கறுப்பை ஏன் வெறுக்கிறார்கள்?



கேரளப் பெண்ணின் நூதனப் போராட்டம்

கறுப்பும் ஒரு அழகுதான்!’, ‘கறுப்பு என்றால் ஏளனமா?’ - இப்படி எத்தனையோ பேர் போராட்டம் நடத்திப் பார்த்திருப்போம். ஆனால், கொச்சியைச் சேர்ந்த இளம்பெண் ஜெயாவின் போராட்டம், அதற்கெல்லாம் உச்சம். இயற்கையாக பளிச் சிவப்பு நிறத்தைக் கொண்டிருக்கும் ஜெயா, தினமும் முகம், கை, கால்களில் எல்லாம் கறுப்பு மையைத் தடவிக் கொண்டுதான் வெளியே செல்கிறார். ஒரு நாள், இரண்டு நாள் அல்ல... நூறு நாட்களுக்கு இப்படி பிளாக் மேக்கப் போட்டு கறுப்பு வெறுப்புக்கு எதிராக தன் எதிர்ப்பைக் காட்டிக்கொண்டிருக்கிறார் ஜெயா!



‘‘கறுப்பு என்ற நிறத்தின் மீது இருக்கிற வெறுப்பை விட, அந்த நிறம் தாழ்த்தப்பட்டவர்களின் நிறமாகப் பார்க்கப்படுவதுதான் இந்தியத் திருநாட்டின் சாபக்கேடு!’’ - எடுத்த எடுப்பிலேயே அதிரடியாய் விஷயத்துக்கு வரும் ஜெயா, ஒரு ஓவியர். நுண்கலையில் முதுநிலைப்  பட்டம்  பெற்றவர். தற்போது நடனப் பள்ளி ஒன்றில் பகுதி நேரமாகப் பணியாற்றும் ஜெயாவுக்கு ஜஸ்ட் 26 வயதுதான்.

‘‘ஐதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்தில் படித்த ரோஹித், தலித் என்பதாலேயே பல வகையிலும் அவமானப்படுத்தப்பட்டு விரக்தியின்  விளிம்பிற்கே போய் தற்கொலை செய்துகொண்டார். இந்தியாவையே உலுக்கிய இந்தச் செய்தியை உங்களைப் போலவேதான் நானும் பேப்பரில் படித்தேன்... டி.வியில் பார்த்தேன். ஆனால், மற்றவற்றைப் போல இதைச் சாதாரணமாகக் கடந்துபோக முடியவில்லை. நம்மைச் சுற்றி எல்லா இடத்திலும் இது நடக்கிறது.

ஒருவர் கொஞ்சம் கறுப்பாக இருந்தாலே அவர் தாழ்த்தப்பட்டவர் என்று முடிவு கட்டப்படுகிறார்; மட்டமாக நடத்தப்படுகிறார். தலித்  குழந்தைகளை  உயிருடன் எரிப்பது, அடித்துத் துன்புறுத்துவது, கௌரவக் கொலைகள் என தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான செயல்கள் இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. சொல்லப் போனால் இந்த நவீன காலத்தில்தான் ‘சமூக வன்முறை’ வலுப்பட்டிருக்கிறது.

ரோஹித் தற்கொலையால் டெல்லி  ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வெடித்த புரட்சி... அதை அடக்க கட்டவிழ்க்கப்பட்ட போலீஸ் அராஜகம்... ரோஹித்துக்கு ஆதரவாகப் பேசியதற்கு  எழுந்த தேசத் துரோக வழக்குகள்... இதெல்லாம் என்னை சிந்திக்கச் செய்தன. நான் ஒரு ஆர்ட்டிஸ்ட் என்பதால் என் உடலையே ஊடகமாக்கி இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தேன். இது ஒரு வகையில் கறுப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பைக் காட்டுவது போலத்தான்.

அதே சமயம் தோல் நிறம் கறுப்பானால் வரும் ஏளனப் பார்வைகளை அனுபவித்துப் பார்ப்பது... ‘நானும் மனுஷிதான்’ எனச் சுற்றியிருப்பவர்களுக்கு உணர்த்துவது... இப்படி இதற்குள் பல அர்த்தங்கள் பொதிந்துள்ளன!’’ என்கிற ஜெயா, இப்போது ஆந்திர மாநிலத்தில் கிட்டத்தட்ட ஒரு வி.ஐ.பி. ஆம், தங்கள் ஊர் மாணவரின் இறப்புக்காக ஜெயா இப்படி ஒரு போராட்டம் செய்வதைக் கேள்விப்பட்ட ஐதராபாத் மாணவர்கள், இவரை அழைத்துப் போய் மத்தியப் பல்கலைக்கழக வாசலில் நிறுத்தி மீடியா கவனத்தை ஈர்த்திருக்கிறார்கள். அங்கே ஜெயாவின் தெலுங்கு பேட்டிகள் தெறித்துக்கொண்டிருக்கின்றன.



‘‘நடனப் பள்ளியில் தினமும் என்னைப் பார்க்கும் மாணவிகள், திடீரென்று நான் கறுப்பு மேக்கப்புடன் வந்ததும் அதிர்ந்துவிட்டனர். ‘பழையபடி அழகா வாங்க மேடம்’ என என்னிடம் கெஞ்சும்போது சிலர் அழுதே விட்டனர். ‘சிவப்புதான் அழகு’ என்பது அந்தச் சின்ன மனங்களுக்குள்ளேயே விதைக்கப்பட்டுள்ளது. பேருந்திலும் சாலையிலும் என்னைப் பார்ப்பவர்கள் ஒன்றிரண்டு அடி தூரம் ஒதுங்கிப் போவார்கள்.

‘இது என்ன ஏதாவது புது நோயா?’ எனக் கேட்பார்கள். இப்படி எண்ணற்ற அனுபவங்கள். இதையெல்லாம் தொகுத்து ஒரு புத்தகமாக்கும் எண்ணம் கூட இருக்கிறது!’’ எனச் சொல்லும் ஜெயா, மே ஆறாம் தேதியோடு இந்தப் போராட்டத்தை நிறைவு செய்கிறார். கடந்த ஜனவரி 27 அன்று ஆரம்பித்த போராட்டம், அன்றுதான் நூறாவது நாளை எட்டுகிறது.

‘‘அந்த நிறைவு விழாவில் என்னைப் போலவே கறுப்பு மேக்கப் போட்டு நடன மாணவிகள் நாட்டிய நிகழ்ச்சி நடத்தவிருக்கிறார்கள். என்னைக் கறுப்பாகப் பார்த்து அழுத மாணவிகள் இன்று தாங்களே அதற்கு முன் வருகிறார்கள் என்றால், அது என்னால் நேர்ந்த சிறு மாற்றம்தானே! அப்படிப்பட்ட மாற்றத்தை நான் இந்த நாடு முழுவதும்... உலகம் முழுவதும் எதிர்பார்க்கிறேன்’’ என்கிறார் ஜெயா தீர்க்கமாக! சிவப்புதான் அழகு என்பது சின்ன மனங்களுக் குள்ளேயே விதைக்கப்பட்டுள்ளது.

- பிஸ்மி பரிணாமன்