படைப்பாற்றல் எனும் பச்சை வண்ணத்தாள்பச்சையம்மன் வழிபாடு என்பது மிகவும் தொன்மையானதாகும். ஒட்டுமொத்த இயற்கையை பச்சை வண்ண அம்மனாக பாவித்து வழிபடுதலும் ஆகும். இயற்கை வளம் என்பது வறட்சியற்ற பசுமையை குறிப்பதாகும். மேலும், படைத்தல் எனும் கிரியை பச்சை நிறத்தோடு தொடர்புடையது. படைப்பு தொடங்கும்போதே இந்த உலகம் ஏற்கும் நிறம் பச்சை வண்ணமேயாகும். அதனால் இங்கு உருவாகியிருக்கும் படைப்பு அத்தனையுமே சக்தியின் பெரும் வீச்சுதான். இன்னொரு கோணத்தில் தத்துவார்த்தமாக பார்த்தால் சிவசக்தி எனும் பிரம்மம் அப்படியே அத்வைத நிலையில் பிரம்மமாக இருக்கும்போது படைப்பு, உலகம் என்று ஒன்றுமே இல்லை.

அங்கு ஏக பிரம்மம் மட்டுமே உள்ளது. மெல்ல சிவத்திலிருந்து சக்தி பிரிந்ததுபோல் தோற்றம் கொள்ளும்போது படைப்பு உலகம் என்று எல்லாமே தொடங்கி விடுகின்றது. இப்போது சக்தி பிரிந்தபோது படைப்பு உருவாகின்றது. பிரம்மத்திலிருந்து சக்தி உலகாகும்போது அவள் ஏற்கும் நிறம் பச்சை. எனவே, எங்கெல்லாம் படைப்பான உலகத்தை பார்க்கிறோமோ அவையாவும் பச்சை அம்மன் எனும் அந்தச் சக்தியே ஆகும். சற்று ஆழமாக யோசித்து புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இது. அந்தப் படைப்பு எனும் பெரும் படிமத்தையே  பச்சையம்மனாக பாவித்து வழிபடும் மரபாக தொடர்ந்து வந்து
கொண்டிருக்கின்றது.

இந்த விஷயத்தை அழகிய புராணமாக வைத்து அதற்கென்று ஆங்காங்கு தலங்களையும் தோற்றுவித்தார்கள். கிட்டதட்ட பச்சையம்மனுக்குண்டான தலங்கள் அனைத்துமே காஞ்சிபுரம், ஆரணி, சென்னை பகுதிகளில் அதிகமாகப் பார்க்கலாம். அவை கிழக்கில் ஐயம் பேட்டையிலும் தெற்கில் சிவா ஸ்தானத்திலும், மேற்கில் அம்பியிலும், இவற்றில் மிக முக்கியமானதாக காவேரிப்பாக்கம் ஆலயம் விளங்குகின்றது. அடுத்ததாக காஞ்சியிலிருந்து வாலாஜாபாத் செல்லும் வழியில் ஐயம்பேட்டை உள்ளது. இது வேகவதிக் கரையில் அமைந்த ஊராகும். சாலைக்கு வடக்கே 1 கி.மீ. தொலைவில் பச்சையம்மன் ஆலயம் உள்ளது.

காஞ்சிபுரத்திற்கு மேற்கே அம்பி செல்லும் சாலையில் 3 கி.மீ. சென்றால் சிறு காவேரிப்பாக்கத்தை அடையலாம். இங்குள்ள விநாயகபுரம் எனும் ஊரின் கிழக்கில் ஆலயம் அமைந்துள்ளது. வாயிலின் மீது சிறிய ராஜகோபுரம் உள்ளது. சுற்றுப் பிராகாரத்தில் வரும்போது கௌதமர், மன்னார்சாமி முதலியோரைக் காண்கிறோம். அதையடுத்து வலம் வந்து முக மண்டபத்தைக் கடந்து மகாமண்டபத்தை அடைகிறோம். கருவறையில் பச்சையம்மனின் பெரிய சுதைவடிவம் அழகாக காட்சியளிக்கின்றது.

இதற்கெல்லாம் மேலாக மிக முக்கிய தலமாக விளங்குவது ஆரணி அருகேயுள்ள முனுகுப்பட்டு என்பதாகும். வாருங்கள் அத்தலத்தை குறித்து அறிவோம். பார்வதி தேவி காஞ்சியை விட்டு அருணாசலத்திற்கு புறப்படும் முன்பு, கதலி வனம் என்கிற வாழைமரத் தோப்புகள் அடந்திருந்த ஓரிடத்தை அடைந்தாள். பூவின் மீது பனித்துளிபோல அம்மையின் திருமேனியெங்கும் வியர்வைத் துளிகள் பூத்தன. சுற்றியுள்ள யோகினிகள் ஒற்றி எடுத்தனர். சட்டென்று சற்று நேரத்திற்கெல்லாம் முருகப் பெருமான் வாழை இலைகளை பாளம் பாளமாக கொண்டு வந்தான். அழகான வாழைப்பந்தல் அமைத்தான்.

அன்னையை அதில் அமரும்படி பணிவோடு கேட்டுக் கொண்டான். தாயும் நெகிழ்ந்து மணலால் லிங்கம் அமைக்கத் தொடங்கினாள். லிங்கத் திருமேனி மிக அழகாய் உருவானது. பூஜைக்குரிய புஷ்பங்கள் கூடை கூடையாக குவியத் தொடங்கியது. அகில், சந்தனம் என்று மணம் கமழ்ந்தது. அம்மையின் மேனியெழில் பூவுலகின் பச்சை நிறமாக தோன்றியது. ஏனெனில், பார்வதி எளியவளாக கயிலையின் வாயிலில் நின்று பார்க்க பூலோகம்  பச்சை பட்டாடை அணிந்த பெண் போல இருந்தாள். தானும் அவளுள் ஒருவளாக பச்சைநிற மேனி கொண்டாள். பச்சை வண்ண மேனியளாக இப்போது வாழைப்பந்தலில் தோன்றியபோது எல்லோரும் ஆச்சரியமும் ஆசையுமாகப் பார்த்தனர். அம்பாள் பச்சையம்மனாக வீற்றிருக்கும் இந்த அற்புதத் தலமே முனுகுப்பட்டு ஆகும்.

ஸ்ரீபாலமுருகனை அழைத்து அனுஷ்டானத்திற்கும், பூஜைக்கும் புனித நீர் கொண்டு வரும்படி அம்மை பணித்தாள். ஆனால், வருவதற்கு தாமதமாகத் தொடங்கியது. அம்மை பூமியை தன் கையிலுள்ள பிரம்பால் தட்டினாள். அங்கிருந்து தீர்த்தம் பொங்கி வந்தது. அதேசமயம் நிருதி மூலையிலிருந்து பாலமுருகன் தனது வீரவேலை எய்தான். அங்கிருந்து சிவப்பு நிறத்தில் நீர் பொங்கி வந்தது. விநாயகரால் கமண்டல நதியும் உருவாகி தொடர்ந்து வந்தது. இறுதியில் அம்பாளின் பூஜைக்கு பிரம்பு நதி, சேயாறு, கமண்டல நதி மூன்றும் கலந்து முக்கூட்டு நதியாக அம்பாளின் பூஜைக்கு உதவியது. இன்றும் அம்பாள் பூஜித்த லிங்கம் மணல்கண்டேஸ்வரர் என்றும் முக்கூட்டு சிவன் என்றும் இத்தலத்திற்கு அருகேயே இயற்கை சூழ்ந்த இடத்தில் அமைந்துள்ளது.

வாருங்கள் நாம் அவள் பச்சை வண்ண அரசியாய் அமர்ந்து அருளாட்சி புரியும் அருட்குடிலை தரிசிப்போம். இந்தக் கோயில் மிகத் தொன்மையானது. பல்வேறு பேரரசர்கள் இவள் பாதம் பணிந்து நல்லாட்சியை அளித்த அற்புத பூமி இது. கோயிலின் உள்ளே நுழையும்போதே சக்தியின் வட்டத்தில் நுழைந்துவிட்ட சிலிர்ப்பு மேனியெங்கும் பரவுகிறது. பச்சைமா மலைபோல் மேனியனான தன் அண்ணன் திருமாலை வேண்டித் துதித்தாள். ஹரி சப்த ரிஷிகளையும் பச்சையம்மாளை காக்குமாறு ஆணையிட்டார். அந்த கணமே சப்தரிஷிகளும் முனிகளாக மாறி இன்றும் வீற்றிருக்கின்றனர்.

ஆலய வளாகத்திற்குள் நுழைந்து கோபுரத்தின் வாயிலுக்கு சற்று வலமாக நகர பிரமாண்ட சுதைச் சிலைகளில் சப்தரிஷிகளும் முனிகளாக வேறெங்கும் காண முடியாத அளவுக்கு அமர்ந்திருக்கின்றனர். அதிலும் இவர்களுக்கு அருகே மேடை போன்ற அமைப்பின் மீது வாழ்முனி இடது காலை மடக்கி, வலக்காலை தொங்கவிட்டு முறுகேறிய தோள்களோடும், கம்பீர மீசையோடும் விண்ணைமுட்ட அமர்ந்திருக்கும் பிரமிப்பு மூச்சை நிறுத்தும். தேவர்கள் அன்னையைத் தேடி வந்தபோது தனது தங்கையிடம் தகாத வார்த்தைகள் பேசும் அக்னி வீரனைக் கண்டு கோபமடைந்து பெரிய விராட் வடிவம் கொண்டார். அவர் வானளாவ உயர்ந்து நின்றதால் வான்முனி என்று அழைக்கப்பட்டார். அதுவே வாழ்முனி என்று மறுவியிருக்கிறது. மேலும், கருமுனி, முத்துமுனி, வேதமுனி, நாதமுனி, ஜடா முனி, லாட முனி ஆகியோடும் பச்சையம்மனுக்கு காவல் வீரர்களாக அணிவகுத்து அமர்ந்திருக்கின்றனர்.

அதையும் தாண்டி சற்று உள்ளே நகர்ந்தால் தனிச் சந்நதியில் மன்னார்சுவாமி கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். முன்புறம் முகமண்டபம் அமைந்துள்ளது. இங்கு முன்புறம் கௌதமரிஷி கையில் லிங்கத்துடன் அம்பிகையை நோக்கியவாறு காட்சியளிக்கின்றனர். அவருடன் வீரவாகு ஆகிய காத்தன் நிற்கின்றார். அடுத்து உள் மண்டபத்தில் வாழ்முனி, செம்முனி போன்றோர்க்கு சுதை அல்லது கல்லாலான அபிஷேகத் திருவுருவங்கள் உள்ளன. அடுத்ததாக கருவறை நோக்கி நகர்கிறோம்.

கருவறை செவ்வக வடிவமாக விளங்குகின்றது. இதன் சுவர்களில் சுதையாலான வளைவுக்குள் பிரம்மன், தம் தேவியரான சரஸ்வதி காயத்ரியுடனும், திருமால் ஸ்ரீதேவி பூதேவியுடனும், முருகன், விநாயகர், வீரபாகு புஷ்பவல்லி, கனகவல்லி முதலியோர் உள்ளனர். பச்சைமாதேவி பேரழகும், கம்பீரம், என்றும் மாறாத புன்முறுவலும் வருவோரை வாயார வா என்று அழைப்பது போல ஒரு தோற்றத்தோடு வீற்றிருக்கிறாள். பச்சையம்மன் இங்கு தனி தர்பாரில் அமர்ந்து அகிலத்தையே தன் அருளால் அளக்கிறாள். அதே சமயம் தவத்தின் களை முகத்தில் தாண்டவமாடுகிறது. ஈசனை நோக்கிய தியானத்தில் பச்சையம்மனின் முகம் கனிந்திருக்கிறது.

சமயபுரத்தாள்போல எத்தனை அழகு அவள் முகத்தில். வைத்த கண்ணை வாங்கமுடியாது அருள் வலையில் கட்டிப்போட்டிருக்கிறாள். இடப்பாதம் மடித்து, வலக்காலை தொங்கவிட்டு பேரரசியாக பச்சையம்மன் ஒளிர்கிறாள். அம்மனின் மேற்கரங்களில் பாசம் அங்குசம் தரித்து, கீழ்க்கரங்களில் வலக்கரத்தில் மலர்ச் செண்டும் இடக்கரத்தை மடிமீது வைத்துக் கொண்டும் அன்னை காட்சியளிக்கிறாள். இருபுறமும் அழகிய வளைவுகள் உள்ளன. அவற்றுள் கூந்தலழகி, வேங்கமலை நாச்சியார், காத்தாயி, பூங்குறத்தி ஆகியோரின் வடிவங்களும் உள்ளன.

பச்சையம்மனின் சக்திச் சுழற்சியில் சிக்குண்டதால் மனம் தம்மை மறந்து அவளின் திருவடியில் படிந்த தூசாக ஒட்டிக் கொண்டிருக்கிறது. பச்சைவண்ணமே வளர்ச்சியையும், மலர்ச்சியையும் குறிக்கும் வர்ணம். இங்கு அம்மையின் மேனியே பச்சைதான். பச்சைமேனியளின் பார்வைபட பாரையே வென்றிடும் வல்லமை அளிப்பாள். அதுதவிர பச்சை நிறம் கற்பனையையும், காவிய ரசத்தையும் உணர்த்தும் நிறம். எனவே இந்த தாயின் திருவடியில் படர படைப்பாற்றலை பெருக்கி காட்டுவாள். பக்தர்கள் தங்கள் வீட்டுப் பெண்ணை அழைப்பதுபோல பச்சைம்மா... பச்சைம்மா.. என்று கூப்பிடும்போது ஓடி வந்து அணைத்துக் கொள்கிறாள்.  

கிருஷ்ணா
படங்கள் : காஞ்சி எம்.பாஸ்கரன்