நின்ற கோலத்தில் பச்சையம்மன்சென்னை-விழுப்புரம் நெடுஞ்சாலையில் பாலாற்றங்கரையில் ஞானகிரி மலையடிவாரத்தில் நெடுஞ்சாலையில் ஓரத்திலேயே பச்சையம்மன் திருக்கோயில்அழகிய இயற்கைச் சூழலில் அமைந்துள்ளது.

ஆலய நுழைவிடத்தில் வேங்கைப் புலி வடிவம் உள்ளது. ஆலய முற்றத்தில் வடக்கு நோக்கியவாறு பெரிய வாழ்முனீஸ்வரர் உள்ளார். கருவறையில் பச்சையம்மன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். அவளுக்கு இருபுறமும் வனக்குறத்தியான வள்ளியும், வானக் குறத்தியான தெய்வயானையும் உள்ளனர். அதே மேடையில் காத்தாயியும் மயில்மேல் அமர்ந்த பாலசுப்பிரமணியனும் உள்ளனர். கருவறையில் அம்பிகையின் பெரிய சுதைச் சிற்பம் வண்ணம் தீட்டிப் பொலிவுடன் விளங்குகிறது.

இவளுக்கு வலப்புறத்திலும் இடப்புறத்திலும் வளைவுகள் அமைக்கப்பட்டு, அதில் தோழியர் அமைக்கப்பட்டுள்ளனர். இக்கோயிலில் உள்ள பதிவிளக்கும், செம்பாலான குறக்கூடையும் கலையழகு வாய்ந்ததாகும். கோயில் எளிமையாக உள்ளது. இவ்வாலயப் பூசாரிகள் தமிழில் புலமை மிகுந்தவர்கள். பச்சையம்மன் மீது பல பதிகங்களைப்  பாடியுள்ளனர். ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன் ஒரு சமயம் பூசாரி அன்னையிடம் அம்மா மலைகளுக்கு நடுவே தனிக்காட்டில் இருக்கிறாய்.
உன்னை நாடி வந்து பூசை செய்வதற்கு சிரமமாக இருக்கிறது. நீ ஊருக்கு ஓரமாக வந்து அமர்ந்துவிட்டால் நல்லது அம்மா என்றாராம். அவள் மகனே விரைவில் நெடுஞ்சாலையே என்னை நோக்கி வரப்போகிறது என்றாளாம். அதன்படியே சில ஆண்டுகளில் புதிதாக மலையை உடைத்துப் போடப்பட்ட நெடுஞ்சாலை அம்மன் கோயிலை ஒட்டியே அமைந்ததாம்.

அளவில் சிறியதாக இருந்தாலும் சக்தியில் பெரியதாகச் செங்கை ஞானகிரி பச்சையம்மன் கோயில் சிறப்புடன் திகழ்கிறது. திருப்புகழில் இத்தலம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இங்குள்ள ஞானகிரி வேலனை அருணகிரி நாதர் இரண்டு பாடல்களால் புகழ்ந்துள்ளார்.

மனையவள் நகைக்க எனத் தொடங்கும் பாடலில்,
‘‘எழுதரிய பச்சைமேனி உமைபாலா
இமையவர் துதிப்ப ஞான மலை
உறை குறத்தியாக - இலகிய
சகிப்பெண் மேவு பெருமாளே’’
என்று போற்றியுள்ளார்.

‘‘எமைமனம் உருக்கி யோக அநுபூதி அளித்த பாத
உமைபாலா எழுதரிய பச்சைமேனி
இமையவர் துதிப்ப ஞானமலையுறை குறத்தி பாக
இலகிய சசிப்பெண் மேவு பெருமாளே’’

என்று அந்த அருள் அனுபவத்தை ஞானமலைத் திருப்புகழில் பதிவு செய்கிறார் அருணகிரியார்.இங்கு ஞானக்குறத்தியான வள்ளியும், சசிப்பெண்ணான தெய்வ யானையும் அம்பிகையின் இருபுறமும் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த அம்மன் பேரில் இயற்புலவர் அமரர் குப்புசாமி முதலியார் பாடிய பதிகம், வரலாறு ஆகியவை உள்ளன.

சென்னை பச்சையம்மன் கோயில்கள்
தொகுப்பு: இரா.ரகுநாதன்