ஃபேன்டஸி கதைகள்



குறட்டை விலை!

செல்வு@selvu

அவள் ஒரு வினோதமான சாபத்தினால் பீடிக்கப்பட்டிருந்தாள். யாரோ ஒருவர், தீப்பொறி பறக்கும் கோபத்தில் அவளுக்கு சாபம் கொடுத்திருப்பார்கள் என்றெல்லாம் சொல்லமுடியாது. கடும் கோபத்தில் இருந்தபோதெல்லாம் இவ்வளவு காமெடியாக யோசித்து சபிக்க முடியாது. அதனை சாபத்தில் சேர்ப்பதா, நோயில் சேர்ப்பதா, மனநோயில் சேர்ப்பதா, இல்லை... ப்ளாக் மேஜிக் என்று சொல்லக்கூடிய மாய மந்திர வகைகளில் சேர்ப்பதா என்பதே பெரும் குழப்பமாகத் தொடர்ந்து கொண்டிருந்தது.

பிரச்னை என்னவென்றால், அவளுக்கு தினமுமே யாரோ ஒருவர் தூங்கும்போது விடுகிற குறட்டைச் சத்தத்தைக் கேட்டால்தான் அவள் சாப்பிட்ட உணவு செரித்தது. சிரிக்க வேண்டாம்! உண்மையிலேயே யாரோ குறட்டை விட்டுத் தூங்கும்போது, அவரது குறட்டைச் சத்தத்தைக் கேட்டால் மட்டுமே அவள் சாப்பிட்ட எந்த ஒரு உணவுமே செரிக்க ஆரம்பிக்கும். இல்லாவிட்டால் அவள் சாப்பிட்ட திரவ உணவுகள்கூட செரிப்பதில்லை. அஜீரணக் கோளாறாக மாறி மிகக் கடுமையாக அவளது உடல்நலத்தைக் கெடுத்தது.



ஆரம்பத்தில் இது ஒரு உடல்நலப் பிரச்னை என்றுதான் அவள் நம்பியிருந்தாள். பெரிய பெரிய மருத்துவமனைகளுக்குச் சென்று, தலை முதல் பாதம் வரையிலும் செய்யக்கூடிய எல்லா டெஸ்ட்களையும், ஸ்கேன்களையும் எடுத்துப் பார்த்தபிறகு ‘என்ன பிரச்னை?’ என்று டாக்டர் முகத்தைப் பார்த்தால், அவர் சிரித்துக்கொண்டே ‘‘உங்களுக்கு ஒரு பிரச்னையும் இல்லை’’ என்று கோபமூட்டினார். ஏதாவது வாயில் நுழையாத பெயரைச் சொல்லி, நான்கைந்து மாத்திரைகளைக் கொடுத்து அனுப்பி இருந்தால் கூட சந்தோஷப்பட்டிருப்பாள்.

ஒரு டாக்டருக்குக் கூட அவள் உடலில் எந்தப் பிரச்னையும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், ஏன் இப்படி அஜீரணக் கோளாறு ஏற்படுகிறது? எந்தப் புத்தகத்திலுமே இப்படி ஒரு நோயைப் பற்றி ஒரு வரி கூட எழுதப்படவில்லை என்று தாங்கள் ஆறேழு வருடம் படித்த டாக்டர் படிப்பின் மேல் சத்தியம் அடித்துச் சொன்னார்கள்.

உடலின் ஒவ்வொரு பாகத்தையும் வெட்டி ஒட்டாத குறையாக சலித்து எடுத்து, எதுவுமில்லை என்று தெரிந்த பின்னர், மனநல மருத்துவரிடம் போய்ப் பார்ப்பதென்று முடிவானது. குறட்டைச் சத்தத்தைக் கேட்டால் மட்டுமே உணவு செரிக்கிறது என்ற விபரத்தைக் கேட்டுக்கொண்ட மனநல மருத்துவரும், தன்னால் இயன்ற எல்லா வித்தைகளையும் செய்து பார்த்தார். கடைசியில் ஒன்றும் பலிக்காமல், அவரே குறட்டை விட்டுத் தூங்க ஆரம்பித்துவிட்டார்.

இது என்ன மாதிரியான பிரச்னை? ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கு ஒருமுறையும் யாரோ ஒரு புதிய நபரின் குறட்டைச் சத்தத்தை அவள் கேட்டிருக்க வேண்டும். அப்படிக் கேட்டுவிட்டால் அவளது உடலுக்கோ, செரிமானத்திலோ எந்தக் கோளாறும் ஏற்படுவதில்லை. மிகச் சரியாக எஞ்சின் ஓடிக் கொண்டிருக்கும். அப்படிக் கேட்காமல் விட்டுவிட்டால்தான் பிரச்னை ஆரம்பிக்கும்.

அவள் பெரும் பணக்காரிதான். அப்படி இருப்பவள் குறட்டை விட்டுத் தூங்குவதற்கென்றே ஒரு அலுவலகத்தை ஏற்படுத்தி, அதில் நான்கைந்து குறட்டை ஆசாமிகளை வேலைக்குச் சேர்த்துத் தூங்கச் சொன்னால், ஷிஃப்ட் கணக்கில் அவர்கள் குறட்டை விட்டுத் தூங்கி, இவளது இந்தப் பிரச்னையை மிகச் சுலபமாக சுபம் போட்டு முடித்து வைப்பார்களே! இப்படி யோசித்துப் பார்க்கலாம்தான். ஆனால் இவளது சாபமோ, நோயோ, தினமும் புதுப் புது நபர்களின் குறட்டை ஒலியைக் கேட்டது.

இன்று ஒரு நபரின் குறட்டை ஒலியைக் கேட்டுவிட்டதும் அவரது ஒன் டைம் பாஸ்வேர்ட் காலாவதியாகிவிடும். அதற்குப் பின்னர் அந்த நபர் ஆயிரம் டெசிபெல் சத்தத்தில் குறட்டை அடித்தாலும் இவளது செரிமான மண்டலம் அசால்ட்டாக ஒரு சைடு லுக் விட்டுவிட்டு தூங்கிப் போகும். மறுபடி பிரச்னைதான். அதனால் ஒருபக்கம் மருத்துவம், மாந்திரீகம், கோயில்களுக்கு மணி கட்டி வைக்கிறேன், மொட்டை அடிக்கிறேன் வேண்டுதல்களின் ஊடே, தினமும் ஒரு புதிய நபரின் குறட்டை ஒலிச் சத்தத்தினைக் கேட்க வேண்டுமென்பதற்காக ஒரு ஆபீசரை வேலைக்கு அமர்த்தி, அந்த நகரத்தில் இருந்த வீடுகளிலெல்லாம் தேடி, குறட்டை விட்டுத் தூங்கும் நபர்களைக் கண்டுபிடித்து, அவர்களிடம் மேட்டரை விளக்கி, அவர்களின் அனுமதியைப் பெற்று, குறட்டையை விலைக்கு வாங்கி காலம் தள்ளி வந்தாள்.

ஆமாம்... குறட்டைச் சத்தத்தை விலை கொடுத்துத்தான் வாங்கினார்கள். ஒரு நாளைக்கு ஒரு நபர் குறட்டை விட்டுத் தூங்கும் காட்சியைப் பார்ப்பதற்கு ஆயிரம் ரூபாய் என்ற கணக்கில் கொடுத்துவந்தார்கள். பணம் கொடுப்பதெல்லாம் அவளுக்கு ஒரு பிரச்னையே இல்லை. அந்த நகரத்தின் மிக முக்கியப் பணக்காரர்களில் அவளும் ஒருத்தி. இந்த நோயின் பிரச்னையே, குறட்டை விட்டுத் தூங்கும் நபரை நேரில் சென்று பார்க்க வேண்டும். ஒரு மணி நேரமோ, முக்கால் மணி நேரமோ கூட கண்ணை இமைக்காமல் பார்க்க வேண்டியதில்லை.

ஒரு நொடி அந்தப் புதிய நபர் தூங்குகிற காட்சியையும், குறட்டை விடுகிற சத்தத்தையும் கேட்டால் போதும்... அடுத்த 24 மணி நேரத்திற்கு காட்டுக்குள் கிடக்கும் பாறாங்கல்லை உடைத்தோ, உடைக்காமலோ நறுக் நறுக்கென்று கடித்து விழுங்கினாலும் செரித்துவிடும். கிட்டத்தட்ட நான்கைந்து வருடங்கள் அந்தக் கிறுக்குத்தனமான நோயுடன் வாழ்ந்து வந்தாள். இப்பொழுது எந்த மருத்துவரையும் அவள் நம்புவதில்லை.

எந்த ஹீலர்களையும் கண்டுகொள்வதில்லை. அன்டார்க்டிகா தவிர மீதமிருக்கும் எல்லா கண்டங்களிலும் உள்ள அநேக மருத்துவர்களையும் பார்த்துவிட்டாயிற்று. ஒன்றும் பலனில்லை. தினமும் ஒரு குறட்டை ஆசாமியைப் பார்த்தேதான் தன் இறுதி நாள் வரையிலும் வாழ்ந்தாக வேண்டும் என்று யோசித்து அழுதாள். இந்த நோயைப் பற்றி நண்பர்களும், உறவினர்களும் இவளைக் கிண்டல் செய்ய ஆரம்பித்திருந்தனர். கிட்டத்தட்ட அவளுக்கு நெருங்கிய தோழிகள் அவளது பெயரை செல்போனில் ‘குறட்டை ஃப்ரெண்ட்’ என்றுதான் பதிந்து வைத்திருந்தார்கள். இப்படியெல்லாமா ஒரு ஜீவனுக்கு சோதனைகள் வரும்?

எந்தப் புதிய மனிதனைப் பார்க்கும்போதும் ‘‘உங்களுக்குக் குறட்டை வருமா?’’ என்று கேட்கத் தோன்றியது. புதிதாக நட்பு வட்டத்தில் இணைகின்ற நண்பர்களிடம், ‘‘குறட்டைச் சத்தத்தைக் கேட்காமல் உங்களுக்கு உணவு செரிக்குமா?’’ என்றுகூட கேட்டிருக்கிறாள். அவர்களுக்கு இந்தக் கேள்வியே புதிதாக இருக்கும். யாரையாவது வாழ்த்தும்போதுகூட ‘‘குறட்டைச் சத்தத்தைக் கேட்டால்தான் உணவு செரிக்கும் என்ற நோயில்லாமல் நீடூழி வாழுங்கள்’’ என்று வாழ்த்தினாள்.

ஃபிளாஷ்பேக் யோசித்தபடி கண் கலங்கியவள், இந்த நொடிக்குத் திரும்பினாள். அன்றைய தினத்திற்கான குறட்டை நபரது வீட்டு முகவரியைக் கொடுத்து, அவருக்குப் பணம் கொடுத்ததற்கான அத்தாட்சியையும் கொடுத்துவிட்டு, அவளது மேனேஜர் அன்றைய வேலையை முடித்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றுவிட்டான். இவள் கிளம்பி அந்த வீட்டினை அடைந்து, குறட்டை விட்டுக் கொண்டிருந்த அந்த நபரைப் பார்த்ததும் மிகப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

அங்கே தூங்கிக் கொண்டிருந்தது, அவளது கணவன். ‘தூங்கும்போது தனக்குக் குறட்டை வரும்’ என்ற உண்மையை மறைத்துத் திருமணம் செய்து கொண்டான் அவன். இதனால், திருமணமான இரண்டாவது நாளே அவனை விட்டுப் பிரிந்து வந்திருந்தாள்.  ‘குறட்டைச் சத்தத்தைப் படிப்படியாகக் குறைத்துக் கொள்ளலாம்... அதற்கு எத்தனையோ மருத்துவ வழிகள் இருக்கின்றன’ என்று அவன் அழுது பார்த்தான். ‘அதெல்லாம் முடியாது, விவாகரத்துதான் ஒரே தீர்வு’ என்று நின்று, விவாகரத்தும் செய்துகொண்டு, அந்த நபரைத் தனது நினைவில் இருந்து முழுவதுமாக அழித்தும் விட்டாள்.

இப்பொழுது அவனைப் பார்த்ததும் திடீரெனப் பாசம் பொங்கி வழிந்து, அழுகை வந்தது. அவனது கெஞ்சல்களை நினைத்துப் பார்த்தாள். பின், அவனது குறட்டை விடும் பிரச்னையை ஒரு பொருட்டாகக் கருதாமல் அவனுடனே இணைந்து வாழலாம் என்று முடிவெடுத்து அவனை எழுப்பினாள். அவன் படுத்திருந்த தலையணையில், ‘எந்தக் குறட்டை நம்மைப் பிரித்ததோ, அதே குறட்டை நம்மைச் சேர்த்து வைக்கும்’ என்று எழுதியிருந்தது.                      

இதனை சாபத்தில் சேர்ப்பதா, நோயில் சேர்ப்பதா, மனநோயில் சேர்ப்பதா, இல்லை... ப்ளாக் மேஜிக் என்று சொல்லக் கூடிய மாய மந்திர வகைகளில் சேர்ப்பதா?

யாரையாவது வாழ்த்தும்போதுகூட‘‘குறட்டைச் சத்தத்தைக் கேட்டால்தான் உணவு செரிக்கும் என்ற நோயில்லாமல் நீடூழி வாழுங்கள்’’ என்று வாழ்த்தினாள்.