பெருமை



கமலாவிடம் எல்லோரும் பட்டுப்புடவை பற்றி டிப்ஸ் கேட்பதும், அவளுடைய ஆலோசனைப்படி வாங்குவதும் ரமாவை எரிச்சலடைய வைத்தது. ஐந்து மாதங்களுக்குமுன் அவள்தான் கமலாவுக்கு பட்டுப்புடவைகள் பற்றிய நுணுக்கங்களை கற்றுக்கொடுத்தாள். ‘‘நான் சொல்லிக் கொடுத்ததைத்தான் இப்போ அவள் மற்றவங்களுக்கு சொல்றா. சொந்த சரக்கு அவள் பேச்சில் கம்மிதான்!’’

கணவன் ரமேஷிடம் சொல்லி வருத்தப்பட்டாள் ரமா. அவள் பேச்சில் பொறாமையும் இருந்தது. ரமேஷ் சிரித்துக்கொண்டே ரமாவைப் பார்த்தான். ‘‘அதில்தான் வித்தியாசம் இருக்கு ரமா! பட்டுப்புடவை எப்படி இருக்கணும், நல்ல ஜரிகையான்னு எப்படிப் பார்த்து வாங்கணும்னு நீ சொல்லிக்கொடுத்தே. கமலா அதைக் கேட்டுட்டு சும்மா இல்லை. ஓய்வு நேரத்தில் நல்ல பட்டுப்புடவையா பார்த்து வாங்கி விக்கவும் ஆரம்பிச்சா. இப்போ மத்தவங்களுக்கு புடவையைப் பற்றி டிப்சும் தர்றா.

அவளை நினைச்சு நீ பெருமைப்படணும்...’’ ரமா கேட்கிறாளா என்று  பார்த்துவிட்டு மறுபடியும் தொடர்ந்தான் ரமேஷ். ‘‘எதையும் கத்துக் கொடுத்துட்டா மட்டும் நாம பெரிய ஆள் ஆகிவிட மாட்டோம். கத்துக்கிட்டவங்க அதை சரியா உபயோகப்படுத்தினாதான் நமக்குப் பெருமை. இப்போ நீ பெரிய ஆள்தான். கவலையை விட்டு பெருமைப்படு. நீ சொல்லிக்கொடுத்த மாதிரி நான் நல்லா குழம்பு வச்சா பொறாமையா படுவே?’’ சொல்லிவிட்டு நகர்ந்தான் ரமேஷ். ரமா இப்போது  பெருமையுடன் கமலாவைப் பற்றி நினைக்க ஆரம்பித்தாள்.

- வி.சிவாஜி