நன்மைகள் கோடி பயக்கும் நாகபஞ்சமி*நாகபஞ்சமி -5.8.2019

மனிதன் இயற்கையை கண்டு அஞ்சினான். அதன் பிரம்மாண்டத்தை கண்டு வியப்பெய்தினான். அந்த அச்சத்தின் எச்சமே வழிபாடாக மாறியது. அதிக வெப்பத்தை கக்கிய ஆதவனை ஆண்டவனாகவே கருதினான் ஆதி மனிதன்.  இதுபோல் பேரலையால் ஆபத்தை உண்டு பண்ணும் கடலையும் கடவுளாக கருதினான். விஷம் கொண்டு விலங்கினங்களையும், உயிரை பறிக்கும் பலம் கொண்ட உயிரினங்களையும் உருவம் வைத்து வழிபட்டான். அந்த வழியில் வந்ததுதான் நாகர் வழிபாடு. அச்சம் மட்டுமே வழிபாடு ஆகாமல் அதனூடாக தத்துவார்த்தத்தையும் சேர்த்துக்கொண்டான்.

சிராவண மாதத்தில் (சாந்திராயன மாதம்)  அதாவது தமிழ் மாதத்தின் அடிப்படையில் சொல்ல வேண்டுமானால் ஆடி மாத அமாவாசை கழிந்த ஐந்தாவது நாளான சுக்லபட்ச பஞ்சமியன்று ் நாகபஞ்சமி வருகின்றது. நாகர்கள் மற்றும் நாக தேவதைகளை  கௌரவிக்கும் பொருட்டு, இந்திய நாடு முழுவதும் நடைபெறும் உற்சவமாகும். ஹேமாத்ரி என்ற ஸம்ஸ்க்ருத கிரந்தத்திலிருந்து, எடுக்கப்பட்ட வரதராஜா என்ற பகுதியில், இந்த நியமங்களும், பூஜை புனஸ்கார முறைகளும் நாகராஜாவை முன்னிட்டு செய்ய வேண்டிய விதிகளும் விவரமாக சொல்லப்பட்டுள்ளன. ‘‘ஸ்ராவண மாதத்தின், சுக்லபட்ச பஞ்சமியன்று, வாசற்கதவின் இரண்டு பக்கமும் மாட்டுச்சாணியினால் மெழுகி, நாகராஜாவை வரவேற்க வேண்டும்.... இது  மிகவும் புனிதமான நாளாக சொல்லப்படுகிறது.’’

இதற்கு முந்தைய தினம், அதாவது சதுர்தியன்று ஒரு வேளை மட்டும் உண்டு விரதமிருக்க வேண்டும். பஞ்சமியன்று இரவு மட்டும் தான் உணவு உட்கொள்ள வேண்டும். வெள்ளி, மரம், மண், மஞ்சள் அல்லது சந்தனத்தில் நாக உருவங்கள் அல்லது ஐந்து நாக உருவங்களை செய்து வைத்திருக்க வேண்டும். வீட்டின் முன் கோலமாக போட வேண்டும். பஞ்சமியன்று அவலும், பஞ்சாமிர்தமும் கொண்டு (அம்ருதமாக சொல்லப்படும் ஐந்து பொருட்கள் பால், தயிர்,நெய், தேன், சர்க்கரை) பூஜிக்க வேண்டும்.

அலரி புஷ்பங்களும், மல்லிகை செந்தாமரை பூக்களும், சந்தனப்பொடியும் மற்ற வாசனை திரவியங்களும் கொண்டு பூஜை செய்ய வேண்டும். மிகப் பிரசித்தமான நாகராஜாக்களான அனந்தன் அல்லது சேஷநாகம். வாசுகி, கார்கோடகன் - இவை இந்த தினத்தில் பூஜிக்கப்படுகின்றன. மற்ற எல்லா விழாக்களையும் போல, ஹிந்துமத வழக்கப்படி மிகப்பெரிய அன்னதானம் நடைபெறும். அன்னதானம் இந்த நோன்பின் மிக பிரதானமாகும் அன்று விழா முடியும் வரை. எங்கும், யாராலும் பூமி தோண்டப்படாதவாறு பக்தர்கள், கண்விழிப்பாக கவனித்து இருப்பர்.

தமிழ் நாட்டில், நல்ல பாம்புகள், சரியான முறையில் வணங்கி வழிபட்டால் நல்ல செழிப்பையும், அதிர்ஷ்டத்தையும் தரும் என்ற நம்பிக்கை நிலவி வருகிறது. நாகபஞ்சமியன்று, விடியற்காலையில் நீராடி. ஹிந்து பெண்கள், பாலும் , தேனும் நாகராஜாவுக்கு படைத்து வணங்குகின்றனர். கேரளாவில் உள்ளது போலவே, தமிழ் நாட்டிலும் நாகராஜா அருளால் புத்ரபாக்யம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. அரச மரத்தடிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நாக - சிலைகளுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் இட்டு, பிரசித்தமான 108 பிரதட்சணம் (சுற்றி வலம் வருதல்) செய்வர். இதை வேதமறிந்த பிராமணர்கள் துவங்கி வைப்பர். இவ்வாறு விரதம் அனுஷ்டிக்கும் பெண், தாயானதும், ஒரு கல்லில் பாம்பு உருவத்தைச் செதுக்கி, இந்த மரத்தடியில் கொண்டு வந்து வைப்பது வழக்கம்.

தமிழ் நாட்டில், இவ்வாறு நாகபூஜை செய்து பிறந்த குழந்தைகளுக்கு நாகராஜா அல்லது நாகமணி என்று பெயரிடுகின்றனர்.    ஹிமாசல பிரதேசத்தில், நாக பஞ்சமி, உற்சவம். ‘ரிகி பஞ்சமி’ அல்லது ‘பிரூரி பஞ்சமி’ என்று வழங்கப்படுகிறது. காரணம், ‘ரிக்கேஸ்வரா’ என்பது சிவபெருமானுடைய ஒரு பெயராகும். இவர் நாகராஜாக்களின் தலைவர். இந்த சமயம் இவர் சுற்றிலும் பாம்புகளால் சூழப்பட்டவராகவும் படமெடுத்த நாகங்களாலான மாலையை தலையில் சூடியவராகவும் காட்சியளிக்கிறார்.

நாக பஞ்சமி உற்சவத்திற்கு முன்னதாகவே வீடுகளின் சுவர்களில் நாகராஜாக்கள், பறவைகள் இவற்றின் உருவங்களை வரைந்து. வர்ணம் தீட்டி அழகுற வைக்கின்றனர். ஏழு நாட்கள் முன்னதாக நீரில், கோதுமை, பருப்புகள், தானியங்கள் இவற்றை ஊறவைக்கின்றனர். உற்சவ விருந்து செய்யும் நாள் காலையில். ஒரு தர்ப்பையை எடுத்து. பாம்பு போல செய்து, ஊறிய தான்ய நீரில் நனைத்து. தித்திப்பு தின்பண்டங்களோடு நாகராஜாவுக்கு சமர்ப்பிக்கின்றனர். ஹிமாசல் பிரதேசத்தில் காங்ரா என்னுமிடத்தில், தீபாவளிக்குப் பின், இந்த நாகராஜாக்களை வழியனுப்பும் ஒரு உற்சவம் நடைபெறுகிறது மாட்டுச் சாணத்தில் நாகராஜா உருவம் செய்து. வணங்குவர். இதற்குப் பின்னும், உயிருள்ள நாகங்கள் தென்பட்டால். அது ‘‘நன்றியில்லாத’’தாக எண்ணி கொல்லப்படும்.

‘கட்வால்’ பிரதேசத்தில்,மண் தரையில் நன்றாக, நிறைய சாணம் போட்டு மெழுகி, மண் தடவி, மஞ்சளும், சந்தனமும் கொண்டு. அழுத்தமாக ஐந்து. ஏழு அல்லது ஒன்பது பாம்பு வரை படங்கள் வரைகின்றனர் ஊதுவத்தி. சாம்பிராணி போன்ற வாசனை திரவியங்கள் காட்டி பழங்களும் உணவுப் பொருட்களும் படைக்கப்படுகின்றன. காலையிலும், மாலையிலும் இந்த முறையில் வழிபட்டு வணங்கிய பின், இரவு, நாகராஜாவின் புகழ் பாடும் கதா காலட்சேபங்களை கேட்டு பொழுது போக்குகின்றனர்.

வடமேற்கு பகுதிகளில், நாகபஞ்சமி, கௌரீ பூஜையுடன் சேர்த்து, பெண்கள் நாக தேவதை களுக்கு நைவேத்யங்கள் படைப்பதோடு, கொண்டாடப்படுகிறது. நேபாளத்தில், நாகபஞ்சமி, பிரசித்தமான நாக - கருடயுத்தம், அதன் ஆண்டு விழாவாக கொண்டாடப்படுகிறது. இங்கும், நேபாளத்திலும் பல தலைகளுடைய பாம்பு உருவங்கள் சுவர்களில் வரையப்பெற்று வணங்கப்படுகின்றன. இதைப்போன்றே இந்தியாவின் சில பகுதிகளில் நாக பஞ்சமி கூடவே கருட பஞ்சமியும் கொண்டாடுகின்றார்கள். கருடன் பட்சிகளின் ராஜா. இவை நாகங்களின் பிறவி எதிரிகள் என்பது தெரிந்ததே. கருட பஞ்சமி விரதம் இருந்து, பாம்புக்கடியிலிருந்து பாதுகாப்பு பெறலாம் என்பது ஒரு நம்பிக்கை. இந்த நாளில் சகோதர சகோதரிகள்  பரிசுப் பொருள்கள் கொடுத்துக்கொள்வர்.

பீகார் மாகாணத்தில், நாக பஞ்சமி பதினைந்து நாட்கள் உத்ஸவமாக கொண்டாடப்படுகிறது. கோதுமையாலும், அரிசியாலும் நாக உருவங்கள் செய்யப்பட்டு, ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. ஜனங்கள் நாட்டு பாடல்களை பாடிக்கொண்டே, உடன் செல்வர். பூஜை முடிந்த பின் இந்த உருவச்சிலைகள். வெச்சப் பாகுடன் கலந்து புதைக்கப்படும் இந்த உற்சவத்தைத் தொடர்ந்து ஊர்ச் சந்தை நடப்பதும் ஒரு விசேஷம். பீகாரில் புதை பொருள் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ள சில இடங்களில் கல்லில் பாம்புகள், படத்துடன் கூடிய பல தலைகளுடைய பாம்பு சிலைகள் போன்றவை கிடைத்துள்ளன. கர்நாடகத்தில் நாக சதுர்த்தி, நாகபஞ்சமி இரண்டு நாளும் சிராவண(ஆவணி) மாத சுக்லபட்ச சதுர்த்தி, பஞ்சமி தினங்களில் கொண்டாடப்படுகிறது. பெண்கள் சதுர்த்தியன்று விரதம் இருக்கின்றனர்.

 குடும்பத்தின் நன்மைக்காக இந்த விரதம், என்றாலும் தன் சகோதர்களுக்காக விசேஷ வேண்டுதல்கள் செய்வர். வீட்டின், வாசற்படியின் இருபுறமும், மஞ்சளால் சிறிய பாம்பு குட்டிகளின் படங்கள் கோலமாக வரையப் பெறும். வெளிவாசலும் ரங்கோலிகள், பாம்பு கோலங்களே பெரும்பாலும் வரையப்பெறும். தங்க, வெள்ளி பாம்பு - உருவங்கள் வைத்து, நகரத்து வீடுகளில் வீட்டிலேயே பூஜைகள் செய்து பெண்கள் நைவேத்யங்கள் நாகராஜாவுக்கு சமர்ப்பித்து வணங்குவர். கிராமங்களிலும், நகரத்தின் வெளிப்புறங்களிலும் எறும்பு புற்றைத் தேடிச் சென்று இந்த வேண்டுதல்களை நிறைவேற்றுவர். அவல், உளுந்து, நெய், பால், வெல்லம், உப்பு, பூக்கள் இவை கொண்டு புற்றுக்கு அருகில் பூஜை நடக்கும். வீடுகளிலும் அவலும், பாலும் கொண்டு ஒரு தித்திப்பு தின்பண்டம் செய்யப்படுகிறது.

அகர்வால் பனியா என்ற சமூகத்தினர், தங்கள் நாகராஜா வான வாசுகியின் வழி வந்தவர்களாக சொல்லிக்கொள்கின்றனர். இவர்கள் ஆஸ்திக முனி என்ற வாசுகியின் குருவையும் வணங்குகின்றனர். வீட்டின் சுவர்களில் பாம்பு படம் வரைந்து. வணங்கும் இவர்கள், பிராமணர் களுக்கு உணவளித்து, ஆர்த்தி செய்வர். இந்த பாம்புகளுக்கு உணவாக அளிக்கப்பட்ட எள்ளில் ஒரு சிறிதை ஒவ்வொரு பெண்ணும் தன் வீட்டிற்கு எடுத்துச் செல்கிறாள். ஒரு ஸ்தோத்திரத்தைச் சொல்லி வீட்டின் எல்லா பகுதிகளிலும் இரைக்கிறாள். இதன் மூலம் வீட்டில் விஷ ஐந்துக்கள் அண்டமாட்டாது என்று நம்புகின்றனர்.
நாகபஞ்சமியன்று பூமியை உழுவதில்லை.       

நாட்டின் சில பகுதிகளில் உழவர்கள், நாகபஞ்சமியன்று பூமியை உழுவதில்லை. எலிகளைத் தேடி பூமியில் வளையவரும் நல்ல பாம்புகளின் தலையில், கலப்பையின் கூரிய நுனி பட்டு துன்பம் விளைவிக்கக் கூடும் என்று அஞ்சி இவ்வாறு செய்கின்றனர்.

சு.இளம் கலைமாறன்