அப்பா



இளங்கோ

சரவணன் அலுவலகம் முடித்துவிட்டு வழக்கம் போல தன் நண்பர்களுடன் டாஸ்மாக் பாரை நோக்கி நடந்தான். தினமும் இரவு ஒன்பது மணி வரை நண்பர்களுடன் சேர்ந்து குடித்து கும்மாளமிடுவது அவன் வழக்கம். அன்றும் அப்படி குடித்துவிட்டு அரை போதையில் அவன் வீடு வந்து சேரும்போது மணி பத்தாகிவிட்டது.

அம்மா பார்வதி பதற்றத்துடன் வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்தாள். ‘‘டேய் சரவணா... அப்பாவை இன்னும் காணலைடா!’’ - அவள் கண்களிலிருந்து நீர் வழிந்தது. தினமும் வேலையை முடித்துவிட்டு ஆறு மணிக்கே வந்துவிடுபவராச்சே... எங்கே போயிருப்பார்? ‘‘நீ கவலைப்படதேம்மா. நான் போய் பார்க்கிறேன்!’’ என்று பைக்கைத் திருப்பினான்.



எங்கெங்கோ அலைந்து தேடி கடைசியாக மதுபானக் கடை வாசலில் விழுந்து கிடந்தவரைப் பார்த்ததும் அதிர்ச்சி. அப்பாவுக்கு குடிக்கிற பழக்கமில்லையே..! ஏன் இப்படி மிதமிஞ்சிய போதையில் மயங்கிக் கிடக்கிறார்? அப்படியே ஒரு ஆட்டோ பிடித்து அவரை அள்ளிப் போட்டுக் கொண்டு வீடு வந்து கட்டிலில் படுக்க வைத்தான்.

அடுத்த நாள் கண் விழித்த அப்பாவிடம் சற்றுக் கோபமாகவே பேசினான் சரவணன். ‘‘அப்பா! என்னப்பா இது புதுப் பழக்கம்? ஏன் நேத்து குடிச்சீங்க?’’ ‘‘நீ தினமும் குடிக்கிறேங்கிறதை நினைச்சுத்தான்டா... எனக்குக் கவலை அதிகமாச்சு. அதான் குடிச்சேன்..!’’ அப்பாவின் வார்த்தையில் அதிர்ந்துபோய் நின்றான் சரவணன்.