காலமெல்லாம் காப்பான் காளிங்க நர்த்தனன்



*ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி : 23-08-2019
*ஊத்துக்காடு , கும்பகோணம்


தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் அருகே உள்ள ஊத்துக்காடு ஊரில் கோயில் கொண்டுள்ளான் காளிங்க நர்த்தன கிருஷ்ணன். இது மற்ற கிருஷ்ணன் கோயில்களிலிருந்தும் சிறப்பு மிக்க கோயில். 2000 ஆண்டுகள் பழமையானதாகும். இக்கோயிலில் உள்ள மூலவர் கண்ணன் சர்ப்பத்தின் மேல் நின்று நடனமாடுகின்றான். ஆனால் சர்ப்பத்துக்கும் கண்ணனுக்கும் இடையே ஒட்டாமல் மெல்லிய நூலிழை அளவுக்கு விக்கிரகத்திருமேனி அமைந்துள்ளது. சோழ மன்னர்களால் கட்டப்பட்ட கோயிலான ஆதியில் இங்கு காமதேனு தனது கன்றுகளான நந்தினி, பட்டி, இதர பசுக்களுடன் கைலாசநாதரை வழிபட்டு வந்தபோது நாரத மகரிஷி இங்கு வந்து இங்கே இருந்த பசுக்களிடம்  கிருஷ்ணரின் திவ்ய சரிதத்தைச் சொன்னார். அப்போது காளிங்கர் எனும் கொடிய பாம்பை அடக்கிய கதையை நாரதர் விவரிக்க சிவ பக்தியோடு மாயக்கண்ணன் மீது பக்தி கொண்டு அப்பசுக்கள் அவரை வணங்கின. கண்ணனின் புல்லாங்குழல் இசையைக் கேட்க வேண்டும்.

அவனைத் தரிசிக்க வேண்டும் எனவும் ஏங்கித் தவித்தன பசுக்கள். கிருஷ்ணன் அவைகளுக்கு வேணுகானம் இசைத்தபடி அங்கேயுள்ள நீரோடையில் காட்சி தந்தான். அத்துடன் காளிங்கன் மீது நர்த்தன மாடுகிற கோலத்தையும் காட்டி அருளினான். பின்னாளில் இதனை அறிந்த சோழ மன்னன் காளிங்க நர்த்தன கிருஷ்ணனுக்கு அழகிய கோயில் அமைத்தான்.சங்ககாலத்தில் கோவூர் எனப்பெயர் பெற்ற இவ்வூரில் தண்ணீரே இல்லாமல் இருந்த இடத்தில் தன் கிருஷ்ண லீலையைச் செய்து காண்பிக்க ஏற்படுத்திய ஊற்றினால் ஊத்துக்காடு என்ற பெயருடன் விளங்குகிறது. இங்குள்ள கிருஷ்ண விக்கிரகத்தை நாரதர் பிரதிஷ்டை செய்ததாக சொல்லப்படுகிறது. உற்சவ மூர்த்தியான கிருஷ்ணன் காலடியிலே நந்தினி, பட்டி ஆகிய பசுக்களின் விக்கிரகங்கள் கண்ணனை அன்னார்ந்து பார்ப்பது அற்புதம்.

E.S சுகந்தன்  சுகந்தன்  
படம்: சி.எஸ். ஆறுமுகம்