தமிழ்நாட்டு நீதிமான்கள்



கோமல் அன்பரசன்

என்.டி.வானமாமலை
திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையின் நாத இசையில் நாங்குநேரி அக்ரஹாரம் மூழ்கியது. நாதம் மட்டுமா..?  ‘தவில்’ விற்பன்னர்  நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் இன்னொரு பக்கம் கலக்கினார். இவர்களோடு அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், கோட்டு வாத்திய நிபுணர் நாராயண அய்யங்கார் என தமிழகம் தாண்டி புகழ்பெற்றவர்கள் நடத்திய கச்சேரிகளால் நெல்லை மாவட்டத்தின் அந்த சின்ன ஊர் திக்குமுக்காடியது. ஒரு நாள், இரண்டு நாள் அல்ல!  தொடர்ந்து 4 நாட்கள் திருவிழா!

சுற்றுவட்டார மக்கள் திரண்டிருந்தனர். தோல் தொழிலில் கொடிகட்டிப் பறந்த என்.எஸ்.திருவேங்கடாச்சாரி வீட்டு விழா என்றால் சும்மாவா? 4 நாள் விழா முடிந்த பின்னும் 40 நாட்களுக்கு அதைப் பற்றியே பேச்சு. இவ்வளவு கொண்டாட்டங்களோடு 13 வயதில் பூணூல் போட்டுக் கொண்ட அந்தச் சிறுவன்,  அடுத்த 10 ஆண்டுகளில் யாரிடமும் சொல்லாமல் அதனை அகற்றிவிட்டான். நெற்றியில் நிறைந்திருந்த ‘திருமண்’ காணாமல் போனது. பட்டப் படிப்பு வரை பளிச்சென இருந்த ‘உச்சிக்குடுமி’ இருந்த இடம் தெரியவில்லை.

நாலாயிரத் திவ்ய பிரபந்தப் பாடல்களைப் பாடி மகிழ்ந்த வாய், அதன்பிறகு 60 ஆண்டுகளுக்கும் மேலாக நசுக்கப்பட்டோரைப் பற்றியே பேசியது. நாங்குநேரி ஜீயர் மடத்தின் திருவல்லிக்கேணி கிளையில் தங்கி ஆசார அனுஷ்டானங்களைக் கற்ற அவர், அத்தனையையும் ஒதுக்கிவிட்டு மார்க்ஸையும் லெனினையும் மாய்ந்து மாய்ந்து படித்தார். ‘என்.டி.வி’ என்று சட்ட உலகில் அன்போடு அழைக்கப்படும் நாங்குநேரி திருவேங்கடாச்சாரி வானமாமலையின் வாழ்க்கை, ஏராளமான வியப்புகளைக் கொண்டது. சமூகத்தின் கீழ்த்தட்டில் பிறந்த ஒருவர், அத்தகைய மக்களுக்காக பாடுபவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

ஆனால், உயர் வகுப்பில் இருந்து வந்தாலும், ஒடுக்கப்பட்டோருக்கு ஓயாமல் உழைப்பது; அதிலும் பிரதிபலன் பார்க்காமல் உழைப்பது அத்தனை எளிதல்லவே. அப்படியொரு அற்புதமான பணியை என்.டி.வி. செய்தார். சிலர் தொழில் மட்டுமே சிறப்பாகச் செய்வார்கள். சேவையெல்லாம் செய்யமாட்டார்கள். சிலர் சேவை செய்வதாகக் கூறி தொழிலைக் கோட்டை விட்டு விடுவார்கள். அல்லது சேவையின் வழியே அரசியல் ஆதாயங்களை அடைவார்கள். ஆனால், தன்னுடைய வழக்கறிஞர் தொழிலையே சேவையாகவும் அறமாகவும் செய்தவர் என்.டி.வி.

1922 செப்டம்பர் 23ல் கொல்கத்தாவில் பிறந்த வானமாமலை, சொந்த ஊரான நாங்குநேரியில் பள்ளிக்கல்வி பயின்றார். சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டமும், சட்டக்கல்லூரியில் சட்டமும் படித்தார். அப்போது பார்த்த ‘மக்கள் யுத்தம்’ என்ற கம்யூனிச பத்திரிகை அவருக்குள் மாற்றத்திற்கான விதையைப் போட்டது. சோவியத் ரஷ்யாவின் அக்டோபர் புரட்சியும், மகாகவி பாரதியின் பாடல்களும் சட்டத்தையும் ஆகமத்தையும் படித்துக்கொண்டிருந்த அவருக்கு புதிய பாதையைக் காண்பித்தன. சட்டம் படித்து முடிக்கும் முன்பே நெல்லை மாவட்ட கம்யூனிஸ்ட்களுடன் தொடர்பு உருவானது. அவர்களோடு சேர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டார்.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு படிப்பு சொல்லிக்கொடுத்தார். இந்திய விடுதலைப் போராட்டம் உச்சத்திலிருந்த 1940களில் கிளர்ச்சியைத் தூண்டியதாக நாடெங்கும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கத்தினர் கைது செய்யப்பட்டனர். அப்போது சட்டக்கல்லூரி மாணவராக இருந்த என்.டி.வி., நெல்லையில் கைது செய்யப்பட்டவர்களுக்காக மாவட்ட ஆட்சியரிடம் வாதாடி விடுதலை பெற்றுத் தந்தார்.

1946ல் வழக்கறிஞராகப் பதிவு செய்த அவர், நெல்லை மாவட்டத்தில் புகழ்பெற்ற குற்றவியல் வழக்கறிஞராக இருந்த கே.எஸ்.பாலாஜியிடம் ஜூனியராக சேர்ந்தார். பாலாஜி அரசு வக்கீலான பிறகு, வானமாமலை நாங்குநேரியில் தனியாகத் தொழில் தொடங்கினார். நாடு விடுதலையடைந்த பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிதீவிர நடவடிக்கை களால், அதன் தொண்டர்களை அடக்கி ஒடுக்க அரசு முயன்றது. 

வானமாமலை தொழில் தொடங்கிய காலத்தில், இப்படிப்பட்ட கிரிமினல் வழக்குகளில் சிக்கிய கம்யூனிஸ்ட்களை மீட்பதற்கான சட்டப் போராட்டங்களே அதிகம் இடம்பிடித்தன. 1948ல் நெல்லை மாவட்ட கம்யூனிஸ்ட் சதி வழக்கு, என்.டி.விக்கு பெரும் பெயர் வாங்கிக் கொடுத்தது. இத்தனைக்கும் அந்த வழக்கு தொடங்கியபோது, அவரையும் கம்யூனிஸ்ட் கைதியாக காவல்துறையினர் சிறையிலடைத்தனர்.

இன்றைய மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணு உள்ளிட்ட 90க்கும் மேற்பட்டோரை தூக்குத் தண்டனையிலிருந்து காப்பாற்றினார். ‘வானமாமலையின் வாதங்களால்தான் இவர்களில் பலருக்கு மரண தண்டனை விதிக்கவில்லை’ என நீதிபதியே தீர்ப்பில் கூறியிருந்தார். இதைப் போலவே ராமநாதபுரம் சதி வழக்கு, மதுரை சதி வழக்கு உள்ளிட்டவற்றில் சட்டப்போராட்டம் நடத்தி கட்சியினரைக் காப்பாற்றினார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் வக்கீலாக மட்டுமின்றி, தன்னை ஓர் ஆற்றல் நிறைந்த குற்றவியல் வழக்கறிஞராக வடிவமைத்துக் கொண்டதே வரலாற்றில் அவருக்கு நீங்கா இடம் பிடித்துத் தந்தது. நெல்லை வட்டார நீதிமன்றங்களில் மிக முக்கியமான வழக்கறிஞராக உருவெடுத்தார். ஒரு கட்டத்தில் நெல்லை மாவட்டத்தின் 70% வழக்குகள் வானமாமலையிடம் இருந்தன. அவர் வாதாடுவதைப் பார்க்க நீதிமன்றங்களில் கூட்டம் திரண்டது. 

நண்பர் மோகன் குமாரமங்கலம் அழைத்ததன் பேரில் 1967ல் சென்னை வந்து வழக்கறிஞர் தொழில் செய்யத் தொடங்கிய பிறகு என்.டி.வியின் புகழ் மாநிலம் முழுதும் பரவியது. உயர் நீதிமன்றத்தில் 3வது சேம்பர் என்றால் என்.டி.வி என்ற நினைவே சட்டத்துறை வட்டாரத்தில் அனைவருக்கும் வந்தது. என்.டி.வி. வழக்காடுவது அத்தனை அழகாக இருக்கும். கோபப்பட வைக்கிற ஒரு சொல் கூட அவர் வாயிலிருந்து வராது. படபடப்போ, ஆவேசமோ இன்றி, அழுத்தமாக, அமைதியாக சிரித்த முகத்தோடு வாதங்களை வைப்பார். மொழி தெரிந்த அனைவருக்கும் புரியும் எளிமையான ஆங்கிலத்தில், ஆற்றொழுக்கான நடையில் பேசுவார்.

மெல்ல மெல்ல நீதிமன்றத்தை தன்னுடைய சட்ட இலக்கு நோக்கி அழைத்துவருவார். குறுக்கு விசாரணையிலும் கைதேர்ந்தவராகத் திகழ்ந்தார். சாட்சிகளை மரியாதையுடன் விளித்து, அன்பு பொங்கும் வார்த்தைகளில் வானமாமலை கேள்விகளை எழுப்பும்போது, அவர்கள் பொய் சாட்சிகளாக இருந்தால், திக்கித் திணறிப் போய்விடுவார்கள். சம்பவங்களை நேரில் பார்த்த சாட்சிகள் கூட என்.டி.வி.யின் குறுக்கு விசாரணைகளில் மயங்கித் தத்தளித்த நிகழ்வுகளும் உண்டு. அந்தளவுக்கு சட்டப் புலமையும் வசீகரமும் நிறைந்தவராகத் திகழ்ந்தார்.

எம்.ஜி.ஆர் சுடப்பட்ட வழக்கில் எம்.ஆர்.ராதாவுக்காக வானமாமலை செய்த வாதங்கள்  புகழ் பெற்றவை. 6 மணி நேரம் என்.டி.வி. செய்த குறுக்கு விசாரணையின் பல இடங்களில் எம்.ஜி.ஆர் தடுமாறிப் போனதை வரலாறு பதிவுசெய்து வைத்திருக்கிறது. எவ்வளவோ வாய்ப்பிருந்தும், தூண்டுதல்கள் வந்தபோதும் எம்.ஜி.ஆரின் சொந்த வாழ்க்கையைக் கிளறி  அசிங்கப்படுத்தும் அநாகரிகக் கேள்விகளை அவர் கேட்கவே இல்லை.

இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது கோவையில் சீக்கியர் சொத்துகள் சூறையாடப்பட்ட வழக்கில் அவர்களுக்கு நீதியும் இழப்பீடும் கிடைக்க துணை நின்றார். வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசான குருசாமி நாயக்கரை தூக்குத்தண்டனையிலிருந்து காப்பாற்றினார். இதற்காக அவர் ஒரு ரூபாய்கூட ஊதியம் வாங்கிக்கொள்ளவில்லை.  என்.டி.வியின் சட்ட கிரீடத்தில் இப்படி எத்தனையோ வழக்குகள் மணிகளாகத் திகழ்கின்றன.

அதே நேரத்தில் லஞ்சம் வாங்குவோர் வழக்கு, கஞ்சா வழக்கு, கள்ளக்கடத்தல் மற்றும் கறுப்புப் பண விவகார வழக்குகளை அவர் தொட்டதே இல்லை. வழக்குகளுக்காக தயார் ஆவதற்கு அசாத்தியமான உழைப்பைக் கொடுப்பார். ஜூனியர்களுடன்  ஆழமாக விவாதிப்பார். புதியவரானாலும் அவர் சொல்லும் கருத்துகளையும் காது கொடுத்துக் கேட்பார். எதிர் கருத்துகளுக்கும் மனப்பூர்வமாக இடமளிப்பார். சரியான கருத்துகளைச் சொன்னால் மனம்திறந்து பாராட்டுவார். செஷன்ஸ் வழக்குகளைக் கையாள்வதற்காக என்.டி.வியின் அலுவலகத்தில் தனியாக அச்சடிக்கப்பட்ட படிவம் இருக்கும்.

அதனை முழுமையாகப் பூர்த்தி செய்துவிட்டால் போதும். வழக்கறிஞர்கள் குழப்பமின்றி வாதாட முடியும். தீர்ப்பளிக்கும் முன் தெளிவு பெறுவதற்காக நீதிபதிகளே அந்தப் படிவத்தை வாங்கிப் படித்த சம்பவங்களும் உண்டு. ஜூனியர்கள் மீது அளப்பரிய அன்பு கொண்டவராகத் திகழ்ந்தார். நாங்குநேரியில் தொழில் புரிந்த காலத்திலேயே மாதந்தோறும் அவர்களுக்கு நிலையான ஊதியம் வழங்குவதை நடைமுறைப்படுத்தினார். சென்னையில் அவரது அலுவலகத்தில் ஒரே நேரத்தில் 30 பேர் வரை ஜூனியர்களாக இருந்தனர்.

அவர்களை சொந்தப் பிள்ளைகளைப் போல நடத்தினார். அலுவலகமும் வீடும் ஒரே இடத்தில் இருந்ததால், பார்ப்பதற்கு அது ஒரு பெரிய கூட்டுக்குடும்பம் போன்றே காட்சியளிக்கும். தன்னிடம் இருந்து பிரிந்து தனியாகத் தொழில் தொடங்கச் செல்பவர்களின் அலுவலகத்தை அவர்தான் திறந்து வைப்பார். அவர்களுக்கு ஏராளமான புத்தகங்களை தன் செலவில் வாங்கி கொடுப்பார். ஞாயிற்றுக்கிழமைகளில் ஜூனியர்களுக்காக அவர் நடத்தும் கூட்டங்கள், சட்ட மாநாடுகளைப் போலவே இருக்கும்.

அந்தந்த வாரங்களில் சட்டத்துறையில் நிகழ்ந்த அம்சங்கள், தீர்ப்புகள், ஆணைகள் குறித்து அதில் விவாதிக்கப்படும். அவரிடம் ஜூனியர்களாக இருந்து தற்போது மூத்த வழக்கறிஞர்களாக ஜி.கிருஷ்ணன், வி.கோபிநாத், அசோக்குமார் போன்றோரும், வழக்கறிஞர்களாக அனந்த நாராயணன், சசிதரன் உள்ளிட்டோரும் புகழ்பெற்றுத் திகழ்கின்றனர். வானமாமலையின் ஜூனியர்களான கே.என்.பாஷா, ஆர்.ரகுபதி, எ.பாக்கியராஜ், டி.சுதந்திரம் ஆகியோர் பிற்காலத்தில் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக இருந்தனர்.

இவர்களில் கே.என்.பாஷா, ‘‘என்.டி.வி. எனது ஆசான், எனது குரு, எனது வழிகாட்டி. அவரிடம் வழக்கறிஞராகப் பயிற்சி பெற கிடைத்த வாய்ப்பு, இறைவன் எனக்கு வழங்கிய வரம்’’ என்று நெஞ்சம் உருகச் சொல்கிறார். நீதிபதிகளையும் ஆற்றல் நிறைந்த வழக்கறிஞர்களையும்  உருவாக்கிய வானமாமலை, கடைசி வரை எந்த பதவியையும் ஏற்கவில்லை. தேடித் தேடி வந்த நீதிபதி பதவியையும் அரசு தலைமை வழக்கறிஞர் பதவியையும் நிராகரித்தார். ‘‘கடைசி வரை கம்யூனிஸ்ட்டாகவும், ஏழை, எளிய மக்களுக்காகக் குரல் கொடுப்பவனாகவுமே இருக்க விரும்புகிறேன்’’ என்றார். 

2006 மே 28ல் மறையும் வரை இதில் உறுதியாக இருந்தார். பணத்திற்கு அவர் என்றுமே முக்கியத்துவம் கொடுத்ததில்லை. ‘வழக்கைப் பொறுத்துதான் கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டுமே தவிர, கட்சிக்காரர்களின் வசதியைப் பொறுத்து அல்ல’ என்பதை தன் வாழ்நாளின் பொன்விதியாகக் கடைப்பிடித்தார். ஏழைகளுக்காகவும், கம்யூனிஸ்ட் கட்சியின் வழக்குகளுக்கும் வாதாடுவதற்காக அவர் பணம் வாங்கியதில்லை. இலவச சட்ட உதவி மையங்கள் பெரும் வெற்றி பெறுவதற்கு பாடுபட்டார்.

சோவியத் ரஷ்யா மீது மிகுந்த பிடிப்புடன் இருந்த அவர், இந்திய - சோவியத் கலாசாரக் கழகத்தை நிறுவி, தலைவராக இருந்து திறம்பட நடத்தினார். ‘காந்தி முதல் கோர்பசேவ் வரை’ மற்றும் ‘ரஷ்ய நீதி பரிபாலன முறை’ என இரண்டு நூல்களையும் எழுதியுள்ளார். இரவு, பகல் பாராமல் சட்டப்புத்தகங்களுடனும் தோழர்களுடனும் நேரம் செலவிட்ட என்.டி.வியின் வெற்றிக்கு, அவரைப் புரிந்து கொண்ட மனைவி ராஜலட்சுமி  முக்கியமான காரணம்.

இவர்களது ஒரே மகளான அகோலா கிருஷ்ணன் இன்றும்கூட தந்தையிடம் ஜூனியர்களாக இருந்தவர்களிடம் சகோதர பாசத்துடன் பழகி வருகிறார். என்.டி.வியின் நினைவுகளைத் தொகுத்து, ‘கரைசேர்க்கும் உயிர்த்துடுப்பாய்...’ மற்றும் ‘என்.டி.வியின் தொழில் அறம்’ ஆகிய நூல்களாக வழக்கறிஞர் எஸ்.அருணாசலம் வெளியிட்டுள்ளார். ‘என் வாழ்க்கையே  உலகிற்கு நான் விட்டுச்செல்லும் செய்தி என்று காந்தியடிகள் சொன்னதைப் போலவே என்.டி.வியும் அவரது வாழ்வை நமக்குப் பாடமாக்கி மறைந்திருக்கிறார்’ - நினைவஞ்சலி கூட்டத்தில்
கவிஞர் வைரமுத்துவின் இந்த வார்த்தைகள் எத்தனை பொருத்தமானவை!

(சரித்திரம் தொடரும்...)

ஓவியம்: குணசேகர்


நெருங்காதீர்கள்

‘நீதிபதிகளிடம் வாதம் செய்வதற்குப் பதிலாக சண்டை போடும் மனநிலை தவறு.  நீதிபதிக்கு நாமோ, நமக்கு நீதிபதியோ எதிரியல்லர்’ என்பார் என்.டி.வி. அதே நேரத்தில் நீதிபதிகளிடம் நெருங்குவதும் நல்லதல்ல என போதித்தார். ‘‘எப்போதும் நீதிபதிகளிடமிருந்து விலகியே இருங்கள். வழக்கறிஞர்கள் மக்களோடு பழகுபவர்கள். மக்கள் நம் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். நீதிபதிகளோடு நெருங்கிப் பழகினால், வழக்கறிஞர் என்ற முறையில் மக்கள் வைத்த நம்பிக்கை தளர்கிறது.

குறிப்பிட்ட காலத்தில் நீதிபதியோடு அதீத நட்பு பாராட்டும் வழக்கறிஞரின் தன்னம்பிக்கையும் குறைந்து போகிறது. அவர்கள் மீது அவர்களுக்கே நம்பிக்கை இல்லாமல், ‘இந்த நீதிபதியிடம் வழக்கு வந்தால் நன்றாக இருக்குமே’ என்று நினைக்கும் மனநிலைக்கு தள்ளப்படுவார்கள்’’ எனும் என்.டி.வியின் வார்த்தைகள் எத்தனை சத்தியமானவை.

எல்லாம் ஒன்றுதான்

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வந்த பிறகும் கீழ் நீதிமன்றங்களுக்கு வாதாடப் போவதை என்.டி.வி நிறுத்தவில்லை. ‘நீதிமன்றம் என்றால் நீதிமன்றம். நீதிபதி என்றால் நீதிபதி. இதில் பெரிது, சிறிதெல்லாம் இல்லை’ என்பதில் கடைசி காலம் வரை உறுதியோடு இருந்தார். அவர் முதன்முதலில் வாதாடியது நாங்குநேரி மாஜிஸ்திரேட் நீதிமன்றம். உச்ச நீதிமன்றம் வரை சென்று தொழிலில் உச்சம் தொட்டுவிட்டு, மறைவதற்கு முன்பு வாதாடியது எழும்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம். எப்படியொரு மனப்பக்குவம் பார்த்தீர்களா?