விமானம் வாங்கணும்!



அடடா மதுரை பைலட்ஸ்

ரன்வேயில் படபடத்து மேலெழும்பிப் பறக்கும் அலுமினியப் பறவை... அதை இயக்கும் பைலட் வேலைக்கு இப்போது பெண்களும் செம ஃபைட் தருகிறார்கள். சற்றே கடினமானதும், கவனம் தேவைப்படுவதும், சாதுர்யமானதுமான இந்த சாகசப் பணிக்கு தமிழ்நாட்டிலிருந்து இப்போது பெண்கள் ரெட்ட ரெடி! மதுரையிலிருந்து பூர்ணா பார்த்தசாரதி, காவ்யா ராம்குமார் என இருவர் இப்போது கமர்ஷியல் பைலட் லைசென்ஸ் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் சாதித்திருப்பது சாதாரண விஷயமல்ல... நம்பிக்கை வரலாறு!



முதலில் பூர்ணா... ‘‘எனக்கு சின்ன வயதிலிருந்தே பைலட் ஆகணும்ங்கிறதுதான் கனவு. அந்த முதல் கனவே நிஜத்திற்கு வந்தது அதிர்ஷ்டம். அப்பா சின்னதா ஒரு ‘ஏர்கிராஃப்ட்’ தயாரிச்சார். ரிமோட் கன்ட்ரோல் மூலம் உயரப் பறக்கும் சிறிய ரக விமானங்கள் மீதெல்லாம் அவருக்கு அக்கறை இருந்தது. எங்க வீடு முழுக்க விமானங்களின் மாதிரிகள் நிறைஞ்சிருக்கும். அதனால் அந்த நினைவு மனதில் நிறைந்துவிட்டது. சாதாரணமா கார் ஓட்ட லைசென்ஸ் வாங்குவது மாதிரியான வேலையில்லை இது.

தைரியமும், பிரச்னைகளையும் சூழ்நிலைகளையும் சாதுர்யமாக சமாளித்து விமானத்தை செலுத்தும் திறனும் வேண்டும். சதா எச்சரிக்கையுடன் இருக்கிற உணர்வு வேண்டும். அதற்கெல்லாம் நிறைய பயிற்சிகள் இருக்கு. இதில் பெண் என்பதற்காக எந்த சலுகைகளும் கிடையாது. அதை எதிர்பார்க்கவும் கூடாது.

மற்ற வேலைகளைப் போலவே இதிலும் கஷ்டங்களும், பயன்களும் உள்ளன. பல மணி நேரம் தொடர்ந்து சலிக்காமல் பணிபுரியும் ஆற்றல், விரைவாக முடிவெடுக்கும் திறன் அவசியம். ‘என்னடா... இந்தப் பெண் அடுக்கடுக்காகச் சொல்லி பயமுறுத்துகிறாரே’ என்று நினைக்க வேண்டாம். இந்த வேலையின் முக்கியத்துவத்தை இப்படிச் சொல்லித்தான் ஆக வேண்டும்!

இது ஒரு காஸ்ட்லியான வேலை. சரியான பின்புலம் அவசியம். லைசென்ஸ் வாங்கும் வரையிலான பயிற்சிக்கு 30 லட்ச ரூபாய்க்கும் அதிகமாக செலவாகலாம். பணத்தை கொஞ்சமாக வைத்துக்கொண்டு, இதில் இறங்கி விட முடியாது... கூடாது. பெண்களைப் பொறுத்தவரை இது ஒண்ணும் முடியாத வேலை கிடையாது. மனதை ஒருமுகப்படுத்தி இறங்கிவிட்டால் போதும். வீட்டுக் கவலைகளை வீட்டோடு வைத்து விட்டு வரவேண்டிய ஒரே வேலை இதுதான்.

இந்த வேலையில் ஆண்களின் ஆதிக்கம்தான் நிறைய. ஆனால், இப்போது அந்த இடத்திற்கு பெண்கள் கொஞ்சம் கொஞ்சமாக வந்துகொண்டு இருக்கிறார்கள். நான் இதுவரை 100 மணி நேரத்திற்கும் மேலாக விமானத்தை இயக்கியிருக்கிறேன். என்னோட கனவு, இலக்கு, விருப்பம், ஆசை எல்லாமே ஒரு ‘ஏர்கிராஃப்ட்’டை சொந்தமாக வாங்கி இயக்க வேண்டும் என்பதுதான். ஒரு ஆடி கார் வாங்குவது போலத்தான் இது. எனது குழந்தைக் கனவு நிறைவேறிய மாதிரி இந்தப் பிரியமும் நனவாகும் என்பது என் நம்பிக்கை.



ஒரு ஆக்ஸிடென்டில் சிக்கி என் அப்பா இறந்துவிட்டார். சூழல் கருதி இப்போதைக்கு விமானம் ஓட்டுவதிலிருந்து கொஞ்சம் ஓய்வு. ஜூன் 9ம் தேதி டாக்டர் அறிவரசனோடு எனக்கு திருமணம். அதற்குப் பிறகு அவரின் வழிகாட்டுதலோடு எனது பயணம் தொடரும்!’’ என்கிறார் பூர்ணா.

தெருவெங்கும் பைலட் காவ்யா என்றால் அவ்வளவு பிரபலம். 19 வயதிலேயே தொழில்முறை விமானி உரிமம் பெற்றிருக்கிறார். புத்துணர்ச்சிக்கான வார்த்தைகளை எல்லோருக்கும் பயன்படும் வகையில் பேசுகிறார் காவ்யா. ‘‘ஆறாவது படிக்கும்போது பைலட் ஆசை மனசில் விரிய ஆரம்பித்தது. +2 முடித்ததும் பெங்களூரு ஃப்ளையிங் கிளப்பில் சேர்ந்துவிட்டேன். முதலில் தரையைக் குறித்துத்தான் பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கும். டேக் ஆஃப், லேண்டிங் இரண்டும் முக்கியமானது. அதுவரையில் விமானத்தில் ஏறியே பழக்கம் இல்லாத எனக்கு, விமானம் ஓட்டிப் பழக பயிற்சியாளரிடம் உட்கார்ந்தபோது சிரிப்பு வந்துவிட்டது.

உண்மையில் பறக்கும் அனுபவம் அற்புதமானது. வர்ணனைக்கு எட்டாதது. விரிந்து பறந்த ஆகாயத்தில் தன்னந் தனிமையாய் விமானத்தை வழிநடத்திச் செல்கிற விஷயம் உன்னதமானது. வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கும். எடை குறைவது போலத் தோன்றும். சற்றே பதற்றம் கூடும். பழகப் பழக எல்லாம் தெளிவாகும். ஆனால், நிச்சயம் விமானி என்பதற்கான பணிகள் எளிமையானதல்ல. எந்த நேரமும் உங்களின் அக்கறையைக் கேட்பது இந்த வேலை.

இங்கேயும் ஆண், பெண் வித்தியாசம் இருக்கிறது. நீங்கள் பெண் என்பதை எப்போதும் நினைத்துக் கொண்டிருக்காமல், வேலையில் மட்டும் கவனம் செலுத்தினாலே போதுமானது. நான் என்னோடு பயிற்சிக்கு வந்தவர்களை விட, முன்னதாகவே பயிற்சியாளரோடு பறக்க ஆரம்பித்து விட்டேன். அதற்காக மறைமுகமான கேலி, கிண்டல்கள் நடக்கும். அதை எல்லாம் உதறித் தள்ளிவிட்டுத்தான் போகவேண்டும். புவியீர்ப்பு விசையை எதிர்த்துப் பறப்பதென்பதே இயற்கைக்கு மாறானது.

உற்சாகம் தரக் கூடியது. விமானம் இயக்கும்போது நானே பறப்பதாக நினைத்துக்கொள்வேன். ஒரு பறவை போல உணர்வேன். வேண்டிய பணமும், வித்தியாசமான வேலையை செய்யப் போகிறோம் என்ற நினைப்பும் கொண்டவர்கள் தாராளமாக இந்தப் பணிக்கு வரலாம். முதலில் பயிற்சியாளருடன், பிறகு தனியாகப் பறப்பது, பிறகு இரவு நேரம் பறப்பது என்பதெல்லாம் அடுத்தடுத்த நடைமுறைகள். என்னுடைய எண்ணமெல்லாம் விமானப் படையில் சேர்ந்து நாட்டுக்காக விமானம் ஓட்ட வேண்டும் என்பதுதான்!’’ என்கிறார் காவ்யா.
பெண் என்பதற்கான எல்லைகளைத் தாண்டி கம்பீரமாக எழுந்து நிற்கிறார்கள் இவர்கள்.

இந்த வேலையில் ஆண்களின் ஆதிக்கம்தான் நிறைய. ஆனால், இப்போது அந்த இடத்திற்கு பெண்கள் கொஞ்சம் கொஞ்சமாக வந்துகொண்டு வருகிறார்கள்.

- நா.கதிர்வேலன்
படங்கள்: டி.மணிகண்டன்