bits



கண்ணன் நவநீத கிருஷ்ணனாக, திருநெல்வேலி மாவட்டம் மருதூரில் கோயில் கொண்டுள்ளான். தாமிரபரணியில் நீராடி இந்த பாலகிருஷ்ணனை தரிசித்து பால்பாயசம், வெண்ணெய் நிவேதித்தால் மழலைப் பேறு கிட்டுகிறது. சாபத்தால் மருத மரங்களான தேவர்களுக்கு சாபவிமோசனம் தந்து இத்தலத்தில் நிலை கொள்ள வைத்திருக்கிறான் இந்தக் கண்ணன்.

சென்னை மயிலாப்பூரில் டாக்டர் ரங்கா சாலையில் ஆலயம் கொண்டுள்ளான் கண்ணன். தங்கத்தை உரசிப் பார்க்கும் கல்லால் ஆனவன் இந்த கண்ணன். ஆலயத்தின் சார்பில் பல்வேறு தர்மகாரியங்கள் நடைபெறுகின்றன. கிருஷ்ண ஜயந்தியின்போது ஆலயம் திருவிழாக் கோலம் பூண்டிருக்கும்.

அஷ்டபுஜ - பால - மதன - வேணுகோபாலன் - இந்தப் பெயரில் கண்ணன் அருளும் கோயில், சேலம் மாவட்டம் பேளூரில் உள்ளது. இங்கே பெருமாள் எட்டு கைகளுடன் அருட்பாலிக்கிறார். ராமாயணத்தில் சீதாபிராட்டியைக் காப்பாற்ற முயன்ற ஜடாயுவை, சிறகுகள் வெட்டப்பட்ட நிலையில் இங்கு தரிசிக்கலாம். இந்த பெருமாள் வலது கன்னம் ஆண்களைப் போல சொரசொரப்புடனும் இடது கன்னம் பெண்களைப் போல வழுவழுப்பாகவும் கொண்டுள்ளார்.

பரமக்குடியிலிருந்து 8 கி.மீ. தொலைவிலுள்ள இளையான்குடியில் உள்ள கோயிலின் மூலவரும் வேணுகோபாலன்தான். புல்லாங்குழல் நாத ஆறுதலாக பக்தர்களின் எல்லா கவலைகளையும் கலைத்து நிம்மதியைத் தருபவர் இவர்.

தென்னாங்கூரில் உள்ள பாண்டுரங்கன் ஆலயத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித தோற்றத்தில் பாண்டுரங்கனையும் ருக்மாயியையும் அலங்கரிக்கின்றனர். ஆலயம் முழுவதும் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கண்ணனின் திருவிளையாடல்களை தஞ்சாவூர் ஓவியங்களாகவும் ம்யூரல் சிற்பங்களாகவும் தரிசிக்கலாம்.

சென்னை  - நங்கநல்லூரில் உள்ளது உத்தரகுருவாயூரப்பன் ஆலயம். இங்கு கிருஷ்ணஜெயந்தியன்று இரவு பன்னிரெண்டு மணிக்கு முதலில் மகாமாயாவிற்கு பூஜைசெய்து பின் அடுத்த நிமிடம் கண்ணனுக்கு தீபாராதனை செய்து பூஜை செய்யப்படுகிறது.

காஞ்சிபுரத்திலேயே திருப்பாடகம் எனும் தலத்தில் பாண்டவதூதர் எனும் திருநாமத்தோடு கிருஷ்ணர் அருள்கிறார். ருக்மணி, சத்யபாமாவோடு சேவை சாதிக்கிறார். ஜெனமேஜெய மகராஜாவுக்கும் ஹரித முனிவருக்கும் இங்கே கிருஷ்ணனின் காட்சி கிடைத்தது.

சென்னை - புதுச்சேரி இ.சி.ஆர். ரோடில் கல்பாக்கத்தை அடுத்து விட்டலாபுரம் எனும் தலம் உள்ளது. மூலவராக விட்டலனும் ருக்மாயியும் சேவை சாதிக்கின்றனர். பிரிவின் எல்லைக்கே போன தம்பதியரின் வேதனை போக்கி, அவர்களை ஒன்றாக்கி மகிழ்வளிக்கிறார்கள் இந்தக் கோயில் தம்பதியர்.

தொகுப்பு : ந.பரணிகுமார்