குட்டிச்சுவர் சிந்தனைகள்!



ஆல்தோட்ட பூபதி
ஓவியங்கள்: அரஸ்

கொளுத்துற வெயில்ல மொத்த மண்டையும் காயுது, மண்டைக்குள்ள மறைஞ்சிருக்கும் மூளை கூட வேகுது, வெளுத்தெடுக்கும் வெயில்ல மொத்த ரத்தமும் வேர்வையா போகுது, தொட்டி தொட்டியா தண்ணி குடிச்சாலும் தாகத்துல நாக்கு தன்னால சாகுது. குடிக்கிறதுக்கு தண்ணிய ஃப்ரிஜ்ல வச்சது போய், குளிக்கிறதுக்கு தண்ணிய ஃப்ரிஜ்ல வைக்கணும் போல கிளைமேட் இருக்குது. உள்ளூர் சேனல்ல இருந்து உலக சேனல் வரைக்கும் வெயிலின் தாக்கத்தைப் பற்றி தினந்தோறும் சொன்னாலும், நாம குண்டு வச்ச தீவிரவாதியாட்டம் தலைமறைவாவா இருக்க முடியும்? வெயில் பட்டாலும் வேலை செய்யற இடத்துல கம்பி முதல் கம்ப்யூட்டர் வரை நம்ம கைல பட்டாதானே சம்பளம்.



காளை  மாட்டுலயே பாலைக் கறக்கிறவங்க நாம, வெயிலையே வெறுப்பேத்துற மாதிரி சில வேலைகளை வெயில வச்சே செஞ்சுக்குவோம்... ரசம் செய்யவெல்லாம் இந்த வெயில் காலத்துல ரொம்ப மெனக்கெட வேண்டாம். ரெண்டு தக்காளிய பிதுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு கொஞ்சம் கறிவேப்பிலை, கொத்தமல்லி, கடுகு, சீரகம், பூண்டு, புளி, உப்பு, மிளகு சேர்த்து, மொட்டை மாடில இருந்து டைரக்டா வரும் பைப்பு தண்ணீரைப் பிடிச்சு டைனிங் டேபிள் மேல் வச்சுட்டா, சுடச்சுட ரசம் ரெடி.

பேச்சிலர்கள் வாரம் முழுக்க சேர்ந்த துணிகளை ஞாயிற்றுக்கிழமை மொத்தமா வச்சு சுத்தம் பண்ண வேண்டாம், தேவையான சட்டை பேன்ட்டை அன்னைக்கு காலைல துவைச்சு ஈரமாவே போட்டுக்கிட்டு பைக்ல உட்கார்ந்தா போதும், அஞ்சு கிலோமீட்டருக்குள்ள ஆபீஸ் இருந்தாலும், போறதுக்குள்ள காஞ்சிடும்.

துணிமணிகளை இஸ்திரி செய்ய விரும்புறவங்க, நல்ல டைல்ஸ் கல்லா எடுத்து கொஞ்ச நேரம் வெயில்ல வச்சுட்டு, துணிய தேய்ச்சுப் பழகினா, அயர்ன் பண்ற செலவும், வீட்டுல அயர்ன் பண்றவங்களுக்கு கரன்ட் பில்லும் மிச்சமாகும். ஸ்கூலுக்கோ ஸ்பெஷல் க்ளாஸுக்கோ குழந்தைகளை அனுப்பி வைக்கும் பெண்கள், மீண்டும் கேஸ் சிலிண்டரை வேஸ்ட் செஞ்சு மதியம் மீண்டும் சூடா சாப்பாடோ சாம்பாரோ வைக்க வேணாம். காலைல செஞ்சதையே கொஞ்ச நேரம் வெயில்ல வச்சு எடுத்தா, சூடான, சுவையான சாப்பாடு ரெடி.

வெயிலில் அதிகம் சுத்துறவங்களுக்கு வியர்வை வேற சின்டெக்ஸ் டேங்க்ல சேமிக்கிற அளவுக்கு கொட்டும். இந்தப் பிரச்னை உள்ளவர்கள், கையோடு சோப்பைக் கொண்டு போனா, ஆள் அரவமற்ற தெருவுல, சோப்பை உடம்புக்குப் போட்டு குளிச்சுட்டு வந்துடலாம். ஏன்னா, தண்ணீர் சிக்கனம், தேவை இக்கணம்.

டீ, காபி அதிகம் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், தங்கள் டூவீலர் முன்போ கார் பேனட் முன்போ சிறு தண்ணி பாட்டில்ல தண்ணியோட பால் கலந்து தொங்கவிட்டுடணும். எப்பப்ப காபி. டீ குடிக்கத் தோணுதோ அப்ப கொஞ்சமா சர்க்கரை சேர்த்து ஆத்தி குடிச்சுக்கிட்டா செலவு மிச்சம்.

‘கடவுளை வேண்டினால் ஆண் குழந்தை பிறக்கும்... அந்தக் கடவுளே வேண்டுமென்றால் பெண் குழந்தை பிறக்கும்’ என்ற வரியை இணையத்தில் பார்க்க நேர்ந்தது. எவ்வளவு சத்தியமான உத்தமமான வார்த்தைகள் அவை. பாரத தேசமே பேர் சொல்லுமளவு, பார் முழுதும் பெருமை பேசும் அளவு புகழ் வேண்டாம்; தொடு வானத்தின் தூரம் வரை மண்ணுடனும், மாடி வீடு நிறையுமளவுக்கு மின்னுகின்ற பொன்னுடனும் வாழ வைக்கும் இறைவனின் அருள் வேண்டாம்; 

தொண்ணூறு வயசு வரை சுயமாய் சிந்திக்கின்ற மனதுடனும் சுயமாய் நடக்கின்ற தெம்புடனும் உடல் வேண்டாம்; கடலளவு கிடைத்தாலும் தங்கத்தில் ஒரு பொருள் வேண்டாம்; கடைசி வரை அன்பைக் கொட்ட ஒரு மகள் இருந்தால் போதும், அவனே பணக்காரன். தோளில் குழந்தை முகம் புதைத்து தூங்க, தூக்கி வரும் தந்தையின் முகம், தெரியாத அந்த குழந்தையின் அழகையும் சேர்த்து இரு மடங்கு அழகாயிருக்கிறது. அந்தக் குழந்தை பெண்ணாய் இருக்கும் போது அது இருநூறு மடங்கு அழகாய் இருக்கிறது. தந்தையின் தோள்கள், மனைவிக்கு குழந்தைகள் வரும் வரை, மகனுக்கு அவன் வளரும் வரை, ஆனால் மகளுக்கு சாகும் வரை.

பெண் குழந்தை திருமணமாகி புருஷன் வீடு போகும்போது, பெண்ணானவள் மகளைப் பிரிகிறாள். ஆனால், ஆணானவன் தன் தாயைப் பிரிகிறான். ஒவ்வொரு ஆண் மகனுக்கும் தன்னை தோளில் தூக்கி வளர்த்தவள் தாய் என்றால், ஒவ்வொரு மகளும் தன் தோளில் தூக்கி வளர்த்த தாய்.  குழந்தை கிடைத்தவர்கள் கடவுள் ஏட்டில் பாக்கியவான்கள், பெண் குழந்தை பெற்றவர்கள் கடவுளின் ஏட்டில் யோக்கியவான்கள் கூட.

ஆயிரங்களில் சம்பளம், லட்சங்களில் கடன்.  ஞாயிறு காலை தூக்கத்தோடும், ஞாயிறு மாலை ஏக்கத்தோடும் முடியும். பக்கத்து வீட்டின் ஷாமியானா பந்தல் சொல்லும் அருகே ஏதோ சுபகாரியமோ துக்க காரியமோ நடக்கிறது என. சாலையில் பொல்யூஷனுக்கு முகத்தை மூடும்போதே சந்திக்க நேரிடும் சாலை விபத்தைக் கடக்க மனசை மூடிவிடும் பழக்கம்.

வருஷம் முழுக்க சிறகுகளை அடகு வைத்துவிட்டு தீபாவளி, பொங்கலுக்கு பிறந்த ஊருக்கு பறக்கும் போது சிறகுகளை மீட்கும் வழக்கம். மதியம் பீட்சாவுக்கு கையேந்தியவன், சாயந்திரம் அவனுக்கு கையேந்திபவன். காதல் செய்ய துணைகள் கிடைக்கும், கல்யாணம் செய்ய ஒன்றும் கிடைக்காது. குழந்தைகள் தூங்கிய பின் கொஞ்ச வேண்டிய வாழ்க்கை. நாற்பது முடிவதற்குள் அரை கிரவுண்ட் நிலம், ஐம்பது முடிவதற்குள் ஆயிரம் சதுரடியில் ஒரு வீடு, பொண்ணுக்கு நல்ல மாப்பிள்ளை, பையனுக்கு ஒரு வேலை.
# மாநகர வாழ்க்கைப் புத்தகத்தின் சில பக்கங்கள்...

புண்ணியங்கள் பல செய்தவர்கள் துயில் கொள்ளும்போதே உயிர் விட்டுப் பார்த்திருப்பீங்க... நன்றாக நடமாடிக்கொண்டிருக்கும் நாளில் கூட நலுங்காமல்  ஒரு நொடியில் உயிர் பிரிந்தவர்களைப் பார்த்திருப்பீங்க... பேசிக்கொண்டிருக்கும் போதே மூச்சை விட்டவர்களைப் பார்த்திருப்பீங்க... கிண்டலா தெரிஞ்சாலும் கிரிக்கெட்டுல தோற்கும் போது இதயம் நின்னு இறந்தவர்களைப் பார்த்திருப்பீங்க... உடல் நலமில்லாமல் இறைவனடி சேர்ந்தவர்களைப் பார்த்திருப்பீங்க...

இன்னமும் கொடுமையா தண்டவாளத்துல தலைய வச்சு இறந்தவங்களைப் பார்த்திருப்பீங்க... கழுத்துல கயிறைப் போட்டு பூமிக்கு byebye சொன்னவங்களைப் பார்த்திருப்பீங்க... சில பல வீட்டு ரசத்தை விட ருசியா இருக்கிற விஷத்தை சாப்பிட்டு மறைந்து போனவர்களைப் பார்த்திருப்பீங்க... கத்தியால குத்தி கொலை செய்யப்பட்டு இறந்தவர்களைப் பார்த்திருப்பீங்க... கடன் தொல்லையால் இறந்தவர்களைப் பார்த்திருப்பீங்க... குடும்பச் சூழ்நிலையால் இறந்தவர்களைப் பார்த்திருப்பீங்க...

ஆனா, எங்கயாவது காசு வாங்கிக்கிட்டு வந்து வேகாத வெயிலில் மீட்டிங்னு உட்கார்ந்து சொந்தக் காசுல சூனியம் வச்சுக்கிட்டு இறந்த பரிதாபமானவர்களைப் பார்த்திருக்கீங்களா? அதைத் தமிழ்நாட்டுல மட்டும்தான் பார்க்க முடியும். செய்வீர்களா? வெறும் 200 ரூபாய்க்காக வெயிலில் வெந்து உயிர் விடும் காரியத்தை இனி செய்வீர்களா? கத்தியால் குத்தினால் மட்டும்தான் கொலையா? கும்பல் காட்டுவதற்கு மக்களின் உயிர்தான் விலையா? இதைக் கண்டும் கேட்காமல் இருக்கும் கடவுள் நிச்சயமாய் சிலையா?