குழந்தை இலக்கியத்துக்குக் கிடைத்த பரிசு!



பாட்டி கதைகளைத் தொலைத்துவிட்ட இன்றைக்கு, தும்பிகளைத் துரத்தும் குழந்தைகளைத் தொடுவானம் ஏந்திக் கொள்வது புத்தகங்களாலேயே சாத்தியம். இரும்புக்கை மாயாவிகளையும், தெனாலிராமன், முல்லாவின் அதிஅற்புத கதைகளின் அனுபவத்தையும் இன்றைய குழந்தைகள் இழந்து வருவது தலைமுறை துயரம்.

தமிழ் குழந்தைகளுக்குப் பரவலான கதை உலகம் வேண்டும். அது நமது முதல்கடமை. அத்தகைய முயற்சிகளில் முழுமூச்சோடு இயங்கிய குழ.கதிரேசனுக்கு சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார் விருது கிடைத்திருக்கிறது. இந்த நல்வேளையில் நடந்தது இந்த உரையாடல். ‘‘சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டத்துல இருக்கிற ராயவரம் கிராமம். குழந்தை இலக்கியத்துல முன்னோடியா திகழ்ந்த அழ.வள்ளியப்பா எங்க ஊர்க்காரர்தான். என் தாத்தா கதிரேசன் செட்டியார் ஊர்ல பெரிய கணித மேதையா இருந்தவர்.

அவர்தான் எங்க கிராமத்துக்கு பள்ளிக்கூடமும் கொண்டு வந்தார். நான் பிறக்கிறதுக்கு முன்பே அவர் இறந்துட்டார். அப்பா குழந்தையன் வட்டி பிசினஸ் பண்ணினார். நான் தாத்தா கட்டின பள்ளியில பத்தாம் வகுப்பு வரை படிச்சிட்டு மதுரை தியாகராசர் கல்லூரியில பி.ஏ. தமிழ் முடிச்சேன். அப்போ, மதுரை மீனாட்சி புத்தக நிலையத்துல அப்பாவும் ஒரு பார்ட்னர். நான் அங்க எட்டு வருஷம் மேனேஜரா வேலை பார்த்தேன்.

பிறகு சென்னைக்கு வந்து ஐந்திணைப் பதிப்பகத்தை ஆரம்பிச்சேன்’’ என்கிற கதிரேசன் அதன்பிறகே குழந்தை இலக்கியத்திற்குள் வந்திருக்கிறார். ‘‘இங்க வந்ததும் ஒரு நண்பர் மூலமா மெரினா பீச்ல நடக்கும் கவிஞர் பொன்னடியானின் கடற்கரை கவியரங்கத்துக்குப் போனேன். அங்க, நிறைய பாடல்கள் பாடினேன். ஒருநாள் அந்தக் கவியரங்கத்துக்கு அழ.வள்ளியப்பா வந்திருந்தார். அவர்தான், ‘பெரியவங்களுக்கு எழுத நிறைய பேர் இருக்காங்க. நீங்க குழந்தைங்களுக்கு எழுதுங்க’னு எனக்கான வழியைக் காட்டினார்.

அப்புறம், ‘ரெண்டு வரியில எதுகை, மோனையுடன் குழந்தைகளுக்குப் பிடிச்ச சொற்களோடு, பிறமொழி கலக்காமல் எழுதணும்’னு ஊக்கப்படுத்தினார். அவர் வீட்டுக்குப் போகும்போதெல்லாம் பாடல்கள் எழுதிக் கொண்டு போவேன். அப்படியே, குழந்தை இலக்கியத்துல ஆர்வம் அதிகரிச்சிடுச்சு’’ என்கிறவர், எழுதிய முதல் பாடலுக்கே தமிழக அரசின் பரிசைப் பெற்றிருக்கிறார்.

‘‘ ‘எலி கடித்த பூனை’னு ஒரு பாடல் எழுதினேன். அதுக்குத் தமிழக அரசின் பரிசு கிடைச்சது. எம்.ஜி.ஆர். கையால அந்தப் பரிசை வாங்கினேன். அந்தப் பாடலை நம்மூர்ல மட்டுமில்லாம கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும், சிங்கப்பூரிலும் பள்ளிகள்ல பாடமா வச்சாங்க. பிறகு நிறைய பட்டங்களும், பரிசுகளும், விருதுகளும் பெற்றேன். இப்போ இந்த சாகித்ய அகாடமி விருது இன்னும் நிறைய பண்ண தூண்டுதல் ஏற்படுத்தியிருக்கு’’ என்கிறார்.

- பேராச்சி கண்ணன்
படங்கள்: ஆர்.சி.எஸ்