நத்தை நீதி தேவதை!



ராபின் மெயின் என்ற பெயரே அறியாத இரண்டு தலைமுறைகள் பிறந்து வளர்ந்துவிட்ட பிறகு வந்திருக்கிறது அந்தத் தீர்ப்பு. 33 ஆண்டுகளுக்கு முன்பு நிதி மோசடி வழக்கில், அப்போதைய அ.தி.மு.க அமைச்சர் காளிமுத்துவோடு சேர்ந்து சிக்கிய ராபின் மெயின் குற்றவாளிதான் என தீர்ப்பு சொல்ல கோர்ட் எடுத்துக்கொண்ட காலம், 33 ஆண்டுகள். ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விரைவாக விசாரிக்க தனி நீதிமன்றமே அமைத்தும், 20 ஆண்டுகள் கடந்த நிலையில் இன்னமும் சுப்ரீம் கோர்ட்டில் இறுதித் தீர்ப்புக்காக காத்திருக்கிறது அந்த வழக்கு.

இன்றைய தேதியில் ஒரே ஒரு வழக்கைக்கூட புதிதாக எடுத்துக்கொள்ளாமல், இந்தியா முழுக்க நிலுவையில் இருக்கும் சுமார் 3 கோடியே 20 லட்சம் வழக்குகளை விசாரித்து தீர்ப்பு கூறி முடிக்க 300 ஆண்டுகள் ஆகக்கூடும் என்கிறார்கள். ‘விரைந்த நீதிக்கான மேடை’ என்ற அமைப்பு, வழக்கு விசாரணையை விரைவுபடுத்தக் கோரி இந்தியா முழுக்க இப்போது விழ்ப்புணர்வு யாத்திரை நடத்துகிறது. அது சாத்தியமாகுமா?

1. கேவலம் ஐந்து பைசாவுக்காக ஒரு வழக்கு 41 ஆண்டுகள் நடந்தது என்றால் நம்புவீர்களா? டெல்லி போக்குவரத்துக் கழகத்தில் கண்டக்டராக இருந்த ரண்வீர் சிங், ஒரு பெண்ணுக்கு 15 பைசா டிக்கெட் தருவதற்கு பதிலாக 10 பைசா டிக்கெட் கொடுத்து அரசுக்கு 5 பைசா இழப்பு ஏற்படுத்தி விட்டதாக பறக்கும் படையினர் சோதனையில் கண்டுபிடித்து சஸ்பெண்ட் செய்தனர். பிறகு விசாரணையில் ‘தவறு’ உறுதியானதால் டிஸ்மிஸ் செய்தனர். இது நடந்தது 1973ம் ஆண்டு. அதை எதிர்த்து அவர் வழக்கு போட்டார். டெல்லி உயர் நீதிமன்றம் வரை வழக்கு ஒவ்வொரு கட்டமாக வந்து 41 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வந்தது, ரண்வீர் சிங்கை டிஸ்மிஸ் செய்தது தவறு என! ஐந்து பைசா மேட்டருக்கு வழக்கு நடத்த, டெல்லி போக்குவரத்துக் கழக அதிகாரிகள் செய்த செலவு, 7 லட்ச ரூபாய்.

2. அசாமைச் சேர்ந்த மச்சாங் லாலுங் என்பவருக்கு நேர்ந்த கொடூரம், நாகரிக மனிதர்கள் யாரையும் வெட்கித் தலைகுனிய வைத்துவிடும். கொலை முயற்சி வழக்கு ஒன்றில் 1951ம் ஆண்டு அவரைக் கைது செய்தார்கள். முறையாக வழக்கு நடத்தி அவருக்கு தண்டனை வாங்கிக் கொடுத்திருந்தால்கூட, அதிகபட்சம் 10 ஆண்டுகள் அவர் சிறையில் இருக்க நேர்ந்திருக்கும். ஆனால் சிறையில் மனநலம் பாதிக்கப்பட்ட அவர், 44 ஆண்டுகள் விசாரணைக் கைதியாகவே இருந்தார். மனித உரிமை அமைப்பு ஒன்று அவரை அடையாளம் கண்டிருக்காவிட்டால் சிறையிலேயே செத்துப் போயிருப்பார்.

3. ‘ரெகுலர் வழக்கு போட்டால் தாமதமாகிறது; பொதுநல வழக்கு போட்டால் சீக்கிரமே தீர்ப்பு வருகிறது’ என பலர் நம்புகிறார்கள். ‘தொழிற்சாலைக் கழிவுகளையும் சாக்கடை தண்ணீரையும் யமுனை நதியில் கலக்க அனுமதிக்கக்கூடாது’ என சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு போட்டார் சுரேஷ்வர் சின்ஹா என்பவர். 24 ஆண்டுகளாகியும் தீர்ப்பு வராமல், ‘அதிக காலம் நிலுவையில் இருக்கும் பொதுநல வழக்கு’ என சாதனை புரிந்திருக்கிறது இந்த வழக்கு. அமெரிக்காவில் ஒரு வழக்கை மூன்று ஆண்டுகளுக்குள் விசாரித்து தீர்ப்பு சொல்ல வேண்டும் என சட்டம் இருக்கிறது. இந்தியாவில் அப்படி எதுவும் காலக்கெடு இல்லை. பரபரப்பாக பேசப்படும் வழக்குகள் தவிர, மற்ற வழக்குகளின் கதி கவலைக்குரியதாக இருக்கிறது. அதிலும் சிவில் வழக்குகள் என்றால் இன்னும் மோசம்.

கிரிமினல் வழக்குகளில் தீர்ப்பு தாமதமாவதில் பாதிக்கப்படுபவர்கள், விசாரணைக் கைதிகள். ஒரு வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்படும் நபர், குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டால் கிடைக்கும் தண்டனையைவிட அதிக காலம் சிறையில் இருக்க நேர்வது கொடுமை. இந்திய சிறைகளில் இருக்கும் கைதிகளில், 67 சதவீதம் பேர் விசாரணைக் கைதிகள்தான். ஒரு வழக்குக்குரிய அதிகபட்ச தண்டனைக் காலத்தில் பாதியை சிறையில் கழித்தாலே, வெளியில் வர முடியும். இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு 436Aயின் படி, ‘விசாரணைக்கு முறையாக ஆஜராவேன்’ என ஒரு ஒப்புதல் பத்திரம் எழுதித் தந்து, சிறையிலிருந்து வெளியில் வர முடியும். ஆனால் இது நிறைய பேருக்குத் தெரிவதில்லை. ‘இதன்படி செய்து சிறையில் கைதிகள் நெரிசலைக் குறையுங்கள்’ என நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவுகளும் மதிக்கப்படவில்லை.

நீதிமன்றத்தில் நிறைய வழக்குகள் தேங்குவதற்குக் காரணம், அரசுத்துறைகள்தான். டெல்லி கண்டக்டர் விவகாரம் மாதிரி தேவையற்ற ஈகோவில் வழக்கு நடத்துகிறார்கள். தேவையற்ற வழக்குகளைத் தவிர்க்க, ‘தேசிய வழக்குக் கொள்கை’ ஒன்றை மத்திய அரசு கொண்டு வரப் போகிறது.

‘‘நீதிபதிகள் பற்றாக்குறையே வழக்குகள் தேங்கக் காரணம்’’ என்கிறார், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தாக்கூர். அமெரிக்காவில் 10 லட்சம் பேருக்கு 151 நீதிபதிகள் இருக்கிறார்கள்; இந்தியாவில் வெறும் 12 பேர் மட்டுமே! அதிலும் பல இடங்கள் காலி. புதிய நியமனங்களும் தள்ளிப் போகின்றன. கட்டிடங்கள் இல்லை; கிளார்க் போன்ற வசதிகள் இல்லை. நிறைய இடங்களில் நீதிபதிகளே எல்லாவற்றையும் கையால் எழுத வேண்டியுள்ளது. ‘‘இந்தியாவில் ஒரு நீதிபதி சராசரியாக ஒரு வேலைநாளில் 150 வழக்குகளைப் பார்க்க வேண்டியுள்ளது. இதையெல்லாம் தாண்டி, நிலுவையில் உள்ள வழக்குகளைத் தீர்க்க முயற்சிக்கிறோம். இத்தனை வழக்குகள் நீதிமன்றத்தில் காத்திருக்கின்றன என்றால், எளிய மக்கள் நீதித்துறை மீது நம்பிக்கை இழக்காமல் இருக்கிறார்கள் என்றே அர்த்தம்’’ என்கிறார் தலைமை நீதிபதி. தாமதத்தால் நீதி மறுக்கப்படக் கூடாது!

- அகஸ்டஸ்