குழந்தை வரமருளும் குட்டி கிருஷ்ணன் கோயில்கள்



கடவுளைக் குழந்தையாகக் கருதி வழி படுவதற்கு ‘‘வாத்சல்ய பாவம்’’ என்று பெயர். ‘குட்டிக் கிருஷ்ணனுக்குத் தாயாகித் தாலாட்டும் பெரியாழ்வாரின் பாசுரங்கள் தாயன்பை வெளிப்படுத்துகின்றன. குழந்தைகளின் விளையாட்டைக் காணும் போது சின்ன கண்ணனின் லீலைகளை நினைத்துக் கொண்டால் பக்தி மேன் மேலும் வளரும். அந்த பக்தியால் குழந்தைகளிடம் அளவற்ற அன்பு வளரும் என்பார்கள். பாலகிருஷ்ணனின் கட்டு மீறிய பால்ய விநோதங்களே மூலைக்கு மூலை இன்றும் சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன. பொதுவாக ‘கிருஷ்ண பக்தி’ என்பது பக்தர்களுக்குப் பிடிக்கும். ஆனால், குட்டி கிருஷ்ணனின் லீலைகளோ அனைவருக்கும் பிடிக்கும்.

கிருஷ்ண பரமாத்மாவுக்கு உலகமெங்கும் ஆயிரக்கணக்கான கோயில்கள் இருக்கின்றன. அவர் நின்றும், இருந்தும், கிடந்தும் பல திருக்கோலங்கள் கொண்டு பால பருவம் தாண்டிய நிலையில் எங்கும் காணப்படுகிறார். ஆனால், கிருஷ்ணனாக, பால கோபாலனாக, குட்டி கிருஷ்ணனாக குழந்தை வடிவில் அருளாட்சி புரியும் திருக்கோயில்கள் மிகவும் சொற்பமாகவே உள்ளன. அத்திருத்தலங்களைப் பற்றிச் சுருக்கமாக அறிந்து கொள்வோம்.
வாருங்கள் !

ஒரு கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்...

மதுராவில் உக்ரசேனர் ஆண்டு வந்த சமயம் மகள் தேவகிக்கும் வசுதேவருக்கும் திருமணம் நடந்தது. ஊர்வமாக வரும் போது அசரீரி கூறிய படி அவர்களுக்குப் பிறக்கும் எட்டாவது குழந்தை தன்னைக் கொன்று விடும் என்பதால் தேவகியின் சகோதரன் கம்சன் இருவரையும் சிறையில் அடைத்தான். தேவகிக்குப் பிறந்த ஏழு குழந்தைகளும் கம்சனால் கொல்லப்பட்டன.சிராவண மாதம் கிருஷ்ண பட்ச அஷ்டமியன்று நடு இரவில் தேவகிக்கு எட்டாவதாக தெய்வக்குழந்தையாக கிருஷ்ணன் அவதரித்தான். அவன் தன்னை கோகுலத்திற்கு எடுத்துச் செல்லும்படி கூறவே, அதன்படி வசுதேவர் அவனைக் கூடையில் வைத்து தலைக்கு மேல் வைத்துக் கொண்டு சிறையிலிருந்து வெளியேறினார்.

 காவலர்கள் மயங்கி விழுந்தனர். பூட்டுகள் தானாக திறந்து கொண்டன. இந்தக் காட்சியை மிக தத்ரூபமாக மதுராவில் ''கிருஷ்ண ஜென்ம பூமி'' என்ற இந்த இடத்தில் ‘குட்டி கிருஷ்ணனை’ அழகான சித்திரரூபங்களுடன் தரிசனத்துக்காக வைத்திருக்கிறார்கள். அங்கே சிறை போன்ற சந்நதி அமைக்கப்பட்டு கிருஷ்ணனின் திருஉருவம் குழந்தை வடிவில் இங்கு பூஜிக்கப்படுகிறது. கண்ணன் பிறந்த இந்த இடத்தைக் காண ஏராளமான யாத்திரீகள் வருகிறார்கள். மதுராவில் உள்ள பிரதான கோயில் இந்த ‘துவாரகீஷ்’ கோயில் தான் உயர்ந்த பீடத்தின் மேல் மூன்றடி உயரமுள்ள ஸ்ரீ பால கிருஷ்ண விக்கிரகம் வட இந்திய பாணியில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

கோகுலத்தில் பசுக்களெல்லாம் கோபாலன் பெயரைக் கேட்டு...

கிருஷ்ணன் பிறந்த மதுராவிலிருந்து கோகுலத்திற்கு எடுத்துச் செல்லப்படும் போது, அடை மழை பெய்ய, யமுனை நதியில் வௌ்ளம் பெருக ஆற்றைக் கடந்து கோகுலம் கிராமத்திற்கு வசுதேவர் வந்து சேருகிறார். யமுனை நதியிலிருந்து கரையேறிய இடத்தில் ''கரை சேர்ந்த மண்டபம்'' என்று கிருஷ்ணன் கோயிலாக இன்றும் பூஜிக்கப்பட்டு வருகிறது. இங்கு மாலை வேலைகளில் தீபம் ஏற்றி கண்ணனுக்கும் யமுனைக்கும் பூஜைகள் செய்யப்பட்டு ஆரத்தி எடுத்து வழிபடுகிறார்கள். கரையேறி கோகுலத்தில் நுழைந்த இந்த இடம் மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது. கோகுலத்தில் நந்த கோபனின் இல்லத்தில் விடப்பட்ட கிருஷ்ணரைக் கண்டு அனைவரும் பெரிதும் மகிழ்ந்தனர்.

''கனையாலால் ஜீகீ ஜெய்!'' என்று முழங்கி மகிழ்ச்சியுடன் கிருஷ்ணனை முதன் முதலில் தொட்டிலிலிட்டார்கள். அந்த தொட்டில் போட்ட இடத்தில் ‘கண்ணன் ஆடிய தொட்டிலை’ இன்றும் காணலாம். பால கிருஷ்ணனை பிரதிஷ்டை செய்து கவினுறு ஆலயமாக்கி வழிபடுகிறார்கள். கிருஷ்ண ஜென் மாஷ்டமியன்று இந்த ''ஊஞ்சல் உற்சவம்'' சிறப்பாக நடைபெறுகிறது. இங்கு சந்நதியில் குட்டிகிருஷ்ணனை தொட்டிலில் போட்டிருக்கிறார்கள். அதுவே தெய்வ சந்நதியாகத் திகழ்கிறது. தினமும் குடம் குடமாக வெண்ணெய் நைவேத்தியம் செய்யப்படுகிறது. எண்ணற்ற பக்தர்கள் இங்கு நாள்தோறும் வந்த வண்ணமிருகிறார்கள். இங்கு வழிபட வரும் குழந்தைகள் மட்டுமே காணிக்கை செலுத்தி தொட்டிலை ஆட்டி மகிழ்கிறார்கள். மற்றவர்களுக்கு அனுமதியில்லை !

பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொது செல்வமன்றோ..

பிருந்தாவனத்தில் ‘பால’ கிருஷ்ணனின் கட்டு மீறிய பால்ய லீலா விநோதங்களே மூலைக்கு மூலை இன்றும் சுடர் விட்டு விளங்குகிறது. பிருந்தாவனத்தில் கிருஷ்ணனுக்கு ஏராளமான கோயில்கள் இருக்கின்றன. அவற்றுள் முக்கியமானது ''பாங்கே பிஹாரி கோயில்''. கி.பி.1864-ல் எழுப்பப்பட்ட ஆலயம். தான் சேனின் குருவும், வட இந்திய சங்கீதத்தில் வல்ல வரும் தீவிர கிருஷ்ண பக்தருமான ஹரிதாஸ் என்பவரால் ''நிதுவனம்'' எனும் காட்டில் கண்டெடுக்கப்பட்ட சின்ன கண்ணன் சிலை கருவறையில் உள்ளது. மனங்கவரும் பொன்னூஞ்சல் தரிசனம் அவசியம் காண வேண்டியது.

பாங்கே பிஹாரி எனப்படும் பிருந்தாவன ஆலயத்தில் வாசலெங்கும் மணிகள் தோரணமாய்த் தொங்குகின்றன. பஜனை கீதம் இசைத்தபடி பக்தர்கள் மெய் மறந்து பாடுகின்றனர். ''பாங்கே பிஹாரி'' என்று அழைக்கப்படும் குட்டி கிருஷ்ணனை ஒரு நிமிடத்திற்கு மேல் தரிசித்தால் மயக்கமடைந்து விடுவார்கள் என்று சொல்லப்படுகிறது. கருமை வண்ணம், மயிற் பீலி அணிந்த முடி, பொற் கிரீடம், விசிறி போல் அமைந்த மாலைகள், கழுத்தில் மணிமாலைகள், பட்டுப் பீதாம்பரம் நீல நிறத்தில் தரித்து பிரேம சொரூபனாக ‘பால’ கிருஷ்ணன் இங்கே காட்சியளிப்பதைக் காணக்கண் ஆயிரம் வேண்டும். பிருந்தாவனத்தில் கண்ணனின் கால் பதியாத இடங்களே இல்லை. எண்ணற்ற யாத்திரீகர்கள் நாள்தோறும் இங்கே வந்து தரிசனம் செய்வது கண்கொள்ளாக் காட்சி !

அந்த மந்திரத்தில் அவர் உறங்க மயக்கத்திலே இவனுறங்க …

‘நாதத்வாரா’ என்றால் நாதன் இருக்குமிடத்தின் வாயில் என்று பொருள். ராஜஸ்தானில் உதய பூருக்கு வடக்கே சுமார் 50. கி.மீ தொலைவில் உள்ள இந்தத் தலத்தின் இறைவன் ஸ்ரீநாத்ஜி - குட்டி கிருஷ்ணன் கோயில். துவக்கத்தில் பிருந்தாவனத்தில் எழுந்தருளியிருந்த இந்த இறைவனை வைணவ ஆச்சார்யர்களில் முக்கியமானவரான ஸ்ரீமந் நாதமுனிகள் பிருந்தாவனத்தில் யோக நிலையில் இருந்த போது, பூஜித்து வந்ததாகச் சொல்வர். இதையடுத்து அந்நியப்படையெடுப்பின் போது, கோஸ்வாமி தாவோஜி என்பவர். ராணா ராஜ் சிங்கின் உதவியுடன் கிருஷ்ண விக்கிரகத்தை மாட்டு வண்டியில் எடுத்துக் கொண்டு கி.பி. 1762-ல் இந்த ஊருக்கு வந்தாராம். அப்போது சக்கரம் மண்ணில் புதைந்து வண்டி நகர, மறுக்கவே, ‘இந்த இடமே இறைவனுக்குப் பிரியமான இடம்’ என உணர்ந்த தாவோஜி அங்கேயே விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்தாராம்.

இங்கே இடது கையால் கோவர்த்தன கிரியைச் சுமந்த படியும், வலது கையை இடுப்பில் ஒய்யாரமாக வைத்த படியும் அழகு தரிசனம் தருகிறார் ஸ்ரீநாத்ஜி. கறுப்பு சலவைக் கல்லில் வடிக்கப்பட்ட இந்த விக்கிரகத்தில் இரண்டு பசுக்கள், இரண்டு மயில்கள், பாம்பு மற்றும் கிளி ஆகியனவும் உள்ளன. இங்கே எம்பெருமாளை குழந்தைக் கண்ணனாக, குட்டி கிருஷ்ணனாகவே பாவித்து வணங்குகின்றனர். குழந்தையால் நீண்ட நேரம் நிற்க முடியாது அல்லவா? எனவே ஒவ்வொரு முறையும் 30 நிமிடங்கள் மட்டுமே தரிசனம் தருகிறார். குட்டி கிருஷ்ணனுக்கு இங்கு விதம் விதமான பிரசாதங்கள் படைக்கப்படுகின்றன. ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி மற்றும் அன்னக்கூட உத்ஸவம். மிகவும் விசேஷம் பக்த மீராவுக்கு கண்ணபிரான் அடைக்கலம் அளித்த தலம் இதுவே! ஸ்ரீ நாத்ஜீயை தரிசிக்க எண்ணற்ற பக்தர்கள் வருகை தருகிறார்கள். நாளெல்லாம் பக்தர்களின் கூட்டமும் பஜனைகளும் காணக் கண்கொள்ளாக் காட்சி!

ஸ்ரீ நாத் துவாரகாவிலிருந்து சுமார் 12. கி.மீ. தூரத்தில் உள்ளது . காங்க்ரோலி துவாரகா மந்திர். இங்கும் குட்டி கிருஷ்ணன் சிறிய உருவமாக கொள்ளை அழகுடன் காட்சி தருகிறார். இதுவும் அவசியம் தரிசிக்க வேண்டிய தலம்!

கண்ணா கருமைநிறக் கண்ணா உன்னை காணாத கண் இல்லையே...

கர்நாடகாவில் உள்ள உடுப்பி தலத்தில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீ பால கிருஷ்ணன், இளமைக் கோலத்துடனும் தெய்வீக எழிலுடனும் விளங்குகின்றான். ஸ்ரீ சுதர்சனச் சக்கரத்துடன் கூடிய சாளக்கிராம சிலை வடிவில் அருட்பாலிக்கிறான். பால பருவத்தில் தன் மைந்தன் கிருஷ்ணன் ஆடிய திருவிளையாடல்களையும் செய்த சேட்டையும் தான் காணக் கொடுத்து வைக்கவில்லை. அவற்றைக் காணவேண்டும் என்று தேவகி ஆசைப்பட்டாள். அன்னை தேவகி மகிழும் வண்ணம் அடுத்த கணமே பால கிருஷ்ணன் ஆனான்.பால லீலைகளை அன்னைக்கு முன் மீண்டும் ஒரு முறை நடத்திக் காட்டினான். தேவகி மகிழ்ச்சியால் பொங்கிப் பூரித்துப் போனாள். அப்போது தன் கணவனின் லீலைகளை மறைவிலிருந்து பார்த்த ருக்மிணி மிகவும் ரசித்தாள்.

கணவனின் இளமை ழகில் சொக்கிப் போய் தன் பூஜைக்கு அப்படியொரு சிலை வேண்டும் என்று பிரார்த்தித்தாள். உடனே கிருஷ்ணன் தேவ சிற்பி விஸ்வகர்மாவை அழைத்து தம் பால பருவத்தை நினைவு படுத்துவது போல் ஓர் அழகிய சிலையை  வடித்துத் தரும்படி கோரினார். வலக்கையில் மத்தும், இடக்கையில் கயிற்றையும் வைத்துக் கொண்டு குறும்புச்சிரிப்பும் ‘குறு குறு’ வென்றிருக்கும் முகப் பொலிவும் கொண்ட ஒரு மூர்த்தியை உருவாக்கினார் விஸ்வகர்மா. அச்சிலையை ருக்மிணி தினமும் வழிபட்டு வந்தாள். கிருஷ்ணாவதாரத்தின் இறுதியில் அர்ஜூனன் இந்தச் சிலையை துவாரகை நந்தவனத்தில் ஒளித்து வைத்தான். 700 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மகான் மத்வாச்சார்யார் தம் ஞான திருஷ்டியில் கிருஷ்ண விக்ரகத்தைக் கண்டறிந்து அதை உடுப்பியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.  உடுப்பி கிருஷ்ணனை ஆச்சார்யரின் வழி வந்த சீடர்கள் முறை தவறாமல் இன்றும் வழிபட்டு வருகிறார்கள். அவர்கள் அனைவரும் பால சந்நியாசிகளேயாவர்.

 உடுப்பி பால கிருஷ்ணன் உறைவது மிகச் சிறிய கருவறை தான். அங்கு மேற்கு நோக்கி நின்று கொண்டிருக்கிறான். சுமார் இரண்டடி உயரமுள்ள சிலை அது. அவருக்கு தினமும் ஓர் அலங்காரமாகச் செய்கிறார்கள். இருபுறமும் நந்தா விளக்குகள் எரிந்து கொண்டிருக்கின்றன. அவை மத்வாச்சார்யாரால் ஏற்றப்பட்டதாம். இங்கே பால கிருஷ்ணனை ஒரு ஜன்னல் வழியாகத்தான் தரிசனம் செய்ய வேண்டும். புராண, புராதனச் சிறப்புப் பெற்ற பால கிருஷ்ணனை நாள் முழுக்க 24- மணி நேரமும் எண்ணற்ற பக்தர்கள் வந்து தரிசனம் செய்தவண்ணம் இருக்கிறார்கள்.

நாடிவரும் அன்னையர்க்கு  நவநீத கிருஷ்ணன் அவன்...

கர்நாடகா மாநிலம். பெங்களூரிலிருந்து மைசூர் செல்லும் சாலையில், சென்னப்பட்னாவிற்கு அருகில் உள்ளது தொட்டமளூர். இங்கே தாயார் அரவிந்த வல்லி சமேத ராமாப்ரமேய சுவாமி கோயில் கொண்டிருக்கிறார். மிகப் பழமையான இக்கோயிலை கி.பி. 980-ல் ராஜேந்திர சோழன் கட்டியதாகக் கூறப்படுகிறது. இங்கு குட்டி கிருஷ்ணனுக்குத் தனி சந்நதி உள்ளது. தவழும் கோலத்தில் பால கிருஷ்ணர் உள்ளார். இவரை ''அம்பேகல் கிருஷ்ணா'' என்று கன்டைத்தில் கூறுகிறார்கள். இவரை வியாசமுனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்டாராம். சாளக்கிராமத்தில் உருவாக்கப்பட்ட இந்த தவழும் கிருஷ்ணரின் அற்புத அழகு, வசீகரிக்கும் கண்களுடனும், கழுத்தில் அழகிய மணிமாலைகள் அணிந்து கொண்டு உள்ளம் கவர் கள்வனாக தரிசனம் தருகிறார். இந்த குட்டி ‘கிருஷ்ணனின் அழகில் மயங்கித்தான் பிரசித்தமான ‘ஜகதோத்தாரண’’ என்ற காபி ராகப் பாடலை புரந்தர தாசர் இயற்றினாராம். புத்திர பாக்கியம் வேண்டி ஏராளமான பக்தர்கள் இந்த தவழும் கிருஷ்ணனை வழிபட வருகிறார்கள்.

குருவாயூருக்கு வாருங்கள் ஒரு குழந்தை சிரிப்பதை பாருங்கள்...

தாய்மை உணர்வுடன் ஆழ்வார்கள் போற்றும் சின்னஞ் சிறு குழந்தையாக குட்டி கிருஷ்ணன் காட்சி தரும் தலம் குருவாயூர். இங்குள்ள பெருமானுக்கு ''உன்னி கிருஷ்ணன்'' என்ற திருநாமமும் உண்டு. பொதுவாக குருவாயூரப்பன் என்றே அழைக்கப்படுகிறான்.கேரள மாநிலத்தில், திருச்சூர் நகரிலிருந்து சுமார் 20.கி.மீ தொலைவில் அழகிய சோலைகளுக்கிடையே அற்புதமான கோயிலில் குடி கொண்டுள்ள குருவாயூரப்பன், கலியுகத்தில் கேட்டவருக்கு கேட்ட வரம் தந்தருளும் கண் கண்ட கடவுளாகக் காட்சி அளிக்கிறான். பாற் கடலில் பள்ளி கொண்டபரந்தாமன் பச்சிளம் பாலகனாய், உதயம் காட்சி தந்து, பீதாம்பர தாரியாய்- சங்கு சக்கர தாரியாய்- கதா பத்ம தாரியாய்- மகுடத்தில் மயிற்பீலி  மின்ன வனமாலியாய்- கௌஸ்துபதாரியாய்- நினைத்தாலே ஓடி வந்து அருள்புரியும் தெய்வீகக் குழந்தை வடிவில் உன்னி கிருஷ்ணனாக - கண்டவர் யாவரையும் மயக்கும் சித்ரூபத்துடன் இந்த பரப்பிரம்மம் ‘தட்சிண துவாரகை’ எனப்பேர் பெற்ற குருவாயூர் தலத்தில் கோயில் கொண்டு நிற்பது நாம் செய்த பாக்கிய மேயாகும்.

 குருவாயூரப்பனின் இந்தத் திருமேனி, யுகயுகமாக இங்கு நின்று உலகுய்ய அருட்பாலித்துக் கொண்டிருக்கின்றது என்பது ஐதீகம். துவாபரயுகத்தில் கிருஷ்ணாவதாரத்தின் முடிவில் ஏற்பட்ட பிரளயத்தில் துவாரகை மூழ்கிய போது,  அங்கு பிரம்மாவினால் பூஜிக்கப்பட்ட கிருஷ்ண விக்ரகத்தை கண்ணனே, பரம பக்தரான உத்தவரிடம் கொடுத்து, தேவகுரு, வாயு பகவான் இருவரின் உதவியுடன் பரசுராம க்ஷேத்திரமான கேரள பூமியில், ருத்ர தீர்த்தம் என்ற தீர்த்தக் கரையில் சிவபிரானின் ஆசியுடன் குருவாயூரில் பிரதிஷ்டை செய்தார். குருவும் வாயுவும் சேர்ந்து ஸ்தாபித்ததால் இது ‘குருவாயுபுரா’ என அழைக்கப்பட்டு ‘குருவாயூர்’ என்று பின்னர் அழைக்கப்பட்டது. இன்றளவும் எண்ணற்ற பக்தர்கள் அப்பன் சந்நதி வாயிலில் நின்று ''எண்டே குருவாயூரப்பா''’ என்று வாத்சல்ய பாவத்துடன் கூப்பில் கரங்களுடன் தரிசனம் செய்கிறார்கள். உன்னி என்றால் குழந்தை என்று பொருள். நெய்விளக்கின் ஒளியில் அருட்பாலிக்கும் உன்னி கிருஷ்ணன் ‘‘குருவாயூருக்கு வாருங்கள்’’என்று நம்மை அழைத்த படி புன்முறுவல் காட்டி நிற்கிறான்!

பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்...

குருவாயூரப்பன் சந்நதிக்கு எதிரில் சற்றுத் தொலைவில் பால பார்த்த சாரதி கோயில் இருக்கிறது. இரண்டு அடி உயரமுள்ள பால பார்த்த சாரதியாக குட்டி கிருஷ்ணன் காட்சி தருகிறார். திருமேனி முழுவதும் அலங்கார அணிகள், அள்ளி முடியப் பெற்ற மணிமுடி. செவியில் குண்டலங்கள், கழுத்தைச் சுற்றி தினுசு தினுசான மணிமாலைகள், தோள் வளைகள், கைவளையல்கள், மோதிரங்கள், மார்பில் பூணூல், இடுப்பில் ஒட்டியாணம் பட்டு வஸ்திரம், கால்களில் தண்டை, கொலுசு, வலது கரத்தில் சாட்டை, இடது கையில் சங்கு கொண்டு நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறான் அவசியம் காணவேண்டிய அழகிய திருக்கோலம்.

மாடு மேய்க்கும் கண்ணே நீ போக வேண்டாம் சொன்னேன்...

மூர்த்தி, தீர்த்தம், தலம் என்ற முப்பெருமைகளால் அமையப்பெற்ற திருத்தலம் மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி கோயில். மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பரவாசு தேவப் பெருமாளாக நின்ற திருக்கோலத்தில் சங்கு, சக்கர, கதையுடன் தங்கக்கவசம் பூண்டு காட்சி தருகின்றார்.செண்பக வனத்து முனிவர்களின் வேண்டுகோளின் படி பிருந்தாவனத்தில் அன்று கண்ணன் செய்து காட்டிய பால லீலைகளை முனிவர்களுக்கு இங்கு தான் காட்டி அருளினான். கோகுலத்தில் குட்டி கிருஷ்ணன் ஆயர் வீடுகளில் புகுந்து வெண்ணெய் திருடித்தின்னும் வைபவத்தை சித்தரிக்கும் வகையில் ‘வெண்ணெய்த்தாழி வைபவம் இங்கு நடைபெறுகிறது. திருவிழா அன்று ராஜ கோபாலன் தவழும் கண்ணன் வடிவு அலங்காரத்தில் கையில் வெள்ளிக் குடத்துடன் திருவீதி உலா வருகிறான். மதியம் வெண்ணெய்த் தாழி மண்டபத்தில் செட்டி அலங்காரத்திலும் குதிரை வாகனத்திலும் தரிசனம் தருகிறான்.

 இங்கு திருவருள் புரியும் ஸ்ரீ வித்யாராஜ கோபாலனுக்கு ‘ராஜமன்னார்’ என்ற பெயருமுண்டு. நெற்றியில் கஸ்தூரி திலகம். சிவந்த உதடு . அதில் விரிந்த புன்னகை ; ஆயிரம் மன்மதனைப் போன்ற அழகு; ஒரு காதில் குண்டலம்; மற்றொரு காதில் தோடு; இந்த வித்யா ராஜகோபாலன் எனும் நவநீத கிருஷ்ணனுக்கு ஒரே வஸ்திரத்தில் இடுப்பில் கச்சம், சிரசில் முண்டாசு; வலது கையில்  பொன்சாட்டையுடன் மாடு கன்று மேய்க்கும் இடையர் திருக்கோலத்தில் சின்னக்கண்ணன் அவனின் முன் வினை தீர்க்கும் முன்னழகுச் சேவை. பிறவிப் பிணி தீர்க்கும் பின்னழகுச் சேவை. மாயக் கண்ணனின் திவ்ய ரூபத்தைக் காணக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

இங்கு ஆவணி மாதத்தில் ‘திருபவித்ரோத்ஸவம்’ என்று போற்றப்படும் விசேஷமான உற்சவம் பத்து நாட்கள் விமரிசையாக நடைபெறும். இந்நாட்களில் ஆண்டு முழுவதும் நடைபெற்று வரும் பூஜைகளில் குறைபாடுகளிருப்பின் அவற்றை நிவர்த்தி செய்வதற்காக 365 வகையிலான பூஜைகள் நடைபெறும். இம்மாதத்தில் ஸ்ரீஜெயந்தி எனப்படும் கண்ணன் பிறப்பு வைபவம் சிறப்பாக உறியடி திருவிழாவுடன் நடைபெறுவது மிகச்சிறப்பு அம்சமாகும்.

டி.எம். ரத்தினவேல்