ரொமான்ஸ்தான் வாழ்க்கையின் சுவையான பகுதி!



செல்வராகவன் ஃபீலிங்

கனிந்த அனுபவ சாந்தத்தில் இருக்கிறார் செல்வராகவன். ஜென் நிலையில் சிறிதளவே சிரிக்கிறார். சற்றே பொறுத்து வந்தாலும் அவருக்கு நிகர் அவரே. ‘நெஞ்சம் மறப்பதில்லை’ டிரெய்லர் யூடியூப்பில் பரபரப்பைக் கிளப்ப, யுவனின் பாடல்கள் ரசிகர்கள் மனம் இழுக்க.. பேச ஆரம்பித்தார் செல்வா.

‘‘பொதுவா இங்கே எல்லாமே ஏதோ ஒண்ணோட சாயலாகவே இருக்கு. அப்படி எது மாதிரியும் இல்லாமல் புதுசா ஒரு விஷயம் செய்யணும்னு செய்ததுதான் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. இதில் யாரும் டாப் ஸ்டார்கள் கிடையாது. எல்லோரும் விரைவாக அந்த இடம் நோக்கி வர்றவங்கதான். அப்படியிருந்தும் படத்திற்கு கிடைத்திருக்கற வரவேற்பு சந்தோஷமாயிருக்கு. ரசிகர்கள் எங்கள் மீது வைச்சிருக்கிற நம்பிக்கைக்கு ஈரமாக நன்றி சொல்லணும்.

எப்பவுமே ஒரு கலைஞனை அவனோட வயசு, அனுபவம், பக்குவம்னு ஏதாவது ஒன்ணு அடுத்தடுத்து கையைப் பிடிச்சு அழைச்சுக்கிட்டு போகுது. ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு விதமா சினிமாவில் வெளிவந்திருக்கேன். காதலோட சந்தோஷம், வலி, வாழ்க்கைனு ‘காதல் கொண்டேன்’, நகரத்தின் இன்னொரு முகத்தைத் தேடியபோது கிடைச்சது ‘புதுப்பேட்டை’, இப்படித்தான் என் கதைகள். இப்ப த்ரில்லரா ஒரு கதையோட வந்திருக்கேன்.’’

‘‘எஸ்.ஜே.சூர்யாவே ஒரு இயக்குநர். சிரமம் இருந்ததா?’’
‘‘அவர் நடிகர் ஆக வேண்டும் என முடிவு செய்யும்போதே இயக்குநர் என்ற வேறொரு அந்தஸ்தை தனியாக எடுத்து வைச்சிட்டுத்தான் வந்திருக்கணும். அவருக்கு என்னைவிட அனுபவம். நான் சினிமாவுக்கு வந்து 16 வருஷம் ஆச்சுன்னா, அவர் வந்து 25 வருஷம் ஆகப் போகுது. அந்த அனுபவம், திறமை, பொறுமை எல்லாம் அவர்கிட்டே இருக்கு. அவருக்கு எதையும் நான் சொல்லிக் கொடுக்கணும்னு அவசியமே இல்லை. சிரமங்களும் இல்லை. இன்னும் சொன்னால் நாங்க ரொம்ப தோழர்கள் ஆகிட்டோம்.’’

‘‘அவருக்கு இருந்த இமேஜ் மாறி உங்கள் மாதிரியானவர்களின் விருப்பத்திற்கு மாறிட்டாரே...கவனிச்சீங்களா?’’
‘‘எல்லோருக்கும் ஒரு காலகட்டம் இருக்கும். உருண்டு, புரண்டு எழுந்தால்தான் ஒரு இடத்திற்கே வந்து சேர முடியும். இங்கே யாருக்கும் ஒரு நிலையான இமேஜ் இல்லை. ரஜினி, கமல், தனுஷ்னு சிரமப்பட்டு வந்தவர்களே இங்கே நிலைச்சிருக்காங்க. இங்க பல பிராண்ட் குத்துவாங்க. அதையெல்லாம் தாண்டித்தான் வரணும். இப்பல்லாம் வாழ்வா சாவான்னுதான் படம் பண்ண வேண்டியிருக்கு.

500 கோடியில் படம் பண்ணினால் கூட அது Safety Zoneல வரலை. எனக்குத் தெரிஞ்சு அப்படி ஒரு zone இல்லவே இல்லை. அதை முடிவு பண்ணுகிற உரிமை ரசிகர்களுக்கே இருக்கு. இதுதான் கதைன்னு முடிவு ஆனதுமே மளமளன்னு எஸ்.ஜே. சூர்யா, ரெஜினா, நந்திதானு எல்லா ஆர்டிஸ்ட்டையும் முடிவு பண்ணிட்டேன். இப்ப சினிமா ரெடியா இருக்கு. அப்புறம் வீட்ல பொண்ணு வளர்ந்து நின்னா உடனே கட்டிக்  கொடுத்திடணும். அதுக்கு முன்னாடி நம்ம பொண்ணைப் பத்தி நாமளே பேசிக்கிட்டு இருக்கிறது கொஞ்சம் கூச்சமாகக் கூட இருக்கு. ரசிகர்கள் ஜட்ஜ்மென்ட் கொடுத்திட்டா எல்லாம் தெரிஞ்சிடும்.’’

‘‘உங்க படத்தில் நடிக்கிறது சிரமம்னு சொல்வாங்களே’’
‘‘அப்படியெல்லாம் இல்லைங்க. ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு அளவான நடிப்பு, உழைப்பு இருக்கு. பெரும்பாலானவர்கள் அதில் இருந்துக்கிட்டுத்தான் நடிப்பாங்க. ரெஜினா, நந்திதா இதில் தந்ததெல்லாம் வேறு. இது தன்னோட படம்ங்கிற மாதிரி நடிச்சுக் கொடுத்தாங்க. ஒண்ணு, இது அவங்க படம்னே தோணிருக்கணும். அல்லது தயாரிப்பாளரே அவங்கதான்னு நினைச்சிருக்கணும். இது எல்லாமே என் மேல் வைச்சிருக்கிற நம்பிக்கை, அன்பு. சொல்லியாக வேண்டியிருக்கு. இத்தனைக்கும் நடிகர்கள் அவங்க மத்த படங்களுக்கு வாங்குற தொகையை விட குறைவாகவே வாங்கியிருக்காங்க. அதையும் மீறி அவங்க தங்கள் மேலான உழைப்பை கொடுத்ததை குறிப்பிடணும். அதுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கேன்.’’

‘‘நீங்க சந்தானத்தோட படம் பண்ணப்போறீங்கன்னு வந்த நியூஸ்தான் இந்த வருஷ இறுதியோட பெரிய ஆச்சர்யம்...’’
‘‘அவரை நான் நல்ல நடிகராக புரிஞ்சு வச்சிருக்கேன். அவரை முழுக்க நகைச்சுவை நடிகர்னு முடிவு கட்ட முடியாது. சினிமா மீது அவருக்கு இருக்கிற விருப்பத்தை குறைச்சு மதிப்பிட முடியாது. நானே முன்னாடி சொன்ன மாதிரி யாருக்கும் இமேஜ் எதுவும் நிரந்தரம் கிடையாது. அவரே ‘சட்’னு உச்சத்திற்கு போயிட்டார்னா அவரை யாரும் கேள்வி கேட்க முடியாது.

சந்தானத்துக்கிட்டே இன்னொரு பக்கமும் இருக்கு. பத்து மணிக்கு களைப்போட வீட்டுக்குத் திரும்பினால் டி.வி.யில அவர்கிட்டேதான் நிம்மதியைத் தேட முடியுது. நான் ப்யூர் ரொமான்ஸ் பக்கம் போய் எட்டு வருஷம் ஆச்சு. ரொமான்ஸ்தான் எப்போதும் வாழ்க்கையின் சுவையான பகுதி. இப்ப நான் வேற பக்கம் திரும்பினால் கூட வீட்டுல அடி விழுது. திரைப்படத்தில் நம்மை புதுப்பிச்சுக்கணும்னா எனக்குத் தெரிஞ்ச நல்ல முயற்சி ரொமான்ஸ் படம் பண்றதுதான். அதுவும் சந்தானத்தோட ரொம்பவே நல்லாயிருக்கும்.’’

‘‘அதே மாதிரி ஆச்சர்யம், செல்வராகவன் - சூர்யா காம்பினேஷன்...’’
‘‘ ‘காதல் கொண்டேன்’ படத்துக்குப் பின்னாடி சூர்யாவுக்கு எங்கூட படம் பண்ணணும்னு எண்ணம் இருந்தது. அது தள்ளிக்கிட்டே போச்சு. எங்காவது பார்த்தால் ஹலோ சொல்லிக்குவோம். அடுத்த படம் பத்தி பேச்சு போகும். இப்போதான் படம் பண்றதுக்கான சந்தர்ப்பம் கூடி வந்திருக்கு. அவரோட படம் பண்ணும்போது படம் பெரிய கேன்வாஸ் ஆயிரும். எதிர்பார்ப்பு ஜாஸ்தி ஆகும். அதற்கான கடமைகள் நிறைய இருக்கு. இந்தத் தடவைதான் சரியாக வந்தது. ‘நீங்க என்கிட்டே என்ன எதிர்பார்க்கிறீங்க’ன்னு சூர்யா சிரிச்சுக்கிட்டே கேட்டபோது ‘நிறைய, நிறைய’னு சொல்லியிருக்கேன்.’’

- நா. கதிர்வேலன்.