பட்டர்பிரான் பாடிய பைந்துழாய்க் கண்ணன்



பெரியாழ்வார் திருமால் நெறியில் ஆழ்ந்து சிறந்திருந்த பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர் ஆவார். திருவில்லிபுத்தூரில் ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் கருடனின் அம்சமாக ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்தவர். திருவில்லிபுத்தூரில் கோயில் கொண்டுள்ள வடபத்திரசாயி பெருமாளுக்கு மலர்களை மாலையாகச் சாற்றுவதை திருத்தொண்டாகக் கொண்டு வாழ்ந்தவர். இவரால் அருளப் பெற்று திவ்வியப் பிரபந்தத்தில் இடம் பெற்றுள்ள பெரியாழ்வார் திருமொழியின் பாடல்களின் எண்ணிக்கை 473 ஆகும்.வல்லபதேவ பாண்டியனுக்கு எழுந்த ஐயம் தீர்க்கும் பொருட்டு மதுரையில் நடைபெற்ற சமயவாதத்தில் வென்று அரசனால் அளிக்கப்பட்ட பட்டத்து யானை மீது வரும் பொழுது, திருமால் திருமகளோடு வானத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளியிருக்கக் கண்டு இறைவனின் வடிவழகில் மயங்கி எங்கே இறைவனுக்கு கண்ணேறு விழுந்து விடுமோ என்றஞ்சி பாடப்பட்டதே திருப்பல்லாண்டு ஆகும்.

தாயாகிய பெரியாழ்வார்:

திருமால்மேல் பல்லாண்டு பாடிய பெரியாழ்வார் தாயாகிக் கிருஷ்ணாவதாரத்தின் பல்வேறு செயல்களுள் மனம் தோய்ந்து பக்திச்சுவை ததும்பப் பாடியிருக்கிறார். மால்நிற வண்ணனாய் மாயவனாய் அவதரித்த கண்ணனைக் குழந்தையாகக் கருதி பெரியாழ்வார் பாடிய பாசுரங்கள் கற்பார் மனத்தைக் கசி வித்து தாய்மையின் பேரன்பினை சகலர்க்கும் ஏற்படுத்தும் ஆற்றல் பெற்றவை. கண்டார் மனம் மயக்கும் மன்னனாய் மண் மீதில் அவதரித்த மாயவனின் எல்லாச் செயல்களிலும் உள்ளம் பறி கொடுத்து தோய்ந்து, இவர் பாடியருளிய பாசுரங்களின் பக்தி அனுபவம் பயிலும்தோறும் கற்கண்டுச் சாறாய் கன்னித் தமிழின் சுவையாய் ஆனந்தம் அளிப்பவை. இப்பாசுரங்கள் மூலம் உலகம் யாவையும் ஒருவாய் மண்ணில் உள்ளடக்கிக் காட்டிய பெருமானுக்கே பெரியாழ்வார் தாயாகிறார். குழந்தைகளுக்கு உரிய செயல்களை பெரியாழ்வார் என்னும் தாய் எப்படி அனுபவிக்கிறாள் என்பதை சில சான்றுகள் மூலம் பார்க்கலாம்.

கண்ணன் பிறப்பு:
     
மாடங்கள் நிறைந்துள்ள திருக்கோட்டியூரில் கண்ணன் பிறந்த இல்லம் மகிழ்ச்சிக் கடலில் மிதக்கின்றது. கண்ணன் பிறந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் வண்ணம் ஆயர்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை பூசிக் கொண்டனர். அதனால் கண்ணன் வீட்டுத் திருமுற்றம் எல்லாம் எண்ணையும் சுண்ணமும் கலந்து சேறாகின என்பார் ஆழ்வார். இதனை வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்க் கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக் கண்ணன் முற்றம் கலந்து அளறு ஆயிற்றே என்ற பாடலானது விளக்கி நிற்கும். கண்ணன் அவதரித்த காலத்தில் கோகுலத்தில் நந்த கோபன் மாளிகையில் அந்தக் குழந்தையைப் பார்த்தவர்கள் வெளியில் புறப்பட்டு வந்து கொண்டும் இருந்தனர். அத்தகையோரில் சாமுத்திரிகா லட்சணம் தெரிந்தவர்கள். இக்குழந்தை எல்லாரினும் சிறந்தவன் என்று பேசிக் கொண்டார்களாம். மேலும் உலகினில் உள்ள ஆண்கள் எல்லாம் இக்குழந்தைக்கு உருவத்தால் ஒப்பார்களே அன்றிப் பிற சிறப்பு நிலைகளில் ஒப்பாகமாட்டார்கள் என்றும் எண்ணினார்கள் என்பார் பெரியாழ்வார். இதனை ரூபவ்,

பேணிச் சீர் உடைப் பிள்ளை பிறந்தினில்
காணத் தாம் புகுவார் புக்குப் போதுவார்
ஆண் ஒப்பார் இவன் நேர் இல்லை காண் திரு-
வோணத்தான் உலகு ஆளும் என்பார்களே

கண்ணபிரான் பிறந்தபோது சங்கு சக்கரம் போன்றவற்றுடன் பிறந்து இருப்பதனைக் கண்ட தேவகி வசுதேவர்கள் இந்த உருவத்தினை கம்சன் தெரிந்து கொள்ளாமல் மறைத்துக்கொள் என வேண்டினராம். கண்ணனும் அப்படியே தாய் தந்தையரின் சொல்லைக் கேட்டு பரிபாலித்து கம்சனால் நேரக்கூடிய ஆபத்தில் இருந்து தப்பியபடியால் ‘பேணி’ என்றும் ‘சீருடைய பிள்ளை’ என்றும் பெரியாழ்வார் அருளிச் செய்தார். சொன்னபடி கேட்கின்ற பிள்ளை அன்றோ அவருடைய பிள்ளை என்று காஞ்சி பிரதிவாதம் அண்ணங்கராச்சாரியார் விளக்கம் செய்வார்.

உலகம் காட்டிய உத்தமன்:
      
கண்ணனாகிய குழந்தையின் கையையும் காலையும் நீட்டி நிமிர்த்தி பெரிய பானையில் நறுமணப் பொருட்களுடன் காய்ச்சப்பட்ட வெந்நீரைக் கொண்டு நீராட்டினர். பின் சிறு மஞ்சள் கிழங்காலே குழந்தையின் நாக்கினை வழிக்கும் போது திருவாயின் உள்ளே உலகம் ஏழினையும் கண்டாள் யசோதைப் பிராட்டி. கண்ணனின் இத்தகைய செயலுக்கு அர்ச்சுனனுக்கு அத்தகைய தோற்றத்தினைக் காட்டினான் ஆதலினாலே யசோதைக்கும் தன் சுதந்திரமான விருப்பத்தினாலே காட்டியருளினான் என விளக்கமளிப்பார், அண்ணங்கராச்சாரியார். அவ்வாறு குழந்தையின் வாயில் உலகம் கண்ட பெண் நல்லார் எல்லாம் கண்ணன் ஆயர் புதல்வன் அல்லன், அருந்தெய்வம், பண்புடைய பாலகன்,  மாயன் என்றெல்லாம் வாழ்த்தி மகிழ்ந்தனர்.

கையும் காலும் நிமிர்த்துக் கடார நீர்
பைய ஆட்டிப் பசுஞ் சிறு மஞ்சளால்
ஐய நா வழித்தாளுக்கு அங்காந்திட
வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே

ஆயர்பாடி சுயம்வரம் நிகழும் இடமாதல்:
   
பொதுவாக குழந்தை பிறந்த பன்னிரெண்டாம் நாளில் குழந்தைக்கு முறையான புனித நீராட்டல் செய்து அதனைத் தீமைகள் ஏதும் அண்டாத வண்ணம் பூசைகள் செய்வர். அதன் பிறகே குழந்தையைப் பிறந்த இடத்திலிருந்து பிற இடங்களுக்குக் கொண்டு வரல் மரபு ஆகும். அந்நன்னாள் வரை குழந்தையைப் பிறர் தொடமாட்டார்கள். தாயும், தாயையும் சேயையும் பார்த்துக் கொள்ளும் தாதியுமே தொடல் அன்றி பிறர் தொடாது இருத்தல் மரபாகும். அதன்படியே கண்ணன் பிறந்த பன்னிரெண்டாம் நாள் ஆயர் பாடியின் அனைத்து இடங்களிலும் மங்கலத்திற்கு அறிகுறியாக வெற்றித் தூண்கள் நடப்பெற்றன. வண்ணத்தோரணங்கள் கட்டப்பெற்று சுயம்வரம் நிகழும் இடம் போல் அலங்காரம் செய்யப் பெற்றன. குழந்தையான கண்ணனுக்கு புனித நீராட்டல் செய்து அனைவரும் காணும் வண்ணம் கொண்டு வந்தனர். மதங்கொண்ட ஆண்யானைகள் நிறைந்த கோவர்த்தனகிரி என்னும் மலையினைத் தாங்கி ஆயர்களையும் ஆநிரைகளையும் காத்த வீர மகனை ஆயர்கள் அனைவரும் தங்கள் கைகளில் ஏந்தி மகிழ்ந்தனர் என அழகிய காட்சியை தன் பாசுரங்களில் வடித்துக் காட்டுவார் பெரியாழ்வார். அத்தகைய பாடல்...

பத்து நாளும் கடந்த இரண்டாம் நாள்
எத் திசையும் சயமரம் கோடித்து
மத்த மா மலை தாங்கிய மைந்தனை
உத்தானம் செய்து உகந்தனர் ஆயரே
என்பதாகும்.

கண்ணனைத் தொட்டிலில் கிடத்தல்:

யசோதை தன் அருகில் இருக்கும் பெண்களிடத்து கண்ணன் சேட்டைகளை விளக்குவதாய் இப்பாசுரம் அமைந்துள்ளது.பெண்களே! பருவத்திற்கு தகுந்த செயல்களைச் செய்யும் பிள்ளைகளை பெற்றமையால் கவலையற்று இருக்கின்றீர்கள். ஆனால், என்னுடைய பிள்ளையைத் தொட்டிலில் கிடத்தினால் அவன் தொட்டில் கிழிந்து போகும் படி கால்களை உதைக்கிறான். கால்கள் மெத்தென்றிருப்பதால் துன்புறும் என்று நினைத்து இடுப்பில் தூக்கி வைத்தால் இடத்தை விட்டு நழுவி இடுப்பினை ஒடித்து விடுகிறான். எனக்கே இக்குழந்தை செய்யும் சேட்டையினால் இடுப்பு முறிந்து விடும் எனும்படி வலி தோன்றினால் குழந்தைக்கு என்ன துன்பம் உண்டாகுமோ? என எண்ணி மார்போடு அணைத்துக் கொண்டால் வயிற்றினில் உதைக்கிறான். இப்படி இவன் தன் பருவத்திற்கு ஒவ்வாத காரியங்களைச் செய்வதைப் பார்த்து அதனை நினைத்து நினைத்தே இளைத்துவிட்டேன் என்கிறாள் யசோதை. இப்பாடலில் தாய் தனக்கு நோவு உண்டாயினும் அதனைப் பெரிதெனக் கருதாது தன் குழந்தைக்கு ஏற்படும் துன்பம் கண்டு வருந்தும் தன்மை வெளிப்பட்டு நிற்கிறது.

கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
எடுத்துக் கொள்ளில் மருங்கை இறுத்திடும்
ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
மிடுக்கு இலாமையால் நான் மெலிந்தேன் நங்காய்

இவ்வாறு பிறந்திட்ட கண்ணபிரான் சிறப்பினைச் சொல்லிய இப்பாசுரங்களை பாடுவோர் தான் செய்த பாவங்களில் இருந்து மீள்வர் எனவும் குறிப்பார், பெரியாழ்வார்.

கண்ணனின் வளர்ச்சியும் ஆடலும்:

கண்ணனின் குழந்தைப் பிறப்பினை தாயின் மனநிலையில் இருந்து பாடிய பெரியாழ்வார் கண்ணனின் திருமேனியின் அழகினையும் செயல்களையும் புகழ்ந்து பேசுவார். பிறந்த குழந்தைகள் தங்களுடைய காலின் கட்டை விரலினை பிடித்து தன் வாயில் வைக்கும் அழகு பார்ப்பதற்கு கொள்ளை அழகு ஆகும். கண்ணன் என்கிற குழந்தை அவ்வாறே தனது காலின் கட்டை விரலினை வாயில் வைத்திருக்கிறது, பெரியாழ்வாரின் தாய்மை மனது அதனைக் கண்டு ஆனந்தம் கொள்கிறது.  உடன் அருகில் இருக்கும் அனைவரையும் அழைத்து இதற்கு அரிய காட்சியை வந்து பாருங்கள்! என்கிறார்.

சீதக் கடலுள் அமுது அன்ன தேவகி
கோதைக் குழலாள் அசோதைக்குப் போத்தந்த
பேதைக் குழவி பிடித்துச் சுவைத்து உண்ணும்
பாதக் கமலங்கள் காணீரே
பவள வாயீர் வந்து காணீரே

பத்து விரலும் பாதமும்:
    
முத்துக்கள், மாணிக்கங்கள், வைரங்கள், பொன் என்று மாற்றி மாற்றி பதித்ததைப் பால உடலெங்கும் கருமாணிக்கம் போல் நிறம் கொண்ட மணிவண்ணனின் திருப்பாதங்களில் இருக்கும் பத்து விரல்களும் கண்ணனின் நிறத்தனை ஒத்து இருப்பதையும், ஒவ்வொரு விரலும் மற்ற விரலுக்கு ஒத்து இருப்பதையும் காணுங்கள்! என்று குறிப்பிடுகிறாள் யசோதை. இதனால் கண்ணனின் பத்து விரல் அழகினையும் அதனைப் பார்த்து மகிழும் யசோதையின் திரு உள்ளத்தையும் கண்டு அனுபவிக்க முடிகிறது.

முத்தும் மணியும் வயிரமும் நன்பொன்னும்
தத்திப் பதித்துத் தலைப்பெய்தாற் போல் எங்கும்
பத்து விரலும் மணிவண்ணன் பாதங்கள்
ஒத்திட்டு இருந்தவா காணீரே
ஒண்ணுதலீர் வந்து காணீரே

கணைக்கால் அழகு:
 
ஆய்ச்சியரின் பால் நிறைந்த மார்பினைத் தன் திருக்கைகளால் அணைத்துக் கொண்டு தன் திருவயிறு நிறையும் வண்ணம் பாலினை அருந்தி அதன் நிறைவிலும் மகிழ்விலும் இன்துயில் கொண்டிருக்கிறான் கண்ணன். அந்தச் சின்னக் குழந்தையின் வெள்ளியணி விளங்கும் கணைக்கால்களின் அழகினைக் காணக் கண்கள் போதாது. வந்து கண்டு மகிழ்வீர் பெண்களே! என யசோதை பெண்களை அழைப்பது போல் கண்ணனின் திருவடி அழகினைச் சுட்டுகிறாள்.

பணைத்தோள் இள ஆய்ச்சி பால் பாய்ந்த கொங்கை
அணைத்து ஆர உண்டு கிடந்த இப் பிள்ளை
இணைக்காலில் வௌ;ளித் தளை நின்று இலங்கும்
கணைக்கால் இருந்தவா காணீரே
காரிகையீர் வந்து காணீரே

திருக்கைத்தலங்களின் அழகு:

கரிய பெரிய திருக்கண்களை உடைய யசோதைப் பிராட்டியார் வளர்க்கின்ற சிறந்த நிலத்திலே மலர்ந்திருக்கும் நீலம் என்ற பெயர் கொண்ட கருநெய்தல் பூவைப் போன்ற நிறத்தைக் கொண்ட சிறு பிள்ளையாம் கண்ணனின் கூரிய முனைகளைக் கொண்ட திருச்சக்கரமும் திருச்சங்கும் என்றும் வீற்றிருக்கும் திருக்கைத்தலங்களைக் காணுங்கள்! கனமான காதணிகளையுடைய பெண்களே காணுங்கள்! என்பார் பெரியாழ்வார்.

மைத் தடங்கண்ணி யசோதை வளர்க்கின்ற
செய்த்தலை நீல நிறத்துச் சிறுப்பிள்ளை
நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய
கைத்தலங்கள் வந்து காணீரே
கனங்குழையீர் வந்து காணீரே

கண்ணழகு படைத்த யசோதைப் பிராட்டி பிறர் கையில் காட்டிக் கொடாமல் தானே  வைத்தகண் வாங்காமல் ஆதரித்து வளர்ப்பதனால்தான் அவளது கண்ணின் நிறமெல்லாம்  கண்ணனது திருமேனியில் ஏறி திருமேனிநிறம் கறுத்திருக்கின்றதோ! என்று  தோன்றும் படியிருக்கிற பிள்ளையென்பது முன்னடிகளின் உட்கருத்து. யசோதைப்  பிராட்டிக்குச் சிற்சில மையங்களில் சங்கு சக்கரங்களைக் காட்டுதலால்  ‘‘நேமியும் சங்கும் நிலாவிய கைத்தலங்கள்’’ என்றார். அன்றியே,   சக்கர ரேகையும் சங்கு ரேகையும் பொருந்திய கைத்தலங்கள் என்றும் கொள்ளலாம். இப்பொருளில் ‘நெய்த் தலை’ என்பது சக்கரத்திற்கு இயற்கை அடைமொழியாகும்.  கைத்தலத்தில் சங்கு, சக்ர ரேகைகள் அமைவது சிறந்த ஆண் மகனுக்குரிய  அழகாகும்.

வண்டுகள் மொய்க்கும் மலர்களைச் சூடிய யசோதை பிராட்டி கண்ணனின் அவதாரக் காலத்தில் அருகில் அமைந்த பெண்களை அழைத்து கண்ணனின் திருவடி முதல் திருமுடி வரை உள்ள அழகினைக் காட்டியதை பட்டர்பிரான் விரும்பி உரைத்த இப்பாசுரங்களை உரைப்போர் வைகுந்தம் சென்று கண்ணனின் திருவழகினை அனுபவித்து இருக்கும் பேற்றினைப் பெறுவார்கள் என பலனையும் சேர்த்துரைப்பார் பெரியாழ்வார். எனவே, பாற்கடலில் பையக் கடந்த பரந்தாமனின் அவதாரமான கண்ணனின் திருநாமம் சொல்லி திருவுருவ அழகினை சிந்தையில் கொண்டு திருவருள் பெற்று உய்வோமாக!

முனைவர் மா. சிதம்பரம்