மரண பிரசாரம்



முன்பெல்லாம் தீக்குளிக்க வைத்து அப்பாவிகளை சாகடிப்பார்கள்; இப்போது மொட்டை வெயிலில் பிரசாரம் நடத்தி, கூட்டத்துக்கு வரவழைத்து சாகடிக்கிறார்கள். இறந்தவர்களின் உயிருக்கு விலை, 2 லட்சம் ரூபாய். மனித உயிர் அவ்வளவு மலிவானதாகிவிட்டது! உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்த ஒரு போராட்டத்தில் ஒரு எம்.எல்.ஏ. தாக்கியதில் போலீஸாரின் குதிரை அடிபட்டு இறந்து போனது. அது ஒரு தேசியச் செய்தி ஆனது. ஆனால் ஜெயலலிதாவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கு கூலிக்கு அழைத்துவரப்படும் அப்பாவிகள் 5 பேர் வெயிலின் கொடுமை தாங்காமல் சுருண்டு விழுந்து இறந்தது இங்கிருக்கும் ஊடகங்களுக்குச் செய்தி அல்ல!



டெல்லி முதல்வர் அரவிந்த்  கெஜ்ரி வால் பங்கேற்ற போராட்டத்தில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்த ஊடகங்களுக்கு, இந்தச் சம்பவம் மிகவும் சாதாரணமாகிப் போனதுதான் இந்த  நூற்றாண்டின் பெரும் சோகம். ‘அனல் காற்று வீசும்... வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்... உச்சி வெயில் நேரத்தில் மக்கள் வெளியில் நடமாட வேண்டாம்’ என்று மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள்.

ஆனால் தங்கள் வசதிக்காக வெயில் தகிக்கும் நேரத்தில் பொதுக்கூட்டம் நடத்தி, அப்பாவி மக்களை அழைத்து வந்து, பல மணி நேரம் கொடூர வெயிலில் அமர்த்தி கொடுமைப்படுத்தும் கொடூரம் இங்குதான் நடக்கிறது. விவசாயம் பொய்த்ததாலும், சிறுதொழில்களைத் திட்டமிட்டு அழித்ததாலும், கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு குறைந்து விட்ட நிலையில், சின்னச் சின்ன விஷயங்களுக்கு ஆசைப்பட்டு, விளைவு தெரியாமல் இதுமாதிரி பிரசாரக் கூட்டத்துக்கு வருகிறார்கள் அப்பாவிகள்.

உடல்நலம் பாதிக்கப்பட்டோ, வெயில் கொடுமை தாளாமலோ அவர்கள் வெளியேற நினைத்தாலும் கட்சிக்காரர்களும், போலீஸும் தடுத்து மீண்டும் வெயிலில் தள்ளுகிறார்கள். அதன் விளைவுதான் 5 பேரின் மரணம். எப்பாவமும் செய்யாமல் குடும்பத்தலைவனை இழந்து, நிர்க்கதியாக நிற்கிற அந்த குடும்பங்களுக்கு யார் பொறுப்பு? இவர்கள் கிள்ளிப்போடுகிற சிறு தொகை அந்தத் துயரத்தை, இழப்பை எந்த அளவுக்கு ஈடுகட்டும்?

இன்னொரு பக்கம், இந்தியாவிலேயே மிக அதிகமாக பணம் ஒரே ஒரு பண்ணை வீட்டில் பறிமுதல் செய்யப்படுகிறது. அது, ஓட்டுக்குக் கொடுப்பதற்காக வைத்திருந்த பணம் என்பதற்கு எல்லா ஆதாரங்களும் இருக்கின்றன. ஆனாலும் இது குற்றமாகக் கருதப்பட்டு எந்த தண்டனையும் தரப்படவில்லை. அப்படியானால் தேர்தல் ஆணையம் யாருக்காக இயங்குகிறது என்ற கேள்வி எழுகிறது. இந்த நிலை மாறாவிட்டால் எதிர்காலத்தில் தமிழகம் எப்படி இருக்கும் என்ற கற்பனையே அச்சமூட்டுவதாக இருக்கிறது. அந்தத் தமிழகத்தில் இப்படிப்பட்ட செய்திகளும் விளம்பரங்களுமே மிஞ்சியிருக்கக்கூடும்...

புதுமையான பணம் எண்ணும் மெஷின் - தமிழக இளைஞர் கண்டுபிடிப்பு! இந்த மெஷின் ஓட்டுக்கு 2 ஆயிரம் ரூபாய் என தனித்தனியாகப் பிரித்து கவரில் போட்டுத் தரும். தேர்தல் ஆணைய பறக்கும்படை அதிகாரிகள் திடீரென வந்து விட்டால், இந்த பணம் எண்ணும் மெஷினை அப்படியே ஒரு மிக்ஸி போல மாற்றியமைத்து விடலாம்.

எம்.என் ஏஜென்சீஸ்(எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது)

பிரசாரக் கூட்டங்களுக்கு ஏற்ற தரமான தொண்டர்கள் ஏற்பாடு செய்து தரப்படும். கைதட்டவும், விசில் அடிக்கவும் கூடுதல் சர்வீஸ் சார்ஜ்.
(குறிப்பு: எல்லோருக்கும் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது.)



பக்கத்தில் ஆளுங்கட்சி மீட்டிங் நடந்தால் 1 கி.மீ முன்பே உங்களை அலர்ட் செய்து உயிரைக் காக்கும் புதிய வசதி கூகுள் மேப்பில் அறிமுகம்!
- சுந்தர் பிச்சை அறிவிப்பு

அம்மம்மா ஆம்புலன்ஸ் சர்வீஸ் மத்திய அரசு முத்திரை உள்ள ஆம்புலன்ஸ் வண்டிகள் வாடகைக்குக் கிடைக்கும். பணக்கட்டுகளை பத்திரமாக பெட்டிகளில் வைத்துவிட்டு, அதையே படுக்கை போல மாற்றும் வசதி கொண்டது. நோயாளியாகவும், நர்ஸ்களாகவும் நடிக்க ஆட்களும் ஏற்பாடு செய்து தரப்படும்.

தேர்தல் பணிகளுக்கு வசதியான தோப்பு வீடு விற்பனைக்கு! சிறப்பம்சங்கள்: ஊருக்கு ஒதுக்குப்புறமானது. உயரமான மதில்சுவர் கொண்டது. நூறு கன்டெயினர்கள் நிறுத்தும் வசதி கொண்டது. தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் இங்கிருந்து உடனே செல்ல சாலை வசதி உண்டு.

‘‘இவ்விடம் பிரசாரக் கூட்டங்களில் உயிர் பிழைத்திருப்பதற்கு ஏற்ற ஆக்ஸிஜன் சிலிண்டர், விண்வெளி ஜாக்கெட் போன்றவை சிறந்த முறையில் வாடகைக்கு கிடைக்கும்!’’

பிரசாரக் கூட்டங்களில் இறந்துவிடுபவர்களுக்கான சிறப்புக் காப்பீட்டு வசதி அறிமுகம். ஐந்து முன்னணி நிறுவனங்கள் தமிழகத்துக்கு பிரத்யேகமாக இந்த இன்சூரன்ஸ் திட்டங்களை உருவாக்கியுள்ளன.