தெளிவு பெறுஓம்* என்னதான் நாகரிகம் என்ற போர்வை சமூகத்தை  மூடப் பார்த்தாலும் இன்னமும் சம்பிரதாயமும் சடங்கும் நிலைப் பெற்றிருப்பதன் காரணம் எது? -விநாயகராமன், திசையன்விளை.

ஆன்மிகம்தான். ஆன்மிகம் என்பது இந்த உலகில் இருக்கும் வரை சம்பிரதாயமும் சடங்கும் என்றென்றும் நிலைத்திருக்கும். நமது தேசத்தின் ஆணிவேரே அன்பும் ஆன்மிகமும்தான். அன்பு இருக்கும் இடத்தில் ஆன்மிகம் என்பது தானாக இடம்பிடித்துவிடும். அதனால்தான் அன்பே சிவம் என்றார்கள். ஆங்கிலத்தில் love is god என்கிறார்கள். எங்கெல்லாம் உண்மையான அன்பு இருக்கிறதோ அங்கெல்லாம் இறைவன் இருக்கிறான் என்பதை உலகத்தோர் எல்லோரும் ஒப்புக்கொள்கிறார்கள். இந்தியர்களிடையே அன்பு உணர்வு அதிகம் இருப்பதால் அங்கே ஆன்மிகமும் நிலைப்பட்டு நிற்கிறது. ஆன்மிகம் நிலைப்பட்டு நிற்பதால் சம்பிரதாயமும், சடங்குகளும் மாறாமல் இடம்பிடிக்கின்றன. நாகரிகம் மாறினாலும் இந்த அடிப்படை உணர்வு நம்மை விட்டு என்றுமே அகலாது என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

* ஒரு குடும்பத்தில் மூத்தவனின் மனைவி விசாக நட்சத்திரத்தில் அமைந்தால் இளையவனுக்கு திருமணம் தடைபடும் என்கிறார்களே, இது சரியா? இதற்கு பரிகாரம் உண்டா-? - ரேகா ராதாகிருஷ்ணன், புத்தூர்.

இந்த கருத்து முற்றிலும் தவறானது. ஒருவருடைய ஜாதகமோ அல்லது ஜென்ம நக்ஷத்ரமோ மற்றவரை எந்தவிதத்திலும் பாதிக்காது என்பதே நிதர்சனமான உண்மை. மூலத்தில் பிறந்தால் மாமனாருக்கு ஆகாது, ஆயில்யத்தில் பிறந்தால் மாமியாருக்கு ஆகாது, கேட்டையில் பிறந்தால் மூத்த மைத்துனருக்கு ஆகாது, விசாகத்தில் பிறந்தால் இளைய மைத்துனருக்கு ஆகாது, ரோகிணியில் பிறந்தால் தாய்மாமனுக்கு ஆகாது, பூராடம் நூலாடாது என்று சொல்வதெல்லாம் வெறும் கட்டுக்கதைகள் மட்டுமல்ல, மூட நம்பிக்கையும் கூட. இதுபோன்ற கருத்துக்களுக்கு எந்தவிதமான ஆதாரமும் கிடையாது. தவறான கருத்துக்களை நம்ப வேண்டிய அவசியமில்லை. விசாகத்தில் பிறந்தால் இளைய மைத்துனருக்கு ஆகாது என்று சொல்வதில் எள்ளளவும் உண்மையில்லை என்பதால் இதற்கு பரிகாரம் என்பதும் கிடையாது.

* ஞானிகள், மகான்கள், சித்தர்கள் மூவருக்கும் என்ன- வித்தியாசம்? - யாழினி பர்வதம், சென்னை - 78.

முனிவர்கள் மற்றும் மகரிஷிகளை விட்டுவிட்டீர்களே... முனிவர்களும், மகரிஷிகளும் ஊருக்கு வெளியில் அல்லது காடுகளில் தங்களுக்கென்று தனியாக குடில் அமைத்துக்கொண்டு வாழ்ந்தவர்கள். தங்களது தவ வலிமையின் மூலமாக பலவித ஆராய்ச்சிகளைச் செய்து தங்களது சீடர்கள் மூலமாக தங்கள் ஆராய்ச்சியின் பலனை இந்த உலகிற்கு எடுத்துச் சொன்னவர்கள். வசிஷ்டர், போதாயனர், ஆபஸ்தம்பர், சௌனகர், வியாசர், அகத்தியர் போன்றவர்கள் தங்களது தவ வலிமை மற்றும் ஆராய்ச்சியின் மூலமாக வாழ்வியல் நெறிமுறைகளை இந்த உலகத்திற்கு சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

எளிதில் புரியும்படியாக சொல்ல வேண்டுமென்றால் முனிவர்களும், மகரிஷிகளும் அந்நாட்களில் வாழ்ந்த விஞ்ஞானிகள். மெய்ஞ்ஞானத்தின் மூலமாக விஞ்ஞானத்தை அறிந்து இந்த உலகத்திற்கு உரைத்தவர்கள். அதே நேரத்தில் மகான்கள் என்பவர்கள் ஆராய்ச்சியாளர்கள் அல்ல. இந்த முனிவர்களும், மகரிஷிகளும் சொல்லிவிட்டுச் சென்ற கருத்துக்களை தங்களது திருவாக்கு மூலம் இந்த உலக மக்களுக்கு எடுத்துச் சொன்னவர்கள். முனிவர்களைப் போன்று காட்டில் வாழாமல் மக்களோடு மக்களாக இணைந்து வாழ்ந்தாலும், தங்களுக்கென்று எதையும் வைத்துக் கொள்ளாமல் தவ வாழ்க்கை மேற்கொண்டவர்களை மகான்கள் என்று சொல்கிறோம். ஆதி சங்கரர், ராமானுஜர், ராகவேந்திரர், சாயிபாபா போன்றவர்களை மகான்கள் என்று அழைக்கிறோம். சுருங்கச் சொன்னால் மக்களோடு மக்களாக வாழ்ந்து தங்களது மெய்ஞ்ஞான கருத்துக்கள் மூலம் தர்மநெறி தவறாமல் வாழ வழி வகுத்துத் தந்தவர்களை மகான்கள் என்று அழைக்கிறோம். காந்தியடிகளைக் கூட காந்தி மகான் என்றழைப்பதற்கு காரணம் அவரது தர்மநெறி தவறாத வாழ்க்கையே காரணம்.

அதே நேரத்தில் மெய்ஞ்ஞானத்தை முற்றிலும் உணர்ந்தவர்கள் ஞானிகள். வள்ளலார், பாம்பன் சுவாமிகள் போன்றவர்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். சித்தத்தினை ஒருமுகப்படுத்தி தெளிவுகண்டவர்கள் சித்தர்கள். அகத்தியர், சிவவாக்கியர், போகர், திருமூலர், சட்டைமுனி, இடைக்காடர், பாம்பாட்டி சித்தர் முதலான பதினெட்டு சித்தர்களைப் பற்றிப் படித்திருப்போம். இவர்கள் மரணமில்லா பெருவாழ்வினைப் பெற்றவர்கள், கூடுவிட்டு கூடு பாயும் ரகசியம் அறிந்தவர்கள் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. விஞ்ஞானத்திற்கும் விளங்காத சித்து விளையாட்டுகளைச் செய்து காட்டியவர்கள் சித்த புருஷர்கள். பழனியில் உள்ள மூலவர் சிலை நவபாஷாணத்தால் ஆனது என்றும், அந்த நவபாஷாண சிலையானது போகர் என்ற சித்தரால் ஒன்பது ஆண்டுகள் கஷ்டப்பட்டு உருவாக்கப்பட்டது என்றும் செய்தித்தாள்களில் படிக்கிறோம். போகரின் சமாதி பழனி மலையிலேயே அமைந்துள்ளது என்றும் போகர்தான் இன்றளவும் அந்த சிலையை பாதுகாத்து வருகிறார் என்பதும் தற்போதைய தலைப்புச் செய்தியாக உலாவந்து கொண்டிருக்கிறது. சித்தர்களின் மகிமையை சாதாரண மனிதர்களால் எளிதில் புரிந்துகொள்ள இயலாது என்பதே நிஜம்.

* ஒரு விரதம் மேற்கொண்டால் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும், பாதியில் நிறுத்தக்கூடாது என்கிறார்களே, பாதியில் நிறுத்தினால் பாதகம் விளையுமா? - மு. மதிவாணன், அரூர்.

விளையாது. அதே நேரத்தில் பலன் கிடைக்காது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். விரதம் மேற்கொள்வதால் உண்டாகும் நன்மைகளை பாதியில் நிறுத்துவதால் அடையமுடியாது அல்லவா... முதலில் விரதம் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். வயிற்றுக்கு சாப்பிடாமல் இருப்பதன் பெயர் விரதம் அல்ல. விரதம் என்றால் மன உறுதி அல்லது கட்டுப்பாடு என்று பொருள். இந்தக் கட்டுப்பாட்டினை மேற்கொள்ளும்போது அதற்குரிய பலன் நிச்சயம் கிடைக்கும். பாதியில் விடும்போது இத்தனை நாள் விரதத்தினை கடைபிடித்ததற்கான பலன் கிடைக்காது போகும்.

* ஆவணி அவிட்டம் என்ற பூணூல் அணிதல் விழா பற்றிய தாத்பரியம் என்ன? இவ்வாண்டு ஆவணி அவிட்டம் என்ற விழா ஆடி மாதத்தில் வருகிறது என்கிறார்களே, இதன் விளக்கம் என்ன? - ப.த. தங்கவேலு, பண்ருட்டி.

ஒரு வருடத்தை உத்தராயணம், தட்சிணாயணம் என்று இரண்டாகப் பிரித்து வைத்திருக்கிறார்கள். தை மாதம் முதல் ஆனி மாதம் வரையிலான உத்தராயணம் எனப்படும் ஆறு மாத காலத்தை எல்லா சமூகத்தினரும் உழைத்து சம்பாதிக்க வேண்டிய காலமாக வகுத்திருந்தனர். ஆடி முதல் மார்கழி வரையிலான தட்சிணாயணம் எனும் ஆறு மாத காலத்தை தேவர்களைப் பூஜிப்பதற்கும், ஆலயம் கட்டுதல், குளம் வெட்டுதல் போன்ற பொதுக்காரியங்களில் ஈடுபடுவதற்கான காலமாகப் பிரித்தார்கள். ஆடி மாதம் அமாவாசைக்கு அடுத்து வரும் பௌர்ணமி நாள் ஆவணி அவிட்டம் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. அந்தணர்கள் ஆவணி அவிட்டம் நாள் முதல் வேத மந்திரங்களைக் கற்பதும், தை மாதத்தில் இருந்து கற்ற மந்திரங்களின் துணை கொண்டு பணம் சம்பாதிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

அனைத்து தரப்பினரும் உத்தராயணத்தில் சம்பாதிப்பதற்கும், தட்சிணாயணத்தில் தர்ம காரியங்களில் ஈடுபடுவதற்கும் கால அட்டவணையை தயார்படுத்தி வைத்திருப்பார்கள். ஆவணி அவிட்ட நாளில் புதிதாக பூணூல் மாற்றிக்கொண்டு வேதாரம்பம் செய்வார்கள். அதாவது புதிய கலைகளைக் கற்றுக் கொள்ளத் துவங்குவார்கள். யாகங்களைச் செய்து வரும் வேத விற்பன்னர்கள் சிராவண மாதம் பௌர்ணமியில் (ஆவணி அவிட்டம்) இருந்து மார்கழி மாத பௌர்ணமி வரை சர்ப்ப பலி எனும் யாக பூஜையைச் செய்வது வழக்கம். இதற்குக் காரணம் இந்த இடைப்பட்ட காலத்தில்தான் பாம்பு, தேள், மரவட்டை, பூரான், நத்தை, அட்டை, கம்பளிப்பூச்சி முதலான விஷப்பூச்சிகள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியில் வரும். அக்காலத்தில் மனிதர்கள் செல்லும் பாதையில் இந்த விஷப்பூச்சிகளால் பலவிதமான தொல்லைகள் உண்டாவது வழக்கம்.

மனிதர்களால் இந்த ஜந்துக்களுக்கும், பூச்சிகளால் மனிதர்களுக்கும் என இரு தரப்பிலும் பரஸ்பரம் எவ்வித பாதிப்பும் நேரக்கூடாது என்பதால் காட்டில் வசித்து வந்த ரிஷிகளும், சந்யாசிகளும் கூட சாதுர்மாஸ்ய விரதம் என்று இருப்பிடத்தை விட்டு வெளியில் வராமல் விரதம் காப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆவணி அவிட்டம் என்பது அந்தணர்களுக்கு மட்டுமல்லாது, க்ஷத்ரியர்கள், வைசியர்கள் என எல்லோரும் புதிதாக பூணூல் மாற்றிக்கொண்டு புதிய கலைகளைக் கற்றுக்கொள்ளத் துவங்கும் நாள்.

காலப்போக்கில் அந்தணர்களும், குறிப்பிட்ட பிரிவைச் சார்ந்த வைசியர்களும் மட்டும் இந்த ஆவணி அவிட்ட நாளில் பூணூல் மாற்றிக் கொள்கிறார்கள். ஆனால் வேதாரம்பம் என்று சொல்லப்படுவதும், புதிய கலைகளைக் கற்றுக் கொள்வதும் பெயரளவில்தான் உள்ளதே தவிர, பெரும்பாலானோர் தற்காலத்தில் இந்த முறையைக் கடைபிடிக்க இ(மு)யலுவதில்லை. சிராவண சுத்த பௌர்ணமி நாளன்று இந்த விழாவினைக் கொண்டாட வேண்டும் என்பது விதி. அதாவது ஆடி மாதம் அமாவாசைக்கு மறுநாள் முதல் சிராவண மாதம் என்பது துவங்கும். இந்த சிராவண மாதத்தில் வருகின்ற பௌர்ணமி நாள் அன்று ஆவணி அவிட்டம் கொண்டாடப்படுகிறது.

ஆடி மாதத்தின் முற்பாதியில் அமாவாசை வந்துவிட்டால் அதிலிருந்து 15வது நாளில் அதாவது ஆடியின் இறுதிக்குள்ளாக பௌர்ணமியும் வந்துவிடும் அல்லவா?, அவ்வாறு இந்த வருடம் ஆடி மாதம் 15ம் நாள் அமாவாசை வருவதால் ஆடி மாதம் 30ம் தேதி அன்று சிராவண சுத்த பௌர்ணமி என்பது வந்துவிடுகிறது, அதனால் இந்த வருடத்தில் ஆவணி அவிட்டம் என்பது ஆடி மாதத்திலேயே கொண்டாடப்படுகிறது. ஆடியின் பிற்பாதியில் அமாவாசை வந்தால் ஆவணி மாதத்தில் இந்த ஆவணி அவிட்டம் என்பது வந்து சேரும். தமிழில் நாம் குறிப்பிடும் இந்த ஆவணி என்பது சாந்திரமான அடிப்படையில் சிராவணம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த சிராவண மாதத்தில் பெரும்பாலும் பௌர்ணமி என்பது அவிட்டம் நட்சத்திர நாளில் வரும். அதனால் இந்த பண்டிகை ஆவணி அவிட்டம் என்ற பெயரில் தமிழில் அழைக்கப்படுகிறது.

திருக்கோவிலூர் K.B ஹரிபிரசாத் சர்மா