இந்த இரவைத்தான்...



-பழனிபாரதி

இந்த இரவைத்தான்
உனக்கு திராட்சை ரசமாக
பிழிந்து தர நினைத்தேன்

இந்த இரவைத்தான்
நம் வேட்கையின் வெம்மை தணிய
நிழலாக விரித்து வைத்திருந்தேன்
இந்த இரவைத்தான்
கம்பளிச் சட்டையாக அணிந்துகொண்டு
ஒன்பதாவது மாடியின் பால்கனியில்
டிசம்பர் மாத நிலவை
உன் மீது
தெளித்து விளையாட விரும்பினேன்
இந்த இரவைத்தான்
ஒரு வெண்ணிறக் கட்டில் விரிப்பாக
எனக்குள்
மடித்து வைத்திருந்தேன்
இந்த இரவைத்தான்
என் குளியலறைக் குழாயில்
உனக்காக
மூடி வைத்திருந்தேன்
இந்த இரவைத்தான்
உனக்கான
வாசனைத் திரவியமாக
வாங்கி வைத்திருந்தேன்
இந்த இரவைத்தான்
பசித்த ஒரு வேட்டை நாயாக
உன்னோடு
கட்டவிழ்த்துவிடக் காத்திருந்தேன்
எதுவுமற்ற
இந்த இரவைத்தான்
பறவைகளுக்கு அள்ளி வீசுகிறேன்
அவையும்
அதில் சிதறிக்கிடக்கும்
நட்சத்திரங்களைக் கொத்திக்கொண்டு
அப்படியே கைவிட்டுப் போகின்றன
இந்த இரவை.