பச்சையம்மனின் தோழியர்பச்சையம்மன் கோயில் கருவறையில் பச்சையம்மனுடன் அவளுக்கு துணையாக இருக்கும் ஆறு துணைப் பெண் தெய்வங்களுமாக ஏழு பெண் தெய்வங்கள் அமர்ந்துள்ளனர். பண்டை நாளில் ஏழு பெண்தெய்வங்களை ஒருசேர வைத்து வழிபடும் வழக்கம் இருந்தது. அதையொட்டியே பச்சையம்மன் ஆலயங்களிலும் ஏழு பெண் தெய்வங்களை வழிபடும் வழக்கம் உண்டானதென்பர். பச்சையம்மனோடு வீற்றிருக்கும் அவளது ஆறு பெண் தோழியர்களின் பெயர்கள் முறையே  காத்தாயி, பூங்குறத்தி, வேங்கைமலை நாச்சியார், வனக்குறத்தி, ஆனைக்குறத்தி, முடியாலழகி என்பதாகும். இவர்கள் வரலாறு பற்றியும், இவர்களது திருவுவங்களின் அமைப்பைப் பற்றியும் தொடர்ந்து காணலாம்.

அம்பிகை இறைவனின் ஆணைப்படி பூவுலகிற்கு வந்து கேதாரம், காசி, காஞ்சி முதலிய அனேக தலங்களில் சிவபூஜை செய்தாள். அவற்றில் முதன்மை பெற்றதாகப் பசிப்பிணி போக்கும் அன்னதானத்தைச் செய்தாள். அவளுடன் இந்திரனின் மனைவியான இந்திராணி, திருமாலின் மனைவியான மகாலட்சுமி, பிரம்மனின் மனைவியான சரஸ்வதி, மன்மதனின் மனைவியான ரதிதேவி, முருகனின் தேவியான வள்ளி, ஆகிய ஐவரும் மானுட வடிவம் தாங்கி வந்தனர். இந்திராணி ஐராவதத்துடன் ஆனைமேல் வரும் அழகியாகவும், மகாலட்சுமி மானுடன் வேங்க(ட) மலை நாச்சியாராகவும், சரஸ்வதி பூங்குறத்தியாகவும், ரதி முடியால் அழகி என்ற பெயரிலும், வள்ளி ஞானக்குறத்தியாகவும், வடிவு கொண்டு அவளுடன் இருந்து பணிகள் செய்தனர். அவளுடைய சிவபூஜைக்கு வேண்டிய பணிகளைச் செய்து கொடுத்தனர்.

இந்த ஐவருடன் காத்தாயி என்ற தோழியும் இடம் பெற்றுள்ளாள். அவள் கந்தனைப் பெற்றெடுத்த காத்தாயி என்று அழைக்கப்படுகிறாள். காலப் போக்கில் அவளுக்குத் தனி ஆலயம் அமைத்து வழிபடுவதுடன், பலர் அவளைக் குலதெய்வமாக ஏற்றுக் கொண்டாடி வருகின்றனர். பச்சையம்மன் கோயில்களில் கருவறையின் மையத்தில் பச்சையம்மன் வீற்றிருக்க, இருபுறமும் மூவர் மூவராகக் காத்தாயி, வேங்கைமலை நாச்சியார், முடியால் அழகி ஆகிய அறுவரும் ஒரே வரிசையில் நீண்ட மேடையில் அமர்ந்துள்ளனர். சில இடங்களில் ஒன்பது பெண் தெய்வங்களும் உள்ளனர். மேற்குறித்த அறுவருடன் பிரம்மனின் மற்றோர் மனைவியான சாவித்ரி, பரியேறும் பாவையாகவும் முருகனின் மூத்ததேவியான தெய்வயானை கற்பக மரத்தடியில் வீற்றிருக்கும் பாவையாக மரத்தடி நாச்சியாகவும் இடம் பெற்றுள்ளனர். அனைத்து ஆலயங்களிலும் இம்முறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை.

சில ஆலயங்களில் பச்சையம்மன் மட்டுமே கருவறையில் இருக்கிறாள். தோழியரைச் சுதைச் சிற்பமாக அமைத்துள்ளனர். பச்சையம்மனுடன் காத்தாயி, பூங்குறத்தி ஆகிய இருவரை மட்டும் அமைப்பதும் உண்டு. சில ஊர்களில் பச்சையம்மனுடன் நான்கு பெண்கள் இடம் பெறுகின்றனர். பச்சையம்மனைத் தனியாகவும், தோழியரோடும் வைத்து வழிபடும் இரண்டு முறைகளுமே வழக்கத்தில் உள்ளன. இனி, பச்சையம்மன் வழிபாட்டில் முதன்மை பெற்றுள்ள தோழியர் அறுவரைப் பற்றிய செய்திகளை அறிந்து கொள்ளலாம்.

தட்சிணாமூர்த்தி :- பச்சையம்மன் ஆலயங்களில் மன்னாதீஸ்வரர் என்னும் பெயரில் ராஜ கோலாகல வீரதீரனாகச் சிவபெருமான் வீற்றிருக்கின்றார் என்றாலும், அவரது குரு வடிவமான தட்சிணாமூர்த்தி வழிபாடும் இங்கு சிறப்பாக உள்ளது. தனியாகவாவது, மன்னாதீஸ்வரர் சந்நதிகோட்ட மாடத்திலாவது தட்சிணாமூர்த்தியைக் கல் திருமேனியாக அமைத்து வழிபடுகின்றனர். சிவன் சனகாதியர் உள்ளிட்ட முனிவர் கூட்டங்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்த வேளையில் அம்பிகை அவரது கண்களைப் பொத்த அதனால் உலகம் இருண்டு உயிர்கள் துன்புற்றதால் சிவன் அவளை பூவுலகம் செல்லும்படிக் கூறியது இங்கே சிந்திக்கத் தக்கதாகும். அம்பிகை தவத்தில் சிவனையே சிந்தித்துக் கொண்டிருப்பதால் அவருடைய தட்சிணாமூர்த்தி வடிவம் இங்கே நிலைப்படுத்தப்பட்டுள்ளது என்கின்றனர்.

காத்தாயி

பச்சையம்மனின் தோழியர்களில் காத்தாயி முதன்மையானவள். இவள் சக்தியின் கூறாகக் கங்காதேவியின் அம்சத்தில் இருந்து தோன்றியவள். இவள் மடியில் குழந்தையுடன் காட்சி தருகிறாள். வலதுகை நீலோற்பலமலரை ஏந்தி இருக்க, இடது கை மடியில் உள்ள குழந்தையை அணைத்துக் கொண்டுள்ளது. மடியில் குழந்தையாக முருகன் உள்ளார். இவளை வணங்கினால் அழகான குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கையாகும்.  குழந்தை வரம் வேண்டி இவளுக்குப் பூசைகள் செய்கின்றனர். தொட்டில், கல், மண்ணால் ஆன பிள்ளைகளை இவள் சந்நதியில் வைத்தல் ஆகியன பிரார்த்தனைகளாகும். இவள் நீலநிறம் கொண்டவள். இவளை ஊஞ்சலில் வைத்து ஆட்டுவர்.

 காத்தாயியைப் பச்சையம்மன் கதை கந்தனைப் பெற்றெடுத்த காத்தாயி என்று கூறுகிறது. வாழைப்பந்தலில் அம்பிகை வீற்றிருந்த போது தேவர்களும் முனிவர்களும் அவளிடம் வந்து, ‘‘அன்னையே, நீங்கள் சிவனைப் பிரிந்து வந்து தவம் புரிவதால் சிவன் மகாயோகி ஆகிவிட்டார். நீங்கள் இருவரும் இணைந்து இல்லாததால், உலகில் யோகம் மிகுந்து போகம் சுருங்கி விட்டது. உலகம் உற்பத்தியும் இல்லாமல் போய்விட்டது. நீங்கள் இப்போதே சிவனுடன் சேர்ந்து ஒன்றாகக் காட்சியளித்து அருட்பாலிக்க வேண்டு்ம்’’ என்று கேட்டுக் கொண்டனர்.

அவள் ,‘‘அன்பர்களே நான் தவம் பூண்டுள்ளேன். இறைவனின் திருமேனியில் பாதியைப் பெற்றுப் பாகம் பிரியாளாக வேண்டும் மென்பதே எனது குறிக்கோள். அதை அடையும் வரை ஓயாது தவம் செய்வேன் என்றாலும், உமது வேண்டுகோளை எம்மால் மறுக்க முடியவில்லை. எனது அம்சமாகவும், எனது சகோதரியாகவும் விளங்கும் கங்கையிடமிருந்து தோன்றும் சக்தி உமது எண்ணத்தைப் பூர்த்தி செய்வாள். அவள் குகனுடன் குலம் காக்கும் காத்தாயியாக இருந்து உங்களுக்கு அருள்புரிவாள்’’ என்றாள். உடனே, அன்னையின் நிழல் வழியே கங்கை அங்கு தோன்றினாள். முருகனைத் தன் மடிமீது அமர்த்திக் கொண்டு அவர்களுக்குக் காட்சி அளித்தாள். அந்த வடிவமே காத்தாயியாகும்.

அவளும் பச்சையம்மனின் தோழியர் கூட்டத்தில் ஒருத்தியானாள். அவள் அன்பர்களின் பாவங்களையும் குறைகளையும் நீக்கிப் புத்திரப் பேறு அளிக்கிறாள், குழந்தைகளைப் பாலாரிஷ்டம் நோய் நொடிகளில் இருந்து காக்கிறாள். இவளை வழிபடுவதால் வம்சம் விருத்தியாகும். தம்மை நோன்பிருந்து வழிபடு்ம் பெண்களில் நாகசாபம், பிதுர் சாபம், குலதெய்வ சாபம் முதலியவற்றை நீக்கி, சுகமான திருமண வாழ்வை நல்குவதுடன் நல்ல குழந்தைகளை அளிக்கிறாள். சில காத்தாயி வடிவங்களில் அவள் மடியில் படுத்திருக்கும் குழந்தைக்கு வலம்புரிச் சங்கு கொண்டு பாலூட்டும் கோலத்திலும் இருக்கிறாள். காலப்போக்கில் இவள் வழிபாடு தனி வழிபாடாகி விட்டது. காத்தாயிக்குத் தனிக் கோயில்கள் எழுந்தன. பலர் இவளைத் தமது குலதெய்மாகக் கொண்டுள்ளனர். கும்பகோணம் மயிலாடுதுறை முதலிய ஊர்களில் காத்தாயி ஆலயங்கள் உள்ளன.

சிலர் பிரார்த்தனையாக நேர்ந்து கொண்டு பச்சையம்மன் ஆலய வளாகத்தில் பெரிய சுதைச் சிற்பமாகக் காத்தாயி அம்மனை அமைத்துள்ளனர். இவ்வகையில் சென்னை திருமுல்லைவாயில் பச்சையம்மன் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரிய காத்தாயியின் வடிவம் குறிப்பிடத்தக்கதாகும்.  மக்கள் காத்தாயி என்று பெயர் சூட்டிக் கொள்ளுகின்றனர். காத்தப்பன், காத்தான் என்ற பெயர்களும் இடப்படுகிறது. காத்தாயி மீது தனிப் பதிகமும் அருள் வேண்டலும் பாடப்பட்டுள்ளன.

பச்சையம்மன் ஆலயங்களில் ஆதியில் பச்சையம்மனுக்கு உலாத்திருமேனிகள் அமைக்கப்படுவதில்லை. காத்தாயி அம்மனுக்கே மரச்சிலை அமைக்கப்பட்டு, உலா நடத்தப்படும், வெள்ளிக்கிழமைகளில் அவளையே ஊஞ்சலில் வைத்து ஆட்டி மகிழ்கின்றனர். காத்தாயி வம்சத்தை வாழ்விக்கும் தேவியாகப் போற்றப்படுகிறாள்.

கந்தனா, காத்தவராயனா?

அன்னை காத்தாயியின் மடியில் குழந்தையாக அமர்ந்திருப்பவர் பாலமுருகன் ஆவர். சிலர் அவரைக் காத்தவராயன் என்கின்றனர். அது சரியானதல்ல. பார்வதியின் சாபத்தால் பூமிக்கு வந்து காத்தவராயனாக வாழ்ந்தவர் வீரபாகுதேவர். அவரும் முருகனின் தம்பியான வீரபாகு அல்ல. அவர் வேறு வீரபாகுதேவராவார். சில காத்தாயிக்குக் கருப்பு சேலை கட்டுகின்றனர். மஞ்சள் அல்லது வெள்ளைச் சேலையைத்தான் அணிவிக்க வேண்டும் என்பது மரபாகும். அன்னப் பறவை இவளது வாகனம்.

வனக் குறத்தி (வள்ளியம்மை நாச்சியார்)

 முருகப் பெருமானின் இளைய மனைவியாகிய வள்ளிதேவியே வனக்குறத்தி என்னும் பெயருடன் பச்சையம்மனுக்குப் பணி செய்து கொண்டிருக்கிறாள். தன் மாமிக்குச் சேவை செய்ய வந்த நல்ல மருமகள் இவள். பச்சையம்மன் கோயில் விழாவின் இறுதி நாளில் வள்ளித் திருமணம் கதை நிகழ்த்துவதும், வள்ளிக்கும் முருகனுக்கும் திருமண விழா நிகழ்த்துவதும் வழக்கமாகும். நல்ல வசதியான அமைதியான குடும்பம் அமைய அருளும் தேவியாகப் போற்றி வணங்கப்படுகிறாள்.

பச்சை நிறம் கொண்ட இந்தத் தேவி அழகிய நீல மயிலை உடையவள். அழகான கொண்டை, அதிலே மயில் இறகைச் சொருகி இருக்கின்றாள். வலக்கையில் நீலோற்பலமலர், இடக்கையில் கொஞ்சும் கிளி, என வனப்பின் வனப்பாக இந்தத் தேவிவிளங்குகின்றாள். இவளை ஞானக் குறத்தி எனவும், முத்துக் குறத்தி எனவும் அழைக்கின்றனர். முருகனும் முத்துக்குமரன் என்ற பெயர் வழங்குவது போலவே இவளுக்கும் முத்துக்குறத்தி என்னும் பெயர் வழங்குகிறது. இவள் ஞானம் அருளும் தேவியாவாள். பச்சைக்குறத்தி எனவும் அழைப்பர். இவளை வணங்குவதால், குடும்பம் செழிப்பதுடன், பயிர் பச்சைகளும் செழித்து வளர்ந்து நல்ல பலன் தரும் என்று உறுதியாக நம்புகின்றனர்.

முடியால் அழகி

பச்சையம்மனின் தோழியரில் ஐந்தாவதாக இருப்பவள் முடியால் அழகி. அழகின் வடிவமாகவும் காதலின் தெய்வமாகவும் போற்றப்படும் மன்மதனின் மனைவியான ரதியே முடியால் அழகி என்ற பெயருடன் அம்பிகைக்குப் பணி செய்யும் தோழியாக இருக்கிறாள். மயில்களுக்கு தோகை அழகு தருவதுபோல் பெண்களுக்கு அழகூட்டுவது அவர்களது அடர்ந்த கருமையான நீளமான முடியேயாகும். அது அழகை வெளிப்படுத்துவதுடன் அவர்கள் இல்லற இன்பங்களோடு சௌபாக்யத்துடன் வாழ்வதையும் குறிக்கிறது.

இவள் அன்பர்களுக்குச் சுகமான வாழ்வைத் தருகிறாள். பெயருக்கேற்ப தலைமுடியைக் கொண்டையிட்டு அதில் தலையலங்கார அணிகளை அணிந்துள்ளாள். சில இடங்களில் யாழ் ஏந்திப்பாடும் கோலத்திலும் இருப்பதாகக் கூறுகின்றனர். அம்பிகை பூசை செய்யும் வேளையில் தன் இனிய குரலால் தோத்திரங்களைப் பாடி அம்பிகையையும் அவளால் தொழப்படும் சிவபெருமானையும் மகிழ்விக்கிறாள். அம்பிகைக்கு பூஜைக்குத் தேவையான பூக்களைப் பறித்து வந்து தரும் பணியையும் மேற்கொண்டுள்ளாள்.

இவளை முடிவில் அழகி என்றும் கூறுவர். பெண்களுக்கு வயது ஏற ஏற முதுமை வந்து அழகு குலைந்துவிடுகிறது. அப்படியின்றி என்றும்,  மாறாத அழகுடன் திகழ்வதால் இப்பெயர் பெற்றாள் என்கின்றனர். இவளை வணங்குவதால் மாறாத அழகைப் பெறலாம்.

ஆனைக்குறத்தி

ஆனை மேல் வரும் அழகிய குறப்பெண்ணாகக் கோலம் கொண்டிருப்பவள் தேவேந்திரனின் மனைவியான இந்திராணி ஆவாள். இவள் அம்பிகை ஆலயங்களில் உள்ள யானைகளைப் பாதுகாப்பவள், பராமரிப்பவள். கையில் வஜ்ராயுதமும், அங்குசமும் தரித்தவள். ஆயிரங்கண்ணழகி என்று போற்றப்படுகிறாள். இந்திர நீல வண்ணத்தினள். பொன்னாபரணங்களைப் பூண்டவள். ஆனைமேல் அமர்ந்தவள். ஒருவருக்குப் பலவகையான செல்வங்கள் நிறைந்திருக்கலாம். மாடு, கன்று, மனை, நகை, பணம், நிலம், வீடு, வாசல் என்று அளவற்றிருக்கலாம். ஆனால், அவற்றை அனுபவித்துச் சுகம் பெறப் பாக்யம் இருக்க வேண்டும்.

அவற்றை அருளும் தேவியாக இந்த ஆனைக்குறத்தி விளங்குகிறாள். இவளை வணங்குவதால் சகல சௌபாக்யங்களையும் பெற்று இன்பமாக வாழலாம். மலையகங்களில் தொடங்கிய மனிதனின் வாழ்வு வளத்தை நோக்கி மண் மீது இறங்கி வந்தபோது, வாழ்வுக்கு ஆதாரமான நீரோடும் ஆறுகளின் ஓரங்களிலேயே நிலை பெற்றது. ஆற்றங்கரையில் வாழ்ந்தவர்கள் படிப்படியாக விவசாயத்தை மேம்படுத்தி, விளைநிலங்களை உருவாக்கினர். ஆற்றுநீரைப் பாசனத்திற்குப் பயன்படுத்தும் கலையை மேம்படுத்தி வளம் பெருக்கினர். ஆறுகள் வாழ்வின் அங்கமாயின. ஆற்றங்கரைகளில் தெய்வங்களை நிலைப்படுத்தி வணங்கினர். பல பச்சையம்மன் கோயில்கள் ஆற்றங்கரையில் அமைந்துள்ளன. செங்கல்பட்டில் பாலாற்றங்கரையிலும், வாழைப்பந்தலில் சேயாற்றங்கரையிலும், காஞ்சியில் வேகவதி ஆற்றின் கரையிலும், குடந்தையில் காவிரியாற்றங்கரையிலும் எனப் பச்சையம்மன் கோயில்கள் பலவும் ஆற்றோரங்களில் அமைந்துள்ளன.

வேங்கை மலை நாச்சியார்    

பச்சையம்மனின் தோழியருள் மூன்றாவதாக இருப்பவள் வேங்கைமலை நாச்சியார். திருவேங்கடமலையில் வாழும் ஏழுமலையானின் மனைவியான (மகாலட்சுமி) பத்மாவதித் தாயாரே வேங்கடமலை நாச்சியார் என்னும் பெயரில் எழுந்தருளியுள்ளாள். மக்கள் பேச்சு வழக்கில் வேங்கைமலை நாச்சியார் என்று அழைக்கின்றனர். வலக்கையில் தாமரை மலர் தாங்கி, இடதுகையில் அமுதகலசம் அல்லது அருள் வழங்கும் வரதமுத்திரை கொண்டுள்ள இவள் தலையில் கிரீடம் தாங்கியுள்ளாள். மான், இவளது வாகனமாகும்.

இவள் அன்பர்களுக்குச் செல்வத்தை வழங்கும் தேவியாக விளங்குகின்றாள். சிவப்பு நிறம் கொண்ட இந்தத் தேவியை வணங்கினால் அளவற்ற செல்வம் உண்டாகும் என்கின்றனர். மான் வடிவில் திகழ்பவளாகவும் மான்கள் சூழ இருப்பவளாகவும் இவள் போற்றப்படுகிறாள். இவள் வேங்கை மரத்தின்கீழ் இருப்பதால் வேங்கைமர நாச்சியார் எனவும் அழைக்கின்றனர். வேங்கைப் புலியை வாகனமாகக் கொண்டவள் என்றும் கூறுவர்.

ஆதியில் பச்சையம்மன் ஆலயங்களில் பெரும்பாலானவை மலையை ஒட்டியே அமைக்கப்பட்டதாகக் கூறுகின்றனர். தவம் புரிவதற்கேற்றதான மலைச்சாரலை அவள் விரும்பி அதில் உறைவதாகக் கூறுகின்றனர். செங்கல்பட்டு, மேலைச்சேரி, செதுக்கரை, திருவண்ணாமலை, பர்வதமலை முதலான அநேக ஊர்கள் மலைச்சாரலில் அமைதியான சூழலில் பச்சையம்மன் ஆலயங்கள் அமைந்துள்ளன. அன்னையின் தவப்பயணம் இமயச்சாரலில் உள்ள கேதாரத்தில் தொடங்கி, தென்னகத்தில் உள்ள திருவண்ணாமலையில் முடிவது இங்கு சிந்திப்பதற்கு உரியதாகும். அவளுக்குத் துணையாக வேங்கைமலை நாச்சியார், கருமலையான், செம்மலையான் முதலியோருடன் மலைக்குறவர்களும் இருப்பது சிந்திக்கத்தக்கதாகும்.

பூங்குறத்தி

அம்பிகையின் தோழியர் வரிசையில் இரண்டாம் இடத்திலிருப்பவள் பூங்குறத்தி. அன்னையின் தவத்திற்குத் துணையாக வந்த சரஸ்வதியே, பூங்குறத்தியாக வடிவு கொண்டு அன்னையுடன் வீற்றிருந்து அன்பர்களுக்கு அருட்பாலிக்கிறாள் என்கின்றனர். வெண்தாமரைப் பூவில் வாழ்பவள் ஆதலால், அவள் பூங்குறத்தி என்று அழைக்கப்படுகிறாள். தலைமுடியைத் தூக்கிச் சடா மகுடமாகக் கட்டியுள்ளாள். வெள்ளை ஆடை அணிந்து மான் தோலை மேலாடையாக உடுத்துள்ளாள். மார்பில் முத்துமாலைகளையும் நீலமணி மாலைகளையும் அணிந்துள்ளாள்.

 தலையில் கொக்கு இறகுடன் மயில் பீலிகளையும் சூடியுள்ளாள். வலதுகையில் குறிசொல்லும் கோலை, ஏந்தியுள்ள இவள் இடது இடுப்பில் மூங்கில் கூடையை வைத்துக்கொண்டு இடதுகையால் அதை அணைத்துக்கொண்டிருக்கிறாள். இவள் சகுனத்தின் தேவி. அன்பர்களுக்கு நல்வாக்கு தருபவள். பல்லி சொல், பூக்கட்டிப் போட்டுப் பார்த்தல், விளிச்சி, சோழி உருட்டுதல் முதலிய பல வழிகளில் அன்பர்களுக்கு நல்வாக்கு தருகிறாள். அன்பர்களில் பலர் தாம் மேற்கொள்ளும் காரியம் நலம் தருமா என்று இவளிடம் குறி கேட்ட பிறகே காரியத்தில் ஈடுபடுகின்றனர். பச்சையம்மன் ஆலய விழாக்களில் இவள் சாமியாடிகள் மேலே இறங்கி வந்து அருள்வாக்கு தருகின்றாள்.

இவளை வணங்கினால் நல்ல கல்வியுண்டாகும். புத்தி சாதுர்யம், வாக்குவன்மை, சொல்திறம் ஆகியவற்றை அடையலாம். இவள் அருள் துணையால் எதிர்காலத்தை உணர்ந்து நடந்துகொள்ள முடியும். அதனால் எப்போதும் வெற்றியை அடையலாம். எந்தக்காரியத்தையும் நினைத்தது போலவே நடத்தி முடிக்கலாம் என்பர். இவள் வடிவம் வெளிர்நீலம் அல்லது வெள்ளையாகும். அன்னப்பறவை இவளது வாகனம்.

பூசை.ச.அருணவசந்தன்
ஓவியங்கள்: வெங்கி