இறுதிச்சுற்று ஒரிஜினல் பொண்ணு!



தன்னுடைய அக்கா சரஸ்வதி குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்று போலீஸில் சேரவேண்டும் என்பது குப்பத்துப் பெண் துளசியின் கனவு. ஆனால், துளசியிடம் ஒரு சாம்பியனுக்கான தகுதிகள் இருப்பதை அவரது அக்காவின் பயிற்சியாளர் கண்டுபிடித்து முறையாகப் பயிற்சி அளிக்க ஆரம்பித்தார்.

அங்கே உள்ள பாக்ஸிங் கூட்டமைப்பின் அரசியல், தடைகளைத்தாண்டி நினைத்த லட்சியத்தை சென்றடைகிறார் துளசி. எல்லா இடத்திலும் ஹிட் அடித்த ‘இறுதிச்சுற்று’ படத்தின் கதை இது. வடசென்னையைச் சேர்ந்த துளசி ஹெலனின் நிஜ வாழ்க்கைதான் அந்தக் கதை. துளசியிடம் பேசினால் அவரது மொத்த வாழ்க்கையும் குரலின் ஏற்ற இறக்கங்களோடு வெளிப்படுகிறது.

‘‘நான் பொறந்து வளர்ந்ததெல்லாம் இந்த காசிமேட்டுலதான். 12 வயசுல இருந்தே பாக்ஸிங் பண்ணுறேன். அதான் என் உயிர்மூச்சு. படிப்பை விட இதுதான் முக்கியமாகப் பட்டுச்சு. பெண்களுக்கு இதெல்லாம் தேவையான்னு ஆரம்பத்துல அக்கம்பக்கத்துல எல்லாரும் கேட்டாங்க. ‘பாக்ஸிங் ஆண்களுக்கான விளையாட்டு இல்லையா?’னு சொன்னவங்களே அதிகம். என் மனசு இதுல ஜெயிக்க முடியும்னு சொல்லுச்சு. என் அக்காவும் பாக்ஸிங்ல வெறியா இருந்தாங்க. எப்பவும் அவங்க கூடவே இருப்பேன். ஒருதடவை அவள் ஜெயித்ததை மாத்தி இல்லைனு சொன்னாங்க.

அந்தக் கோவத்துல நானும் பாக்ஸிங் கத்துக்க ஆரம்பிச்சேன். அப்புறம் அரசு பாக்ஸிங் மையத்தில் பயிற்சி எடுத்தேன். பலவிதங்களில் நான் முடக்கப்பட்டேன். பணத்தை செலவு செஞ்சதுதான் மிச்சம். எந்த ஆதரவும் இல்லாம நான் தனியாளா பயிற்சி செய்துட்டு இருந்ததைக் கேள்விப்பட்டு, பெங்களூரு அணி சார்பா தேசிய போட்டியில் விளையாட அழைப்பு வந்து விளையாடி ஜெயிச்சேன்’’ என்கிற துளசியின் வாழ்க்கை போராட்டங்களால் நிறைந்தது. ‘இறுதிச்சுற்று’ படத்தினால் தனக்குக் கிடைத்த அனுபவத்தையும் குறைகளையும் சேர்த்தே பேசுகிறார் துளசி.

‘‘இந்த காசிமேட்டுலதான் ‘இறுதிச்சுற்று’ படத்தோட டைரக்டர் சுதா மாதக் கணக்குல தங்கியிருந்தாங்க. என்னோட முழுக்கதையும் அவங்களுக்கு தெரியும். ‘உன் கதையை படமா எடுக்கப்போறேன்’னு சொன்னாங்க. எனக்கு ஆச்சரியம் தாங்க முடியல. நம்பவே முடியல. ஆனால் படத்தை பார்க்கும் போது சந்தோஷமா இருந்துச்சு. இந்தப் படத்தைப் பாத்து என்னைப்போலவே பெண்கள் குத்துச்சண்டையைக் கற்றுக்கொள்ளணும். சர்வதேச போட்டிகளில் நம் பெண்கள் பல சாதனைகளைப் புரியணும்.

ஆனா படம் வெளிவந்த பிறகு சுதா என்னை கண்டுகொள்ளவே இல்லை. இதுமாதிரியான அவமானங்கள் எனக்கு சகஜம் என்பதால் இதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. சில நாட்களுக்கு முன்பு நடந்த பெங்களூர் ‘தேசிய மார்ஷியல் பாக்ஸிங்’ போட்டியில், பெண்களுக்கான ‘லைட்வெயிட் பிரிவில் ஹரியானா மாநில பெண்ணை நாக்-அவுட் செய்து வெற்றிபெற்றேன். ஆண்களுடனும் கூட பாக்ஸிங் விளையாடி ஜெயிச்சிருக்கேன்.

அதுமட்டுமல்லாமல், சமீபத்தில் நடந்த ‘இன்டர்நேஷனல் மார்ஷியல் பாக்ஸிங்’ போட்டியில் அரை இறுதியில் 9 விநாடிகளில் எதிரியை வீழ்த்தி, தேசிய சாதனை விருதையும் பெற்றேன். ஆனால் என்ன துயரம் என்றால் நான் பெற்ற இந்த வெற்றி தமிழ்நாட்டுக்குச் சொந்தமில்லை. கர்நாடகத்துக்காக பெற்ற வெற்றி அது. தமிழ்நாட்டுல பாக்ஸிங்குக்காக வாய்ப்பு தேடி அலைஞ்ச போது ‘பெண்களுக்கான பாக்ஸிங் பயிற்சி இங்கே இல்லை’னு சொன்னாங்க. இந்திய அரசு அனைத்து விளையாட்டுகளுக்கும் பயிற்சி தர பணம் ஒதுக்குறாங்க.

பாக்ஸிங் பயிற்சிக்கும் பணம் ஒதுக்குறாங்க. தமிழ்நாட்டைத் தவிர்த்து மற்ற மாநிலங்களில் பெண்கள் பாக்ஸிங் கிளப் நல்லா இருக்கு. ஆனா, இங்க சுத்தமா இயங்காம இருக்கு. அடுத்த சர்வதேசப் போட்டி அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடக்கிறது. அதில் கலந்து வெற்றி பெறணும். அதுதான் என் கனவு. தமிழ்நாட்டுக்காகவே என் வெற்றி இருக்கணும். சர்வதேசப் போட்டியிலும் கர்நாடகாவுக்காக விளையாடச் சொல்லி அந்த அரசாங்கம் என்னைக் கேட்டிருக்காங்க. அதுக்காக அவங்களே பயிற்சி தருவதாகச் சொல்லியிருக்காங்க.

தமிழ் நாட்டுல முதல்வர் தனிப்பிரிவுக்கு பலமுறை கடிதம் எழுதியிருக்கேன். விளையாட்டுத்துறை அமைச்சர், கமிட்டினு எல்லார்கிட்டயும் நேர்ல முறையிட்டும் பாத்துட்டேன். நல்லது எதுவுமே நடக்கலை. நமக்குத் தண்ணி தரமாட்டோம்னு சொன்னவங்களுக்காக விளையாடுறோமேனு ஒரு குற்ற உணர்ச்சியும் இருக்கு. இருந்தும் நம்ம திறமையை மதிக்கிறாங்க என்ற ஒரே காரணத்திற்காக அங்கே விளையாடுறேன். நம்ம தமிழ்நாட்டுக்காக விளையாடணும்.. அது எப்போ? அதுக்கான நாளை எதிர்பார்த்துட்டே இருக்கேன். அதுவே என் லட்சியம்’’ என்கிறார் நிறைவாக!

- திலீபன் புகழ்
படங்கள்: ஆர்.கோபால்