என் ஒவ்வொரு போராட்டக்களத்திலும் புவனா ஒரு அங்கமா இருக்கா!



‘‘நம் இயல்புக்கு திருமணம் பொருந்தாதுன்னு தீர்க்கமா நம்பின ஆள் நான். புவனேஸ்வரியோட சமூக அக்கறையும் வேகமும் பெரிய நம்பிக்கையை எனக்குள்ள உருவாக்குச்சு. என் வாழ்க்கையில நான் எடுத்த ரெண்டு முடிவுகள் ரொம்பவே முக்கியமானவை. ஒண்ணு, வேலையை விட்டுட்டு முழுநேரமும் பொதுப் பிரச்னைகளுக்காக இயங்குறது. இன்னொன்று, புவனேஸ்வரியை திருமணம் செய்தது. எவ்வளவு பெரிய பிரச்னைகள் வந்தாலும், அதையெல்லாம் எதிர்கொள்ற துணிவையும், உத்வேகத்தையும், உற்சாகத்தையும் தர்றது புவனேஸ்வரிதான். அவங்க இல்லாத வாழ்க்கை எப்படி அமைஞ்சிருக்கும்னு கற்பனை பண்ணவே சிரமமா இருக்கு!’’

- காதல் மனைவி புவனேஸ்வரியின் கரம் கோர்த்து நெகிழ்கிறார் செந்தில் ஆறுமுகம். மதுக்கடைகளுக்கு எதிராக, லஞ்ச ஊழலுக்கு எதிராக, அதிகார முறைகேடுகளுக்கு எதிராக களத்தில் நிற்கும் சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச் செயலாளர். தினமொரு போராட்டம், நாளொரு சிறை என பொதுவெளியிலேயே வாழ்க்கையைக் கழிக்கும் செந்திலுக்கும் வந்தது காதல். இரு குடும்பங்களும் எதிர்த்து, பின்னர் இணங்க, காதல் திருமணமாகக் கூடியது.

‘‘பொதுவா, முதல் பார்வையிலேயே வர்ற மாதிரி இனக் கவர்ச்சியெல்லாம் இல்லே. உண்மையைச் சொல்லணும்னா, புவனேஸ்வரியை நான் ‘புரப்போஸ்’ பண்ணும்போது, அவங்க முகம் கூட எனக்கு நினைவில் இல்லை. அப்போ நான் அமெரிக்காவில இருந்தேன். புவனா, கோவையில ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில இருந்தாங்க. ‘சிந்தனைச் சிற்பிகள்’னு ஒரு அமைப்பு நடத்திக்கிட்டிருந்தோம். அதுல புவனா ரொம்பவே ஆர்வமா வேலை செஞ்சாங்க. இந்த மாதிரி ஒரு மனைவி அமைஞ்சா நல்லாயிருக்குமேன்னு தோணுச்சு. ‘யாகூ மெசஞ்சர்’ல ‘நாம திருமணம் பண்ணிக்கலாமா’ன்னு கேட்டேன். உடனே சாட்ல இருந்து வெளியே போயிட்டாங்க. தப்பு செஞ்சிட்டோம் போலன்னு அன்னைக்கு ராத்திரியெல்லாம் தூக்கமேயில்லை. மறுநாள், ‘எதுவா இருந்தாலும் பேசி முடிவு பண்ணிக்கலாம், தவறா நினைக்காதீங்க’ன்னு சாட் பண்ணினேன். ‘அதெல்லாம் ஒண்ணுமில்லை’னு அவங்க பேச ஆரம்பிச்சாங்க. ரொம்பவே முதிர்ச்சியாதான் எங்க காதல் வளர்ந்துச்சு.

எனக்கு சொந்த ஊர், உடுமலைப்பேட்டைக்கு பக்கத்துல இருக்கிற கணியூர். அப்பா, சுகர் மில்லுல எஞ்சினியர். புவனாவுக்கு திருச்சி. அவங்க அப்பா பாரத் எர்த்மூவர் நிறுவனத்தில எஞ்சினியர். நான் எம்.சி.ஏ. முடிச்சதும் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில வேலை கிடைச்சுச்சு. பள்ளிக்காலத்திலேயே விவேகானந்தரை படிக்கிற வாய்ப்பு அமைஞ்சுது. பொறுப்பையும், லட்சியத்தையும் விவேகானந்தர்தான் எனக்குள்ள உருவாக்கினார். கல்லூரிக் காலங்கள்ல எம்.எஸ்.உதயமூர்த்தி என்னை அதிகம் பாதிச்சார். 

சுந்தரமூர்த்தின்னு ஒரு நண்பர் உண்டு. கோவைக்கு பக்கத்தில இருக்கிற வாவிப்பாளையத்தைச் சேர்ந்தவர். அவர் தன் கிராமத்துல நிறைய வேலைகள் செஞ்சுக்கிட்டிருந்தார். அவர்கூட இணைஞ்சு செயல்பட ஆரம்பிச்சேன். எல்லோரும் சேர்ந்து ‘சிந்தனைச் சிற்பிகள்’ அமைப்பை உருவாக்கினோம். இரவுப்பள்ளிகள் ஆரம்பிச்சோம். எல்லாரும் மாதா மாதம் அவங்க சம்பளத்துல 1 சதவீதத்தை அமைப்புக்குத் தருவாங்க. அதை வச்சு ஆசிரியர்களை நியமிச்சோம். மாலை நேரத்துல பெரியவங்களுக்கு எழுதப் படிக்க கத்துக் கொடுக்கிறது, நாட்டு நடப்புகள் பத்தி பேசுறது, பள்ளிக்குப் போகாத பிள்ளைகளுக்கு படிப்பு சொல்லிக் கொடுக்கிறது, படிக்கிற பிள்ளைகளுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்கிறது... இதுதான் முக்கியப் பணி. 

இடையில் நான் அமெரிக்கா போக வேண்டிய நிலை. கலிபோர்னியாவுல ஒரு பெரிய நிறுவனத்துக்கான ப்ராஜெக்ட் ஒர்க். அங்கிருந்தபடி வேலைகளை ஒருங்கிணைச்சேன். உயர்கல்விக்கு போகமுடியாத சில மாணவர்களைத் தேர்வு செஞ்சு, படிக்க உதவி செஞ்சோம். அந்தப் பணிகளை யார்கிட்ட ஒப்படைக்கலாம்னு யோசிச்சப்போதான் புவனேஸ்வரி ஞாபகம் வந்தது. ‘சிந்தனைச் சிற்பிகள்’ அமைப்புல சேர விருப்பமான்னு கேட்டு அலுவலகத்துல வேலை செஞ்ச எல்லோருக்கும் மெயில் அனுப்பினபோது, உடனடியா சம்மதம் சொல்லி, ஆர்வத்தோட இணைஞ்சு வேலை செஞ்சாங்க புவனா. அதனால அவங்களைக் கூப்பிட்டு, இந்த பணிகளை ஒப்படைச்சேன். தனிப்பட்ட முறையில நாங்க பேசிக்கிட்டது அப்போதான்...’’ - வெட்கிச் சிரிக்கும் புவனேஸ்வரியை ஓரக்கண்ணால் பார்த்தபடி சொல்கிறார் செந்தில் ஆறுமுகம்.

இப்போது புவனேஸ்வரி பேசுகிறார். ‘‘நான் டிரெய்னியா அந்த கம்பெனியில சேர்ந்தப்போ, இவர் ப்ராஜெக்ட் லீடர். எங்களுக்கு பயிற்சி கொடுக்க வந்தார். அப்போ பார்த்ததுதான். நான் ‘சிந்தனைச் சிற்பிகள்’ அமைப்புல சேர்ந்தப்போ, இவர் யு.எஸ்ல இருந்தார். நான் விடுமுறை நாட்கள்ல அந்த கிராமங்களுக்குப் போய் ஒர்க் பண்ணுவேன். திருப்தியாவும், சந்தோஷமாவும் இருக்கும். ஏதாவது முக்கியச் செய்திகள் இருந்தா யு.எஸ்ல இருந்தபடி எங்ககிட்ட பேசுவார்.

2001ல பஞ்சாயத்து தேர்தல் வந்துச்சு. சிந்தனைச் சிற்பிகள் அமைப்பு சார்பா, வாவிப்பாளையத்துல சுந்தரமூர்த்தியோட மனைவி சுதாவை வேட்பாளரா நிறுத்தினோம். தமிழ்நாட்டிலேயே மிக இளம் வயது பஞ்சாயத்து தலைவரா அவங்க தேர்வானாங்க. இது எங்களுக்கு பெரிய உற்சாகத்தைக் கொடுத்துச்சு.

அந்தத் தருணத்திலதான், மாணவர்களோட கல்வி உதவித் திட்டத்தை என்கிட்ட ஒப்படைச்சார். அதுக்கப்புறம் அது தொடர்பா அடிக்கடி பேசிக்கிறதுண்டு. எவ்வளவு மன அழுத்தம் இருந்தாலும் அவர்கூட பத்து நிமிடம் பேசினா கரைஞ்சு ஓடிடும். ஆனாலும் அவர்கிட்ட இருந்து அப்படியொரு சாட்டிங் புரப்போஸை எதிர்பார்க்கலே. ஆனா, அதுக்கப்புறம் யோசிக்கும்போது, அவரைத் தவிர்க்க முடியாதுன்னு தோணுச்சு. தொடக்கத்திலேயே, ‘நான் வேலையை விட்டுட்டு சமூகப் பணிகள்ல இறங்கிடுவேன்’னு அவர் சொல்லிட்டார். ‘நான் குடும்பத்தைப் பாத்துக்குவேன், நீங்க தாராளமா வேலையை விடுங்க’ன்னு சொல்லிட்டேன்.

2001 இறுதியில இங்கே வந்துட்டார். இந்த சூழல்ல, எனக்கு வீட்ல மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சாங்க. இனிமே அமைதியா இருக்க வேண்டாம்னு, ரெண்டு பேருமே வீட்டில பேசினோம். தொடக்கத்துல, அப்பா எங்க காதலை எதிர்க்கலே. அம்மாவும் கூட கொஞ்சம் சங்கடத்தோட ஏத்துக்கிட்டாங்க. ஆனா, இவர் வேலையை விடப் போறாருங்கிறதை யாரும் ஏத்துக்கலே. அவர் வீட்டுல காதலுக்கு பயங்கர எதிர்ப்பு. ரொம்பவே இறுக்கமா கொஞ்ச நாட்கள் ஓடுச்சு. ரெண்டு குடும்பத்தையும் சந்திக்க வச்சுப் பார்க்கலாமேன்னு முடிவு செஞ்சோம். ஆனா, அந்த சந்திப்புல கருத்து வேறுபாடு இன்னும் அதிகமாயிடுச்சு.

வெளியில சொல்லமுடியாத வேதனை. அதை வெளிக் காட்டிக்காம வேலைகளை செஞ்சுக்கிட்டிருந்தோம். கோவையில இருந்தா இவரையே நினைச்சுக்கிட்டிருப்பேன்னு சென்னைக்கு என்னை அனுப்பி வச்சாங்க. பக்கத்துல இருந்ததை விட தூரத்துல இருந்து இன்னும் மனசளவில நெருக்கமானோம். அவர் இல்லாத ஒரு வாழ்க்கை எனக்குத் தேவையில்லைன்னு நான் உறுதியா இருந்தேன். ஒரு கட்டத்துல ரெண்டு குடும்பமுமே எங்களைப் புரிஞ்சுக்கிட்டு, திருமணத்துக்கு நாள் குறிச்சாங்க. திருமணம் முடிஞ்சு, ரெண்டு வருஷத்துல வேலையை ரிசைன் பண்ணிட்டு ரெண்டு பேரும் சென்னைக்கு வந்தோம். நான் இங்கே ஒரு எம்.என்.சி கம்பெனியில சேந்தேன். இவர், உதயமூர்த்தி அய்யாவோட மக்கள் சக்தி இயக்கத்துல இணைஞ்சு தீவிரமா செயல்பட ஆரம்பிச்சார். தொடக்கத்துல கொஞ்சம் வருத்தமா இருந்த ரெண்டு குடும்பங்களும் கோபம் தணிஞ்சு இப்போ எங்களை ஏத்துக்கிட்டாங்க...’’ என்கிறார் புவனேஸ்வரி.

‘‘ஐ.டியில வேலை செய்றவங்களோட வாழ்க்கை முறை வித்தியாசமா இருக்கும். தம்பதிகளுக்குள்ள எதிர்பார்ப்புகளும் நிறைய இருக்கும். வீக் எண்ட்ல குடும்பத்தோட வெளியே போவாங்க. சினிமா, ஹோட்டல்... ஆனா, புவனேஸ்வரிக்கும் பிள்ளைகளுக்கும் அப்படியான ஒரு வாய்ப்பை நான் உருவாக்கித் தரவேயில்லை. விடுமுறை நாட்கள்ல கூட அவங்ககூட இருக்க முடியாது. மதியம் வந்திடுவேன்னு சொல்லிட்டுப் போவேன். எங்காவது திடீர்னு ஒரு போராட்டம் தொடங்கும். ரிமாண்ட் பண்ணிடுவாங்க. 10 நாள் கழிச்சு வீட்டுக்கு வருவேன். அதே புன்சிரிப்போட என்னை எதிர்கொள்வா புவனா. என் ஒவ்வொரு போராட்டக் களத்துலயும் புவனா ஒரு அங்கமா இருக்கா...’’ - செந்திலின் வார்த்தைகளில் பெருமிதம் பொங்குகிறது.

நிவேதிதாவும், இரட்டையர்களான சுபாஷும், மோகனும் இந்தத் தம்பதியின் வாழ்வை மேலும் அர்த்தமுள்ளதாக மாற்றியிருக்கிறார்கள்.

கோவையில இருந்தா இவரையே  நினைச்சுக்கிட்டிருப்பேன்னு சென்னைக்கு என்னை அனுப்பி வச்சாங்க. பக்கத்துல  இருந்ததை விட தூரத்துல இருந்து இன்னும் மனசளவில நெருக்கமானோம்.

- வெ.நீலகண்டன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்