மகா சக்தி தரிசனம்* பொறுப்பாசிரியர் எழுதிய ‘வரலாற்றைத் தாங்கும் கல்வெட்டுக்களை காப்போம்’ தலையங்கம் படித்தேன். கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் காலங்களில் கோயிலை அழகுபடுத்துகிறோம் என்று நினைத்து அறியாமையில் கல்வெட்டுகளை சிதைக்கும் பேர் வழிகளுக்குச் சரியான சூடு கொடுத்துள்ளீர்கள். கல்வெட்டுக்களை அப்படியே பாதுகாத்து அதை வரும் காலத்தினருக்கு ஒப்படைப்பது அனைவரின் கடமை என்று கூறியது வரவேற்கத்தக்கது.
- ம.மதிவாணன்,  அச்சல்வாடி அஞ்சல், அரூர்.

* பரணிகுமார் எழுதிய நவசக்தி குறித்த (நவசக்தி அர்ச்சனை) விளக்கங்கள், எந்த கோயில் என்ன பிரசாதம்? போன்ற படைப்புகள் ஆன்மிக உள்ளங்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துவதாக இருந்தன.
- இரா.வளையாபதி,  தோட்டக்குறிச்சி, கரூர் மாவட்டம்.

* ஆடி மாதம் பிறப்பதற்கும், மகா சக்தி(கள்) தரிசனம் நீங்கள் பக்தி ஸ்பெஷலாகத் தேர்ந்தெடுத்து தந்ததும் பெரிய கொடுப்பினை. உள்ளே கூகூர் ராஜதுர்க்கை இவ்விருவரின் கம்பீரம் மெய்சிலிர்க்க வைத்தது. தூத்துக்குடி மாவட்டத்து மூன்று கோயில்கள், திருநெல்வேலி பக்கம் மூன்று கோயில்கள். இவை மகாசக்தி தரிசனத்தில் மறக்க முடியாதவை. விளக்கொளிப் பெருமாள் தோன்றிய விதம். ‘‘மஹாத்யுதயே நமஹ’’ நாமம் (178) மூலம் அழிந்திட்டபோது வியப்பு மேலோங்கியது. ஒரு சாதாரண (‘அச்’) தும்மலுக்கு எவ்வளவு  விவரமான விசேஷமான விசயங்கள்! காட்டழகிய சிங்கப்பெருமாள் எழுந்தருளிய விதம், அதன் வரலாறு யாவும் பக்திப் பரவசம்.
- சுகந்தி நாராயண்,வியாசர் காலனி.

* இளம் கலைமாறன் எழுதிய ஐஸ்வரியம் அருளும் அஷ்ட செல்விகள் இருப்பிடம், அவர்களின் கோயில் படங்கள் ஆகியவற்றுடன் அவர்களை வழிபட்டால் ஏற்படும் பலன்கள் என அனைத்து தகவல்களையும் வெளியிட்டு, வாசகர்கள் இருந்த இடத்திலிருந்தே அஷ்ட செல்விகளையும்  வழிபட்டு சகல சம்பத்துகளையும் பெறச்செய்த ஆன்மிகம் பலன் இதழின் ஆன்மிக பணிக்கு வாசகர்கள் சார்பில் நன்றி.
- K. சிவக்குமார்,சீர்காழி.

* காட்டழகிய சிங்கர் கோயிலின் திருமுற்ற விசேடங்களைத் தெளிவாகத் தெரிந்துகொண்டோம். இத்திருக்கோயிலின் ஒன்பது துளசி மாடங்களையும் சுற்றி வலம் வந்து வணங்கினால் நவகோள்களை வணங்கிய பலன் கிட்டும் என்பது அறிய முடிந்தது. வெல்லம், ஏலம், சுக்கு கலந்து தயாரித்து பெருமாளுக்குப் படைக்கப்படும் பானகத்தின் சிறப்பு மற்றும் கல்லூரி, பள்ளி மாணவர்கள் பதினெட்டு முறை கோயிலை வலம் வந்து பெருமானை வணங்கினால் ஏற்படும் நன்மைகள் ஆகியவற்றை விரிவாகத் தெரிந்துகொண்டோம்.
-இராம.கண்ணன்,  சாந்திநகர், திருநெல்வேலி-2

* அன்னை ஆதிபராசக்தி ஐஸ்வர்யம் அருளும் அஷ்டசெல்விகளாய் வீற்றிருந்து பக்தர்களின் கஷ்டங்களைப் போக்கி இல்லத்தைப் பொலிவு பெறச் செய்கிற அற்புத திருத்தலங்களை தரிசிக்க வைத்து விட்ட கட்டுரை ஆடியில் எங்களுக்குக் கிடைத்த தெய்வீக பரிசு எனலாம். வள்ளலாருக்கு அமுதளித்து ஒரு ஆச்சரிய திருவிளையாடல் நிகழ்த்திய அன்னையாய் அருளாசி புரியும் திருவொற்றியூர் வடிவுடையம்மன் திருத்தலத்தின் மகத்துவத்தை விவரித்த கட்டுரை ஆடி மாதத்தில் அந்த அம்பாளை தரிசித்து வணங்க வேண்டும்.
- அயன்புரம் த.சத்திய நாராயணன், சென்னை-72

* தமிழ் மாதங்களில் சிறப்புக்குரிய மாதங்களில் ஒன்றான ஆடி மாதத்தின் சிறப்புகளையும் பல்வேறு அம்மன்களையும் அறிமுகப்படுத்தியும் அழகான புதுமையான அட்டைப்படத்துடனும் இந்த ஆன்மிக இதழ் அட்டகாச ஆடிமாத இதழாக இருந்தது.
- ப.மூர்த்தி, பெங்களூரு.