நேரம்



வீட்டில் எல்லோரும் சோனாவுக்கு ‘ஹேப்பி பர்த் டே’ சொல்லிவிட்டார்கள். காலேஜ் தோழிகளும் போனில் வாழ்த்தி விட்டார்கள். வாட்ஸ்அப் குரூப்களிலும், ஃபேஸ்புக்கிலும் ஏகப்பட்ட வாழ்த்துச் செய்திகள். ஆனால் அவளுடைய காதலன் விஷாலிடமிருந்து மட்டும் எந்த அழைப்பும் இல்லை.

‘‘பையன் நம்ம பர்த் டேவை மறந்துட்டானோ?’’ - சோனா கொதித்துப் போனாள். மணி 9, 10, 11, 12 என்று ஓடி, மாலை 5ம் ஆகிவிட்டது. இன்னும் விஷாலிடமிருந்து போனைக் காணோம்.சரியாக ஐந்தரைக்கு ‘விஷாலி’ என்ற ஒளிர்வுடன் செல் அலற, ‘படவா ராஸ்கல்’ என மனதில் சீறியபடி ‘நங்’ எனப் பச்சையை அழுத்தினாள்.

‘‘ஸ்வீட்டி, ஹேப்பி பர்த் டே டு யூ..!’’

‘‘உனக்கு இப்பத்தானாடா விடிஞ்சது..?’’ என்று சோனா எகிறினாள். ‘‘என்ன ஹனி, இப்பிடி எரிஞ்சு விழுறே? சரியான நேரத்துக்கு வாழ்த்தினாதானே அது வாழ்த்து, ‘உன் ஜில் கேர்ள் ஈவினிங் சரியா அஞ்சரை மணிக்குத்தான் பிறந்தாள்’னு நீ முன்னாடி என்கிட்ட சொல்லலை..? அதான் வெயிட் பண்ணி அஞ்சரைக்கு வாழ்த்தினேன்! சரி, காலிங் பெல் சத்தம் கேக்குதுல்ல... போய்க் கதவைத் திற! கூரியர் பையன் நான் அனுப்பின பர்த் டே கிஃப்ட்டைக் கொண்டு வந்திருப்பான்! சரியா அஞ்சரைக்குக் குடுக்கணும்னு அவனுக்குக் கை நிறைய டிப்ஸ் குடுத்திருக்கேன்!’’ சோனா குளிர்ந்து போனாள்!

சுபமி