அன்புக்காக ஒரு நூலகம்!



விநோத ரஸ மஞ்சரி

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் பசும்புல்வெளிகளுக்கு நடுவே அழகாக அமர்ந்திருக்கிறது ‘தி ஃபுல்லர் கட்’ சலூன். பொதுவாக முடி வெட்டும் சலூனை மாடல்களின்  புகைப்படங்கள், அழகு சாதனப் பொருட்கள், ஆளுயரக் கண்ணாடிகள்தான் அலங்கரிக்கும். ஆனால் இந்த சலூனை குழந்தைகளுக்கான கதைப் புத்தகங்கள் அடங்கிய ஒரு நூலகம் அலங்கரிக்கிறது. அதனால் குழந்தைகளின் கூட்டம் இங்கே அலைமோதுகிறது.

இந்த சலூனில் இருபது வருடங்களாக முடி திருத்தும் வேலையைச் செய்துவருபவர் ரியான். குழந்தைகளின் மீது பேரன்பு கொண்டவர். இவரின் ஐடியாதான் இது. இந்த நூலகத்துக்காக சிறுவர்களைக் கவரும் விதத்தில் பல நூல்களை சொந்தமாகவே வாங்கியிருக்கிறார் ரியான். இதுமட்டுமல்லாமல் நூலகங்கள் மூலமாகவும் நகர மக்களிடமிருந்தும் புத்தகங்களைப் பெற்றிருக்கிறார். கடையின் உரிமையாளரும் தன் பங்குக்கு  முழு ஒத்துழைப்பையும் வாரி வழங்கியிருக்கிறார்.

முடி வெட்டிக் கொள்ள வரும் குழந்தைகள் தங்களின் முறைக்காக காத்திருக்கும் நேரத்தில் இந்த நூல்களை வாசிக்கலாம். அதைவிட சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், முடி வெட்டிக்கொள்ள இருக்கையில் அமரும்போது ரியான் குழந்தைகளிடம் சில நூல்களை நீட்டி, ‘‘உனக்கு விருப்பமான புத்தகத்தை எடுத்துக்கொண்டு, நான் கேட்கிற மாதிரி சத்தமாக வாசித்தால்  கட்டணத்தில் இரண்டு டாலரை உனக்குத் திருப்பித் தருவேன்’’ என்கிறார்.

அப்படி சத்தமாக வாசித்தால், சொன்னது போலவே இரண்டு டாலரைத் திருப்பித்தருகிறார். பதினான்கு வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு மட்டும்தான் இந்தச் சலுகை. முடி வெட்டும்போது ‘குழந்தைகள் சரியாக வாசிக்கிறார்களா’ என்றும் கவனமாகப் பார்க்கிறார். பிழையாக சொற்களை வாசித்தால், சிக்கலான சொற்களை வாசிக்கத் திணறினால் அதைத் திருத்தவும் ரியான் தவறுவதில்லை. ‘‘சலூனுக்கு வரும் சிறுவர்கள், வளர்ந்து பெரியவர்களாகி நல்ல இடத்தை அடைய வேண்டும் என்பதுதான் எங்களின் முக்கிய நோக்கம்’’ என்கிறார் ரியான்.
இந்த சலூனுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பும் பாராட்டும் கிடைத்து வருகிறது.

- பிஸ்மி பரிணாமன்