முகங்களின் தேசம்



ஜெயமோகன்

ஓவியம் : ராஜா

அன்னையின் சிறகுக்குள் கல்லூரிப் படிப்பு முடித்த காலத்திலிருந்தே தன்னந்தனியாகக் கிளம்பி புது ஊர்கள் தோறும் அலைந்து திரிவது என் வழக்கமாக இருந்தது. எனது பயணங்களை  ‘புறப்பாடு’ என்னும் சுயசரிதைக் குறிப்புகளாக எழுதியிருக்கிறேன். அன்றெல்லாம் கையில் பணம் இருக்காது. பயணத்துக்கான எந்த ஏற்பாடுகளும் இல்லாமல் செல்வேன். திரும்பி வரும் நோக்கம் கூட இருக்காது. வேலை கிடைத்த பின்னரும் கூட அத்தகைய தனித்த பயணங்களைச் செய்வதுண்டு.



1982ம் ஆண்டில்  அவ்வாறு ஒரு நீண்ட பயணத்தின் பகுதியாக இன்று உத்தரகாண்டிலுள்ள ஹல்த்வானி என்ற ஊருக்குச் சென்றேன். அப்போதெல்லாம் ஒரு ஊருக்குச் சென்று, அங்கு சில நாட்கள் தங்கி, சாத்தியமான வேலைகள் ஏதேனும் செய்து, அதில் கிடைக்கும் பணத்தில் அடுத்த ஊருக்குச் செல்லும் வழக்கம் இருந்தது எனக்கு. தமிழகத்துக்குள் என்றால் அச்சகங்களில் பிழை திருத்தும் வேலை கிடைக்கும். தமிழில் சிறப்பாக என்னால் பிழை திருத்த முடியும்.

அன்று  ‘கட்டை அச்சு’ முறை இருந்தமையால், அச்சகங்களிலேயே அமர்ந்து பிழை திருத்துபவர்களுக்கான தேவை இருந்துகொண்டே இருந்தது. பிழை திருத்தியதுமே அதை கட்டைகளில் பிரித்துத் திரும்ப அடுக்க வேண்டும். வட இந்தியப் பயணங்களில் உணவகங்களில் வேலை பார்ப்பேன். உணவகங்கள் எப்போதுமே குறைந்த கூலிக்கு வேலை செய்பவர்களைத் தேடித் திறந்திருப்பவை. மேலும் வட இந்தியாவில் அப்போது ஏராளமான சிறிய தமிழர் உணவகங்கள் இருந்தன.

உணவகங்களில் இருந்து எவரும் எதையும் திருடிக்கொண்டு செல்லமுடியாது. ஆகவே, சென்று அமர்ந்து முதலில் சாப்பிட்டுவிட்டு வேலை கேட்க முடியும். சமையல் தெரிந்தவர் என்றால், அரசனுக்கு நிகராகப் பயணம் செய்யலாம். ஆனால் உத்தரப்பிரதேசம் எனக்கு முற்றிலும் அந்நியமானதாக இருந்தது. தெரிந்த சாயல் கொண்ட முகங்களே இல்லை. ஓர்அந்நிய நாட்டுக்கு வந்தது போல் தோன்றியது. ஹல்த்வானிக்கு ஏன் வந்தேன் என்பதில் எனக்குத் தெளிவிருக்கவில்லை.

ஒரு நாளிதழில் கண்ணில்பட்ட நைனிடால் என்ற வார்த்தை என்னை மிகவும் ஈர்த்தது. எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய ‘மஞ்ஞு’ என்ற நாவலின் கதாநாயகியான விமலா, நைனிடாலில்தான் பள்ளி ஆசிரியையாக இருந்தாள். வரவே வாய்ப்பில்லாத காதலனுக்காக அவள் காத்திருப்பதன் சித்திரம் அந்நாவல். அங்குள்ள ஏரியும் காத்திருக்கிறது என்று எம்.டி எழுதியிருந்தார்.



நான் நைனிடாலின் ஏரிக்கரையில் விமலா நிற்பதுபோல நிற்க விரும்பினேன். அங்கே செல்லும் வழியில் பேருந்தைத் தவறவிட்டேன்.  ஹல்த்வானி வரை வந்தபோது மேற்கொண்டு செல்வதற்கான பணம் என்னிடம் இருக்கவில்லை. அன்றெல்லாம் ஹல்த்வானியில் இருந்து நைனிடாலுக்குக் கோடை சீசனில் மட்டும்தான் பேருந்து வசதிகள் உண்டு. மற்ற நாட்களில் தனியார் டாக்ஸிகளில்தான் ஏறிச் செல்ல வேண்டும். அக்காலத்தில் அது மிகச் செலவேறிய பயணம்.

நான் என்ன செய்வதென்று அறியாமல் ஹல்த்வானி நகரில் சுற்றிவந்தேன். இமயமலை அடிவாரத்திலுள்ள பெரும்பாலான நகரங்கள், குளிர்காலத்தில் உயிரற்றவை போலிருக்கும். சாலைகளில் மனித நடமாட்டமே குறைவாக இருந்தது. கடைகளில் ஆளில்லை. உணவகங்கள் ஒழிந்து கிடந்தன. நான் உணவுண்டு இரண்டு நாட்கள் ஆகிவிட்டிருந்தன. கையில் ஐந்து ரூபாய்க்கும் குறைவாகத்தான் இருந்தது. அந்தப் பணத்தைச் செலவழித்து இரண்டு சப்பாத்திகளும் வெங்காயமும்தான் என்னால் சாப்பிட முடியும். ஆனால் சாப்பிட்ட பின் என்ன செய்வது? ஹல்த்வானியில் தங்குவதற்கோ, வேலை செய்வதற்கோ எந்த வாய்ப்பும் இருப்பதாகத் தெரியவில்லை.

மேடும் பள்ளமுமான சாலைகளில் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தேன். சாயம் பூசப்பட்ட கதவுகள் கொண்ட சிறிய இல்லங்கள். தெளிந்த நீர் விரைந்து ஓடும் ஓடைகள். சாலையோரமாக செடிகள் அடர்ந்திருந்தன. அப்போதுதான் தாஜ்மகாலுக்கு நிகரான ஒரு பளிங்குக் கட்டிடத்தைப் பார்த்தேன். அது ஒரு குருத்வாரா. காலை வெயிலில் அதன் வெண் சுதைக் கும்மட்டங்கள் பளிங்கு போல ஒளிவிட்டன. எனக்கு பூண்டுகளைப் போல அவை தோன்றின.

அருகே சென்று நின்று அந்தக் கட்டிடத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். குருத்வாராக்களின் அமைப்பு, இஸ்லாமியக் கட்டிடக்கலைக்கும் இந்தியக் கட்டிடக்கலைக்கும் நடுவே அமைந்த கலவை. அங்கு மனித நடமாட்டமே இருப்பது போல் தெரியவில்லை. மிக அற்புதமான புல்வெளி, காலை ஒளியில் மெல்லிய புகை எழ, கம்பளம் போல் விரிந்திருந்தது. குருத்வாராக்களில்  அங்கு வருபவர்களுக்கெல்லாம் உணவு அளிப்பார்கள்  என்று நான் கேள்விப்பட்டிருந்தேன். உள்ளே சென்று, உணவு கிடைக்குமா என்று கேட்டுப் பார்த்தால் என்ன என்று எண்ணினேன்.



ஆனால் ஒரு தயக்கம். ஏனெனில் அப்போது பஞ்சாப் பிரிவினைப் போராட்டம் உச்சகட்ட நிலையில் இருந்தது. சீக்கியர்கள் தங்களை இந்தியாவிலிருந்து பிரித்துக் கொள்ள விரும்புகிறார்கள் என்றும், இந்தியர்களை எதிரிகளாக நினைக்கிறார்கள் என்றும், சீக்கியர்கள் அல்லாதவர்களிடம் கடுமையான குரோதத்துடன் இருக்கிறார்கள் என்றும் செய்தித்தாள்கள் வழியாக அறிந்திருந்தேன். உள்ளே சென்றால் என்னைப் பிடித்து வெளியே தள்ளிவிடுவார்கள் என்று எண்ணினேன்.

ஆனால் பசி உந்த, இரண்டு முறை அந்த மிகப்பெரிய இரும்பு வாசலைத் தொட்டேன். தள்ளித் திறந்து உள்ளே செல்வதற்கான  தைரியம் வரவில்லை. எனவே அங்கேயே நின்றேன். அதே சமயம் கடந்து செல்லவும் தோன்றவில்லை. சற்று நேரத்தில் சரித்திர கால உடையணிந்த ஒருவர், தொலைவில் தனியாக நடந்து வருவதைப் பார்த்தேன். தலைப்பாகை, நீண்ட வெண்ணிற தாடி, கைகளில் இரும்பு வளையம், சிவந்த துணியில் சரிகைக்கல் நிறைந்த முழுக்கை அங்கி, பாவாடை போன்ற சுருக்கங்கள் கொண்ட கீழாடை, நுனி வளைந்த செருப்பு. கையில் ஒரு கோல் வைத்திருந்தார். சிவப்பு நிறமான துணிக் கச்சையில் மிகப்பெரிய உடை வாள். சாண்டில்யன் கதைகளிலிருந்து எழுந்து வருபவர் போலிருந்தார்.

இரும்பு கேட்டை அடைந்து உள்ளே செல்ல முனைந்தவர், திரும்பி சந்தேகத்துடன் என்னைப் பார்த்தார். இந்தியில்  ‘‘என்ன?’’ என்றார். நான் ‘ஒன்றுமில்லை’ என்பது போல தலையாட்டினேன்.  ‘‘என்ன?’’ என்று மீண்டும் கேட்டார். நான் கைகூப்பி ‘‘தமிழகத்தில் இருந்து வருகிறேன்’’ என்று உடைந்த ஆங்கிலத்தில்  சொன்னேன். ‘‘தமிழகத்தில் இருந்தா? எந்த ஊர்?’’ என்று ஆங்கிலத்தில் திருப்பிக் கேட்டார். நான் ‘‘கன்னியாகுமரி’’ என்றேன். இந்தியா முழுக்க கன்னியாகுமரியை தெரியாதவர்கள்  மிகவும் குறைவு.

‘‘இங்கு எதற்காக வந்தாய்?’’ என்றார். ‘‘ஊரைச் சுற்றிப் பார்ப்பதற்காக வந்தேன். என்னிடம் பணமில்லை. குருத்வாராவைப் பார்த்தேன். பசிக்கிறது. உள்ளே செல்லலாமா என்று யோசித்து நின்றிருக்கிறேன்’’ என தணிந்த குரலில் சொன்னேன். அவர் புருவம் சுருக்கி, ‘‘ஏன், உள்ளே வரவேண்டியதுதானே?’’ என்றார்.  ‘‘இல்லை’’ என்று நான் மீண்டும் தயங்கினேன். அவர் என்னைக் கூர்ந்து பார்த்து, ‘‘உள்ளே வாருங்கள் சகோதரா’’ என்றார். நான் தலைகுனிந்து, ‘‘நான் ஒரு இந்து’’ என்று சொன்னேன்.

அவர் உறுமல் போல, ‘‘அதற்கென்ன?’’ என்றார். ‘‘சீக்கியர்கள் இந்துக்களை வெறுக்கிறார்கள், உள்ளே சென்றால் துரத்தி அடிப்பார்கள் என்று கேள்விப்பட்டேன்’’ என்றேன். என்னை நோக்கிக் கொண்டிருந்த அவருடைய கண்கள் நிறைவதைப் பார்த்தேன். தழுதழுத்த குரலில், ‘‘சகோதரா, பசித்து வரக்கூடிய ஒவ்வொருவருக்கும் உணவளிக்க வேண்டுமென்று எங்கள் குரு ஆணையிட்டதன் பேரில்தான் இந்த குருத்வாராவை கட்டியிருக்கிறோம். இது கோயில் அல்ல, குருவைச் சந்திக்கும் வாயில் என்றுதான் இந்த வார்த்தைக்குப் பொருள். உள்ளே இருப்பது எங்கள் குருவாகிய கிரந்த சாகிபின் ஒரு புத்தகம் மட்டும்தான்’’ என்றார்.

‘‘நானூறு ஆண்டுகளாக எந்த குருத்வாராவை நாடிப் போனவர்களும் உணவு அளிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டதில்லை. இங்கு சில அதீதப்போக்கு கொண்டவர்களால் எங்கள் மேல் இந்தப் பழி சுமத்தப்பட்டுள்ளது. வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை. உள்ளே வாருங்கள். இந்த குருத்வாரா உங்களுடையது. அதன் பிறகுதான் எங்களுடையது’’ என்றார்.



என் கைகளைப் பற்றி உள்ளே அழைத்துச் சென்றார், அவர்தான் அந்த குருத்வாராவின் தலைவர். கியானி குருநாம்சிங் என்பது அவர் பெயர் என்று பின்பு அறிந்தேன். உள்ளே சென்று கை, கால் கழுவி வரச்சொன்னார். நான் வந்து அமர்ந்ததும் பெரிய எவர்சில்வர் தட்டைப் போட்டு, தட்டளவுக்கே பெரிய நான்கு சப்பாத்திகளை வைத்தார். நான்கு கிண்ணங்களில் கத்தரிக்காய் சப்ஜியும், பொன்னிறமான் பருப்புக் குழம்பும் பரிமாறினார். வெண்கலச் செம்பு ஒன்றில் தயிர். அதில் விட்டுக் கலக்குவதற்காக ஒரு கண்ணாடிக் கிண்ணத்தில் வெல்லத் துருவல்.

சப்பாத்தியை புனல் போல குவிக்கும்படி சொன்னார். நான் அதைக் குவித்ததும் அதில் நிரம்புமளவுக்கு நெய்விட்டார். நெய்யை அப்படி அள்ளி முகந்து விடுவதை நான் அப்போதுதான் முதன்முறையாகப் பார்த்தேன்.  ‘‘சாப்பிடு’’ என்றார். தத்தளிப்புடன்,  ‘‘எப்படி?’’ என்றேன். ‘‘நெய்யுடன் அப்படியே சப்பாத்தியை சாப்பிடவேண்டும்’’ என்றார்.

நெய் சிந்தச் சிந்த சப்பாத்தியை சாப்பிட்டேன். பசியின் உச்சத்தில் இருந்ததால் இருக்கலாம், முப்பதாண்டுகளுக்குப் பிறகு இப்போதும், நினைக்கும்போதே கண்ணீர் மல்கச் செய்யும் உணவாக அது இருந்தது. சாப்பிட்டு முடித்த பிறகு திடீர் என்று எழுந்த ஒரு களைப்பில், அப்படியே எழ முடியாமல் அமர்ந்துவிட்டேன். அவர் கை நீட்டி என்னைத் தூக்கினார். நான் தட்டுகளை எடுக்கச் சென்றேன். ‘‘இல்லை, விருந்தினரின் தட்டுகளைக் கழுவுவது எங்களுக்கு ஒரு புனிதச் செயல்’’ என்றார். என் தட்டுகளை அவரே கழுவினார்.

குருத்வாராவின் பெரியகூடம் வரைக்கும்கூட என்னால் நடக்க முடியவில்லை. செல்லும் வராந்தாவிலேயே படுத்துத் தூங்கிவிட்டேன். எழுந்தபோது அவர் என்னைக் கூப்பிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டேன். கையில் மிக நீளமான கண்ணாடி டம்ளர் நிறைய கொழுத்த பால் இருந்தது.  ‘‘அருந்துங்கள்’’ என்றார்.

குருத்வாராவுக்கு பிரார்த்தனைக்காக அப்பகுதியின் சீக்கியர்கள் வரத் தொடங்கியிருந்தார்கள். தலையில் கட்டுவதற்கு காவி நிறத்தில் ஒரு கைக்குட்டையைக் கொடுத்தார். அதைக் கட்டிக்கொண்டு அவர்களின் வழிபாட்டில் கலந்து கொண்டேன். சீக்கிய வழிபாடு என்பது ஒருவகைக் கூட்டு பஜனைதான். குருத்வாராவின் கூடத்தை முழுக்க நிரப்பி அமர்ந்திருக்கும் சீக்கியர்கள், வண்டு முரள்வது போல ஒரே குரலில் ரீங்கரித்துப் பாடுவார்கள். கியானி கிரந்த சாகிப்பின் சில பகுதிகளை பாடல் போல படித்தார்.

அன்று மாலை நான் வெளியே சென்று, அந்தப் புல்வெளியில் அமர்ந்திருந்தேன். உணவும் ஓய்வும் என் மனதை மிகவும் இலகுவாக்கியிருந்தன.  இந்தியா முழுக்க எதையோ தேடி தனிமனிதர்கள் வீட்டைவிட்டுக் கிளம்பிக்கொண்டேதான் இருக்கிறார்கள். சமூகத்தையும், குடும்பத்தையும், மொத்த நாகரிகத்தையும் உதறி அவர்கள் வெளியே செல்கிறார்கள். அப்படி வெளியே செல்லும் அந்நியர்கள்தான் இந்திய ஆன்மிகத்தின் பிரசாரகர்கள். இந்தியாவின் அறத்தின் காவலர்கள்.

தலைமுறை தலைமுறையாக அவர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். விவேகானந்தர் அப்படி அலைந்திருக்கிறார். காந்தி சுற்றியிருக்கிறார். வைக்கம் முகம்மது பஷீர், டாக்டர் சிவராம காரந்த் போன்ற எழுத்தாளர்கள் இந்தியா முழுக்க சுற்றியிருக்கிறார்கள். குருநானக்கும் அப்படிச் சுற்றி அலைந்திருக்கிறார். ஆகவேதான் இப்படி அலையும் அந்நியருக்காக உணவும் நீரும் ஓய்விடமுமாக குருத்வாராக்களை அமைத்திருக்கிறார்கள். வேறெந்த நாட்டிலும் அலைந்து திரியும் அந்நியருக்காக இத்தனை சுதந்திரமாக வாழும் ஒரு பாரம்பரியமான அமைப்பு இருக்கிறது என்று சொல்ல முடியாது.

ஒரு வகையான அடையாளமும் இல்லாத லட்சக்கணக்கானவர்கள் இந்தியாவில் உண்டு. அவர்களிடம் இருந்துதான் ரமணரும், அரவிந்தரும், ஓஷோவும் கிளம்பி வந்தனர். அன்று அந்த எண்ணம் எனக்களித்த ஓர் உறுதியையும் ஆறுதலையும் இப்போதும் நினைவு கூர்கிறேன். ஓர் எழுத்தாளனாக என்னை ஆக்கியது, அன்று எனக்கு இந்தியா முழுக்க அளிக்கப்பட்ட உணவுதான். அது இந்திய அன்னையின் முலைப்பால். அத்தனை அன்னமிட்ட கைகளுக்கும் நான் கடன்பட்டிருக்கிறேன்.

அன்றிரவு குருத்வாராவில் வசதியான அறை ஒன்றை எனக்களித்தார்கள். நான் படுத்துத் தூங்க முயலும்போது கியானி மிகக்கனமான கம்பளியுடன் என் அறைக்கு வந்தார். ‘‘உங்கள் ஊரில் குளிர் இருக்காது என்றார்கள். உங்களால் குளிர் தாங்க முடியாது. ஆகவே போர்த்திக் கொள்ளுங்கள்’’ என்றார். பின்னிரவின் கடுங்குளிரில் அந்தக் கம்பளியின் வெதுவெதுப்புக்குள் நான் தூங்கினேன்.

சிறு கோழிக்குஞ்சுகள் அன்னையின் சிறகின் கதகதப்புக்குள் கண் சொக்கி அமர்ந்திருப்பதை பார்த்திருக்கிறேன். இந்தியா என்ற ஒரு மாபெரும் அன்னையின் சிறகுக்குள் தூங்கிக் கொண்டிருப்பதாக அப்போது உணர்ந்தேன். உணவகங்களில் இருந்து எவரும் எதையும் திருடிக்கொண்டு செல்லமுடியாது. ஆகவே, சென்று அமர்ந்து முதலில் சாப்பிட்டுவிட்டு வேலை கேட்க முடியும். சமையல் தெரிந்தவர் என்றால், அரசனுக்கு நிகராகப் பயணம் செய்யலாம்.

‘‘பசித்து வரக்கூடிய ஒவ்வொருவருக்கும் உணவளிக்க வேண்டுமென்று எங்கள் குரு ஆணையிட்டதன் பேரில்தான் இந்த குருத்வாராவை கட்டியிருக்கிறோம். இது கோயில் அல்ல, குருவைச் சந்திக்கும் வாயில்.’’

இந்தியா முழுக்க எதையோ தேடி தனிமனிதர்கள் வீட்டை விட்டுக் கிளம்பிக்கொண்டேதான் இருக்கிறார்கள். சமூகத்தையும், குடும்பத்தையும், மொத்த நாகரிகத்தையும் உதறி அவர்கள் வெளியே செல்கிறார்கள்.

(தரிசிக்கலாம்...)