விரைந்து வருவான் வெண்ணெய் விரும்பியோன்



மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது கிருஷ்ண அவதாரம். அந்த கிருஷ்ணன் பெயர் தாங்கி மூலவரை கொண்ட ஆலயங்கள் அவனியில் இருப்பது மிகவும் குறைவு. அந்த வகையில் நவநீத கிருஷ்ணன் என்ற நாமத்தோடு மூலவர் குழந்தை வடிவ பால கிருஷ்ணனாக இருக்கும் கோயில் கன்னியாகுமரி மாவட்டம் வடசேரியிலுள்ள கிருஷ்ணன்கோயில். இந்தக்கோயிலை திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்டு வந்த மகாராஜாக்களின் வம்சத்தில் வந்த ஆதித்தவர்ம மகாராஜா கட்டினார். ஆதித்தவர்ம மகாராஜா குருவாயூரப்பன் மேல் பக்தி கொண்டவர்.

தினமும் குருவாயூரப்பனை தரிசனம் செய்யாமல் எந்த பணியையும் செய்வதில்லை. இந்தநிலையில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தென் கிழக்கு பகுதிகளை கவனிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. தான் வசிக்கும் பகுதியில் குருவாயூரப்பனுக்கு கோயில் கட்ட வேண்டும் என்று எண்ணம் கொண்டார். அதற்கான வேலையில் இறங்க முற்பட்ட முந்தைய நாள் நித்திரையில் இருந்த ஆதித்தவர்ம மகாராஜாவின் கனவில் தோன்றிய குருவாயூரப்பன், வெண்ணை உருண்டயை கரம் தனில் ஏந்த மழலை ரூபத்தில் காட்சி கொடுத்தான். அது மட்டுமன்றி தனக்கு கோயில் அமைய இருக்கும் இடத்தை குருவாயூரப்பனே கூறியுள்ளார். நாளை காலை சூரிய உதயத்தின் போது அருகே இருக்கும் கானகத்திற்கு செல் அடர்ந்த மரச்சோலைக்குள் சிறிய குளம் ஒன்றின் அருகே கருடன் இருப்பான். அவ்விடமே எனக்கு கோயில் அமைய ஏற்ற இடம் என்று கூறியுள்ளார்.

அதன்படி மறுநாள் காலை அவ்விடம் வந்த ஆதித்தவர்ம மகாராஜா கருடனை கண்ட இடத்திலேயே கோயில் எழுப்பினார். கோயில் கட்டிய மன்னன், தான் கனவில் கண்ட வடிவத்திலான கிருஷ்ணர் சிலையை பிரதிஷ்டை செய்தான். சுவாமிக்கு “நவநீத கிருஷ்ணர்’ என திருநாமம் சூட்டினான். நவனீதம் என்றால் வெண்ணெய். கண்ணன் எப்போதும் வெண்ணெய்யுடன் சிறுவயதில் இருந்ததால் நவநீதன் என்ற பெயர் வந்தது. கிருஷ்ண பகவான் எளிதில் தென்படாத உட் பொருள். காய், பழமாவதும், கதிர், நெல்லாகி அரிசியாவதும் யாவரும் அறிந்ததே. இப்படி எல்லா பொருளுக்கும் மூலமும், அந்தமும் அடுத்தடுத்து வரும்.

ஆனால் பால், தயிராகி அதில் உறையும் ஆடையின் கூட்டுச் சேர்க்கை திடமாகி வெண்ணெய் ஆவது அதன் உட்பொருளன்றோ. அதுபோல் கிருஷ்ண பரமாத்மா தன்னை உண்டென நம்பி முழுமையாக தன்னை பற்றும் அன்பர்களின் அகத்தினில் தென்படுவார். பாலுக்குள் தென் படாமல் உறைந்திருக்கிறான். பாலுக்கும், நெய்யுக்கும் இடையே உள்ள வெண்ணெயாய் இருக்கிறான் அந்த இடையன். அதனால் தான் அவனுக்கு நவநீதகிருஷ்ணன் என்று பெயர் வந்தது.

நெய் வேண்டுவோர் பாலைப் பக்குவமாகக் காய்ச்சி ஆறவைத்து, உறை ஊற்றி அசையாது வைத்திருந்து பின்னர், உறைந்திருக்கும் தயிரின் மேல் பரவியிருக்கும் ஆடையினை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து மத்தினால் கடைந்தெடுத்தால் திரளும் வெண்ணெய். இருபுறமும் வேண்டியது வேண்டாமை ஒதுக்குவது போன்று கடையும் போது திரண்டு வெளிப்பட்டுத் தோற்றம் தரும் வெண்ணெய் போன்று கஷ்ட, நஷ்டங்களை தாங்கி போராடி இல்லற வாழ்வில் இருந்து கொண்டே அவன் நாமத்தை கூறிக்கொண்டே இருந்தால் வெளிப்படுவான் ஒருநாள் நவநீத கிருஷ்ணன்.

கிருஷ்ணன்கோயில் மூலஸ்தானத்தில் கிருஷ்ணர் குழந்தை வடிவில், இரண்டு கால்களையும் சற்றே மடக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். கிருஷ்ண ஜெயந்தியன்று நள்ளிரவில் இவருக்கு சிறப்புபூஜை நடக்கும். அப்போது சுவாமி விசேஷ அலங்காரத்தில் தத்ரூபமாக குழந்தை போலவே காட்சியளிப்பார். மறுநாள் உறியடி உற்சவம் நடக்கும். உற்சவர் ராஜகோபாலர் ருக்மிணி மற்றும் சத்யபாமாவுடன் காட்சி தருகிறார். மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்தபோது, அவரது குழந்தை பருவத்தில் கிருஷ்ணர் என்றும், பசுக்களை மேய்க்கும் இளைஞனாக இருந்தபோது ராஜகோபாலர் என்றும் அழைக்கப்பெற்றார்.

இதன் அடிப்படையில் இங்கு மூலவராக கிருஷ்ணரையும், உற்சவராக ராஜகோபாலரையும் அமைத்துள்ளனர். சித்திரையில் நடக்கும் பிரம்மோற்ஸவத்தின்போது ராஜகோபால சுவாமியே தேரில் எழுந்தருளுவார். வைகுண்ட ஏகாதசியன்றும் இவரே சொர்க்கவாசல் கடக்கிறார். இத்தலத்து கிருஷ்ணர் மிகவும் பிரசித்தி பெற்றவர் என்பதால், இவரது பெயரில் இந்தக் கோயில் இருக்கும் இடம் “கிருஷ்ணன் கோவில்’ என்று அழைக்கப்படுகிறது. தினமும் அர்த்தஜாம பூஜையின்போது, குழந்தை கிருஷ்ணரை வெள்ளி தொட்டிலில் வைத்து, தாலாட்டுப்பாடி பூஜிக்கின்றனர்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த பூஜையில் கலந்து கொண்டு கிருஷ்ணருக்கு வெண்ணெய் காப்பு சாத்தி, பால்பாயாசம், உன்னியப்பம், பால், பழம், அரிசிப்பொரி, வெண்ணெய், அவல், சர்க்கரை படைக்கின்றனர். சித்திரை பிரம்மோற்ஸவத்தின் நான்காம் நாளில் கிருஷ்ணர் கையில் வெண்ணெய் பானையுடன், “வெண்ணெய்த்தாழி’ உற்சவம் காண்கிறார். இவ்விழாவின் ஏழாம் நாளில் இவர் இந்திர வாகனத்தில் எழுந்தருளும் வைபவம் விசேஷமாக நடக்கும்.

சித்ரா பவுர்ணமியன்று கிருஷ்ணர், இங்குள்ள பழையாற்றுக்கு சென்று ஆராட்டு வைபவம் காண்பார். ஆடி கடைசி சனிக்கிழமையன்று இவருக்கு புஷ்பாபிஷேகம் நடக்கிறது. அன்று மூலஸ்தானம் முழுவதும் மலர்களால் நிரப்பி, சுவாமியின் முகம் மட்டுமே தெரியும் படியாக அலங்கரிப்பர். இவ்வேளையில் சுவாமியை தரிசித்தால் மன நிம்மதி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பிராகாரத்திலுள்ள காவல்தெய்வமான பூதத்தான், மரத்தாலான ஒரு தண்டத்தின் வடிவில் காட்சி தருகிறார். சபரிமலையில் மண்டல பூஜை நடக்கும் நாளன்றும், தை மாத பிறப்பன்றும் மட்டும் இந்த தண்டத்திற்கு விசேஷ பூஜை நடக்கும். சாஸ்தா சந்நதியும் உள்ளது. பங்குனி உத்திரத்தன்று இவருக்கு விசேஷ பூஜை நடக்கும்.மகாலட்சுமியின் அம்சமாகக் கருதப்படும் நெல்லிமரம் இத்தலத்தின் விருட்சம். இங்குள்ள கொன்றை மரத்தடியில் அருகில் நாகருடன், சிவலிங்கம் இருக்கிறது. நாகதோஷம் உள்ளவர்கள் லிங்கம், நாகத்திற்கு பாலபிஷேகம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து இருந்து, திருவனந்தபுரம் செல்லும் சாலையில் ஒரு கி.மீ., தூரம். பயணித்தால் கிருஷ்ணன்கோயிலை அடையலாம்.

A ஹரிதாஸ்
படங்கள்: R.மணிகண்டன்