விஜயனின் வில்



கே.என்.சிவராமன்

யாருமே இல்லை என்பதை அவன் உணர்வதற்கு சரியாக ஐந்து நிமிடங்களானது. அதற்குள் F/5 ஃப்ளாட்டை முழுமையாகச் சுற்றி வந்திருந்தான். உள்பக்கமாகப் பூட்டியிருந்த க்ரில் கேட்டைத் திறக்க சில நொடிகளே அவனுக்குத் தேவைப்பட்டன. வலது காலை எடுத்து வைத்து F/5க்குள் நுழைந்தான். ஸ்விட்ச் பக்கம் திரும்பவேயில்லை. இருட்டு பழகும்வரை அசையாமல் நின்றான். இருளே ஒளியாக மாறியதும் கண்களைக் கூர்மையாக்கினான். வரவேற்ற ஹாலில் டிவி, சோபா, டைனிங் டேபிள் காட்சியளித்தன.

செப்புத்தகட்டை இறுகப் பிடித்தபடி பார்வையைச் சுழலவிட்டான். இடது பக்கத்தில் அடுத்தடுத்து இரு அறைகள். முதல் அறையின் மரக்கதவு அகலமாகத் திறந்திருந்தது. எட்டிப் பார்த்தான். சுவர் ஓரங்களில் ஒண்டியிருந்த இரும்பு அலமாரிகளில் புத்தகங்கள் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன. ஓசை எழுப்பாமல் நடந்து அடுத்த அறையின் முன்னால் நின்றான். மரக்கதவு மூடியிருந்தது.

ஆனால், தாழிடப்படவில்லை. சுவற்றுடன் ஒன்றியபடி தன் இடது கையால் மரக்கதவை தள்ளினான். மேற்கு பக்கம் சின்னதும் பெரியதுமாக இரு ஸ்டீல் பீரோக்கள், கிழக்கு மேற்காக மரக் கட்டில், கலையாத நிலையில் மெத்தை, தலையணை, போர்வை. உள்ளே நுழைந்தான். இடது ஓரம் பால்கனிக்குச் செல்லும் கதவு மரச்சட்டங்களுக்கு இடையில் புதைந்திருந்த கொசு வலையால் மூடியிருந்தது. இழுத்தான். முகத்தில் அறைந்த காற்று மண்சட்டியில் முளைத்திருந்த துளசிச் செடியை மட்டுமே காட்டியது.

மீண்டும் ஹாலுக்கு வந்தவன் வலது ஓரம் இருந்த கதவு இல்லாத அறையை ஆராய்ந்தான். கிச்சன். ஹாலின் மறு நுனி இன்னொரு பால்கனிக்கு வழிகாட்டியது. இடது பக்கம் குளியலறை. வலது பக்கம் கழிவறை. இரண்டின் கதவுகளும் திறந்திருந்தன. திக்கென்று இருந்தது. 690 சதுர அடிகளை எத்தனை முறைதான் அளப்பது? ஃப்ளாட்டுக்கு சொந்தமானவர்கள் எங்கு சென்றார்கள்? ஒப்படைக்கப்பட்ட காரியத்தை முடிக்கவில்லை என்றால் மாஸ்டர் என்ன நினைப்பார்? இதுவரை அவரைப் பார்த்ததும் இல்லை. பேசியதும் இல்லை.

மாஸ்டர் கட்டளையிடுவதை அவனுக்கும்; அவன் சொல்வதை மாஸ்டருக்கும் தெரியப்படுத்துபவர் UNKNOWN NUMBERதான். ‘இந்தக் காரியத்தை மட்டும் வெற்றிகரமா முடிச்சுட்டனா மாஸ்டரே உன்கிட்ட நேரடியா பேச ஆரம்பிச்சுடுவாரு...’ கனிவான குரலில் காலம் கனிந்து வருவதை அன்று மாலைதான் UNKNOWN NUMBER உணர்த்தியிருந்தார். நெற்றியில் பூத்த வியர்வையைத் துடைக்காமல் ஹால் சோபா, புத்தக அறை, படுக்கை அறை, கிச்சன், பால்கனி, பரண்கள் என அலசினான்.

எங்குமே ரங்கம் ரங்கநாதர் கோயிலின் ப்ளூப்ரிண்ட் கிடைக்கவில்லை. டிவியின் மேல் அமர்ந்திருந்த போட்டோ ஃப்ரேமில் இளம் பெண்ணொருத்தி புன்னகைத்துக் கொண்டிருந்தாள். செல்போனில் அந்த உருவத்தை படம் பிடித்துவிட்டு வெளியேற முற்பட்டபோது ஷோகேஸ் பக்கம் பார்வை பதிந்தது. கண்ணாடிகள் முழுமையாக மூடப்படவில்லை, லேசாகத் திறந்திருந்தன. அதன் அருகில் சென்றான்.

பொம்மை முதல் சகலமும் அதனுள் ஒழுங்காக அடுக்கப்பட்டிருக்க ஒரேயொரு பொருள் மட்டும் அலட்சியமாக வைக்கப்பட்டிருந்தது. எடுத்தான். அது நோட்புக். புரட்டினான். சடசடத்த வெள்ளைத்தாள்களில் ஒரேயொரு பக்கம் மட்டும் கவனத்தை ஈர்த்தது. ‘நவகிரகமும் எட்டு திசையில் நான்கு மூலையில் ஒன்றுமில்லை நவரத்தினமும் ஒன்றுமில்லை அதிசயமே உலகம் திரிசூலமே நான்காவது லூகாஸ் பஞ்சபூதம்...’ நீல மையினால் கிறுக்கப்பட்டிருந்த அந்தத் தாளைக் கிழித்தான். எப்படி எடுத்தானோ அப்படியே அந்த நோட்டை வைத்தான். தடயங்கள் ஏதேனும் விட்டிருக்கிறோமா என்பதை ஒன்றுக்கு இருமுறை சரிபார்த்துவிட்டு வாசல் கதவையும், க்ரில் கேட்டையும் பழையபடி பூட்டினான்.

தன் பைக்கை அவன் அடைந்தபோது அனைத்து சக்திகளும் வற்றியிருந்தன. தண்ணீர்த் தொட்டிவரை கையால் பைக்கைத் தள்ளியபடி வந்தவன் பிறகு அதை ஸ்டார்ட் செய்தான். பஸ் டிப்போவில் இருந்து குமரன் குன்றம் செல்லும் சாலை ஆள் அரவற்று இருந்தது. இறங்கி ஹெல்மெட்டைக் கழற்றினான். உதடு துடித்தது. கட்டுப்படுத்தியபடி செல்போனை எடுத்து UNKNOWN NUMBERஐ அழைத்தான். ‘‘முடிச்சுட்டியா?’’ ஒரு ரிங் முடிவதற்குள்ளாகவே கனிவான குரல் மறுமுனையில் ஒலித்தது.

‘‘மன்னிக்கணும்...’’ அதற்கு மேல் அவனிடமிருந்து சொற்கள் வரவில்லை. அழுகைதான் வெடித்தது. ‘‘விலை மதிக்க முடியாத நம்ம கண்ணீரை தேவையே இல்லாம சிந்தி சிந்திதான் இன்னிக்கி நாம இந்த நிலைல இருக்கோம். தீர்க்க முடியாததுன்னு எதுவும் இல்ல. வெற்றி, தோல்விகளைப் பத்தி எப்பவும் நாம கவலைப்படக்கூடாது. எல்லாத்தையும் எதிர்கொள்ளணும். அதுதான் முக்கியம். உன்னால முடியாதது எதுவும் இல்ல. உன்னைவிட இந்த உண்மை எனக்கு நல்லா தெரியும். கண்ணைத் துடைச்சுக்க. பொறுமையா என்ன நடந்ததுன்னு சொல்லு...’’
அரவணைத்த குரல் அவனை இயல்புக்குக் கொண்டு வந்தது. ஒன்றுவிடாமல் சொல்லி முடித்தான்.

‘‘இப்ப எங்க இருக்க?’’ ‘‘பாதுகாப்பான இடத்துல...’’ ‘‘செல்போன்ல படம் பிடிச்ச போட்டோவை நம்ம வாட்ஸ் அப் குரூப்புல போடு. மூணு நிமிஷத்துல கூப்பிடறேன்...’’ தொடர்பு துண்டிக்கப்பட்டதும் கைகளைக் கட்டியபடி அந்த இடத்திலேயே நின்றான். மனதுக்குள் கார்க்கோடகரின் உருவம் விஸ்வரூபம் எடுத்தது. வந்த வேலை முடியவில்லை. இதற்கு யார் காரணம் என்று தெரியாது. முழுப் பழியையும் நானே ஏற்கிறேன். பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன். இனி இதுபோன்று நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்.

F/5க்கு யார் சொந்தக்காரரோ அவரை எப்படியாவது தேடி அழிப்பேன். இது சத்தியம்... வைப்ரேட்டர் அதிர்ந்தது. எடுத்தான். ‘‘மாஸ்டர் பேசறேன் ஆதி...’’ ஒலித்த குரலில் அவனது சப்தநாடியும் ஒடுங்கியது. சந்தேகமே வேண்டாம். மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய மாஸ்டரேதான் உரையாடுகிறார். அதை உணர்த்தும் விதத்தில்தான் தன்னை பெயர் சொல்லி அழைக்கிறார். அதுவும் உலகுக்கு தெரிந்த பெயரைச் சொல்லி அல்ல. அமைப்பு மட்டுமே அறிந்த ‘ஆதி’ என்னும் நாமகரணத்தை உச்சரித்து.

தப்பு. இப்படிக் கூட சொல்லக்கூடாது. அமைப்பின் உயர் பொறுப்பில் இருக்கும் ஆசானுக்கு மட்டுமே அவனை ‘ஆதி’ என்று தெரியும். ரகசிய பதவிப் பிரமாணத்தின்போது தனியாக அழைத்து காதோரம் மூன்று முறை ‘ஆதி’ ‘ஆதி’ ‘ஆதி’ என உச்சரித்து அவனை அவனுக்கே அடையாளம் காட்டியவர் அவர்தான். அதன்பிறகு அந்த ‘ஆதி’ என்னும் பெயர் அவனையும் ஆசானையும் எல்லோருக்கும் தலைவராக இருக்கும் மாஸ்டரையும் தவிர வேறு யாருக்கும் தெரியாது. தெரியவும் கூடாது. அமைப்பைச் சேர்ந்தவர்களுக்குக் கூட அவன் வெறும் ‘X’தான்.

அதனால்தான் UNKNOWN NUMBERல் இருந்து அவனைத் தொடர்பு கொள்பவர் வெறுமனே ‘முடிந்ததா..? இங்கு செல். அங்கு போ. இந்தக் காரியத்தை முடி...’ என மொட்டையாகப் பேசுகிறார். இப்படித்தான் அமைப்புக்குள் உறவாட வேண்டும். சட்டதிட்டங்கள் அப்படி. எல்லோருமே எல்லோருக்குமே X, Y, Zதான். யாருமே யாருடைய ஒரிஜினல் பெயரையும், அமைப்பின் பெயரையும் கேட்கக்கூடாது. பகிரக்கூடாது. சத்தியப் பிரமாணத்தின் முதல் விதியே அதுதான்.

அந்த இடத்திலேயே முழங்காலிட்டான். ‘‘மாஸ்டர்... மாஸ்டர்...’’ வாய் குழறியது. ‘‘மனமார்ந்த வாழ்த்துகள் ஆதி. நீ ஜெயிச்சுட்ட. எங்க யாருக்குமே கிடைக்காத கார்க்கோடகரோட ஆசி உனக்கு மட்டுமே கிடைச்சிருக்கு. உன்னை நினைச்சா எனக்கு பெருமையா இருக்கு...’’ UNKNOWN NUMBERக்கு சொந்தமான குரல் எப்படி கசிந்துருகுமோ அதைவிட அதிகமாக மாஸ்டரின் குரலில் அன்பு வழிந்தது. ‘‘இல்ல மாஸ்டர்... நீங்க கொடுத்த வேலையை நான் செய்யலை. கார்க்கோடகர் யாருக்கு அஞ்சு முட்டைகளைக் கொடுத்தாரோ அந்த நபர் இன்னமும் உயிரோடதான் இருக்கார்...’’ ‘‘தெரியும். இப்பதான் செய்தி வந்தது.

அதனால என்ன... கார்க்கோடகரோட ஆசி உனக்கு முழுமையா இருக்கே... அது போதும். இனி உனக்கு வெற்றிதான்...’’ ‘‘மாஸ்டர்...’’ ‘‘ஆமா ஆதி. எந்த காரியத்தை முடிக்க நாம பல தலைமுறைகளா காத்திருக்கோமோ அந்த செயலை நீதான் உன் கையால முடிக்கப் போறே...’’ ‘‘மாஸ்டர்... நான்... நான்...’’ ‘‘நீயேதான் ஆதி. உன்னால மட்டும்தான் அது முடியும்னு கார்க்கோடகர் எங்களுக்கு தெரியப்படுத்தி இருக்கார்... அவர் வாழ்ந்த இடத்துக்கு இன்னிக்கு நைட்டு நீ போனப்ப ஒரு முட்டையைப் பார்த்த இல்லையா..? அதுல என்ன எழுதியிருந்தது? ‘Mrs.V’. இதைவிட வேறென்ன ஆசி வேணும் சொல்லு...’’ மாஸ்டர் பேசப் பேச அவனுக்கு - ஆதிக்கு - வானத்தில் பறப்பது போல் இருந்தது. ‘‘நீங்க என் கூட இருந்தா போதும் மாஸ்டர். மலையைக்கூட தூக்கிடுவேன்...’’ தழுதழுத்தான்.

‘‘எப்பவும் உன்கூட, உனக்குள்ள நான் இருப்பேன் ஆதி. நீதான் நான். நான்தான் நீ. F/5ல நீ படம் பிடிச்ச பொண்ணு பேரு தாரா. அவதான் அந்த ஃப்ளாட்டுல குடியிருக்கா. கார்க்கோடகர் கடைசியா அஞ்சு முட்டை கொடுத்தது தாராவுக்குதான். நீ அனுப்பின போட்டோவை வைச்சு இப்ப அவ எங்க இருக்கான்னு நம்ம ஆட்கள் கண்டுபிடிச்சுட்டாங்க. செங்கல்பட்டைத் தாண்டி கார்ல போயிட்டிருக்கா. ஆனா, மயக்கத்துல இருக்கா. காரை ஓட்டறது ஒரு ஆண்...’’ ‘‘புரியுது மாஸ்டர். இதோ கிளம்பிட்டேன்...’’ செல் அணையும் வரை காத்திருந்த ஆதி, ஹெல்மெட்டை மாட்டினான். இழந்த சக்திகள் அனைத்தும் பன்மடங்கு திரும்பியிருந்தன.

பைக்கை ஸ்டார்ட் செய்தவன் ஆக்சிலேட்டரை முறுக்கினான். சிங்கப்பெருமாள் கோயிலைக் கடந்து, செங்கல்பட்டை தொட்டு, திண்டிவனம் பைபாஸை தாண்டியதும் செவி அதிர்ந்தது. அழைப்பு. ‘‘விழுப்புரம்...’’ இயர் போன் வழியே சொன்னான். ‘‘ஊருக்குள்ள போகாத. பைபாஸ்ல போ. சிவப்பு கலர் ஹோண்டா சிட்டி...’’ மாஸ்டரின் குரல் வழிகாட்டியது. 120... 140... 160... ஸ்பீடோ மீட்டர் முள் துள்ளியது. ‘‘மாஸ்டர்... பார்த்துட்டேன்...’’ சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்த காரை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கினான்.

‘‘ஆதி... இப்ப உன் முன்னாடி தெரியறது கார் இல்ல. பாற்கடல். அதுக்கு நடுவுல என்ன இருக்குனு பார்... மந்திர மலை. அந்த மலைக்கு இந்தப் பக்கம் தேவர்களும் அந்தப் பக்கம் அசுரர்களும் நின்னுட்டு இருக்காங்க. எதுக்காக? பாற்கடலைக் கடையறதுக்காக. அப்பதான் அமிர்தம் கிடைக்கும். சாகா வரம் பெற்ற அந்த அமிர்தத்தைச் சாப்பிடணும்னு தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் ஆசை. இதுக்காக அவங்க ஒரு பாம்பை மந்திர மலைல சுத்தி முறுக்கி ஆளுக்கு ஒரு பக்கமா பிடிச்சுட்டு கடையறாங்க...’’ ஆதியின் கண்கள் சிவக்க ஆரம்பித்தன.

‘‘அந்த பாம்பு வலியால, வேதனையால துடிக்குது. ஒருத்தரும் அதை கண்டுக்கலை. அமிர்தத்தை எதிர்பார்த்து இன்னும் வேகமா கடையறாங்க...’’ ஹோண்டா சிட்டியை நெருங்கினான். ‘‘அமிர்தம் கிடைக்குது. அதை பங்கு போட்டுக்க தேவர்களும் அசுரர்களும் சண்டை போடறாங்க...’’ சிவப்பு நிற காரின் முன் சீட்டில் தாரா. அவள் கண்கள் மூடியிருந்தன. சீட் பெல்ட் அவளைச் சிறைப்படுத்தியிருந்தன. முப்பது வயது மதிக்கத்தக்க ஆண் காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.

‘‘அமிர்தத்துல உனக்கும் பங்கு தரேன்னு சொல்லியிருந்த தேவர்களும் அசுரர்களும் அந்தப் பாம்பை ஏமாத்திட்டு போயிடறாங்க. ஏமாற்றப்பட்ட வேதனை ஒரு பக்கம்... தாங்க முடியாத வலி இன்னொரு பக்கம். அந்தப் பாம்பு வாய்விட்டு கதறி அழுது ஆலகால விஷத்தைக் கக்குது...’’ காரின் வலப்பக்கமாக தன் பைக்கை ஆதி கொண்டு வந்தான். ‘‘அந்தப் பாம்பு யாரு? வாசுகி. வாசுகி யாரு? நம்ம அம்மா. அமிர்தம் கொடுக்காம நம்மை ஏமாத்தினவங்களை நாம சும்மா விடலாமா?’’ ஆக்சிலேட்டரை முறுக்கினான். ‘‘பழிவாங்கியே ஆகணும்...’’ காரை இடித்தபடி தன் பைக்கை ஆதி குறுக்கே விட்டான். அடுத்த நொடி ஹோண்டா சிட்டி அந்தரத்தில் பறந்தது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தின் ப்ளூ ப்ரிண்ட் பொறிக்கப்பட்ட தார்பாய் வெளியில் வந்து விழுந்தது.

(தொடரும்)

ஓவியம்: ஸ்யாம்