அனாதை



ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேரைக் கொன்று, 200 பவுன் நகைகளைக் கொள்ளையடித்த மருதப்பன் மீதான வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியிருந்தது. வழக்கின் நிலவரத்தைத் தெரிந்து கொள்ள பத்திரிகையாளர்களும் பொதுமக்களும் நீதிமன்றத்தில் குவிந்திருந்தனர். சரியாக பத்து மணிக்கு உள்ளே நுழைந்த நீதிபதி, இருதரப்பு நியாயங்களையும் கேட்டபிறகு பேச ஆரம்பித்தார். ‘‘மருதப்பனின் கைரேகையும், அவருடைய இருப்பிடத்திலிருந்து எடுக்கப்பட்ட நகைகளும், மருதப்பன்தான் குற்றவாளி என்பதை உறுதிப்படுத்துகிறது. மருதப்பன் ஆறுமாத கைக்குழந்தையின் உயிரைக்கூட விட்டு வைக்கவில்லை.

அந்த ஆறு மாத கைக்குழந்தை இவர் கொள்ளையடிப்பதை தடுக்கப்போவதில்லை. இது மிகவும் கொடூரமான செயல். மருதப்பனிடம் ஒரு கேள்வி. அந்தக் குழந்தையையாவது உயிரோடு விட்டிருக்கலாமே?’’ நீதிபதியை ஒருசில வினாடிகள் உற்றுப்பார்த்த மருதப்பன், உடைந்த குரலில் அழுதுகொண்டே பதில் சொல்ல ஆரம்பித்தான். ‘‘அந்தக் பிஞ்சுக் குழந்தையை...’’ அவனால் தொடர்ந்து பேச முடியவில்லை. இதயத்தை இரும்பாக்கிவிட்டு மறுபடியும் பேச ஆரம்பித்தான்.

‘‘அந்தக் குழந்தையை உயிரோடு விட்டிருந்தால், அது அனாதையாயிருக்கும். அந்த அனாதைக் குழந்தை இன்னொரு மருதப்பனாக மாற வாய்ப்பிருக்கிறது. அதனால்தான் அந்தக் குழந்தையைக் கொன்றுவிட்டேன்!’’ மருதப்பனின் பதிலால் நீதிமன்றமே நிசப்தமானது. பேனாவைப் பிடித்திருந்த நீதிபதியின் விரல்கள் தீர்ப்பை எழுத முடியாமல் நடுங்கின.     

- ஜெ.கண்ணன்