மனம் தொட முடியா பிரம்மம்



*அருணகிரி உலா : 83

முருக பக்தர்களை மகிழ்விக்கும் பல்வேறு கோலங்களைத் தாங்கி, காஞ்சி குமர கோட்டத்தில் காட்சி தரும் அழகன் குமரனை வணங்கிக் கோயிலை விட்டு வெளியே வருகிறோம். காஞ்சியில் அருணகிரி நாதர் பாடியுள்ள மற்றுமொரு ஆலயமான ‘கச்சபேஸ்வரர்’ திருக்கோயிலை நோக்கிச் செல்கிறோம். கோயிலை, ‘கச்சிக் கச்சாலை’ என்று குறிப்பிட்டுள்ளார், அருணகிரியார்.பாற்கடலைக் கடைந்த போது மத்தாகிய மந்த்ரமலை அழுத்த, அதைத் திருமால் ஆமை உருவெடுத்துத் தன் முதுகில் தாங்கினார்.  முத்தைத்தரு’ எனத் துவங்கும் முதல் பாடலிலேயே ‘ஒற்றைக்கிரி மத்தைப் பொருது’ என்ற குறிப்பு வருகிறது.

பின்னர் அந்த ஆமை இறுமாப்புற்றுக் கடலைக் கலக்க, சிவபிரானது ஏவலால் விநாயகர் அதை அடக்கி, அதன் முதுகு ஓட்டை எடுத்து சிவபெருமான் அணியக் கொடுத்தார் என்கிறது புராணம். தாம் கடலைக் கலக்கியபோது கடல் வாழ் உயிரினங்களுக்கு ஏற்பட்ட துன்பத்தை எண்ணி வருந்திய திருமால் காஞ்சிபுரம் சென்று முருக்க மரத்தின் கீழ் ஜோதி வடிவமாக நின்ற சிவபெருமானை வணங்கினார். ஆமை வடிவம் கொண்ட திருமாலால் வணங்கப்பட்ட இக்கோயில் [ கச்சபம் = ஆமை] கச்சபேஸ்வரர் ஆலயம் என்று பெயர் பெற்றது.

ஆமையின் ஓட்டைப் பறித்து அணிந்த சிவபெருமான் ‘கூர்ம சங்காரி’ எனப்படுகிறார். [மந்த்ர மலையைத் தாங்கும் வலிமை பெறவும், அமிர்தம் எளிதில் வெளிப்படவும் திருமால் சிவனை லிங்கம் அமைத்துப் பூசித்த தலம் ‘திருக்கச்சூர்’ எனப்படுகிறது. இத்தலம் ஆதி காஞ்சி எனவும், இறைவன் ஆதி கச்சபேஸ்வரர் எனவும் அழைக்கப்படுகின்றனர்.காஞ்சிபுரம் மேற்கு ராஜவீதியில், தென் கோடியில் கச்சபேஸ்வரர் ஆலயம் உயர்ந்த ராஜ கோபுரத்துடன் திகழ்கிறது. உள்ளே நுழைந்ததும் மிக விசாலமான பரந்த வெளிப் பிராகாரத்தைக் கண்டு திகைக்கிறோம். [ கடும் கோடை காலத்தில் நண்பகலில் பிராகாரத்தை வலம் வருவது தவிர்க்கப்பட வேண்டும்]. இடப்புறம் விஷ்ணுதுர்க்கைக்கு தனிச் சந்நதி அமைந்துள்ளது. யாகசாலையை அடுத்து பைரவர், சூரிய பகவான் ஆகியோர் உள்ளனர்.

பலிபீடம், கொடி மரம், நந்தி போன்றோரை வணங்கி, ஸ்ரீ பஞ்சசந்தி விநாயகர், அவருக்குப் பின்புறமுள்ள தர்ம சாஸ்தா ஆகியோரை வணங்குகிறோம்.கருவறை அமைந்துள்ள தனிக்கோயிலை நோக்கி நடக்கிறோம். பெரிய மண்டபத்தினுள்  நுழையும் போது வலப்புறம் ஞான சித்தீஸ்வரர், சதுர்யுகேஸ்வரர், நடராஜர் ஆகியோரைத் தரிசிக்கிறோம். கருவறை வாயிலில் பிள்ளையாரை வணங்கி, முகமண்டபத்திலுள்ள குட்டி நந்தி, பலிபீடம் வணங்கி மூலவரை வணங்குகிறோம். லிங்கத்தின் மேற்புறம் கூர்த்து விளங்குகிறது.

பின்புறம் சிவன் பார்வதி முருகனுடன் தோற்றமளிக்கின்றனர். பிராகார வலம் வரும் போது நால்வர், அறுபத்து மூவர், நந்திகேஸ்வரர் அனைவரையும் வணங்குகிறோம். கருவறைக் கோட்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா ஆகியோரையும் மூலையில் வலம்புரி - இடம்புரி விநாயகர்கள் தரிசனம் அளிக்கின்றனர். 108 சிவலிங்கங்கள், 1008 சிவலிங்கங்கள் பஞ்சபூத லிங்கங்கள் தவிரவும் கைலாசநாதர், திருமுறை கண்ட பொல்லாப் பிள்ளையார், வள்ளி தெய்வானையுடன் திருப்பரங்குன்ற முருகன் ஆகியோரை வணங்கி தேவியருடன் கூடிய ஷண்முகரைத் தரிசித்துத் திருப்புகழைச் சமர்ப்பிக்கிறோம்.
   
மக்கட்குக் கூறரி தானது
கற்றெட்டத் தான்முடி யாதது
மற்றொப்புக் கியாதுமொ வாததுமனதாலே

மட்டிட்டுத் தேடவொ ணாதது
தத்வத்திற் கோவைப டாதது
மத்தப்பொற் போதுப கீரதிமதிசூடும்

முக்கட்பொற் பாளரு சாவிய
அர்த்தக்குப் போதக மானது
முத்திக்குக் காரண மானதுபெறலாகா

முட்டர்க்கெட் டாதது நான்மறை
யெட்டிற்றெட் டாதென வேவரு
முற்பட்டப் பாலையி லாவதுபுரிவாயே

பொருள்: பரம் பொருளானது, இத்தகையது என்று பிறருக்கு எடுத்துச் சொல்ல முடியாதது; சாத்திரங்களைப் படிப்பதனால் அடைய முடியாதது ; அதற்கு நிகரென எதையும் கூற இயலாதது; மனதினாலும் அளவிட்டு நினைத்துப் பார்க்க முடியாதது; முப்பத்தாறு தத்துவங்களிலும் அறிவு ஆராய்ச்சியிலும் அகப்படாமல் இருப்பது.

ஊமத்தம்பூ, பொன்னிற கொன்றை, கங்கை, சந்திரன் இவை அணிந்துள்ள முக்கண் அழகர் ‘பொருள் என்ன’ என்று கேட்ட  உண்மைக்கு ஞான காரணமாய் விளங்குவது, மோட்சத்திற்கு வித்தாய் நிற்பது, பெறத் தகுதியற்ற மூடர்க்கு எட்டாதது, வேதங்களால் அடையமுடியும் என்றும் அடைய முடியாது என்றதுமான நிலையில் இருப்பது இப்படி அனைத்திற்கும். அப்பாற்பட்ட நிலையிலுள்ள ரகசியப் பொருளை உபதேசிப்பாயாக !
 
பாடலின் பிற்பகுதி :-

செக்கட்சக் ராயுத மாதுலன்
மெச்சப்புற் போதுப டாவிய
திக்குப்பொற் பூதர மேமுதல்வெகுரூபம்

சிட்டித்துப் பூதப சாசுகள்
கைக்கொட்டிட் டாடம கோததி
செற்றுக்ரச் சூரனை மார்பகமுதுசோரி

கக்கக்கைத் தாமரை வேல்விடு
செச்சைக்கர்ப் பூரபு யாசல
கச்சுற்றப் பாரப யோதர   முலையாள்முன்

கற்புத்தப் பாதுல கேழையு
மொக்கப்பெற் றாள்விளை யாடிய
கச்சிக்கச் சாலையில் மேவிய  பெருமாளே.

பொருள்: சிவந்த கண்களும், சக்ராயுதமும் உடையவருமான மாமன் புகழும்படி, புற்களும் மலர்களும் உள்ள பெரிய திசைகளில் பொன் மயமான மேரு முதலான பலப்பல உருவங்களைப் படைத்தவனே! பூதங்கள், பிசாசுகள் கைக் கொட்டி ஆட பெரிய கடலை அடக்கி, கொடுமையான சூரனின் மார்பிலிருந்து முற்றிய ரத்தம் பெருகச் செய்த தாமரையன்ன கரத்திலிருந்து வேலைப் பிரயோகித் தவனே! செஞ்சந்தனக் குழம்பும், பச்சைக் கற்பூரமும் பூசியுள்ள மலையன்ன  தோள்களை உடையவனே! ரவிக்கை பொருந்திய, கனாமானதும், பால் நிரம்பியதுமான தனபாரங்களை உடையவளும், முன்னொரு காலத்தில் கற்பு ஒழுக்கம் குன்றாமல் ஏழுலகங்களையும் ஒரே சமயத்தில் ஈன்றருளியவளுமான காமாட்சி தேவி திருவிளையாடல்கள் புரிந்து காஞ்சியிலுள்ள கச்சபேஸ்வரர் ஆலயத்தில் [கச்சபாலயம்] வீற்றிருக்கும் பெருமாளே !'' என்று பாடுகிறார்.

 ஆலயங்களில் சாதாரணமாக முருகன் சந்நதிக்கு அடுத்தாற் போல் கஜலட்சுமி சந்நதியைக் காணலாம். இக்கோயிலில் அந்த இடத்தில் சரஸ்வதி வீற்றிருக்கிறாள். கச்சபேஸ்வரம் சரஸ்வதி சிவபூஜை செய்து பேறு பெற்ற தலங்களில் ஒன்றாகும். லலிதா திரிபுரசுந்தரியின் படைத் தலைவிகளில் ஒருத்தியான சியாமளா தேவியின் திரு உருவமாக இது கருதப்படுகிறது. சாக்த தந்திரங்களால் மகா சரஸ்வதி என்று போற்றப் படுகிறாள். காளிதாசன் இவள் பேரில் சியாமளா தண்டகம் எனும் நூலைப் பாடியுள்ளார்.

நவகிரகங்களைத் தரிசிக்கிறோம். சுவரை ஒட்டிய மேடையில் உள்ள பைரவர், சந்திரன், வள்ளி தெய்வானையுடன்  சுப்ரமண்யர், நவ வீரர்கள், மகா விஷ்ணு ஆகியோரை வணங்குகிறோம். வெளிப் பிராகாரத்தில் தர்மசித்தீஸ்வரர், யோக சித்தீஸ்வரர், புடைச் சிற்பமாக விளங்கும் விநாயகர், தூணிலுள்ள அனுமன், சுந்தராம்பிகை சமேத கச்சபேஸ்வரர் உற்சவமூர்த்தி, சோமாஸ்கந்தர், தூண்களிலுள்ள முருகன் - விநாயகர் ஆகியோரை வணங்குகிறோம். காஞ்சியிலுள்ள 165 சிவாலயங்களின் வரைபடம் வைத்திருப்பது வரவேற்கத்தக்கது.சூரியன் கச்சபாலயத்தில் வழிபட்டுப் பேறு பெற்றான் என்பர்.சூரியன் அமைத்த குளத்தின் தென்மேற்கு முனையில் முருக்க மரமும் [புரசு] அதன் கீழ் கச்சப வடிவத்தில் திருமால் சிவலிங்கத்தை வழிபடும் ஐதீகச் சிற்பமும் தென்கரையில் இஷ்டசித்தீஸ்சரமும் உள்ளன. திருமாலும் லட்சுமியும் வழிபட்ட முருக்கடி ஈஸ்வரர், பள்ளத்தில் வைக்கப்பட்டுள்ள மார்த்தாண்டேஸ்வரர், லிங்க பேஸ்வரர் அனைவரையும் வணங்கிக் கோயிலிலிருந்து வெளியே வருகிறோம்.

 ‘அருவரை எடுத்த’ எனத் துவங்கும் திருப்புகழ்ப் பாடல் ஒன்று ‘சரஸ்வதி நதிக்கண் வீறு வயிரவி வனத்தில் மேவு பெருமாளே’ என்று நிறைவுறுகிறது. இப்பாடல் பாடப்பட்ட குறிப்பிட்ட தலம் எதுவென்பதற்கு ஆதாரபூர்வமான தகவல் ஏதும் கிட்டியிருக்கவில்லை. திருப்புகழ்த் தல ஆராய்ச்சியாளர் திரு. வலையப் பேட்டை கிருஷ்ணன் அவர்கள் மாதவ சிவஞான யோகியின் காஞ்சிப்புராணத்தை ஆதாரமாகக் கொண்டு தன் முடிவை வெளிப்படுத்தியுள்ளார்.  ஒரு முறை பிரம்மன் மிகப்பெரிய அஸ்வமேத யாகம் செய்ய முற்பட்ட போது அதை விரும்பாத சரஸ்வதி அவர் கையிலுள்ள சிருஷ்டி தண்டத்தைப் பிடுங்கித் தன்னிடத்தில் ஒடுக்கிக் கொண்டு அகங்காரத்தோடு நதி ரூபமாக வந்தாள். இந்த அகங்காரத்தை ஒடுக்க வேண்டி திருமால் அவளை ஒரு பிலத்தில் ஒடுக்கி விட்டு, பிரம்மனுடைய யாகத்தை முடித்து அவனுக்கு வேறு ஒரு சிருஷ்டி தண்டத்தையும் அளித்தார். சரஸ்வதியை முன்போலவே நதி உருவமாகவே வெளிப்பட்டு முன் வந்த வழியே சென்று... நதியோடு சங்கமிக்கும் படி ஆணையிட்டார். அவ்வாறு அவள் சங்கமிக்கும் போது பிரம்மன் தரிசனம் தந்து அவளை ஏற்றுக் கொண்டார். அதி வேகமாக வந்தால் அந்நதி வேகவதி என்றழைக்கப்பட்டது.
 
‘‘சரஸ்வதி நதி, வலிய வினைகளை அழிக்கும் விதம் வேகவதி என்ற பெயரில் இந்நிலத்தில் (காஞ்சி) ஏற்ற முற்று, தன்னில் மூழ்கி நீராடுபவர்களுக்கு இன்ப வாழ்வளிக்கும்’’ என்று சிவபெருமான் வாழ்த்தியதாகக் காஞ்சிபுராணம் கூறுகிறது. வட மொழியில் பைரவி எனப்படும் சொல் தமிழில் மட்டுமே வயிரவி என்றழைக்கப்படுவதால் இப்பாடல் தமிழ் நாட்டிற்குரியதாகவே இருக்கும் என்பது ஆராய்ச்சியாளரின் முடிவு. அதன்படி காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையத்திலுள்ள ஸ்ரீ சோளீஸ்வரர் - வயிரவேஸ்வரர் கோயிலையே அருணகிரி நாதர் குறிப்பிட்டிருப்பதாகக் கொள்ளலாம். அஷ்ட பைரவர்கள் கோயிலின் எட்டுத்திக்கிலுமாகக் குடி கொண்டுள்ளனர். கோயிலில் நுழையும் போதே விநாயகரும் முருகப் பெருமானும் காட்சி அளிக்கின்றனர்.
 
‘‘சுருதிக ளுரைத்த வேத னுரைமொழி தனக் குளாதி
 சொலுவென வுரைத்த ஞான ...... குருநாதா
சுரர்பதி தழைத்து வாழ அமர்சிறை யனைத்து மீள
 துணிபட அரக்கர் மாள ...... விடும்வேலா
மருமலர் மணக்கும் வாச நிறைதரு தருக்கள் சூழும்
 வயல்புடை கிடக்கு நீல ...... மலர்வாவி
வளமுறு தடத்தி னோடு சரஸ்வதி நதிக்கண் வீறு
 வயிரவி வனத்தில் மேவு ...... பெருமாளே’’.
 - என்பது பாடலின் பிற்பகுதி.

பொருள்: வேதங்களை ஓதும் பிரம்மன் சொல்லத் தொடங்கிய மந்திரங்களுள் முதல் அட்சரமாகிய பிரணவத்தின் உட்பொருளை எடுத்துச் சொல் என்று ஆணையிட்ட ஞான குருவே! இந்திரன் முன் போல் அமராவதியில்நலமுடன் வாழவும், தேவர்களனைவரும் சிறையிலிருந்து விடுதலை பெறவும் அசுரர்கள் வெட்டப்பட்டு இறக்கவும் வேலை ஏவியவனே! நல்ல மணம் வீசும் மலர்களைக் கொண்ட வாசனை மிகுந்த மரங்கள் சூழ்ந்த வயல்களருகே படர்ந்திருக்கும் நீலோற்பலங்கள் பூத்த குளங்களும் செழித்த தடாகங்களும் சூழ சரஸ்வதி நதிக்கரையில் பெருமையோடு திகழும் வயிரவி வனத்தில் வீற்றிருக்கும் பெருமாளே!பாடலில்  ‘‘உன் பாத தாமரைகளை நாளும் சிந்தையில் தியானிக்கும் கருத்தொன்றிய அடியார்களின் சரணங்களை வணங்கித் துதிக்க ஞானத்தைத் தந்தருள்வாயாக’’ என்றும் முருகனை வேண்டுகிறார்.  காஞ்சியில் உள்ள ஐந்து திருப்புகழ் தலங்களைத் தரிசித்தபின் அடுத்த தலத்தை நோக்கி நகர்கிறது நம் உலா!

(உலா தொடரும்)
சித்ரா மூர்த்தி