வெற்றிவேல் விமர்சனம்



அதேதான்... அன்பு, தியாகம், பெருந்தன்மை, அண்ணன்-தம்பி பாசம் என நல்ல பல விஷயங்களை குடும்பமும் கொண்டாட்டமுமாகச் சொல்வதுதான் ‘வெற்றிவேல்’. செய்த தவறுக்கு நிவர்த்தியாகவும் தம்பியின் காதலுக்கு உதவவும் சசிகுமார் எடுக்கும் அன்பும், அதிரடியுமான முடிவுகளே மீதிக்கதை!

அனைத்து ஹீரோக்களும் சம்பிரதாயமாக நடிக்கும் ‘கிராமத்துக் காதல் கதை’யில் இது சசிகுமாருக்கான கோட்டா. அடைமொழி தேடும் ஹீரோக்களுக்கு மத்தியில் ‘இவர்களுடன் சசிகுமார்’ ஆச்சரிய டைட்டில்! ‘சுந்தர பாண்டியன்’ ஃபார்முலாவை கொஞ்சநஞ்சம் மாற்றி கொண்டாட்டம், மோதல், காதல் என முழு பலமாக வருகிறார் சசி.



இயல்பிலேயே அமைந்த அப்பாவித்தனம் கதைக்கும், சசிக்கும் அற்புதமாகக் கைகொடுக்கிறது. ‘நாங்களும் வாத்தியார்தான்’ என அப்பா இளவரசுவிடம் புலம்புவதிலாகட்டும், ஆள் மாற்றிக் கடத்தி வந்த பெண்ணை என்ன செய்வது எனத் தவித்து மருகி ஒரு முடிவெடுப்பதில் ஆகட்டும், அக்ரிகல்ச்சர் கல்லூரியில் வேலை பார்க்கும் மியாவைக் காதலிக்க ஃபீலிங்ஸ் விடுவதாகட்டும்... அட்டகாசம் சசி! அடடா, பாருங்கய்யா... நடனத்திலும் கூட சசிகுமாரிடம் நல்ல முன்னேற்றம்! ஆனாலும், ‘சுந்தரபாண்டியன்’, ‘நாடோடி’ பட நினைவுகள் வந்திருக்க வேண்டுமா..?

முதல் படத்திலேயே வாழ்வியலும், கதையம்சமும் நிரம்பி இருக்கும் வகையில் இயக்குநர் வசந்த மணியைப் பாராட்டலாம். அதற்காக கொஞ்சம் பழைய படமாக உருவாக்கி வைத்திருக்க வேண்டுமா பிரதர்..? இருந்தாலும் முதல் பத்து நிமிஷங்களுக்குப் பிறகு டேக் ஆஃப் ஆகிற படம், சரியாக லேண்ட் ஆகிவிடுகிறது.

நிகிலா, வர்ஷா, பிரபு, இளவரசு, தம்பிராமையா, விஜி, ரேணுகா என நட்சத்திரப் பட்டாளங்களை எண்ணப் புகுந்தால் விரல்களுக்கு எங்கே போவது! இருக்கிற இடத்தை விட்டு அசையாமலே பெர்ஃபார்ம் பண்ணி தப்பிவிடும் பிரபு, இந்தப் படத்தில் காட்டியிருப்பது கூடுதல் நடிப்பு! ‘நாடோடிகள்’ சமுத்திரக்கனி அண்ட் கோ அப்படியே திரும்பி வந்து பழைய கடத்தல் வேலைகளையே செய்து அலப்பறை தருகிறது. ‘உங்க புள்ளைகளை இப்படி வளங்கப்பா’ என்று அட்வைஸ் எடுத்துவிடுவாரோ எனப் பயந்தால், சமுத்திரக்கனி காமெடியிலும் ஜாலி, கேலியிலும் வெளுத்துக் கட்டியிருக்கிறார்!

காதலிக்கிற பதத்தில், நெஞ்சை அள்ளுகிறார் மியா. அந்த நீள உயரத்திற்குப் பொருந்துகிற புடவையில் அழகும் பொலிவும் ததும்புகிறது. இன்னும் நிகிலாவும், வர்ஷாவும் குறை வைக்கவில்லை. இப்படியொரு குடும்பப் படத்தில் தம்பிராமையா கேரக்டரும் ‘பச்சை’ காமெடிகளும் நியாயமா...ரே? ஆனாலும், போகப் போக அதன் நெடி குறைந்து, நாமே ‘அந்த’ காமெடியில் கலந்துவிடுகிறோம். முதல் பாதியில் ‘நன்முறை’ சசியாக ஈர்ப்பவர், இரண்டாம் பாதியில் ‘வன்முறை’ சசியாக மாறி, அரிவாள் பிடிக்கிறார். ரத்தம் சொட்டச் சொட்ட சண்டை போட்டாலும், மன்னிப்பை வலியுறுத்தும் வழக்கமான க்ளைமேக்ஸ் வசனம் மறக்காமல் வந்துவிடுகிறது.

ஒளிப்பதிவால் எஸ்.ஆர்.கதிரும், இசையால் இமானும் ஆளுக்கொரு கை கொடுத்து படத்தைத் தூக்கி நிறுத்துகிறார்கள். கதைக்கு தேவையானதை மட்டும் உள்வாங்குகிறது கதிரின் காமிரா. இன்னும் பாடல்களில் இமான் உழைத்திருக்கலாம். க்ளைமேக்ஸில் ஆக்‌ஷன் வெறியாட்டத்தை ரகளையான வேகத்தில் புரட்டியெடுத்திருக்கிற திலீப் சுப்பராயனுக்கு தனி சபாஷ்! காமெடியும், திகிலும் பார்த்த கண்களுக்கு சற்றே பழமையான கிராமத்து விருந்து!

- குங்குமம் விமர்சனக் குழு