ஹெர்னியா எனும் கண்ணி வெடி



-டாக்டர் கு.கணேசன்

வயிற்றில் ஏற்படும் நோய்களில் சில வயிற்றுக்கு வெளியேயும் தெரியும். இந்த ரகத்தில் ‘நான்தான் ஃபர்ஸ்ட்’ என்று கொடி பிடிப்பது ‘ஹெர்னியா’. குடலின் ஒரு பகுதி அல்லது கொழுப்புத் திசு, வயிற்றின் தசைச்சுவர் துவாரம் வழியாக வெளியில் பிதுங்கித் தெரியும். அதுதான் ‘ஹெர்னியா’ (Hernia). தமிழில் ‘குடல் பிதுக்கம்’ அல்லது ‘குடல் இறக்கம்’ என்று சொல்வார்கள். பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை எவருக்கும் இது வரலாம். எப்படி?

ஊதிய பலூனை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். நீண்ட பலூனில் காற்றை ஊதும்போது, அது நல்ல பலூனாக இருந்தால் ஒரே சீராக விரிவடையும். சிலவற்றில் ஒன்றிரண்டு இடங்களில் எக்ஸ்ட்ரா புடைப்புகள் தெரியும். பலூனில் காற்றின் அழுத்தம் அதிகமாகும்போது பலம் குறைந்த பகுதியில் புடைப்பு ஏற்படுகிறது. இப்படித்தான் வயிற்றில் குடல் பிதுக்கம் உண்டாகிறது. இதை விரிவாகப் பார்ப்போம்...

உடலிலேயே வயிற்றின் முன்பக்கமும் பின்பக்கமும்தான் தசைகளின் ராஜ்ஜியம் அதிகம். இவற்றில் முதுகுப்பக்கம் தூண் போல் நிற்கும் முதுகெலும்பும், அதைச் சுற்றியுள்ள தசைகளும் பலம் வாய்ந்தவை. முன்பக்கம் சற்றே பலம் குறைந்த தசைகள் உள்ளன. இதற்குக் காரணமும் இருக்கிறது. வயிற்றின் உறுப்புகளை ஒரு போர்வைபோல் போர்த்தியிருக்கும் இந்தத் தசைகள், நாம் மூச்சு விடும்போது உப்பி மீண்டும் பழைய நிலைக்கு வர தோதாக இருக்கின்றன.

இதனால்தான் நாம் மூச்சுவிடும் போதெல்லாம் வயிற்றுத் தசைகள் மேலும் கீழும் அசைந்துகொண்டே இருக்கின்றன. இந்தத் தசைகளின் பலவீனம் ஹெர்னியாவுக்குப் பாதை தருகிறது. வயிற்றில் எந்த இடத்திலும் ஹெர்னியா ஏற்படலாம் என்றபோதிலும், தொப்புள், தொடை, ஆபரேஷன் தழும்பு ஆகிய இடங்களில் ஏற்படவே வாய்ப்பு அதிகம். தொப்புளுக்கு மேலும் கீழும் வகிடு எடுத்ததுபோல் இருக்கும் மையக்கோட்டில் உள்ள தசைகள் ரொம்பவே பலம் குறைந்தவை. சிலருக்கு இந்த இடத்திலும் ஹெர்னியா ஏற்படுவதுண்டு. இது வரும் இடத்தைப் பொறுத்து இதன் வகை பிரிக்கப்பட்டுள்ளது.

தொடை இடுக்கு ஹெர்னியா (Inguinal hernia).
ஆண்களை அதிகம் பாதிக்கிற ரகம் இது. அடிவயிறும் தொடையும் இணைகிற இடத்தில் உட்பக்கமாக இது ஏற்படுகிறது. வயிற்றையும் விதைப்பையையும் (Scrotum) இணைப்பதற்கு சின்ன ‘குகைப் பாதை’ இருக்கிறது. ஆண்களுக்கு இதன் வழியாக விந்துக்குழாய், ரத்தக் குழாய், நிணநீர்க் குழாய், நரம்பு எனப் பல சங்கதிகள் விதைப்பைக்குச் செல்கின்றன.

பெண்களுக்கு ஒன்றே ஒன்றுதான், கருப்பையின் ‘தசைநார் வட்டம்’ (Round ligament) இதன் வழியாகச் செல்கிறது. பொதுவாகவே, ஆண்களுக்கு இந்தப் பாதை டி.வி. கேபிள் ஒயர் மாதிரி மிகவும் இறுகலாக இருக்கும். சாதாரணமாக வயிற்றிலிருந்து எதுவும் இதன் வழியாக வெளியில் வரமுடியாது. சிலருக்கு மட்டும் பரம்பரை, உடல் வாகு அல்லது நோய் காரணமாக இங்குள்ள வயிற்றுச் சுவர் பலமிழந்து தளர்ந்து போகும். அப்போது ‘குகைப் பாதை’யில் கொஞ்சம் இடம் கிடைக்கும். இதற்காகவே காத்திருந்ததுபோல், குடலின் சிறு பகுதி விதைப்பைக்குள் இறங்கிவிடும். அங்கே புதிதாக ஒரு வீக்கம் தோன்றும். இதுதான் தொடை இடுக்கு ஹெர்னியா. வலப்பக்கம், இடப்பக்கம் என இரண்டு பக்கமும் இது வரலாம்.

மேல் தொடை ஹெர்னியா (Femoral hernia).
பெரும்பாலும் பெண்களுக்கு வருகிற ஹெர்னியா இது. மேல் தொடையின் தொடக்கத்தில் ஒரு குழாய்ப் பாதை (Femoral canal) இருக்கிறது. இதன் வழியாக வயிற்றிலிருந்து காலுக்கு ரத்தக்குழாய்கள், நரம்புகள், நிணநீர்க்குழாய்கள் செல்கின்றன. இது பலம் இழந்துவிடும்போது இந்த ஹெர்னியா ஏற்படுகிறது. சிலருக்கு தொப்புள் தசைகள் பலவீனமாகும்போது அங்கே ஹெர்னியா(Umbilical hernia) ஏற்படுகிறது. அப்போது தொப்புள் பெருத்துத் தொங்கும்.

இன்னும் சிலருக்கு ஆபரேஷன் தழும்பில் இது ஏற்படுகிறது. இவர்களுக்கு சர்ஜரி செய்யும்போது தையல் போட்டிருப்பார்கள். நாளாக நாளாக, சில காரணங்களால் இந்தத் தையல் போட்ட இடத்தைச் சுற்றி தசைகள் பலவீனமாகும். அப்போது அதன் அருகில் இருக்கும் குடல் பகுதி அந்தத் தழும்பு வழியாக வெளியில் ‘எட்டிப் பார்க்கும்’. இதுதான் ‘இன்சிஷனல் ஹெர்னியா’ (Incisional hernia).

பெண்களுக்கு சிசேரியன், கர்ப்பப்பை நீக்கும் ஆபரேஷன், குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் என வயிற்றில் ஆபரேஷன் தழும்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதனால் அங்கே ஹெர்னியா தோன்றலாம். ஹெர்னியாவுக்கு இன்னும் பல காரணங்கள் உண்டு... நாட்பட்ட ஆஸ்துமா, தீராத இருமல், அதிக பளுவைத் திடீரெனத் தூக்குவது, நீடித்த மலச்சிக்கல், சிறுநீர்த்துளை அடைப்பு (Stricture urethra), புராஸ்டேட் வீக்கம், வயிற்றில் ஏற்படும் கட்டிகள், கர்ப்பம், முதுமை.

என்ன அறிகுறிகள்?
சிறிய நெல்லிக்காய் அளவுக்குப் புடைப்பு தெரிவது ஹெர்னியாவின் ஆரம்ப அறிகுறி. நீண்ட தூரம் நடந்தால், பலமாக இருமினால், மலம் கழிக்கும்போது முக்கினால் இந்தப் புடைப்பு பெரிதாகும். குழந்தைகள் அழும்போதும் இதே நிலைமைதான். இதைத் தொட்டால் வலிக்காது; படுக்கும்போது அதுவாகவே சமத்தாக மறைந்துவிடும் அல்லது விரலால் தள்ளினால் வயிற்றுக்குள் போய்விடும். எனவே, நம்மில் பலர் இதைப் பெரிய பிரச்னையாக எடுத்துக்கொள்வதில்லை. இதை வெளியில் சொல்ல வெட்கப்படுவதால் இதற்கு சிகிச்சை எடுக்க வருபவர்கள் ரொம்பவே குறைச்சல்!

இந்தப் புடைப்பு கொஞ்சம் கொஞ்சமாக மாம்பழம் சைஸுக்கு வளர்ந்துவிடும். அப்போது இது வயிற்றுக்குள் திரும்பிப்போக சண்டித்தனம் செய்யும். அப்படியானால், வயிற்றுக்குள் போக முடியாத அளவுக்கு வீக்கம் பெரிதாகிவிட்டது என்று அர்த்தம். இது அங்குள்ள நரம்பை அழுத்தும். இதனால் அங்கே  ‘யாரோ பிடித்து இழுக்கிற மாதிரி’ வலி ஆரம்பிக்கும். அடுத்ததாக வயிறு உப்பி ‘காற்று’ போகாது. இந்த நேரத்தில்தான் அலறியடித்துக்கொண்டு சிகிச்சைக்கு ஓடுவோம்.

இந்த இடத்தில் என் நண்பரின் உறவினர் பட்ட சிரமத்தைச் சொல்கிறேன். அவர்கள் சுவிட்சர்லாந்துக்கு குடும்பத்துடன் சுற்றுலா போனார்கள். ஆல்ப்ஸ் மலையின் அழகைக் கண்டு ரசிக்க ஆவலோடு கிளம்பிய நேரத்தில், நண்பரின் உறவினருக்கு வயிறு வலிக்கத் தொடங்கியது. வாந்தி வந்தது. ‘சாப்பாடு சேரவில்லை’ என்று சமாதானம் செய்துகொண்டு, சுற்றுலா வேனில் ஏறிவிட்டார். கொஞ்ச தூரம் போனதும் வயிற்று வலி அவரைச் சுருட்டிவிட்டது. வாந்தி கடுமையாகி அருவியில் குளித்த மாதிரி உடல் வியர்த்தது.

நண்பர் பயந்து போனார். வழியில் ஒரு மருத்துவமனையில் இவர்கள் மட்டும் இறங்கிவிட்டார்கள். ஸ்கேன் செய்து பார்த்துவிட்டு, ‘ஸ்ட்ரேங்குலேடட் ஹெர்னியா’ (Strangulated hernia) என்று வாய்க்குள் நுழையாத ஒரு நோயைச் சொன்னார்கள். “உடனே சர்ஜரி செய்ய வேண்டும்; இல்லாவிட்டால் உயிருக்கு ஆபத்து” என்று அவசரப்படுத்தினார்கள். குழப்பத்தோடு நண்பர் எனக்குப் போன் செய்து நோய் விவரம் கேட்டார். “டாக்டர்கள் சொல்வது சரிதான்! இந்த வகை ஹெர்னியாவுக்கு உடனடியாக ஆபரேஷன் செய்துதான் ஆக வேண்டும். இது திடீரென வராது. ஏற்கனவே இருந்திருக்கும். அவர் அதைக் கவனிக்காமல் விட்டிருப்பார்!” என்றேன்.

விசாரித்தபோது, இது 2 வருடப் பிரச்னை என்பது தெரிந்தது. “ஊருக்கு வரும்வரை உடல் தாங்காது. உடனே சர்ஜரி செய்துவிடுங்கள்” என்று யோசனை சொன்னதும், அங்கேயே ஆபரேஷன் நடந்தது. ஓர் இன்பச் சுற்றுலா துன்பச் சுற்றுலாவாக மாறிப்போனதுக்கு அந்த உறவினரின் அலட்சியப்போக்குதான் காரணம்!

அதுசரி, ‘ஸ்ட்ரேங்குலேட்டட் ஹெர்னியா’ என்றால்?
ஹெர்னியாவை ஆரம்பத்தில் கவனிக்காமல் விட்டால் நேரும் பேராபத்து இது. எந்த ஒரு ஹெர்னியாவும் சாதாரண நிலையில் ‘கண்ணி வெடி’ மாதிரி இருக்கும்! அது எப்போது வெடிக்கும் என்று சொல்ல முடியாது. வெடித்தால் விளைவுகள் விபரீதமாகும். அப்படி ஆனதுதான் மேலே சொல்லப்பட்ட ஹெர்னியா. வயிற்றிலிருந்து உள்ளுக்கும் வெளிக்குமாக ‘விசிட்’ செய்த குடல் திடீரென்று ‘கோபம் வந்து’ முறுக்கிக்கொள்ளும்.

இதன் கழுத்தில் ஒரு முடிச்சு விழும். இதனால் அந்தப் பகுதிக்கு ரத்தம் வருவது நின்றுவிடும். குடல் அழுகி செத்துவிடும். அங்கே ஓட்டை விழுந்து வயிற்றுக்குள் மலம் கசியும். வயிறு உப்பி, வலி எடுக்கும். வாந்தி வரும். ரத்த அழுத்தம் குறைந்து மயக்கம் வரும். இதற்கு அவசர ஆபரேஷன்தான் ஒரே தீர்வு. இல்லை என்றால் மரணம்தான் முடிவு. எனவே, ஹெர்னியாவைப் பொறுத்தவரை பிரச்னை பெரிதாவதற்குள் சர்ஜரி செய்து குணப்படுத்திவிட வேண்டும். அதற்கு யோசிக்கக்கூடாது!

(இன்னும் பேசுவோம்...)

சிகிச்சைகள் என்ன?

ஹெர்னியாவுக்கு ஆரம்ப கட்டத்தில் திட்டமிட்டு சர்ஜரி செய்துகொள்பவர்களுக்கு 100 சதவீதம் சுகப்படும். சிகிச்சைக்குத் தாமதமானால் ஆபத்துகளும் அதிகம்; மீண்டும் ஹெர்னியா ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம்.

ஹெர்னியாட்டமி (Herniotomy): ஒரு வயது தாண்டிய குழந்தைகள்/இளைஞர்களுக்கு இந்த சர்ஜரி செய்யப்படுகிறது. வயிற்றைத் திறந்து, ஹெர்னியாவைக் கண்டுபிடித்து, அதன் துவாரம் வரை திறந்து, அதிலுள்ள குடலை வயிற்றுக்குள் தள்ளிவிட்டு துவாரத்தைத் தைத்து மூடுவது இதன் செயல்முறை.

ஹெர்னியோரேபி (Herniorraphy): நடுத்தர வயதினருக்கு தசை மற்றும் தசைநார்கள் வலுவிழந்து இருந்தால், ‘புரோலின் இழை’ கொண்டு அத்தசைகளைத் தைத்து சரிப்படுத்தும் சர்ஜரி இது.

ஹெர்னியோபிளாஸ்டி (Hernioplasty): வயதானவர்கள் மற்றும் புரோலின் இழை கொண்டு தசைகளைத் தைத்து வலுப்படுத்த முடியாதவர்களுக்கு ‘புரோலின் வலை’யை (Prolene mesh) அத்தசைகளுக்கு இடையில் வைத்துத் தைத்துவிடுவார்கள். இந்த வலையின் இடைவெளியில் தசைகள் வளர்ந்து  இறுக்கத்தை ஏற்படுத்தும். இதன் பலனால் தசைகள் பலப்படும். மீண்டும் ஹெர்னியா வராது.

லேப்ராஸ்கோப்பிக் சர்ஜரி: இதுவரை சொன்னவை எல்லாமே வயிற்றைத் திறந்து செய்யும் சர்ஜரிகள். வயிற்றைத் திறக்காமல், ‘லேப்ராஸ்கோப்பி’ முறையில் சில துளைகள் மட்டும் போட்டு ஹெர்னியா சரி செய்யப்படுகிறது. இப்போதைக்கு இதுதான் நவீன முறை. இதில் நோயாளிக்கு வலி குறைவு. ரத்த இழப்பு இல்லை. சீக்கிரத்தில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி விடலாம். எனினும், யாருக்கு மேற்கொள்வது என்பதை சர்ஜன்தான் முடிவு செய்ய வேண்டும்.

வாசகர் கேள்விகள்

மன அழுத்தம் எவ்வாறு மாரடைப்பை ஏற்படுத்துகிறது?
- கமலநாதன், நாமக்கல்.

மன அழுத்தம் அதிகமுள்ள மனநிலைகளில் ரத்தத்தில் ‘கார்ட்டிசால்’ மற்றும் ‘அட்ரீனல் ஹார்மோன்’ அதிகரிக்கிறது. இதன் விளைவால், முதலில் இதயத்துடிப்பு அதிகரிக்கிறது. மன அழுத்தம் நீடித்தால் அல்லது அடிக்கடி ஏற்பட்டால் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இது சர்க்கரை நோயை இரு கரம் கூப்பி வரவேற்கிறது. இவை எல்லாமே கூட்டணி அமைத்துவிட்டால், உடலில் உள்ள கொழுப்புக்குக் கொண்டாட்டம் ஆகிவிடுகிறது. ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிவது மிக எளிதாகிறது. முக்கியமாக, இதயத் தசைகளுக்கு ரத்தம் கொடுக்கும் கொரோனரி ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிந்து, ரத்த ஓட்டத்தை அடைத்து, மாரடைப்புக்கு வாசல் அமைக்கிறது.

என் தோழி ஒருத்திக்கு 35 வயதுதான் ஆகிறது. சமீபத்தில் மாரடைப்பு வந்து இறந்துவிட்டாள். இளம் வயதிலேயே மாரடைப்பு வருமா?
- கவிதா, புதுச்சேரி.

பொதுவாக பெண்களுக்கு மெனோபாஸுக்குப் பிறகுதான் மாரடைப்பு வரும் என்று பலரும் நம்புகிறார்கள். இந்தக் கருத்து இப்போது பொய்யாகி வருகிறது. இதற்கு நான்கு முக்கியக் காரணங்களைச் சொல்லலாம். நீரிழிவு, மன அழுத்தம், மோசமான உணவுமுறை, உடற்பயிற்சியும் உடலுழைப்பும் இல்லாத சோம்பலான வாழ்க்கை முறை. அரிதாக சிலருக்கு இதயத்துடிப்பில் குறைபாடுகள் இருந்து மரணத்துக்கு வழி அமைக்கலாம்.

இன்றைய பெண்கள் ஏறக்குறைய ஆண்களுக்குச் சம அளவில் வாழ்க்கைப் பொறுப்புகளை ஏற்பதால், மன அழுத்தம் பல மடங்கு அதிகரிக்கிறது. உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை, தவறான உணவுமுறை உடல் பருமனுக்கு வழிவிடுகிறது. ‘வீட்டில் செய்யும் வேலையே ஒரு பயிற்சிதான்’ என்று நினைக்காமல், தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். மன அழுத்தம் போக்க யோகா, தியானம் போன்றவற்றில் ஈடுபட வேண்டும். ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும். முக்கியமாக, இனிப்பு, உப்பு, கொழுப்பு குறைந்த
உணவுகளைச் சாப்பிட வேண்டும்.