதால் அவ்வளவு உயிரோட்டம். சதீஷ், தம்பி ராமையா நல்ல ரோலில் வர்றாங்க. சந்தோஷ் நாராயணனுக்கு ஜனங்களைக் கவர்ந்துடணும்ங்கிற ஒரே டார்கெட்தான். விஜய் இருக்கிற பெரிய கேன்வாஸ்னு புரிஞ்சு பொளந்து கட்டிட்டார். 5 பாடல்கள்... ‘பட்டையைக் கிளப்பு, பட்டையைக் கிளப்பு’ங்கற பாடல் ரொம்ப அமர்க்களம். சில பாடல்கள் சாமி ஆடற மாதிரி கொண்டாட்டமா இருக்கும். வைரமுத்து எழுதினது அப்படி. ‘சந்தோஷ் நாராயணன் - வைரமுத்து’ காம்பினேஷன் இரண்டு பேருக்கும் புதுசு. சும்மா அள்ளுது!’’

‘‘பன்ச் இருக்கா?’’
‘‘இப்ப விஜய் சாதாரணமா ஒரு வார்த்தை பேசினாலும் அது ‘பன்ச்’ ஆகிடுது. அப்படித்தான் இதிலும் நாலைந்து வசனம் வருது. ‘இன்னிக்கு நிறைய பேர்கிட்டே இல்லாத ஒரு கெட்டபழக்கம் என்கிட்டே இருக்கு!’னு சொல்வார். அது என்ன பழக்கம்ங்கறதை சஸ்பென்ஸா வைச்சிருக்கோம். டீஸர் பார்த்திட்டு, ‘அது என்ன, அது என்ன?’னு ஆர்வமா கேட்குறாங்க. அந்த வசனத்தை சொல்லும்போது அவர் சிரிச்சார். படத்தில் அது மூணு இடங்களில் வருது.

ஜெகபதி பாபு தெலுங்கில் அவ்வளவு பிரபலம். இதுல அவர்தான் வில்லன். அவர்கிட்ட வேலை வாங்குறது கஷ்டமா இருக்குமோன்னு பயந்தேன். ஆனா, அவ்வளவு ஒத்துழைப்பு. இதில் வில்லன்களும் பேசப்படுவார்கள். டேனியல் பாலாஜி பின்னிட்டார். டப்பிங்கில வந்த ஒரு சீனைப் பார்த்துட்டு விஜய் சார், ‘டேனியல் பாலாஜி இந்தப் போடு போடுறார்’னு சந்தோஷப்பட்டார். எல்லா பில்லரும் உறுதியாக இருந்தால்தான், கட்டிடம் ஸ்டிராங்கா இருக்கும்னு அவருக்குத் தெரியும்.

படத்துக்காக கோயம்பேடு செட் போட்டிருக்கோம். ஒரிஜினல் கோயம்பேடுக்கு அவரைக் கொண்டு வந்திட்டு, திருப்பிக் கொண்டார முடியுமா! அதனால் செட். 200 கடைகளும், 150 வண்டிகளுமாக பிரமாண்ட செட். அப்புறம் ஒரு பைரவர் கோயிலும் செட்போட்டிருக்கோம். யாராலேயும் நம்ப முடியாது.

அவ்வளவு நேர்த்தி. ஒளிப்பதிவு சுகுமாருடைய ஒவ்வொரு ஃப்ரேமையும் கண்ணில் வைச்சு ஒத்தி எடுக்கலாம். ‘பட்டையைக் கிளப்பு’ பாட்டுக்கு தினேஷ் வந்தார். சும்மா அதிரடி டான்ஸ். அதைப் பார்த்திட்டு அடுத்த பாட்டையும் அவருக்கே கொடுத்தோம். அதையும் பிரிச்சு பின்னி எடுத்திட்டார். அப்புறம் எல்லாப் பாட்டும் அவருக்கே போயிடுச்சு. பாடல்களை பிரத்யேகமாக படம் ஆக்கியிருக்கோம். விஜய் ரசிகர்களுக்கு மட்டும் அல்ல, ‘பைரவா’ அத்தனை பேருக்குமான ட்ரீட்!’’

- நா.கதிர்வேலன்